அர்த்தமுள்ள சுதந்திரம் என்பது என்ன?

இன்று இலங்கையின் ஐம்பத்தியாறாவது சுதந்திர தினம். சகல அரசியல் கட்சிகளாலும் முக்கியமாக இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களான சிங்கள மக்களாலும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு நினைவு கூரப்படுகிறது.

ஆனால் இச்சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் ஏதாவது அர்த்தமுள்ளதா? எனக் கேட்டால் அந்த வினாவில் பொதிந்திருக்கும் அர்த்தம் நிச்சயமாக பதிலில் இருக்க முடியாது.

காரணம் இன, மத,மொழி, பேதங்களையெல்லாம் கடந்து ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அதுதான் சுதந்திரத்தின் தத்துவம் மட்டுமல்லாது யதார்த்தமும் கூட!

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அன்று எங்கிருந்தோ வந்த பறங்கியர்கள் இங்குள்ள எல்லா இன மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அதன் பின் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதியன்று அவர்கள் இரத்தம் சிந்தாத ஒரு சுதந்திரத்தை இலங்கைக்குத் தந்து விட்டு நடையைக் கட்டினார்கள்.

அன்று முதல் இன்று வரை இங்குள்ள சிங்களத்தலை (மை) வர்கள் தமிழ் பேசும் சிறுபான்மையோரை தம் இஷ்டத்திற்கு அடிமைப்படுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை உணராத அல்லது உணர்ந்திருந்தும் உணராதது போல் பாசாங்கு காட்டி அவர்களின் கால்களை நக்கிக் கொண்டு எந்தத் தமிழனாவது இருந்தால் அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கட்ட பொம்மன் ஜாக்ஸன் துரையைப் பார்த்து கூறியதைப் போல் அவன் தமிழினத்தின் அசல் வித்தாகவே இருக்க முடியாது என்பதுதான் ஆணித்தரமான உண்மை.

இலங்கையில் அதிலும் குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கு 1948 முதல் இன்றுவரை மாறிமாறி ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் தொடர்ந்து இழைத்து வரும் இன்னல்களும், கொடுமைகளும் ஒன்றா? இரண்டா? நாடற்றவர் எனக் கூறி பிரஜாவுரிமை மறுப்பு, வாக்குரிமை பறிப்பு, உயர் கல்வி தடைக்கான வெட்டுப்புள்ளி, தொழில் மறுப்பு, ஊதிய உயர்வின்மை, தொடர்ந்து இடம்பெற்று வந்த வன்செயல்களுக்கெல்லாம் மகுடமாக தலைவிரித்தாடிய 83 இனக்கலவரம், தமிழ் யுவதிகளின் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வல்லுறவுகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளும், கட்டாய கருத்தடை, தமிழ் இளைஞர், யுவதிகளின் அநாவசியக் கைது, சிறை முகாம்களில் சித்திரவதை, தமிழ் ஊடகவியலாளர்கள் கைது, படுகொலைகள், தேர்தல் காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் போன்ற இன்னோரன்ன அடாவடித்தனங்களும் அக்கிரமச் செயல்களும், இந்நாட்டுத்தமிழர்களுக்கு நடைபெறுவது போன்று வேறெந்தவொரு நாட்டிலும் நடைபெறுமா? என்பது சந்தேகமே! அப்படியே நடைபெற்றாலும் கூட அவை இங்கு நடைபெறுவதை விட குறைவாகத்தான் இருக்க முடியும்.

இது தவிர சுதந்திர தின விழா கொண்டாடப்படும் ஒரு நாட்டில் கட்டாயமாக ஜனநாயகம் நிலவ வேண்டும். ஆனால் இங்கோ உலகத்திற்கு காட்டுவதற்காக ஜனநாயகம் எனும் போர்வையை போர்த்திக் கொண்டு சர்வாதிகார ஆட்சியைத் தானே தொன்று தொட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து கடந்த சுமார் 22 மாதங்களாக யுத்த பீதியிலிருந்து விடுபட்டு கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் அண்மையில் பொதுஜன ஐக்கிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் காரணமாக மீண்டும் இலங்கையில் யுத்தம் தொடங்கி விடுமோ, எந்த நேரத்தில் எந்த இடத்தில் குண்டுகள் வெடிக்குமோ, 83 இனக்கலவரத்தைப் போன்று திரும்பவும் ஒரு பாரிய இனக்கலவரம் ஏற்பட்டு விடுமோ எனும் பயப்பிராந்தியோடு நிம்மதியிழந்து தவிக்கத் தொடங்கி விட்டார்கள்.

சிங்களத் தலைமைகளும் , தலைவர்களும் தான் இப்படியென்றால் நமது மலையக தமிழ்த் தலைவர்களாவது எமது சுதந்திரத்தையும் உரிமைகளையும், பெற்றுத் தருகிறார்களா? என்றால் அதுவுமில்லை. தமது சுய நலத் தேவைகளுக்காக அவர்கள் சிங்களத் தலைவர்களுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருந்து கொண்டு தமது காரியங்களை மட்டும் கவனத்துடன் சாதித்துக் கொள்கிறார்கள். கட்சி, தொழிற்சங்க பேதமின்றி, சுய கௌரவம் பாராது நமது தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குடையின்கீழ் நின்று போராடினால் என்றோ சுதந்திரத்தையும் அனுபவித்திருக்கலாம், உரிமைகளையும் வெற்றெடுத்திருக்கலாம். ஆனால் செய்தார்களில்லையே!

ஆக நம்மிடம் பூனையும் உண்டு. மணியும் உண்டு. ஆனால் மணியை பூனை கழுத்தில் கட்டுவது யார்? அதுதான் பிரச்சினை! காரணம் கட்ட வேண்டியவர்கள் எல்லோருமே அடிவருடிகளாகவல்லவா இருக்கிறார்கள்.

ஒரு பெண் தம் உடம்பு முழுக்க வைர நகைகளை அணிந்து கொண்டு நட்ட நடு ராத்திரியில் தன்னந்தனியாக வெளியில் நடந்து சென்றுவிட்டு எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்பும் நாள் எந்நாளோ அந்நாள்தான் பாரதத்திற்கு உண்மையான சுதந்திர நாள்! என அன்று மகாத்மாகாந்தியடிகள் கூறினார்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஒரு தமிழன் இரவில் தன் வீட்டில் பாயில் படுத்துறங்கிவிட்டு மறுநாட்காலை அதே பாயிலிருந்து உயிரோடும், சிரித்த முகத்தோடும் என்று எழுந்திருக்கிறானோ அன்றுதான் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்திருநாள்.

4.2.2004
ஆதாரம்: வீரகேசரி
nantri - tamilaninfo

Related Articles