home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 52 guests online
காலத்தால் கரைந்தவை PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by மாதவி   
Monday, 31 December 2018 06:25
நேற்று பக்குவமாய் எடுத்து நாளைக்கும் தேவை எனச் சேர்த்து வைத்த எத்தனையோ பொருட்கள் இன்று பயனற்றுப் போயின. இன்றும் நாம் நாளைக்கு எனச் சேர்க்கும் பொருட்கள் என்னவாகுமோ என்ற ஒரு ஏக்கம் முன்பு சேர்த்து பயனற்று இருப்பதைப் பார்க்கும்போது ஏற்படுகின்றது.

வீட்டின் மூலைமுடுக்கு எல்லாம் புத்தகங்கள், பத்திரிகைத் துண்டுகள் அதில் எத்தனையோ எத்தனையோ ஆரோக்கியமான கட்டுரைகள் படங்கள். இவை அனைத்தையும் நாளைய சந்ததிக்கு ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்றால்… அவர்கள் அதனை வாசித்துப் புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லை. அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் சேர்க்கும் பொருட்களின் பெறுமதி தெரியும். இப்போ நாம் சேர்த்தவற்றில் பல Google க்குள் சென்று தேவையானவற்றை எடுக்க முடிகிறது. கட்டுக்கட்டாக இருக்கும் காகிதங்களுக்குள் புரட்டிப்புரட்டி தேடுவதை விட, இது இலகுவானதுதான். இருந்தாலும் நாம் சேரத்தது எல்லாம் அங்கு இருக்கும் என்பதற்கு இல்லை. நாம் சேர்த்தவை ஒரு புறமிருக்க நாம் அன்றாடம் பாவித்த பொருட்களும் பாவனை இழந்து நிற்கின்றன.

காலத்தால் கரைந்தவை ஒன்றல்ல பல நூறு. அதில் சிலவற்றை தொடரும் பகுதி இது.

நாம் புலம்பெயர்ந்து 1979 களில் இங்கு வந்த காலத்தில், எங்கள் மனங்களுக்கு தமிழ்மணம் ஊட்டியவை தமிழ்த் திரைப்படப் பாடல்களே. தாயகத்தில் இருந்து ஒருவருக்கு வரும் பாடலை உடனடியாக பிரதி எடுத்து அதனை இரசித்து மகிழ்வோம்.

சித்திரைச் செவ்வானம் சிவக்கக் கண்டேனே முத்தான முத்தம்மா… என்று ஜெயச்சதிரன் பாடும் போதும், நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ… என்று சௌந்தராஜன் பாடும்போதும், இங்கு நடு இரவிலும் நாம் அன்று வீட்டில் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் இப்பாடலை ரேடியோவில் கேட்டபடி பாடசாலைக்குச் செல்ல புத்தகங்கள் அடுக்கிக் கொண்டு நிற்கும் நினைவு வரும். மாலையில் ரலி சயிக்கிளில் நண்பர்களுடன் தேநீர்க்கடை வாசலில் கேட்கும் பாடல்கள் நினைவு வரும். நாம் இங்கு தாய் தந்தையர், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், எனப் பலரையும் பிரந்து வந்தவர்கள், அவர்களுடன் கூட வாழும் உணர்வை அந்தப் பாடல் ஓரளவு தரும்.

அன்புள்ள மான் விழயே ஆசையில் ஓர் கடிதம்…
மற்றும் நீ எங்கே என் நினைவுகள் அங்கே…
மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் வருத்தமா. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கம் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் விலகுவதில்லை. உன்னிலும் கீழே இருப்பவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு…. என்ற பாடல்கள் எத்தனை பேரை இங்கு விரக்தியின் விளிம்பில் இருந்து மீட்டு எடுத்தது.

அந்த நேரத்தில் இங்கு வானொலிகள் இல்லை. தொலைக்காட்சிகள் தமிழில் இல்லை. கணனிகள் இல்லை. நமக்கு என்று இருந்தவை அந்த ரேடியோ கசட்டுக்கள் மட்டுமே. பின்பு சிறிது காலத்தில் யாவரும் வாகனங்கள் எடுத்த நேரம் எம்மை பயணத்தூரம் தெரியாமல் இன்பமாக அழைத்துச் சென்றவையும் இந்தப்பாடல்கள் தான்.

அந்தப்பாடல்கள் எப்பவும் கேட்கலாம் என்று, காசு காசகச் செலவுசெய்து நேரம் காலம் பாரமல் கசட்களில் பதித்து வைத்தோம். இப்போ வீடுகளில் பார்த்தால் மூலைக்கு மூலை பாவனை இன்றி முடங்கிக் கிடக்கிறது. பலர் மஞ்சள் பாக்கில் கட்டி எறிந்தும் விட்டார்கள்.

இப்போ அவை தேவை இல்லை. அவற்றைப் போட்டுக் கேட்க றைக்கோடரும் இல்லை. அத்துடன் இப்போ அத்தேவையும் இல்லை. கணனியிலும் USB யிலும் ஒரு நூறுபாடல்கள் விரும்பியபடி விரும்பிய நேரம் கேட்கலாம்.

அதனால் எமக்கு நாளைக்கும் தேவை எனச் சேர்த்தும் அன்று எமக்கு கரம்கொடுத்ததுமான இந்தக் கசட்டுக்கள் காலத்தால் கரைந்து விட்டன. இதுபோன்றுதான் வீடியோ கசட்டுக்களும்.

மீண்டும் அடுத்த இதழில் இன்னம் ஒரு காலத்தால் கரைந்த பொருளுடன் வருகின்றேன். என்று 2013 ஆண்டு எழுதி இருந்தேன். இப்போது USB கரைந்து BLUETOOTH இல் தொலைபேசியில் இருந்தே பாடல் கேட்கலாம். அது சரி வீட்டுத் தொலைபேசி அடித்தால் ஓடிப்போய் எடுத்து, விழுந்த எத்தனை அம்மா அப்பாமரை எனக்குத் தெரியும். இப்ப வீட்டுத் தொலைபேசி அடித்தால் எடுக்க ஆட்கள் இல்லை. அது அடித்தபடியே இருந்து அழுது குழந்தை தானாக ஓய்வது போல் ஓய்ந்து விடும். மடியிலும் நெஞ்சிலும் படுத்து உறங்கும் கைத்தொலைபேசி மட்டுமே எப்போதும் விழித்திருக்கும்.

தெரு ஓரங்களில் அமைக்கப் பட்டிருந்த தொலைபேசி பூத்துக்கள் ஒன்றையும் காணோம். அவற்றில் சில லண்டன் தொலைபேசி பூத்துக்களைப் போன்று யேர்மனியில் இருந்தவை பல இன்று வீடுகளின் பூந்தோட்டத்தில் பழைய நினைவுப்பொருளாக ஒருவகை அலங்கரிப்பு பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது. லண்டனில் அவை சிறு நூல்நிலையம் ஆகவும் செயல்படுகின்றது.

எது எதற்கு என்று தெரியாமல் எறியவும் முடியாமல் பல மின்வயர்கள் அலுமாரி இலாச்சிகளில் முடங்கிக் கிடக்கின்றன. அதனை பாவிப்பதற்கு உரிய பொருள்கள் இப்போது உற்பத்தி ஆவதில்லை. இருந்தும் அதனை எறிய மனமில்லை.

அலுமாரி முழுக்க புத்தகங்கள். யாருக்கும் பயன்படும் கொடுக்கலாம் என்றால், முதலில் நாம் அதனைப் படித்தோமோ என்று ஒரு கேள்வி எம்முன்னே வந்து நிற்கிறதே!

நாமும் படிப்பதில்லை பிறருக்கம் கொடுப்பதாக இல்லை. அதுதான் சொல்வார்களே `வைக்கோல் பட்டடை நாய் போல´ வென்று. ஆனால் பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம்.

ஆனால் நாம் இல்லை என்றால் முதல் குப்பைத்தொட்டிக்கு போகும் பொருள் இந்த புத்கங்கள்தான். ஆனால் அந்த குப்பைத் தொட்டியிலும் காகம் போல் அறிவுப்பசிக்கு கிளறி எடுக்க சிலர் இருப்பார்கள் என்ற நப்பாசையும் ஒன்று உண்டு! அதனையும் தவிர்க்க முடியாது.

ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றபோது நல்ல புத்தகங்கள் என்று இங்கு இருந்து காவிக்கொண்டு சென்று ஒரு நூல்நிலையத்தில் கொடுத்தால் 4 வருடங்கள் சென்றபின் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, அவை வைத்த இடத்திலேயே தூசிபடிந்து கிடந்தது. கேட்டபோது வாசிப்போர் தொகை குறைந்து விட்டது. புத்தகத்தை யார் படிக்கிறார்கள். எதுக்கெடுத்தாலும் கூகுள்தான். காணமல் போகும் பட்டியலில் விரைவில் இடம்பிடிக்கப் போவதும் இந்த புத்தகங்களே.

நமக்குபின் நமக்குப்பின் என்று சேர்த்தவை சேரர்ப்பவை நமக்குப்பின் பின்னுக்கத்தான் போகும். சந்தேகமே இல்லை. எனவே வாழும்போது அதனை சரியான இடத்தில் ஒப்படைத்துவிடுங்கள்.(முடிந்தால்)

காணமல் போனவற்றுள் எமது கை எழுத்தும், கடிதமும் அடங்கும். கடைசியாக நீங்கள் எப்போது கையால் எழுதினீர்கள். பாங்காட்டைக் கொடுத்து பெற்றோல் அடித்விட்டு சில இடங்களில் கையொப்பம் இட்டு இருப்பீர்கள் அல்லது. கடையில் எத்தனை பால் முட்டை சீனி என்று ஏதும் கிறுக்கி இருப்பீர்கள். அவ்வளவுதான். காணமல் போனது எமது கையெழுத்து மட்டுமல்ல தலை எழுத்தும்தான்.

முன்பு ஒரு இடத்திற்கு வாகனத்தில் போவது என்றால் போவதற்கு முன் வரைபடம் பாரத்து குறிப்பெடுத்து புறப்படுவோம்.

பெருந்தெருவால் இறங்கியது முதல்வரும் பெற் ஸ்டேசன் தாண்டி, வரும் முதல் சந்தியில் இடது புறம் திரும்பவும். பின்பு ஒரு பெரியா கார் கொம்பனி வரும். அதன் பக்கத்தில் வரும் சிறு தெருவுக்குள் இறக்கி ஓட ஒரு குரைச்சிலை இருக்கும். அதற்கு நேர்புறத்தே இருக்கும் வீதியால் வந்தால் பத்தாவது வீடு நமது என்று நண்பன் சொல்வான், அதன்படியே அந்த வீடு செல்வோம். இப்போத நவிக்ஷேன் வந்து எத்தனை தடவை போனாலும் அப்பன் வீடும் தெரியாது! நண்பன் வீடு தெரியாது. அவதானிப்பு சக்தி அறவே போச்சு. அவதானசக்தி பெருக அதற்கான வகுப்புகளுக்கு முற்பணம் கட்டி அலைகிறோம். தெருக்களின் வரைபடப் புத்தகம் முன்பு இருந்ததாக ஒரு ஞாபகம்.

எதனையும் சேர்க்காதே! எதுவுமே தேவை இல்லை என்று ஆச்சு. முன்பு எல்லாம் காசோடு அலைந்த நாம் இப்போ காசைக்கண்டு பல நாளாச்சு என்ற காலத்தை நோக்கி நகருகிறோம். எல்லாம் வங்கியால் கைமாறப்படுகிறது. இனி காசு மெல்ல மறைந்து புதியவடிவம் எடுக்கும் காலம் நெருங்கிவட்டது. அதாவது உருவமில்லாத பணம் (E.COIN) கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாமல் ஆட்சி புரியும் கடவுளைப் போல. காணாமல் போகும் பட்டியலில் காசும் அடங்கும். எனவே நிகழ்காலம் மட்டுமே உங்களுக்கு சொந்தமானது. நீங்கள் காணமல் போவதற்கு முன் இருப்பதை அழகாக அனுபவியுங்கள். நாளை நாளை என இன்றைய பொன்னான வாழ்வைக் கோட்டைவிட்டு விடாதீர்கள். காணாமல் பொனவர்களில் ஒரு நாள் நாமும் அடங்குவோம். முடிந்தவரை வாழ்வில் ஒரு முத்திரை பதியுங்கள் பின் நித்திரை கொள்ளாலாம்.

- மாதவி

வெற்றிமணி, நவம்பர் 2018
Last Updated on Wednesday, 02 January 2019 22:31