மல்லாவியில் தொல்கால சுடுமண் சிற்பங்கள்


இந்த சுடுமண் சிற்பங்கள் பெண் உருவங்களாக உள்ளன. அங்கு 5 மனித உருவங்கள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று தலைப்பகுதியாக மட்டும் கிடைத்தது. மற்றொன்று தலைமுதல் இடுப்புவரையான பகுதியுடன் கிடைத்திருக்கிறது, இன்னொன்று தலை முதல் அடி வரையும்,மற்றொன்று தலை முதல் மார்பு வரையும், வேறொன்று முண்டமாகவும் கிடைத்துள்ளன.


இதைவிட இரு குடவடிவ மட்கலங்களும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் 3 திசைகளில் துளைகள் காணப்படுகின்றன. அத்துடன் இதற்குரிய மூடிகளாக கருதப்படுவையும் எடுக்கப்பட்டுள்ளன.


இவற்றைவிட சிதைந்த ஏராளமான ஓடுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விடம் மேலும் அகழ்வு செய்யப்படின் ஏராளமான சான்றுகள் கிடைக்கலாம்.
இதற்குமுன் மிகத் தொன்மையான சுடுமண் சிற்பங்கள் மிக நேர்த்தியான கலைநயத்துடன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்தன.

ஆனைவிழுந்தான் சுடுமண் சிற்பங்களைவிட இவை நேர்த்தி குறைந்தவையாக உள்ளன.

அத்துடன் மேலும் ஆனைவிழுந்தான் சுடுமண் சிற்ப முகங்களுக்கும் மல்லாவி சுடுமண் சிற்ப முகங்களுக்கும் இடையே அதிகளவிலான வேறுபாடுகள் உள்ளன. 1960களில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் ஸ்ரீலங்கா தொல்லியல் ஆணையாளர் கலாநிதி எஸ்.யு. தெரனியகலை சுடுமண் சிற்பங்களை கண்டெடுத்தார். இவையுடன் ஒத்தவையாக ஆனைவிழுந்தான் சிற்பங்கள் இருக்கின்றன. மல்லாவி சிற்பங்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட உள்ளன.

உருத்திரபுர சிற்பங்கள் 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டவை என எஸ்.யு தெரனியகலை தெரிவித்திருந்தார். இவற்றைவிட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் எடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியா நகர ஸ்ரீலங்கா தொல்பொருட்கலைச்சாலையில் உள்ளன.

தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவங்கள் சுடுமண் ஆக்கங்களிலேயே உள்ளன. சிந்துவெளி முதல் தமிழகம் ஆதிச்ச நல்லூர் வரை தமிழர் தாயகத்தில் வன்னியில் தமிழரின் தொன்மை சொந்தக்கலை சான்றுகளாக சுடுமண் சிற்பங்களே உள்ளன.

தமிழரிடம் கற்சிற்பம் உருவானபோது அதில் அந்நியக் கலப்புகள் வந்துவிட்டன. சுடுமண் சிற்பக்கலைகள் தமிழரின் கிராமியத் தெய்வங்களுக்குரியவையே தவிர ஆரிய கடவுளருடையவையல்ல. இதன் மூலம் சுடுமண் சிற்பங்களின் பெறுமதியை தமிழ் மக்கள் உணர்வர்.

வவுனியாவிலிருந்து சுகுணன்
4.2.2004


Photos-Eelamvision

Related Articles