Literatur -
கவிதைகள்
|
Written by தி.திருக்குமரன்
|
Thursday, 26 May 2011 03:56 |
வாங்கிய புதுப் பேனா வரைகிறதா எனப் பார்க்க ஏதோ சும்மா ஒன்றைக் கிறுக்கினேன் இரவு வந்து நாக்கில் விரல் தொட்டுத் தாள் தட்ட கிறுக்கலதாய் காலங்களைக் கடந்த கனவான உன் பெயர் விக்கித்துப் போனேன்! எனக்கே தெரியாமல் எப்படி நான் உன் பெயரை மன மூளை சொல்லாமல் வரைந்தேன்! ஒரு வேளை காலம் அரித்து விட்ட காதல் நினைவெல்லாம் விரல் நுனியில் தானிருந்து விம்மிடுமோ..! இல்லையெனில் எண்ண வலை பின்னும்
மனச் சிலந்தி ஓர் இளையை விரல்க் கரையில் ஒட்டிவிட்டுப் போயுளதோ? விளங்கவில்லை! என்னை நீ பிரிந்து இன்னொருவன் கை தொட்ட இந்த எட்டாண்டுகளின் இடைவெளியில் சில முறை நான் உன்னை நினைத்ததெல்லாம் உண்மை, மனஞ் சிதைந்து காதல்க் கொடும் பிரிவின் முற்காலப் பகுதியிலே கத்தி அழுததுவும் உண்மை அது பின்னர் வற்றி வழிந்தோடி மெளனமாய் நிழல் தேடி எச்சில் விழுங்கையிலே இறுகுகின்ற தொண்டை என்ற இயல்பளவில் மெல்ல இறங்கி பழகிப்போய் நாளாந்த வேலைகளுள் நலிவடைந்து போயிற்று எனக்கென்றோர் துணை வந்த முதல் நாட்களிலே அவளென்னைக் கட்டி அணைக்கையிலும் காதை மெல்லக் கடிக்கையிலும் தட்டி அடி வயிறில் வாய் வைத்துக் காற்றூதி குட்டி எனக் கொஞ்சி நா நுனியின் உதடுகளால் மார் நுனியை மெல்லக் கவ்வையிலும் உன்னுதடு புறாவின் குறு குறுப்பைச் சுமந்தபடி என் உடலில் கிறு கிறுக்கும் நினைவுகளாய்த் திரிந்ததனை மறுக்கவில்லை அதுவும் துணை தந்த அன்பின் முன் நாளடைவில் விலகித் தன்பாட்டில் போயிற்று மகன் பிறக்க எல்லாமே அவனாய் ஆன பின்னர் உன் நினைவு ஒரு போதும் எனைச் சுற்றி வந்ததில்லை இன்றென்ன.. ஆண்டு பல கடந்தும் அடியோடு மறந்திருந்தும்? எப்படி எங்கிருந்து என்னறிவுக் கெட்டாமல் விரல் வழியாய்த் தாளில் விழுந்தாய்! நீ கூட ஒரு வேளை என்னை நினைத் தாயோ? பனிக் குளிரை தணிக்க விறகில் நீ மூட்ட எழும் தீச் சூடு கணப்பாய் உன்னுடலுக் கிருக்க என் உடலின் நினைப்புனக்கு வந்ததுவோ நெடு மூச்சாய்? எதுவேனும்.. என் புலனுக்கறியாமல் தாள் மீது ஒரு கவியாய் விழுந்த உன் பெயர் வியப்பூற உயிர் பெற்று விம்பமாய் என் முன்னெழவும் உன் வாசம் நாசிதனில் ஏறிப் புரக்கடித்து கண்ணோரம் ஆசைக் கனவாக வழிகிறது வாழ் கனவே..! கால நதிக்கரையில் நாம் நடந்த காற் தடத்தை ஆண்டுகளின் ஆற்றோட்டம் அரித்தாலும் எஞ்சியுள்ள சுவட்டுக் கரைக் குருதிச் சுற்றோட்ட வெப்பமென்னில் இறக்கும் வரை வாழ்வாய் என் காலம் கடந்தவளே.. தி.திருக்குமரன்
|
Last Updated on Thursday, 26 May 2011 04:08 |