பூண்டு செய்யும் மாயாஜாலம்

அடேங்கப்பா! பூண்டுக்குள் இவ்வளவு விஷயமா என்று கேட்கும்படி உள்ளது வெள்ளைப் பூண்டிலிருக்கும் மருத்துவ குணங்கள். கொலஸ்ட்ரால் முதல் பெண்களின் கர்ப்பப்பைகளில் ஏற்படும் கட்டிகள்வரை நிவாரணம் கிடைக்க, பூண்டு பல விதங்களில் பயன்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பூண்டின் பயன்பாட்டையும், மருத்துவ குணங்களையும் தெரிந்துகொண்டால் நீங்களும் ஒரு வீட்டு டாக்டர்தான். இனி பூண்டின் மேஜிக்...

வெள்ளைப் பூண்டு உணவில் சேர்க்கப்படும் ஒரு துணைப் பொருளாகும். இதனால் உணவின் சுவையும் மணமும் கூடுகிறது. வெள்ளைப் பூண்டு, உள்ளிப்பூண்டு எனவும் அழைக்கப்படும். பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. எல்லா நாட்டினராலும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால், பல வியாதிகள் வராமல் தடுக்கப்படுகின்றன. பூண்டு எளிதாகக் கிடைக்கக் கூடியது. இது ஆண்டு முழுவதும் கிடைப்பதால் உபயோகிப்பதில் சிரமம் இல்லை. உடல்நலம் நன்றாக இருக்கும்போதே பூண்டினைப் பயன்படுத்தினால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. ரத்தத்தில் தீமை செய்யும் விஷக்கிருமிகள் எங்கு தங்கினாலும் அந்தப் பகுதியில் தங்கி அழிக்கும் தனித்தன்மை வாய்ந்தது பூண்டு. சிறந்த விஷ முறிவாகவும், புழுக்கொல்லியாகவும், செப்டிக் நிலை வராமலும் பாதுகாக்கிறது.

பூண்டுச்சாறு மூலம் காசநோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மூட்டுவாத நோய்க்கும் குழந்தைப்பேறு இல்லாமைக்கும் குடல் புண்ணுக்கும் பூண்டுச்சாறு மூலம் நிவர்த்தி காணலாம்.

இரத்த அழுத்தநோய், ஆஸ்துமாவிற்குப் பயன்படுத்தினால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். புற்றுநோய் சிகிச்சையில் சிறப்பாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டியில் ஆஸ்டின் எஸ்.வீஜ், பர்ஜர், ஜாக் பென்ஸ்கி ஆகிய விஞ்ஞானிகள் புற்றுநோய் ஆய்வில் ஈடுபட்டபோது எலிகளுக்கு புற்றுநோய் விளைவிக்கும் கேன்சர் செல்களை ஊசி மூலம் செலுத்தி, கேன்சர் கட்டிகளை உண்டாக்கி, அந்த எலிகளுக்கு பூண்டின் என்சைமை செலுத்திச் சோதனை செய்தார்கள். இதனால் கேன்சர் கட்டியின் ஆபத்து நீங்கியதை உலகுக்கு உணர்த்தினார்கள்.

டாக்டர் பெயட்சர், பூண்டு மூலம் டைபாய்டு, காலரா, தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கமுடியும் என்றார். ஸ்வீடன் நாட்டில் டாக்டர் ரைக்னர்ஹஸ் என்பவர் பள்ளிக்குழந்தைகளுக்கு பூண்டு கொடுத்து இளம்பிள்ளைவாத நோயை நீக்கினார்.

பூண்டுச் சாற்றில் இருந்து அல்லிசாடின் (Allisatin) மருந்து தயாரிக்கப்பட்டு பலவித நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைப்பூண்டிலிருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. வினிகர் மற்றும் பொடி தயாரிக்கப்படுகிறது. பூண்டு ரொட்டி தயாரிக்கப்பட்டு உபயோகத்துக்கு வந்துள்ளது. பூண்டுத்தைலம் தயாரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.

பல கொடிய நோய்களில் ஒற்றைத் தலைவலியும் ஒன்று. இதனை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு 25 கிராம், வசம்பு 15 கிராம், வெள்ளைக் காக்கணம் வேர் 15 கிராம் ஆகிய இம்மூன்றினையும் 225 மில்லி வேப்ப எண்ணெயில் கலந்து இரும்பு வாணலியில் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை 5 துளிகள் வீதம் மூக்கில் நசியமிட ஒரு வாரத்தில் நோய் நீங்கிவிடும். செய்து பாருங்கள்.

அண்டவாதம்:
பூண்டையும் கருஞ்சீரகத்தையும் சமமாக எடுத்து நன்றாகப் பொடித்து லேகியம் போல் தேனில் குழைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை 10 கிராம் அளவில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டால் அண்டவாதம் நீங்கும்.

கபால வாயு:
பூண்டு, குப்பைமேனி வேர், வசம்பு சமம் எடுத்து பால் விட்டு நசுக்கி நாசியில் நசியம் இட கபால வாயு நீங்கிவிடும்.

மூலவாயு:
தயிரை நீரை வடித்துவிட்டு, நீர் வடிந்த தயிரில், ஒரு பூண்டை நன்றாக அரைத்து கலந்து சாப்பிட்டு வந்தால் மூல வாயு நீங்கும். இரத்த அழுத்தம்,

ஹிஸ்டீரியா:
பாலில் பூண்டு சேர்த்துக் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட வியாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். சில நாள் பயன்படுத்தினால் நோயின் தன்மை குறையும்.

காதுவலிக்கு:
60 மில்லி நல்லெண்ணெய்யில் இரண்டு பூண்டினை உடைத்துப் போட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு இரண்டு சொட்டு வீதம் காதில், காலை மாலை விட்டு வந்தால் உடனே குணம் தெரியும்.

பால் சுரக்க:
சில பெண்களுக்கு உடல்வாகு குறைபாட்டால் குழந்தை பிறந்ததும் பால் சுரப்பு போதிய அளவில் இருக்காது. பாலில் 2_5 பூண்டுப் பல்லைப் போட்டு சிறிது ஏலப்பொடியும் சேர்த்துக் காய்ச்சி கொடுத்து வந்தால் பால் சுரக்கும்.

குழந்தைகள் வாந்தி:
சில குழந்தைகள் பால் குடித்தவுடன் வாந்தி எடுக்கும் கொட்டாவி விடும். இந்த அறிகுறி தெரிந்தால் பூண்டில் ஓமம் சேர்த்து வெதுப்பு கஷாயம் தயாரித்துக் கொடுத்தால் குழந்தைகள் வாந்தி எடுக்காது.

கீல் வாதம்:
ஒரு பூண்டைத் தோல் நீக்கி சுத்தம் செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் நன்கு அரைத்து தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இந்நோய் நீங்கும்.

சகல குன்மத்திற்கும்:
பூண்டு, கழற்சிப்பருப்பு, சுக்கு, காயம் சமமாக எடுத்து நன்றாக மெழுகுபதம் வரும்வரை அரைத்து வைத்துக்கொண்டு 30 கிராம் அளவில் தினம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகை குன்மரோகமும் நீங்கும்.

முகப்பரு நீங்க:
இரண்டு பூண்டையும், கைப்பிடி அளவு துத்தி இலையும் சேர்த்து நன்கு சிதைத்து 200 மில்லி நல்லெண்ணெய்யில் காய்ச்சி வைத்துக்கொண்டு முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் பருக்கள் மறைந்துவிடும்.

பூண்டு எண்ணெய்:
பூண்டு _ 175 கிராம், வெங்காயம் _ 175 கிராம், விளக்கெண்ணெய் _ 100 மில்லி, மணத்தக்காளிச்சாறு _ 250 மில்லி, வறுத்துப் பொடித்த கடுகு ரோகினி _ 10 கிராம்.
பூண்டு, வெங்காயத்தை சிறிதாக அரிந்துகொள்ள வேண்டும். மேற்கண்ட பொருள்களை இரும்பு வாணலியில் விட்டு பொன்நிறம் வரும்வரை காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு வரும் கணக்காய்ச்சல், உட்காய்ச்சல், மாந்தம், தொண்டைப்புண், ஓக்காளம், மூலச் சூடு முதலிய நோய்களின் அறிகுறி தெரிந்த உடனேயே கொடுத்து வந்தால் மேற்கண்ட அனைத்து நோய்களும் கட்டுப்படும். ஒரு சிறிய கரண்டி அளவில் கொடுத்தாலே போதுமானது.

பேன், பொடுகு:
எலுமிச்சம் பழச்சாற்றில் பூண்டை நன்றாக அரைத்து காலையில் தலையில் நன்றாகப் படும்படி தேய்த்து, மாலையில் தலை முழுகினால் பேன்கள் இறந்துவிடும். பொடுகு மறைந்துவிடும். பகல் வேளையில் முடியாதவர்கள் இரவு படுக்கும்போது போட்டுக்கொண்டு காலையில் தலை முழுகிவிடலாம்.

சருமப்படைகள் நீங்க:
பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து ஒரு பங்கு சாற்றுக்கு இரண்டு பங்கு ஆலிவ் ஆயில் கலந்து படைகள் மீது தடவித் தேய்த்து வந்தால் சருமப்படைகள் விரைவில் நீங்கிவிடும்.

வாத ரோகத்திற்கு:
பூண்டு _ 35 கிராம், வசம்பு _ 105 கிராம், நத்தைச்சூரி வேர் _ 420 கிராம். இவற்றை நன்றாக இடித்து ஒரு லிட்டர் ஆமணக்கு எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு வெளிப்பிரயோகமாகப் பூசிவர சில விஷங்கள், வாதக் கரப்பான், சூலை, வண்டுக்கடி, கணை நோய், மாந்த நோய் ஆகியவை தீரும்.

எண்பது வகையான வாதநோய்களுக்கும் (மற்ற மருந்துகள் சாப்பிடும்போது) இத்தைலத்தைப் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் நோய்கள் அதிவிரைவில் நீங்கும்.

மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் பூண்டுத் தைலம் பல சிறப்புக் குணங்களை உடையது. இத்தைலத்தில் வைட்டமின்களும், தாது உப்புக்களும், கந்தக சத்தும் அடங்கியுள்ளன. இதன்மூலம் பலவிதப் பிணிகள் வராமல் தடுக்கவும், வந்தபின் நீக்கவும் பயன்படுகிறது. இத்தைலத்தை சாதாரணமாக முகர்ந்தாலே இருமலும், கக்குவான் இருமலும் நீங்கும். உடல் நலத்திற்காகவும், பலத்திற்காகவும் நாம் உண்ணும் அனேக உணவுப்பொருள்களில் பூண்டு முக்கியமான இடத்தில் இருக்கிறது. நம் தேவைக்கு ஏற்ப எந்த உணவுடனும் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டை உணவுடன் சாப்பிட்ட அன்றே இதன் பலனைக் கொடுக்கும். கபத்தை இளக்கி வெளியேற்றும். சிறுநீர்ச் சுரப்பை மிகுதிப்படுத்தும்; மலசிக்கலை நீக்கும். ஜீரண சக்தியை துரிதப்படுத்தும். உடல்வலியைக் குறைக்கும். இன்று மக்களுக்கு ஏற்படும் பல நோய்களைக் குணமாக்கும் அரிய மருந்தாக பூண்டு உள்ளது.

Related Articles