Literatur -
கவிதைகள்
|
Written by சந்திரவதனா
|
Friday, 03 July 2009 16:39 |
அன்பே உனக்கும் எனக்கும் என்ன சொந்தம் உன்னோடு எனக்கென்ன பந்தம்
அலைஅலையாய் உன் நினைவு வந்து என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன் ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.
தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம் வாழ்கிறேன்.
குளிரிலே இதமான போர்வையாய் வியர்க்கையில் குளிர் தென்றலாய் மழையிலே ஒரு குடையாய் வெயிலிலே நிழல் தரு மரமாய் தனிமையில் கூடவே துணையாய் கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்... உன் நினைவுகள் எப்போதும் என்னோடுதான்
ஓ... இது தான் காதலா! இது காதலெனும் பந்தத்தில் வந்த சொந்தமா? உனக்கு ஒன்று தெரியுமா? திருமணத்திலும் உடல் இணைவதிலும்தான் காதல் வாழுமென்றில்லை அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில் நெஞ்சில் வாழ்வதும் காதல்
நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற என் மனமென்னும் தோட்டத்தில் உனக்காகத் துளிர்த்த காதல்
இன்று எனக்குள்ளே விருட்சமாய் வியாபித்து பூக்களாய் பூத்துக் குலுங்கி அழகாய் கனி தரும் இனிமையாய்
இது நீளமான காலத்தின் வேகமான ஓட்டத்திலும் அன்பு வேரின் ஆழமான ஊன்றலில் நின்று வாழும் உண்மைக்காதல்
சந்திரவதனா யேர்மனி February-1999 Comments
|
Last Updated on Wednesday, 15 July 2009 08:09 |