home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 65 guests online
தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:23
ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கு ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, மேலும் அவர்களது காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.

இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.

'வன்னியாச்சி' என்னும் தாமரைச்செல்வியின் சிறுகதைத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த கதைகளாக 'சுவர்' , 'தூரத்து மேகங்கள்', 'அம்மா' , 'வன்னியாச்சி' ஆகியவற்றைக்கூறுவேன். இவற்றில் 'சுவர்' சிறுகதையில் இலங்கைப்படையினரின் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக இடம் பெயர்ந்த தமிழ்க் குடும்பமொன்று, ஆனையிறவு முகாமுக்கு அண்மித்திருந்த தமது இருப்பிடத்துக்குத் திரும்புகின்றது. ஆனால் அங்கும் அக்குடும்பத்தவர்களுக்கு நிம்மதியில்லை. ஆனையிறவு முகாமிலிருந்த படையினர் தொடுத்த ஷெல் தாக்குதலொன்றில் அவளது கணவன் தனது கையொன்றினை இழக்கின்றான். அது கண்டு அழும் அவளை நோக்கி அவன் 'வீடு இடுஞ்சு போயிட்டுது... என்ர கை போயிட்டுது எண்டு நினைச்சு அழுறாய் மணி. ஆனா நான் உயிரோடதானே இருக்கிறன். அது எவ்வளவு பெரிய விஷயம்'. எதற்கும் கலங்காத அவனது மனவுறுதி இச்சிறுகதையின் முக்கிய அம்சம். 'வன்னியாச்சி' எண்பது வயதுக்கிழவியின் வாழ்வினை விபரிப்பது. கணவனை இந்திய இராணுவத்தாக்குதலொன்றில் பறிகொடுத்தவள் அவள். போர்ச்சூழல் அவளையும் சொந்த இடத்திலிருந்து தூக்கி எறிகின்றது. இடம்பெயர்தல் ஏற்படுத்தும் துன்பங்களை உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் அனுபவிக்கின்றாள். அவளது இந்நிலையினை விபரிப்பதுதான் 'வன்னியாச்சி'. இவ்விதம் அவளது வாழ்க்கை விபரிக்கப்படுகையில் , அவளது நனவிடைதோய்தலினூடாக அவளது இளம்பருவத்து, பாலியப்பருவத்து நிகழ்வுகளும் நிகழ்காலத்துடன் ஒப்பிடப்பட்டு விபரிக்கப்படுகின்றன. 'தூரத்து மேகங்கள்' சிறுகதை திடீரேனத்தோன்றி முல்லைத்தீவு மக்களில் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வினைச்சீரழித்த சுனாமி பற்றியும், அது எவ்விதம் சிறுவன் ஒருவனின் உளவியல்ரீதியாகவும் பாதிக்கிறது என்பது பற்றியும், அவனது கல்வி பற்றிய எதிர்பார்ப்புகளையும் விபரிக்கிறது. முடிவில் கனடாவிலிருக்கும் ஒரு நல்ல உள்ளம் அந்த மாணவனின் பாடசாலைச்செலவுகளைத் தீர்த்து வைக்கின்றது என்பதுடன் அக்குறுநாவல் முடிவடைகின்றது.

மீண்டும் முதலில் கூறியவற்றையே கூறிவிட்டு விடைபெறுகின்றேன்: "ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

- தமிழினி ஜெயக்குமாரன் (சிவகாமி சுப்ரமணியம்) 
Last Updated on Monday, 19 October 2015 08:30