home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 34 guests online
நேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை) PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by கவி அருணாசலம்   
Saturday, 20 October 2018 19:25
குமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

“பென்சன் எடுத்தாப் போலை எப்பிடி நேரம் போகுதண்ணை?”

“வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது”

“இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா இருக்குமெல்லே”

“உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான். “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே?”

நான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்கு “கொழுத்த பண்டி” எண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல் “கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்”எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.

அவன் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கை “இவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுது” எண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கினான். ”இப்ப என்ன எழுதுறாய்” எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்” என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான் எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும் ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.

எனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.

- கவி அருணாசலம்
12.07.2018

Quelle -
yarl.com
Last Updated on Saturday, 20 October 2018 19:29