மொழி வளர்ச்சியின் முக்கிய கூறாக பதிப்புத் துறையே உள்ளது|

கேள்வி:- தமிழிலக்கிய வளர்ச்சியில் பதிப்புத்துறையின் பங்களிப்பு எந்தளவில் இருக்கின்றது.?

பதிப்புத் துறை பற்றிப் பேச வேண்டுமாயின் குறிப்பாக பதிப்புத்துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்த ஆறுமுகநாவலர் சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற தமிழிலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேச வேண்டியது அவசியமாகும். நாவலரின் படைப்புகளை எடுத்துக்கொண்டால் தமிழகத்திலேயே எந்தவிதமான குறையும் சொல்ல முடியாத சுத்தமான படைப்பாகத் திகழ்கிறது. இவர் பதிப்பித்த எந்தப் புத்தகத்திலும் எழுத்துப் பிழையினையோ, வசனப்பிழையினையோ காண முடியாது. அவ்வளவு கவனமாகவும், தெளிவாகவும் இந்தப் பதிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பதிப்பு முறை தான் எமக்கெல்லாம் இன்றுவரை வழிகாட்டியாக இருக்கிறது. இவர்கள் மூலமாகத்தான் அச்சுப்பதிப்பின் பயன்பாட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

சி.வை.தா.வின் கலித்தொகைப் பதிப்பு மற்றும் சுன்னாகம் குமாரசுவமிப் புலவரின் பதிப்புகள் எல்லாம் தமிழகத்தில் இன்றும் அதே பதிப்புகளாக உள்ளன. சுவடிகளில் உள்ள அருந்தமிழ்ச் செல்வங்கள் எல்லாம் இன்று பதிப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாரம்பரிய தமிழச் சிந்தனைகள் பாதுகாக்கப்படுவதுடன் அது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உண்டாகின்றது. இதனால், பதிப்புத்துறையை மொழி வளர்ச்சியின் முக்கிய கூறாகக் கருத வேண்டியுள்ளது. இதனை அறிந்துதான் உவே சாமிநாதையர், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றோர் பதிப்புத்துறை வளர்ச்சியினைப் பாராட்டி உள்ளார்கள்.

அத்துடன் ஆரம்பகாலத்தில் விடயங்கள் அச்சுவாகனமேற்றும் நடைமுறைக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட பதிப்பு முயற்சிகள் இன்று பல்வேறு நிலைகளில் வளர்ச்சிபெற்று ஆய்வின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. இவற்றில் இந்திய, இலங்கைத் தமிழர்களின் அரிய படைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன எனத் துணிந்து சொல்லலாம்.

இவற்றில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற ஒரு பரந்துபட்ட பார்வையை உள்ளடக்கிய நூல்கள் வெளிவருதல் கவனிக்கத் தக்கதாகும். இவற்றில் சைமன் காசிச் செட்டி, முத்துத் தம்பிப்பிள்ளை மற்றும் தமிழிலக்கிய வரலாற்றினை எழுதிய பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் முக்கியம் பெறுகின்றார்கள்.

அதேபோல் தமிழின் உரை நடை வளர்ச்சியிலும் பதிப்புத்துறை முக்கிய இடம் வகிக்கிறது. பதிப்புதுறையில் பேர் பெற்ற நாவலரைத்தான் வசன நடை கைவந்த வல்லளார் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது என்பதுடன் இந்த இரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பினையும் நாம் அவதானிக்கலாம். இருவரும் இவரின் வழி வந்தோரும்தான் செய்யுள் வடிவத்தில் இருந்த பலவற்றையும் உரை நடை வடிவத்திற்கு கொண்டு வந்து வெகுசன இயக்க முன்னோடிகளாக விளங்கினார்கள்.

அத்துடன் இன்றைய காலகட்டத்தில் மேலை நாட்டுத் திறனாய்வு வளர்ந்த பிறகு மேலை நாட்டுத் திறனாய்வுத் கருது கோள்களையும், மரபு சார்ந்த தமிழியற் கருது கோள்களையும் இணைத்து புதிய ஆய்வு முறையை உருவாக்கியதில் இலங்கை அறிஞர்களிற்கு முக்கிய பங்குண்டு, என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தத் திறனாய்வுக் கலையில் தமிழர் சால்பு எழுதிய பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்குகிறார்கள்.

கேள்வி:- இந்தியாவில் இன்றுள்ள பேராசியர்களுள் குறிப்பிடத்தக்கவர் என்ற வகையில் தமிழ்நாட்டில் தற்போது தமிழில் ஆய்வு எந்தளவில் இருக்கிறதென்று கூற முடியுமா?

தொடக்க காலத்தில் தமிழ் மொழியைப் பொறுத்தவரை சுவைப்பு நெறி என்கின்ற முறையில் இருந்த மொழி ரசனையானது மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து சமூகக் கொள்கைகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்கின்ற போக்கு என்ற வகையில் வளர்ச்சி அடைந்தது மகிழ்ச்சிக்குரியது.

இலக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் வரலாறு மானிடவியல், பொருளியல், சூழலியல், சமூகவியல் என்று இன்று பல்துறைப் பரிமாணங்களோடு ஆய்வுகள் வெளிவருகின்றன. இன்றைய காலகட்டத்தில் புதிதாக வளர்ச்சி அடைத்து வரும் துறையாக ஒப்பியல் ஆராய்ச்சி விளங்குகின்றது. தமிழிலங்கியங்களோடு பிற மொழி இலங்கியங்களை ஒப்பிட்டு இன்று பல ஆய்வுகள் வெளி வந்துள்ளன.

திருக்குறளை உலக நீதி நூல்களோடு ஒப்பிட்டு பேராசிரியர் கா.கா.திருநாவுக்கரசு ஒரு நூலை எழுதினார். இதில் சீன இலக்கியம், லத்தீன் இலக்கியம், வடமொழி நீதி இலக்கியங்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு திருக்குறளின் தன்மை ஆய்வு ரீதியில் புலப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மொழி இலங்கியங்களோடு ஆராய்ந்தாலும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. மொழியியல் நோக்கிலும் பண்பாட்டு நோக்கிலும் அமைந்துள்ள இந்த ஆய்வுகள் புதியதோர் போக்கினை உருவாக்கி உள்ளன.

சங்க இலங்கியங்களில் உள்ள அகப்பாடல்களோடு ஜப்பானிய அகப்பாடற் கவிதைகள் ஒப்பிடப்பட்டுள்ளன. இவை எல்லாம் புதிய ஆய்வாளர்களின் புதிய ஆய்வினைக் காட்டுவதுடன் உலக இலக்கியங்களின் கையாளற்திறன்களையும் எம்முடைய மொழிக்குக் கொண்டு வந்துள்ளன.

கேள்வி:- தமிழியல் ஆய்வில் இலங்கையின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?

தமிழியல் ஆய்வில் இலங்கை அறிஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் ஆய்வுச் செல்நெறிகளோடு ஈழத்துச் செல்நெறிகளும் இணைத்துப் பார்க்கத் தக்கதாகும். மரபு சார்ந்த அறிஞர்களும், மரபும் புதிய போக்கும் இணைந்த இன்றைய அறிஞர் பெருமக்களும் புதிய ஆய்வு முறைகளை ஆய்வுலகிற்கு அளித்துள்ளனர்.

அத்துடன் மார்க்சிய அழகியல் என்கின்ற புதிய கோட்பாட்டை ஆய்வு நெறியில் பயன்படுத்துபவர்களில் இலங்கைத் தமிழ் பேராசிரியர்களிற்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரை முக்கியமானவர்களாகக் குறிப்பிடுவேன்.

அதேபோல் நடையியல் ஆய்வு முறையிலும் இலங்கைப் பேராசிரியர்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றார்கள். இந்த நடையியல் திறனாய்வு முறையில் கலாநிதி எம்.ஏ.நுஃமானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி:- உலக மயமாக்கலின் வேகத்திற்கு தமிழால் ஈடு கொடுத்துச் செல்ல முடியுமா? எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளப்போகிறது?

உலக மயமாதல் என்ற நிலைக்கு மொழிப்பயன்பாடு (Language use) முக்கியமானது. அந்த வகையில் கணினி மொழியில் (Computer Linguests) என்கின்ற துறையை தகவல் தொழில்நுட்பத்தில் பெரிதும் பயன்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள்.

தாராள மயமாக்கப்பட்டதன் மூலம் எமக்கு உலக இலக்கியத்தை அறிவதற்கான வாய்ப்புகள் மிகுதியாகின்றன. அந்த வகையில் மென்மேலும் ஒப்பியல் ஆய்வு முறை வளர்வதற்கு இது துணை நிற்கும். இலக்கியத்தினை சமூகம், பொருளியல் சார்ந்த பிரச்சினையோடு அணுகுவதற்கும் இது துணைபுரியும்.

அத்துடன் தமிழை கணினிக்குரிய கட்டமைப்பினை உடைய மொழியாகவும் மொழி சார்ந்த கணினி அறிஞர்கள் கருதுகின்றார்கள். எனவே வளர்ந்து வருகின்ற உலகு சார்ந்த கண்ணோட்டத்திற்கு மொழியின் பங்களிப்பு அவசியம் என்பதுடன் தமிழ் மொழியின் நடையும் அதற்கு ஈடு கொடுக்கும் என்றுதான் உறுதியாக நம்புகின்றேன்.

 - தி.திருக்குமரன்

Related Articles