தந்தையர் தினம்

தந்தையர் தினம் Fathers Day! மேற்கத்திய நாடுகளில் தாய்மார்கள் தினம் - காதலர் தினம் என்று தாய்மார்களுக்கும், காதலர்களுக்கும் தனித் தினங்கள் ஒதுக்கப்பட்டு, கொண்டாடப்படுவது போல், தந்தையர்களுக்கும் ஒரு தினம் ஒதுக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றது. நாட்டுக்கு நாடு, தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள், உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது!

தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்குப் பல விதமான பதில்கள் காத்திருக்கின்றன. அமெரிக்க நாட்டின் மேற்கு வேர்ஜினியாவில், 1908ஆம் ஆண்;டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று சிலரும், வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரில் தந்தையர் தினம் முதல் முதலாகக் கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு. சிக்காகோ நகரின் ~லயன்ஸ் கழகத்தின்| தலைவரான ~ஹரி மீக்| என்பவர், தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல தரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும், அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி, அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு ~தந்தையர் தின நிறுவனர்| என்று பட்டமளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு உண்டு.

எது எப்படியிருப்பினும், ~தந்தையர் தினம்| என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது, ~ஓர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட ஒரு பெண்தான்| என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கின்றது. 1909ம் ஆண்டளவில், வாஷிங்டனில் உள்ள ஸ்பொக்கேன் (Spokane) நகரின் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாய்மார்கள் தினம் கொண்டாடப்படுவது, அப்போதுதான் அண்மையில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேவாலயத்தில் அமர்ந்திருந்து பிராத்தித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு மட்டும், தாயின் நினைவுகள் நிழலாடவில்லை. மாறாக, அவளுக்குத் தன் தந்தையின் ஞாபகங்கள்தான் நெஞ்சை நிறைத்த வண்ணம் இருந்தன. ஏனென்றால், அப் பெண் மிகச் சிறு வயதாக இருந்தபோதே, அவளது தாயார் இறந்து விட்டார். அந்தப் பெண்ணையும் அவளது ஜந்து சகோதரர்களையும் அன்புடன் பராமரித்து தாயாக அன்பு காட்டி தந்தையாக வளர்த்து வந்தது அவளுடைய தகப்பனார்தான்! அந்த ஆராதனையில் தாயைப் பற்றிச் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும், அவளுக்குத் தன் தந்தையைத்தான் ஞாபகப் படுத்தியது. திருமணமாகி, தன்னுடைய குடும்ப வாழ்வைத் தொடங்கி விட்டிருந்த அந்தப் பெண்ணின் பெயர் திருமதி சொனாரா டொட் (Mrs.Sonora Louise Dodd)


திருமதி சொனாரா டொட்டின் தாயர், தனது மகவொன்றின் பிரசவத்தின் போது, 1898ம் ஆண்டு - அகால மரணமடைந்திருந்தார். சொனாராவையும் - அவரது ஜந்து ஆண் சகோதரர்களையும் தனி ஒருவனாக - அவர்களது தந்தையே வளர்த்தெடுத்தார். அந்தத் தந்தையின் பெயர். வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட் (William Jackson Smart)

தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தைகளை ஆறு பிள்ளைகளை தாயாக - தந்தையாக அன்புகாட்டி, அரவனைத்து, வளர்தெடுத்த ~வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட்| யார் தெரியுமா நேயர்களே? ஒரு போராளி! தன் நாட்டுக்காகப் போராடிய போர்வீரன்! தனது மனைவியை இழந்த போதும், தன் தாய் நாட்டின் மீது தான் காட்டிய நேயத்தை தாயை இழந்த தன் மகவுகளிடம் காட்டிய ஓர் உண்மையான மனிதன்! தந்தை!! கிறிஸ்தவச் சமயத்தின் - அம்மையப்பன்!!!

அன்று - அன்றைய தினம் - தேவாலயத்தில், தாய்மார்களின் சிறப்பைப் பற்றிய உரைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் போராளியின் மகளுக்கு, அவையெல்லாம் தன் தந்தையைப் பற்றித்தான் சொல்வதைப் போலிருந்தன! தன்னந்தனியனாகத் தம்மை வளர்ப்பதற்குத் தம் தந்தை பட்ட கஷ்டங்களெல்லாம் அந்த மகளின் மனதை மீண்டும் - மீண்டும் உருக்கின. தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல், தந்தைமாருக்கும் ஒரு தினம் தேவை என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு அந்த மகளுக்கு உருவானது அது வலுப்பெற்றது.

அவள் ஒரு போராளியின் மகள் அல்லவா? ஆகையால், அவள் தன் எண்ணத்தைச் செயலாற்;றத் துணிந்தாள்! கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஊடாக - மதகுருமார்கள் ஊடாக திருமதி.சொனாரா டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கெனவே ~தாய்மார்கள் தினத்தை| ஆதரித்துக் கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள் திருமதி சொனாரா டொட்டின் ~தந்தைமார் தினத்தை| வரவேற்றுச் செய்திகளை வெளியிட ஆரம்பித்தன. ஸ்பொக்கேன் நகர பிதாவும், கவர்னரும், திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள். வில்லியம் ஜென்னில்ஸ் பினரன் போன்ற அரசியல்வாதிகளும் ~தந்தையர் தினம்| என்ற திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள்.

ஈற்றில் - வொஷிங்டன் நகர், ஜீன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை - தந்தையர் தினமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாட ஆரம்பித்தது! திருமதி சொனாரா டொட்டின் தந்தையான ~வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட்டின் பிறந்த மாதமும் ஐ_ன் மாதத்தில் தான் வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஆயினும், ~தாய்மார்கள் தினம்! போல், ~தந்தைமார் தினம், உடனடியாகப் பிரபலம் அடையவில்லை, என்பதே உண்மையாகும்! (அதனை இன்றைய தந்தைமாரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள் என்பது வேறு விடயம்!) 1916ம் ஆண்டளவில், அமெரிக்க ஜனாதிபதி ~வூட்ரோ வில்சன்| (Woodrow Wilson) இந்த ;தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்டபோதும், அது தேசிய மயமாக்கபடவில்லை. 1924ம் ஆண்டு ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் (Calvin Coolidge) தந்தையர் தினத்தை ஒரு தேசிய நிகழ்வாகப் பிரகடனம் செய்தார். 1966ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன் மாதத்து 3வது ஞாயிற்றுக்கிழமையை, அமெரிக்காவின் தந்தையர் தினமாகப் பிரகடனம் செய்தார். ஆயினும், உலகின் பல்வேறு பாகங்களில், வௌ;வேறு மாதங்களில் - தினங்களில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை நாம் காணக்கூடியதாக உள்ளது. உதாராணத்திற்கு அவுஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும், செப்டெம்பர் மாதத்து, முதல் ஞாயிற்றுக்கிழமையில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக்காட்டலாம்!

வெள்ளை ரோஜா மலரும், சிவப்பு ரோஜா மலரும், தந்தையர் தினத்திற்கு உரிய மலர்கள் என்பதனை இங்கே ஒரு உபரித் தகவலாகத் தர விழைகின்றோம். வெள்ளை ரோஜா மலர், ஒருவரது தந்தை காலமாகி விட்டார் என்பதையும், சிவப்பு ரோஜா மலர் ஒருவரது தந்தை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டுக் கௌரவப்படுத்துகின்ற விடயங்களாகும்!

மேற்கத்திய நாடுகளில் தந்தையர் தினம் என்பது இன்று ஓர் அவசியமான தினமாகப் பரிமாணம் எடுத்துள்ளதோடு, வியாபார ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்கால உலக வழிமுறைக்கு ஏற்ப, உணர்வுக்கும் பொருளியலுக்கும் ஓர் அருமையான தளத்தையும் தந்தையர் தினம் இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

'தந்தையர் தினம் - தாய்மார் தினம்! போன்றவை எல்லாம் வெள்ளைக்காரரின் பண்பாடு! தமிழர்களாகிய எங்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை! எமக்கு ஆண்டில் எல்லா நாட்களும் தந்தையர் தினம்தான்! தாய்மார் தினம்தான்" என்று வாதிடும் எம்மவர்களையும் நாம் காணக்கூடியதாகத்தான் இருக்கின்றது. ஆனால் இவர்களது வாதங்கள், தப்பானவை என்றே எமக்குத் தோன்றுகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்வியலின் பல அம்சங்கள், இப்போது குறியீடுகளாகவே அடையாளம் காணப்படுகின்ற காலகட்டத்திற்கு இப்போது நாம் வந்துள்ளோம். பழையன கழிதலும், புதியன புகுதலும், ஓர் இனத்தின் பண்பாட்டு மேன்மைக்கும், நாகரிகச் சிறப்பிற்கும் அத்தியாவசியமாக அமைந்து வருகின்றன. அத்தகைய சிறப்பும் - தகுதியும் தமிழ் மொழிக்கு இருப்பதனால்தான், தமிழ்மொழியும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக அழியாது தழைத்துச் சிறந்து வளர்ந்து வருகின்றது. பழைமையைப் போற்றுவதாக நினைத்துக் கொண்டு, புதுமையை ஏற்றுக் கொள்ள மறுத்தோமேயானால், நாங்கள் பழைமையை இழப்பதோடு மட்டுமல்லாது, புதுமையையும் தவறவிடுகின்ற வரலாற்றுத் தவறுகளுக்கு உடந்தையாகவும் நேரிடும். புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் தர்க்கிப்பதற்கு, ~எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல பொருள். முன்னர் நாம் ~கண்மூடித்தனமாக| ஏற்றுக் கொண்டாவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்து, சரியானவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பதே வள்ளுவரின் வாக்காகும்.

மற்ற இனங்களைப் போல் ஆணாதிக்கக் கட்டமைப்பு முறை தமிழரிடையே இருந்தாலும், அடிப்படையில் அது ஒரு தாய்வழிச் சடுதாயமாகவே இயங்கி வந்துள்ளது. அதனடிப்படையில் பார்த்தாலும், ~தந்தை| என்பவனுக்குரிய பண்புகளும், பொறுப்புக்களும் தொல் தமிழர் வாழ்விலே எடுத்துக் கூறப்பட்டிருப்பதை நாம் காணுகின்றோம். ~தந்தை| என்ற தமிழ்ச் சொல்லே, தந்தைக்குரிய தகுதியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ஒருவன் ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் ஆகின்றான். உலகியலில் உள்ள தருதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால், உண்மை புலப்படும். ~தந்தை| என்ற பெயருக்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாகும். மகவைத் தந்தவன், ~தந்தை|யானான்!

பழம் தமிழர் வாழ்க்கை முறையில் இன்னும் ஒரு வி;டயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கக்கூடும். காதல் வாழ்க்கையின் போதும், மண வாழ்க்கையின் போதும் தலைவன்-தலைவி என்றும், கணவன்-மனைவி என்றும் ஆணை முதன்மைப் படுத்தியே விளிக்கிப்பெற்று வந்ததையும், மகவு பிறந்த பின்னர், ~தாய்-தந்தை|, ~அம்மையப்பன்| என்று பெண்ணை முதன்மைப்படுத்துவதையும் நாம் சுட்டிக்காட்டலாம். தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்!

'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் - (குறள் 67)

என்ற குறள் மூலம், தந்தையானவன், தனது மகவுக்குச் செய்ய வேண்டிய முதற்கடமை, அவனைக் கல்வியில் சிறந்தவன் ஆக்குதலே, என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ~ஒரு தந்தை, தனது மகனைச் செல்வனக்குவதிலும் பார்க்க, அவனைக் கல்விமானுக்குவதே சிறந்தது| என்பது இக்குறளின் உட் கருத்துமாகும்.

தந்தையின் இந்த முதற் கடமையை நாம் புறநானூறிலும் காணக் கூடியதாக இருக்கின்றது. பொன்முடியார் பாடிய இப்பாடல், ஒரு மறக்குடித் தாயின் மனநிலையைக் கூறுவது போல் அமைந்திருப்பது, இன்றுமொரு சிறப்பாக அமைகின்றது. புறநானூற்றின் 312வது பாடல் இவ்வாறு கூறுகின்றது.

'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே:
நன்னடை நங்கல் வேந்தற்குக் கடனே:
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் - காளைக்குக் கடனே"

'என்னுடைய முதன்மையான கடமை, பெற்று, வளர்த்து வெளியே அனுப்புதல் தந்தையின் கடமையோ அவனைச் சான்றோனாக ஆக்குதல் வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியவை அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்ளத்திலே சுற்றிக் கொண்டு, அஞ்சாது நின்று, வென்று, பகை மன்னர் களிற்றையும் கொன்று மீண்டு வருதல், வளர்ந்து காளையான அவனது கடமையாகும். இதனை அறிவீராக என்று புலியூர்க் கேசிகன் பொருள் கூறுகின்றார்.

தந்தையர் தினத்தின் மூலம், தனது தந்தையை உலகளாவிய முறையில், திருமதி சொனரா டொட் அவர்கள், உயர்த்திச் சிறப்பித்தார். இதே விடயத்தைத் திருவள்ளுவர் மறு வழமாகக் கூறுதல், மிகுந்த நயமுடையதாக உள்ளது.

'மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனும் சொல்" -குறள் 70

தான் பிறந்ததில் இருந்து தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகில் பிழைப்பதற்கு ஒரு தொழிலில் பயிற்றி, மணம் செய்வித்து, மனையறம் படுத்தி, தனது தேட்டிலும் ஒரு கூறளித்த தன் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு என்ன?

மகன் செய்யவேண்டிய கைம்மாறு 'இவன் தந்தை என்நோற்றான் கொல் என்னும் சொல்" - அதாவது மகனின் அறிவாற்றலையும் நற்குண நற்செயல்களையும் கண்டவர்கள் இவனுடைய தந்தை, இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தைச் செய்தானோ" என்று வியந்து கூறுகின்ற சொல்லை, அவர்கள் வாயிலிருந்து தானாக வரச் செய்தலாகும்.

இந்தக் குறளில் இன்னுமொரு நயம் உள்ளது இங்கே ~சொல்| என்பது சொல்லைப் பிறர் மூலம் வருவிப்பதைக் குறித்து நிற்கின்றது. ~கொல்| என்பது ஜயம் குறித்த இடைச் சொல்லாகும். தந்தை நெடுங்காலமாகச் செய்து வந்த, பல்வேறு பெரு நன்மைக்கும் மகன் செய்ய வேண்டிய கைம்மாறு ~ஒரு சொல்லே| என்று ஒருவகை அணிநயம் படத் திருவள்ளுவர் கூறுகின்றார். இதனால் தந்தை செய்த நன்றிக்குச் சரியாக ஈடு செய்தல் அரிது என்ற உட்பொருளையும் காணுகின்றோம்.

திரைப்படப்பாடல்களையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றில் வருகின்ற,

'குழந்தை பாரம் உனக்கல்லவோ
குடும்ப பாரம் எனக்கல்லவோ
கொடியிடையின் பாரம் எல்லாம்
பத்து மாதக் காணக்கல்லவோ

மனைவியுடன் குழந்தையையும்
ஒருவனாகச் சுமக்கின்றேன்

சுமப்பதுதான் சுகம் என்று
மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்"

என்ற வரிகளை எல்லாத் தந்தையர்களும் முற்றாக ஆமோதிப்பார்கள் என்ற தைரியத்தில் இந்தக் கட்டுரையை முடிக்கின்றோம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு 'ஒப்பியன் மொழி நூல்" , திருக்குறள் தமிழ் மரபுனர், ~வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்|, ~புறநானூறு|, தமிழ் ~வளம்-சொல்| போன்ற நூல்கள் பெரிதும் உதவின. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்!

கனடாவிலிருந்து சபேசன்

Related Articles