தமிழ் 70 மில்லியன் மக்களின் தாய் மொழியும் 8 மில்லியன் மக்களின் இரண்டாம் மொழியும், உலக சனத்தொகையில் 1% மக்கள் பயன்படுத்தும் மொழியும் ஆகும். திராவிட மொழியாகிய இதனை தென்னிந்தியா (தமிழ்நாடு), இலங்கை (வட-கிழக்கு), மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகமாகவும், கனடா, ஐக்கிய அரபு இராட்சியம், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், அவுஸ்ரேலியா, டிரினிடாட் மற்றும் தமிழ் சமூகம் குடியேறிய நாடுகளில் சிறிதளவிலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரச அங்கீகாரத்துடன் இது காணப்படுகின்றது. தமிழ் ‘உயிர் வாழும்’ செம்மொழிகளில் ஒன்றும், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மைமிக்க மொழிகளில் ஒன்றும் ஆகும். இது தாய்மொழியாக ஒரு மொழியைக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் 18வது இடத்தில் உள்ளது. உலகிலுள்ள செழுமையான இலக்கியங்களில் தமிழும் அடங்கும். தமிழ் இலக்கியம் 2000 வருடங்களுக்கு (3000 வருடங்களுக்கு மேல் எனவும் கருதப்படுகின்றது) மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இதற்கான தடயங்கள் கி.பி. 3ம் நூற்றாண்டு பழமையான பாறைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் புராதன இலக்கியமான சங்க இலக்கியங்கள் ஏறக்குறைய கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையான காலத்தையுடையன. ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுக்கள் இந்தியா, எகிப்து, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 55 வீதமான கல்வெட்டு எழுத்துக்கள் (கிட்டத்தட்ட 55,000) தமிழ் மொழிக்குரியவை. 2001 மதிப்பீட்டின்படி, 1,863 செய்தித் தாள்கள் தமிழில் அச்சிடப்படுகின்றன. திராவிட மொழிகளில் பழைமையான இது, தரமான செம்மொழி தமிழ் இலக்கியத்தினை தன்னகத்தே கொண்டு, “உலகில் சிறந்த செம்மொழி பாரம்பரியத்தையும் இலக்கியத்தையும் கொண்டவற்றில் ஒன்று” என விபரிக்கப்படுகின்றது.
 வகைப்படுத்தல்: தமிழ் திராவிட மொழிகளில் 26 மொழிகளைக் கொண்ட தென் பகுதிக்குரியதும், 35 இன-மொழிசார்ந்த குழுக்களின் பகுதியும் ஆகும். இவற்றில் மலையாளம் தமிழுக்கு குறிப்பிடத்தக்க பாரிய நெருக்கம் கொண்டது. 9ம் நூற்றாண்டு வரை மலையாளம் தமிழின் பேச்சு வழக்காக இருந்தது. வரலாறு: ஒரு திராவிட மொழியான தமிழ், முதல்நிலைத் திராவிட மொழியிலிருந்து உருவாகியது. முதல்நிலைத் திராவிட மொழி கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் மில்லேனியத்தில் பேசப்பட்டது என குறிப்பிடப்படுகின்றது. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் பார்க்கும்போது முதல்நிலைத் திராவிட மொழி பேசியோர் தென்னிந்தியவின் புதிய கற்காலம் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டவர்கள் என கருத இடமுள்ளது. பின்பு, முதல்நிலைத் தென் திராவிடத் தமிழ் முதல்நிலை வரலாற்றை உருவாக்கியது. ஆய்வுகள் முதல்நிலைத் தென் திராவிடர்கள் மொழி கி.மு. இரண்டாம் மில்லேனியத்தில் பேசப்பட்டதென்றும், அதிலிருந்து முதல்நிலை தமிழ் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிது என்றும் குறிப்பிடுகின்றது. குறுகிய இக்காலத்திலேயே (தமிழ்ப் பிராமி) தமிழ் எழுதப்பட்டதென்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி புராதன சமஸ்கிரதம் அற்ற இலக்கியத்தைக் கொண்டு காணப்படுகின்றது. அறிஞர்கள் உறுதியான மொழி வரலாற்றிலிருந்து தமிழை மூன்று வகைப்படுத்துகின்றனர். அவை முறையே, பழந்தமிழ் (கி.மு. 300 – கி.பி. 700), இடைத் தமிழ் (700-1600), தற்காலத் தமிழ் (1600-தற்போது வரை) ஆகும். தமிழ் – சொல்லிலக்கணம்: தமிழ் என்னும் சொல் தமிழ் மொழியைக் குறிக்க எப்போது பயன்பாட்டிற்கு வந்தது என்பது தெளிவற்று உள்ளது. பண்டைய ஆதாரமிக்க இச்சொல் பாவனை கி.மு. முதலாம் நூற்றாண்டு காலத்துக்குரிய தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது. சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்னும் சொல் தம்-மிழ் > தம்-இழ், அதாவது “தனது மொழி” அல்லது “தனது சொந்த மொழி” பொருள்படும் விதத்தில் உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்பவர் தம்-இழ் என்பதில் “தம்” என்பது “தன்” எனவும், “இழ்” என்பது “விரிபுபடும் ஒலி” எனவும் விளக்குகின்றார். அதன்படி, “தன்னிலிருந்து வெளிப்படும் ஒலி” எனலாம். மேலும், அவர் தக்-இழ் > தவ்-இழ் > தம்-இழ் > தமிழ் என கிளவியாக்கம் நடந்து “சரியான (பேச்சு) முறை” என்ற பொருளில் தமிழ் சொல் உருவாகியிருக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார். சென்னை தமிழ் அகராதிப் பல்கலைக்கழகம் தமிழ் என்பதை “இனிமை” என பொருள் கொடுக்கின்றது. எஸ்.வி.சுப்பிரமணியன் ‘தம்’ என்பது இனிமை எனவும் ‘இழ்’ என்பது ஒலி எனவும் விளக்கி, “இனிய ஒலி” என தமிழுக்கு பொருள் கொடுக்கிறார். வள்ளாலர் இதற்கான அர்த்தத்தை பெளதீக அதீதவியல் மூலம் விளக்குகின்றார். அதன்படி, தமிழ் 5 பிரிவுகளால் த்+அ+ம்+இ+ழ் என பிரிக்கப்பட்டு விளக்கப்படுத்தலாம். தெய்வீக உட்பொருளில் இயற்கை உண்மை ஈடுபட்டு (‘த்+அ’), மனித இருத்தலாக பெளதீக உடல் சிறப்பு இருத்தலில் (‘ம்+இ’) உட்பட்டு பரிபூரண ஒருமையில் களிப்படையும் (‘ழ்’) அனுபவம் என இதன் விளக்கம் அமைகின்றது. இப் பெளதீக அதீதவியல் அர்த்தம் மறைமுகமாக இனிமை என்பதற்கு அர்த்தத்தினை வழங்குகின்றது. மொழிக்குடும்பம்: தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம்: - தமிழ்-மலையாளம் மொழிகள்
- தமிழ்-குடகு மொழிகள்
- தமிழ்-கன்னடம் மொழிகள்
- திராவிட மொழிக் குடும்பம்
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும். சொற்பிறப்பு: தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவைத் தவிர இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முதன்மையானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, “தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி “தனது மொழி” என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது “தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி” என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது “சரியான (தகுந்த) (பேச்சு) முறை” என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். பேச்சுத்தமிழ் – உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்: தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், ‘படித்த, பிராமணரல்லாதவர்’களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து, மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது. வட்டார மொழி வழக்குகள்: தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, “இங்கே” என்ற சொல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக “இஞ்ச” என்றும், தஞ்சாவூர் பகுதிகளில் “இங்க” என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் “இங்குட்டு”/”இங்கிட்டு” என்றும் வழங்கும் சொற்கள் “இங்கே” என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது “இங்கணே” அல்லது “இங்கனே” என்பதன் மாற்றமும் “இங்குட்டு”/”இங்கிட்டு” என்பது “இங்கட்டு” என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். “கண்” என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: “Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)”. கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் “அக்கட்டாலே போய் உட்கார்” என்று சொல்வதைக் கேட்கலாம். “இங்கன்” அல்லது “ஈங்கன்” என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும். பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் சில சொற்கள், தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. “பாலக்காடு ஐயர்” தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் காணப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது. தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில வேளைகளில் கணிக்க முடிகிறது. எத்னொலோக் (Ethnologue) என்ற மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்ரிக்க தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள். புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன. எழுத்துமுறை: தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் “வட்டெழுத்து” முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை. தமிழ் எழுத்துக்கள்: தமிழ் எழுத்துக்கள் என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெருங்கணக்கில் உள்ளன. | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ | ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ | ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ | ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ | ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ | கிரந்த எழுத்துக்கள்: கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், ‘ஜ’, ‘ஷ’, ‘ஸ’, ‘ஹ’ ,’க்ஷ’ போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் ஒலிப்புமுறை: தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். ஒலிப்பியல்: பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, “த” எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும். சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர். இலக்கணம்: இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன. தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம் மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம். தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு. தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப் பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா, ஆங்கில விக்கிப்பீடியா - Anton Quelle - அறிவுக் களஞ்சியம்
|