விமர்சகர் சுசீந்திரனும் பெண் மொழியும்

பாரதி இலக்கிய சங்கத்தில் (சிவகாசி) நடை பெற்ற இலக்கிய சந்திப்பில் ஜெர்மனியை சேர்ந்த இலக்கிய விமரிசகரான ந..சுசீந்திரன் அவர்கள் பெண் மொழி பற்றி ஆற்றிய உரையின் பதிவு.

பெண் மீதான அடக்கு முறை ஒழிக்கப் பட வேண்டும் என்ற ஒரு கருத்தோட்டம் அல்லது விடயம் மேலெழுந்ததிற்குப் பின்னர் பெண்களுடைய , பெண் மொழியினுடைய தேவை உணரப் பட்டிருக்கலாம் அல்லது உணர்த்த வேண்டிய தேவை அறியப் பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். பெண் விடுதலை என்பது என்ன? பெண் விடுதலை ஏன் அவசியமா? அதை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய ஆசிய சமூகங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கின்றது. இப்படியான கேள்விகள் இருக்கின்றன.

முதலாவதாக சமூக அறிஞர்கள் எங்கள் சமூகத்தை நில பிரபுத்துவ சமூகங்கள் என்றும் , பின் தங்கிய சமூகம் என்றும் சொல்வார்கள். இப்படி பல்வேறு விசயங்கள் இருக்கின்றன . ஆனால் ஆணாதிக்க, ஆண்களுடைய , ஆண்கள் சொல்வது தான் மேடையேறக்கூடியதும் , தாரக மந்திரமாகவும், ஆண்கள் சொல்வது தான் நிறைவேற்றப் படக்கூடியதாகவும் இவ்வாறே இந்த உலகத்தினுடைய ஆதி சமூகங்கள் பொதுவாக உருவாகியிருக்கின்றன. அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பவராக ஆண்தான் இருக்கின்றான்.. அல்லது ஆண் வழிச் சிந்தனைதான் இருக்கிறது. இந்த கருத்தோட்டத்தில் எந்த வித மாறுபாடும் இருக்க முடியாது..

அப்படியானால் ஒரு சக ஜீவியாக இருக்கக் கூடிய பெண் ஏன் வித்தியாசப் படுத்தி, வித்தியாசங்களை பெரிது படுத்திப் பார்க்கனும். எங்களுக்கு தெரிந்த காலம் தொடக்கமே ஆணும் பெண்ணும் பிரிந்தார்களா? கருப்பு வெள்ளையாகவும், நாடுகளாகவும், தேசங்களாகவும், மொழிகளாகவும் பிரிந்தது போல் தான் ஆணும், பெண்ணும் பிரிந்தார்களா? பிரிந்த வுடனே அடக்கு முறை தொடங்கி விட்டதா? பலமற்றவர்கள் என்று சொல்லுகின்ற விவாதங்கள் இருக்கின்றன

இதுவே தொடர்ச்சியாக பேணப் படுவதற்கு இதுவரைக்குமான தத்துவங்களை , விடயங்களை இந்த சமூகம் கையகப் படுத்திக் கொண்டுள்ளது. விடுதலை பெற வேண்டும் . என வந்தவர்கள் இதை முறியடிக்க வேண்டும் ஆண் ஆதிக்கம் கோலோச்சும் அமைப்பை மாற்றிப் போட வேண்டும் முறியடிக்க வேண்டும். என்று வெளிக்கிளம்பி வருவது நியாயமான போராட்டம். ஆணாதிக்க சிந்தனையென்பது எங்களுக்குள்ளும் ஆழமாக புதைந்திருக்கின்றது. பெண்களுடைய விடுதலை ஆண்களுடைய விடுதலையாக கருதப் படவேண்டும் என்பதுமே என்னுடைய அபிப்பிராயம்.

ஒரு நேசம் என்பது ஆதிக்க மனோபாவம் உள்ளவன் அடிமை மீது செலுத்துகிற நேசம் நேசம் தானா? உலகத்தில் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கும் போது ஒவ்வொன்றையும் பிரித்துக் கொண்டே போகலாம்.. அப்படி ஒரு பிரிப்பு அவசியமில்லை. ஆனால் அப்படி ஒரு பிரிப்பு உருவாகிப் பெண்கள் மீது சித்தரிக்கப் பட்டிருக்கிறது. . பெண் விடுதலை பற்றி பேசுகின்ற போது சில வேளைகளில் எங்களுடைய பாரம்பரியம், மொழி, கலாசாரம் மதம் எல்லாம் ஆணாதிக்கத்தை காப்பாற்றுவதாக இருப்பதாக இருக்கின்றது. அவ்வாறு தான் சில வேளைகளில் மொழியில் எங்கள் உணர்வை பிரதி பலிக்கும் சொற்கள் போதைமையாக உள்ளது. அல்லது சொற்களை சொல்வதற்கு ஒரு கூச்சமிருக்கும்.. ஏன் சொல்ல முடிவதில்லை என்ற கேள்வி வருகின்றது..

தங்களுடைய நியாயமான, வெளிச்சொல்ல வேண்டிய வெளித் தெரிய வேண்டிய , தாங்கள் சொல்வது போலவே உணரப் பட வேண்டிய விடயங்கள் மொழியில் சொல்ல முடியாது இருந்தால், சொல்வதற்கு பஞ்சப்பாடு இருந்தால் புதிய மொழியை உருவாக்க வேண்டிய தேவை வருகின்றது. அதைத்தான் நாங்கள் பெண் மொழி என்கிறோம். பெண் மொழி எப்படி இருக்க வேண்டுமென்றால் , நவீன யுகத்தில் பல்வேறு விசயங்கள் இருபாலாருக்கும் சமபங்கு பெற வேண்டியிருந்தும் பெற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது.. கலாச்சாரம், பண் பாடு நடை முறை , மரபு எங்களுக்கு பதாகைகளாக காட்டி பெண்கள் தங்கள் உணர்வுகளை இப்படித்தான் சொல்ல வேண்டும் , உன் எல்லை இதுதான் என்ற கண்ணுக்குத் தெரியாது விதி ஒன்று இருக்கின்றது. இதை மீறுகின்ற சொற்கள் பெண் மொழியாக கருதுகின்றேன்.
என்று கூறி பெண் மொழி பற்றிய தனது கருத்துக்களை முன் வைத்து, அமர்ந்தார்.

தொடர்ந்து அவர் கூறிய கருத்துக்களிலிருந்து விவாதம் நடை பெற்றது
பெண் மொழி உருவாக்கம் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன எனும் கேள்விக்கு பெண் தான் நினைப்பதை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சொல்லவும் செய்யவும் இயலாததாயிருக்கிறது. இலக்கியம் சில வேளைகளில் எங்களை தயார் படுத்தும் புரட்சியை ஏற்படுத்துவதற்கு.

சமூகத்தினுடைய சிந்தனை மாற்றங்கள் தான் எங்களுடைய முக்கிய குறிக்கோள்.. சமூக மாற்றம் அல்லாது புரட்சி வராத போது , மொழியுனூடாக ஏற்படும் மாற்றங்களால் வருகின்ற ஆபத்து என்னவென்றால் எதை முறியடிக்க வேண்டும் என்று புறப்படுகின்றதோ அது வேறு ஒரு வடிவம் பெற்று விடுவதற்கான ஆபத்து வந்து விடுகின்றது, மிக மலிவான புரிதல்களும் நிகழ்ந்து விடுவதுமுண்டு.

பெண் என்பவள் போகப் பொருளாகவும் இரண்டாம் தர பிரஜையாகவும், கருதப் படுவது மிகத் துல்லியமாக தெரிகின்ற விசயம். ஆகவே பெண் மொழியின் அவசியத்தை அவர்கள் சொல்கிறார்கள். எந்த திசை நோக்கி அதன் பயணம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கப் படவேண்டும். நிலையானதும் நிரந்தரமானதுமான அன்பு ஒன்றுதான் எல்லா பேதங்களையும் அழிக்கும் என்று தொடர்ந்து நடந்த விவாதங்களின் போது பதிலுரைத்தார். அவரது உரை மிக மெல்லியதும், உணரக் கூடியதுமான சலனத்தை வந்திருந்தோர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது

நன்றி - பதிவுகள்

Related Articles