நாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்

தகவல் தளம்
தற்போதைய கடலூர் மாவட்டத்தில் வடலூர் பண்ருட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காடாம்புலியூர் என்னும் கிராமமே இக்கட்டுரையின் தகவல் தளமாகும். தெற்கு மேல்மாம்பட்டு, சின்னப்புறங்கணி, காடாம்புலியூர் என்னும் பெருந்தெருக்களில் சங்கமமான இவ்வூரில் ஏறத்தாழ ஆறாயிரம் பேர் வசிக்கின்றனர். வன்னியர் பெரும்பான்மையினர். செட்டியார் சிறுபான்மையினர். ஆதிதிராவிடர்கள் ஊருக்கு வெளியே தனித்த காலனிகளில் வாழ்கின்றனர். விவசாயமும் முந்திரித் தொழிலும் இவ்வூரின் முதுகெலும்பானவை. நேரடி அனுபவம், களப்பணி மற்றும் நூல்வழி மூலம் திரட்டப்பட்ட செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளன. படுக்கைகள், இருக்கைகள், பாத்திரங்கள் போன்று அன்றாடம் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மனைப் பொருட்களாகும் (வசந்தா. ஜி. 2000: 134) தொட்டிலில் தொடங்கிக் கட்டில் வரை பன்னூறு பொருட்கள் பயன்பாட்டில் இருத்தல் புலப்படும். எனினும் விரிவஞ்சி பத்து வகைப் பொருட்கள் மட்டுமே இங்கே பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

அடுக்குப் பானைகள் :
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா, மாயவனார் குயவன் செய்த மண்ணுப் பாண்ட ஓடடா'' என்று மனித உடலையே மண்பாண்டமாக உருவகித்தனர் சித்தர்கள். பிறப்பிலிருந்து மூன்று துளையிட்டுக் குடம் உடைக்கும் இறப்பு வரை மட்பாண்டங்கள் நாட்டுப்புற மக்களோடு தமக்குள்ள நெருங்கிய உறவை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றன. நகர நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தில் மண்பாண்டத் தொழில் மகோன்னத வளர்ச்சி பெற்றிருந்ததை வரலாறு வரைந்து வைத்துள்ளது. ஆய்வுக்குட்பட்ட தற்போதையை கிராமப் பகுதியில் அடுக்குப் பானைகள் ஏறத்தாழ எல்லா வீடுகளிலும் இருக்கின்றன. குடிசை வீடு, மெத்த வீடு எனப்படும் மாடிவீடு எதுவாகிலும் அடுக்குப் பானைகள் இல்லாவிட்டால் விருத்தியம்சம் வராது என்று மக்கள் கருதுகின்றனர். வீட்டினுள் ஒருபக்கச் சுவரில் பானைகள் வரிசை வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அடுக்குப் பானைகள் என்று அழைக்கப்படலாயிற்று. தரையில் ஒரு வைக்கோல் பிரிமணையில் பெரிய அளவுள்ள பானையும் அடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அளவில் சிறிய பானைகளும் அமைந்திருக்கும். பானைகள் விழுந்து விடாதிருக்க சுவரில் அணைந்தவாறு இருக்கும். ஒரு வரிசையில் ஏறக்குறைய எட்டு பானைகளாகப் பத்து வரிசை வரை காணப்படும். இந்தப் பானைகளில் தானியங்கள், மளிகைச் சாமான்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். பானை வரிசையின் உச்சியில் சட்டிகளும், மூடியுடன் இடம் பெறுவதுண்டு. சட்டியென்றால் இந்தப் பகுதியில் மண்சட்டியை மட்டுமே குறிக்கும். அடிக்கடி ஆள்கின்ற பொருட்கள் ஏற்றி இறக்குகிற வசதி காரணமாக மேல்பானைகளிலும், எப்போதாவது எடுக்க வேண்டிய பொருட்கள் அடிப்பானைகளிலும் வைக்கப்பட்டிருக்கும். பானையிலுள்ள பொருட்களின் இருப்பை முட்டி விரலால் தட்டியே அறிந்து கொள்வர். பழையன கழிதலும், புதியன புகுதலும், பானை உலகிலும் உண்டு. பழையன என்பவை வீறல் விட்டவை, அல்லது உடைந்து போனவை. புதியன என்பவை ஆண்டுதோறும் நடைபெறும் துரோபதையம்மன் பங்குனித் திருவிழாவில் வாங்கிச் சேர்த்தவை. அடுக்குப் பானைகளில் பானை, குடம், தோண்டி, கலயம், மொந்தை, மரவை, எனப் பல சாதிகள் உண்டு. ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம் யாதெனில் தானியங்கள் பருப்பு வகைகளின் நடுவே காசு பணத்தை மறைத்து வைக்க நல்ல பாதுகாப்புப் பெட்டகமாகவும் பானைகள் பயன்படுகின்றன. மரபின் எச்சங்களாக, மறைந்து விடாமல் இருக்கும் அடுக்குப் பானைகளின் அவசியம் மனைப் பொருட்களைப் பொறுத்தவரை உலோகப் பொருள் நாகரிகம் மக்களிடம் மிகுதியாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்திலும் (இராமநாதன் ஆறு. 1982, 220) குறைந்து விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மண்பாத்திரங்களை அரிசனங்கள் தொட்டால் தீட்டு என்ற நம்பிக்கை நிலவுகிறது.

வரகு எந்திரம்
பட்டுக்காடு என்று நகர மக்களால் அழைக்கப்படும் இந்தப் பகுதி வானம்பார்த்த பூமியாதலால் வாதுமை எனப்படும் வரகு நிறைய விளைந்து கொண்டிருந்தது. 30 ஆண்டுகட்கு முன்பு வரையிலும், திருமணங்களில் வரகுச்சோறு போடுவதுதான் வழக்கம். நெல் சோறு அதற்குப் பிறகே இலையில் எழுந்தருளியது. வரகினை நெல் மாதிரி உரலில் இட்டுக் குத்தியோ அல்லது நெல்லரைக்கும் இயந்திரத்தில் அரைத்தோ அரிசியாக்க முடியாது. இதற்கெனப் பயன்பட்ட நாட்டுப்புறக்கருவி வரகு எந்திரம் ஆகும். வரவேந்திரம் என்று வழக்கில் கூறுவர். இதன் அமைப்பு பின்வருமாறு: அடிப்பக்கம் தட்டையாகவும், மேல்பக்கம் உருளையாகவும் உள்ள அரை வட்ட வடிவப்பாறங்கால் நடுவில் பெரியதுளையுடன், இருக்குமாறு அரைக்கப்படும். சாணமிட்டுச் சொரசொரப்பாக மெழுகிய மண்தரையில் ஒரு மரத்தாலான முளையடிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் வீட்டின் திண்ணையில் ஓர் ஓரத்தில் இது அமையும். மேற்குறிப்பிட்ட கருங்கல் உருளையைத் தரையிலுள்ள முளையில் சொருகி வரகினை ஒருகையால் அள்ளி நடுவிலுள்ள துளையில் போட்டபடி இன்னொரு கையால் எந்திரத்தைச் சுற்றுவர். இதற்கு ஏதுவாய் எந்திரக் கல்லின் கைப்பிடியாக ஒரு சிறிய முளை சாய்வாக அடிக்கப்பட்டிருக்கும். இப்போது வரகு தரையில் இறங்கிச் சுழற்சிக்குள்ளாகி மஞ்சள் நிறத்தில் கடுகு அளவில் அரிசியும் உமியுமாக நாலாப் பக்கங்களிலும் வெளியேறும். இந்த அரிசியினை உரலில் இட்டுத் தீட்டி வெண்ணிறமாக மாற்றிய பிறகே சமைக்க முடியும். கேழ்வரகு எந்திரத்திற்கும் வரகு எந்திரத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. நடுவில் முளையுள்ள தட்டையான ஒரு வட்டக்கருங்கல்லின் மேல் இன்னொரு வட்டக்கல்லைச் சொருகிச் சுற்றுவது கேழ்வரகு எந்திரமாகும். ஆனால் அரையுருண்டை வடிவிலான ஒரே கல்லை மட்டும் பயன்படுத்தி அரைப்பது வரகு எந்திரமாகும். காலகாலமாக இருந்து வந்த இந்த நாட்டுப்புறத் தொழில் நுட்பக் கருவி இப்போது காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. வரகு அருகிப் போனதாலும், நெல்லின் வரவு பெருகிவிட்டதாலும் விளைந்த விளைவு இது. மேலும் வரகினை அரைப்பதற்கு அதிக உடல் உழைப்பு தேவைப்படும். அதனைத் தருவதற்கு மக்கள் தற்போது தயாரில்லை. வரகுக்கு ஏழு உமிகள் உண்டு. வரவுச் சோறும் பொட்டப் புள்ளையும் சீக்கிரம் சமைஞ்சிடும் என்பவை வரகு தொடர்பான வழக்காறுகள்.

தாங்கல்
மறைந்து கொண்டிருக்கின்ற நாட்டுப்புற மனைப் பொருட்களில் தாங்கல் என்று அழைக்கப்படும் சோறு ஆற வைக்கும் ஓலை உபகரணமும் ஒன்று. பனை ஓலை அல்லது ஈச்சம் ஓலையால் சுமார் 2 அடி நீளம், 2 அடி அகலம், அரை அடி உயரத்தில் சதுரமாகப் பின்னப்படும் தாங்கல் நவீன வாழ்வின் பாத்திரங்களால் தற்போது ஓரங்கட்டப்பட்டு விட்டது. கல்வராயன் மலைப் பகுதியில் தாங்கல் புழக்கத்தில் இருப்பதாகப் பல்லாண்டுகட்கு முன்பு வெளிவந்த ஆறு இராமநாதனின் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது. சோற்றை வடித்துத் தாங்கலில் கொட்டுவர். பின்னர்க் குடும்ப உறுப்பினர்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டு தட்டுகளில் அள்ளிப் போட்டுச் சாப்பிடுவர். சோற்றில் தண்ணீர் கோர்த்துக் கொண்டிருந்தால் உலர வைக்கவும், சூடாக இருப்பதை ஆற வைக்கவும், பயன்படுவது மட்டுமன்றிப் பொருளியல் மற்றும் சமூக உளவியல் சார்ந்த ஒன்றாகவும் தாங்கல் பயன்படுகிறது. பானையில் வைத்துக் கொண்டு பறிமாறுவதால் உணவின் இருப்பு தெரியாமல் பற்றாக்குறை ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு. ஆனால் தாங்கலில் கொட்டி வைத்துப் பரிமாறும்போது குடும்பத்தினர் அனைவரும் பகுத்துண்டு நிறைவு கொள்ளலாம். உணவு நேரத்தில் நாட்டுப்புற மக்களை ஒன்றுபடுத்திய தாங்கல், தங்காமல் மறைந்து விட்டதை மனத்தாங்கலோடு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

மரத்தட்டு
ஆடு மாடுகட்குத் தண்ணீர், தவிடு இவற்றை வைக்க மரத்தாலான சதுர அல்லது செவ்வகத் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளதை நாமறிவோம். ஆனால் மக்கள் உணவு கொள்ள மரத்தினால் செய்யப்பட்ட வட்ட வடிவத் தட்டின இப்பகுதியில் உபயோகப்படுத்தினர் என்பதை அறிய வியப்புண்டாகும். அதிக வேலைப்பாடுகள் ஏதுமின்றி எளிமையாக, மாம்பலகை அல்லது பலாப் பலகையினால் மரத்தட்டு செய்யப்பட்டிருக்கம். உதிரிப் பலகைகளையே இதற்குப் பயன்படுத்துவர். வீட்டிலுள்ளவர்கள் குறிப்பாகக் குழந்தைகள் இதில் சாப்பிடுவர். விருந்தினருக்கு மரத்தட்டு மரியாதைக் குறைவாகக் கருதப்படும். இக்கட்டுரையாளர் தனது சிறிய வயதில் சில வருடங்கள் மரத்தட்டில் உணவு உண்ட அனுபவம் உடையவர். நல்லவேளையாக வேப்ப மரத்தினால் பணிபுரியும் அ.மா. சத்தியமூர்த்தி தானும் சிறுவயதில் மரத்தட்டில் சாப்பிட்ட அனுபவத்தை 07.04.2001 அன்று சந்திப்பின்பேது பகிர்ந்து கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. காட்சிப் பொருளாகக்கூட அது காணக் கிடைக்கவில்லை. உடல்நலத்திற்கு உதவும் என்றாலும், மரத்தட்டில் சாப்பிடுதல் நாகரிகக் குறைவாக மக்கள் நினைப்பதே இதற்குக் காரணமென்று தகவலாளர்கள் கூறினர்.

சம்பு
சிறிய சமபங்குச்சிகளைத் துடைப்பம் மாதிரிக் கட்டி சோறு வடிப்பதற்குப் பயன்படுவது நாட்டுப்புறத்தில் வழக்கமாக இருந்தது. உலோக அல்லது மண் வடிதட்டினால் நெல்சோறு மட்டும் தான் வடிக்க முடியும். வரகுச் சோறு வடிப்பதற்கென்றே ஆரம்பத்தில் பயன்பட்ட சம்பு பின்பு அரிசிச் சோறு வடிக்கவும் ஆயத்தம் செய்து கொண்டுவிட்டது. இன்றைய சூழலில் குக்கர்களின் படையெடுப்பு சம்பு, வடிதட்டு ஆகியவற்றைப் பெரும்பாலான வீடுகளிலிருந்து வெளியேற்றி விட்டது.

தொம்பை
கம்பு, கேழ்வரகு, முந்திரிக்கொட்டை இவற்றைப் பெரிய அளவில் சேமித்து வைக்கப் பயன்படும் தொம்பையினைத் தெற்கத்திக்காரர்கள் குதிர் என்றும் அழைப்பர். மண் தொம்பைகள் மரத்தொம்பைகள் என இருவகைத் தொம்பைகள் உண்டு. மண் தொம்பைகள் சேறு, வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு வட்ட பலகைகளால் கோர்க்கப்பட்டுச் செவ்வக வடிவில், திறக்கும் வகையில் மூடியுடன் காட்சியளிக்கும். ஒரு தொம்பையில் 5 கிண்ணங்கள் முதல் 7 கிண்ணங்கள் வரை இருக்கும். ஒரு கிண்ணம் என்பது ஏறக்குறைய 1 1/2 அடி உயரம் ஆறு அடி நீளம் நான்கு அடி அகலம் கொண்டது. தொம்பை செய்வதைத் தொம்பை கடாசுதல் என்று கூறுவர். ஒரு தொம்பையில் 25 மூட்டைகள் வரை தானியங்களைக் கொட்டி வைக்க முடியும். அடிக் கிண்ணத்தின் நடுவில் சிறிய திறப்பொன்று இருக்கும். தேவைப்படும்போது அதன் வழியே தொம்பையிலுள்ளவற்றை வெளியே சரித்து எடுத்துக் கொள்வர். ''தொம்பய தொறவம் பொண்ணே'', ''தொம்பையிலே அரிசியிருக்க தொவரம் பயிரிக்க'' என்றெல்லாம் வரும் நாட்டுப்புறப் பாடல்களில் தொம்பையினைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. (இராமநாதன், ஆறு 1982 : 312) ஓரளவு வசதியுள்ள வீடுகளில் எல்லாம் தொம்பை இன்றும் நின்று நிலவுவதைக் காண முடிகிறது.

தோல் அல்லது கோணித்தராசு
பொருட்களை எடை போட நாட்டுப்புறத்தில் வழக்கில் இருந்த ஒருவகைத் தராசு இது . சதுரமான தோல் அல்லது கோணி (சாக்குத்துணி)யின் நான்கு மூலைகளிலும் துளையிட்டு ஓரளவு மெல்லிய முறுக்கேறிய, கயிறுகளை அதில் கோர்த்து ஒரு அடி நீளமுள்ள உருட்டுக் கழியின் முனையில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். கையில் பிடித்துக் கொள்ள வசதியாக உருட்டுக் கழியின் மேல் மனையில் சிறிது தள்ளி சிறிய கயிறு இருக்கும். உருட்டுக் கழியில் வட்டவட்டமாய்ச் சில கோடுகள் வெட்டப்பட்டிருக்கும். இந்தக் கோடுகளே எடை காட்டும் அளவுகள். நிறுக்கும் போது எந்த வட்டத்தில் கைப்பிடிக் கயிறு படிந்து உருட்டுக்கழி தட்டையாகவோ பாறைச்சாய்வாகவோ நிற்கிறதோ அதே அளவில் மாற்றுப் பொருளை நிறுத்து வழங்குவர். பண்டம் மாற்றும் முறைக்குப் பக்குவமாகப் பயன்பட்ட கோணித் தராசு இப்போது முற்றிலும் மறைந்து விட்டது.

வரவோடு
கழுத்துடன் பாதி உடைந்த நிலையிலுள்ள மண்பானை இதன் அமைப்பாகும். கொள்ளு, பயிறு, உளுந்து, மணிலாக்கொட்டை, மிளகாய் ஆகியவற்றை எண்ணையில்லாமல் வறுப்பதற்குப் பயன்படுகிறது. வறுக்கும் ஓடு என்பதால் வரவோடு ஆயிற்று. சிறுமியர், சிறுவர் வயல்களில் கொள் வறுத்து அவித்துச் சாப்பிடத் தயாரித்துக் கொள்ளும் திடீர் வாணலியும் இதுதான். இன்னும் நாட்டுப்புற அடையாளங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் சமையல் சாதனங்களில் இது ஒன்று.

வெங்கலக்கிண்ணி
ஏறத்தாழத் திருவோடு வடிவில் பாதத்துடன் கூடிய வெங்கலக் கிண்ணி நாட்டுப்புறத்தில் உணவு உண்ணும் பாத்திரமாக இருந்தது. சிறுவர்களால் தூக்க முடியாத அளவுக்கு எடையுள்ள இந்தக் கிண்ணியில் வெளியாட்களுக்கு உணவு பரிமாறப்படுவதில்லை. கிண்ணி மறைந்து விட்டதற்குக் காரணம் அதிக எடை, கையாள்வதில் இடர்பாடு, வெங்கலத்தின் விலை போன்றவை. மேலும் கூட்டு, கறி, அவியல், பொரியல் என்றெல்லாம் உணவின் இரகங்கள் பலவகையில் ஊடாடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இவற்றையெல்லாம் ஒரே கிண்ணியில் கூட்டணி அமைத்துப் பரிமாறும் சாத்தியக்கூறு குறைந்துவிட்டது என்பதும் காரணமாகும்.

நெருப்புக் கரண்டி
அடுப்பைப் பற்ற வைக்க அக்கம் பக்கத்து வீடுகளில் நெருப்பு எடுப்பது வழக்கம். இதற்குப் பயன்படும் இரும்புக் கரண்டி நீண்ட கைப்பிடியுடன் எல்லா வீடுகளிலும் இருந்த ஒன்று. தீப்பெட்டியின் வருகை நெருப்புக் கரண்டியின் பயன்பாட்டுக்குத் தீ வைத்துவிட்டது. குழம்பு வைத்து விட்டுக் கடைசியில் தாளித்துக் கொட்டுகிற வழக்கம் இந்தப் பகுதியில் உண்டு. தாளிதம் செய்வதற்கெனத் தனியே இரும்புக் கரண்டி வைத்திருப்பர். தற்போது நெருப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லாததால் நெருப்புக் கரண்டியே தாளிதக் கரண்டியாக மாறிவிட்டது.

மொத்தத்தில் நாட்டுப்புறத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அவை தமிழ்ப் பண்பாட்டின் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் மேலும் ஆழமாக அறிந்து கொள்ள வழிவகுக்கும்.

- எழிலவன் -

Related Articles