கண்ணீர் அஞ்சலி

கவிதை/Poem/Gedicht

ஆரெண்டெனக் குன்னைத் தெரியாது
ஆனாலும்
பேரோட, பிறப்பிறப்பும்
கண்ணீர் அஞ்சலியும்,
ஏதோ கவர்ச்சி உள்ள
முக அமைப்பும் ஒரு சிரிப்பும்
’காதோரமாய்ப் போன கதையும்’
மதில் மீது
ஒட்டப் பட்டிருந்த
உன்னைப் பார்த்தவுடன்
கிட்ட வந்து
பார்க்கத் தோன்றியது
அவ்வளவே..,

பார்த்த உடன் நெஞ்சில்
ஏதோ ஓர் பார அலை
நீர்த்த என் நெஞ்சை
நெக்குருக வைத்ததடா..!

தொண்டை இறுகிக்
கட்டிப்போய் கண்ணீராய்
எண்டைக்கும் இல்லாமல்
இயல்பாக வழிந்ததடா..!

என்ன.. எனக்குள்ளே
இப்படியாய் மாற்றங்கள்..?
உன்னைத்தான் எனக்குத் தெரியாதே
ஒரு பொழுதும்,

அருவரியில் பார்த்தேனா
இல்லை பொஸ்கோவின்
தெருக்கரையில் உள்ள
குளத்தடியில் பார்த்தேனா..?
கோயில் முடக்கில்
அன்னதான மண்டபத்தில்
பெண்கள் கல்லூரி
வாயில்களில், காற்
பந்தடிக்கும் திடற்கரையில்,
புவியை நாம் நெம்பும்
நீர்வேலித் தவறணையில்..?

சாதாரணமாப் பெடியள்
உலவுகின்ற இடமெல்லாம்
தீதோ நன்றோ
உனைப் பற்றி ஒரு துளியும்
எந்த ஞாபகம் கூட எனக்கில்லை
ஆனாலும்..

அந்தப் பொழுதில்
பார்த்த ஒரு கணத்தில்
’சத்தியமா நான் உடைஞ்சு போனன்’
எனக்குள்ளே
எத்தனையோ ஆண்டு
உறவாய் உன் உருவம்
பாக்காமலே இவ்வளவு
பதட்ட மென்றால்
பாத்திருந்தா..!
‘கேக்கவே தேவை இல்லை
நான் கெழிச்சு விழுந்திருப்பன்’

ஒன்று மட்டும்
உனக் குறுதியாகச் சொல்லு வன்ரா
சாக முதல் உன்னப் பாத்திருந்தா
நானுனக்கு
‘நல்ல ஒரு நண்பனா
நாடியா இருந்திருப்பன்’

- தி.திருக்குமரன்

Drucken

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு