ஆப்ரஹாம் லிங்கன்

இவரைப்போல வாழ்க்கையில் சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்தவர் எவரும் இருக்கமுடியாது. ஆனால் அவர் கலங்கி நிற்காமல் சோதனைகளைக் கடந்து வந்து வெற்றி கண்டார். சாதாரண வெற்றி அல்ல, உலகமே திரும்பிப் பார்த்த வெற்றி. அமெரிக்க ஜனாதிபதி ஆனார் இந்த சாதாரண மனிதர்.

ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. 1809-ம்வருடம் பிப்ரவரி 12-ல் மிக மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் லிங்கனுக்கு வி வ சா யத் தி ல் ஆர்வமில்லை. புத்தகங்கள் படிப்பதில்தான் ஆர்வம் அதிகமிருந்தது. இந்தக் காலத்தைப் போல் அப்போதெல்லாம் புத்தகங்கள் குவிந்து இருந்ததில்லை. தேடித்தேடித்தான் படிக்கவேண்டும். விவசாய வேலையை விட்டுவிட்டு புத்தகங்களைத் தேடி அலைந்ததனால் லிங்கன் மீது தந்தைக்கு வெறுப்பு. லிங்கனுக்கு பத்து வயதிருக்கும்போது, தாய் மரணமடைய, தந்தை மறுமணம் செய்தார். வந்த சித்தி லிங்கன் மீது பாசம் வைத்தார். அதுதான் அந்த வயதில் லிங்கனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

இருபத்தேழு வயதில் குடும்பத்தைப் பிரிந்து வேலை தேடி நியூ ஆர்லியன்ஸ் நகருக்குச் சென்றார் லிங்கன். அங்கே கிடைக்கும் வேலைகள் எல்லாவற்றையும் செய்தார். ஆனால் எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. உள்ளூர் தபால் ஆபீஸில் தபால்காரராகக் கூட வேலை பார்த்தார். அதுவும் நீடிக்கவில்லை. இப்படியொரு சூழலில் அந்த ஊரில் ஒரு ரவுடி எல்லோரிடமும் வம்பு செய்து கொண்டிருந்தான். லிங்கனிடமும் வம்பு செய்ய, லிங்கன் அவனை அடித்து நொறுக்கி விட்டார். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே அவருக்கு நல்ல பெயரைத் தேடித் தந்தது. பொதுநலக் காரியங்களில் ஈடுபடத் துவங்கினார். தேர்தலில் நிற்கும் ஆசை வந்தது. முதலில் உள்ளூர்த் தேர்தல்களில் நின்றார். படிப்படியாக வளர்ந்து இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் நின்று ஜெயித்து ஜனாதிபதியானார்.

இப்படி ஒரே பத்தியில் வேகவேகமாக அவர் ஜனாதிபதி ஆன கதையைப் படிப்பதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் லிங்கன் வாழ்க்கை உயர்வு அத்தனை எளிதாக இல்லை. அவர் சந்தித்த தோல்விகளின் பட்டியல்களைப் பாருங்கள்.

போட்டியிட்ட முதல் உள்ளூர்த் தேர்தலில் தோல்வி. அவர் நடத்திய கடை நஷ்டம் வந்து மூடப்பட்டது. அவருடைய கூட்டாளி திடீரென்று இறந்துவிட அந்தக் கடன் சுமையும் லிங்கன்மேல் விழுந்தது. கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வி. உபஜனாதிபதிக்கு நடந்த தேர்தலில் தோல்வி. லிங்கன் செய்த எந்தத் தொழிலுமே வெற்றியடைந்ததில்லை.

இப்படி தோல்விகளின் பட்டியல் ஒருபுறமிருக்க, அவர் சந்தித்த மரணப் பட்டியலும் மனதை வருத்துபவை. பிறந்த சில மாதங்களிலேயே தம்பி ஒருவன் இறந்தான். பத்து வயதிருக்கும் போது தாய் இறந்தார். காதலி திடீரென்று மரணமடைந்தார். பிரசவத்தின்போது அக்கா இறந்தார். லிங்கனுக்குத் திருமணமாகி பிறந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு வயதில் இறந்தது. இன்னொருவன் பன்னிரண்டு வயதில் இறந்தான். இன்னொரு மகன் பதினெட்டு வயதில் இறந்தான். ஒரே ஒரு மகன்தான் நீண்டகாலம் வாழ்ந்தான்.

இத்தனை தோல்விகள், இத்தனை மரணங்களைச் சந்தித்தபிறகும் லிங்கன் நிலை குலையவில்லை, கலங்கவில்லை. தன்னுடைய இலட்சியத்தை விடாமல் துரத்தினார். லிங்கன் முதலில் 'வீக்' கட்சியில்தான் இருந்தார். பிறகு ரிபப்ளிகன் கட்சிக்கு மாறினார். கடுமையான போராட்ட வாழ்க்கையிலும் படிப்பை மறக்கவில்லை. சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். மக்கள் சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அறுபத்தோராவது வயதில் அவர் அமெரிக்கா ஜனாதிபதியான போது அங்கே உள்நாட்டுக் குழப்பம் இருந்தது. அதைத் திறம்படச் சமாளித்தார்.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், சோதனைகளைக் கண்டு சிறிதும் கலங்காத அவரது மன உறுதியும் அவரது விடா முயற்சியும். இதுதான் ஆபிரஹாம் லிங்கனின் சக்கஸ் பாயிண்ட்...

- ரஞ்சன்

Related Articles