பறை - தப்பாட்டம்

ஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த ஜாதிய கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் ஜாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் இசைக்கருவியாக தப்பிசை ஒதுக்கப்பட்டது.

"தாழ்த்தப்பட்டவர்கள்" எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கைமுறையையே காரணமாகக் கூறி, அகோரகமாகப் பார்த்து மேலும் இழிநிலைப்படுத்தியது நவீன சமூகம். அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தையும் சாவு மேளம் என இகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது ஜாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாகக் கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது.

"தப்பு" என்பது ஒரு வகையான தோலிசைக் கருவி. இதை "பறை" என்று சொல்வாரும் உள்ளார்கள். மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்துக் கட்டி, ஒட்டி பறை செய்யப்படுகிறது.

மாட்டுத்தோலை சட்டத்துடன் இழுத்து ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பசை, புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெரும் சிறப்பு, தப்பிசைக்கும் கலைஞர்களே இசைக்கருவியையும் செய்து கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பதுதான். பறையை அடித்து இசைக்க இரண்டு குச்சிகளைப் பயன்படுத்துவார்கள். இடது கையில் வைத்திருக்கும் குச்சி சிம்புக்குச்சி. இது ஒன்றே கால் அடி நீளம், 1 செ.மீ அகலத்தில் இருக்கும். மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும்.

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

இக்கலையின் சிறப்பே, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளது தான். சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உண்டு. இக்கலைக்கென பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என பார்வையாளனை ஈர்க்கத்தக்க ரசனைமிகுந்த கலையாடல்கள் இதில் உள்ளன. தஞ்சா, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாக தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.

தொழில்ரீதியாக கிராமப்புறங்களில் இசைக்கும் இக்கலைஞர்கள் இசைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆடுவதில்லை. மூத்த கலைஞர்கள் பலருக்கு ஆடுவதில் உரிய பயிற்சியும் இல்லை. இந்த இசைக்கருவி அடிக்க, அடிக்க தொய்ந்து போவதால் அடிக்கடி தீயில் கருவியை வாட்டி இசைக்க வேண்டியது அவசியம்.

பறையிசைக்க உடை இலக்கணங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களைக் கவருவதற்கான யுக்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வேட்டியை தார்பாய்ச்சிக் கோர்த்து கட்டிக்கொண்டும், தலையில் பட்டையாக துணியைக் கட்டிக் கொண்டும் வண்ணமயமாக பறையை இசைப்பார்கள். இப்போது காலில் சலங்கை அணிந்து கொள்வதும் வழக்கில் இருக்கிறது. நடுவில் நிற்கும் கலைஞர் ஒவ்வொரு அடவுக்கும் சத்தமிட்டு, மற்றைய கலைஞர்களை அடுத்த அடவுக்கு தயார்படுத்துவார்.

கணீரென விழித்து, உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் இக்கலையை ஆக்ரோஷமான உணர்ச்சிகளை வெளிக்காட்டவும், விடுதலை வேட்கையை உணர்த்தவும் பயன்படுத்தும் பல குழுக்கள் தமிழகத்தில் கிளைத்திருக்கின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களும் தப்பிசையை பயின்று மேடைகளை அதிர வைக்கிறார்கள்.

குறிப்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்தி கலைக்குழுவே தொய்ந்து கிடந்த இக்கலையை மீட்டெடுத்தது என்பது என் கருத்து. கன்னியாகுமரியைச் சேர்ந்த அருட்சகோதரி சந்திரா தலைமையில் இயங்கும் இந்த கலைக்குழுவில் பெண்கள் பறை இசைக்கிறார்கள். ஆண்களே அடிக்கச் சிரமப்படும் பறையை இவர்கள் லாவகமாகவும், சீராகவும் இசைப்பது மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக தப்பாட்டம் நிறைய மேடைகளைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. தப்பாட்டத்தைப் பிரதானமாகக் கொண்ட இக்கலைக்குழு இந்தியா கடந்து உலகமெங்கும் இக்கலையைச் சுமந்து சென்ற பெருமையைப் பெற்றது.

ஜாதிய ஒடுக்குமுறைக்கான அடையாளமாகக் கருதப்பட்ட இந்தத் கலை, இப்போது அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக உருமாறி விட்டது. பல்வேறு தலித்திய அமைப்புகள், ஜாதியம் சாராத விடுதலைக் கலைக்குழுக்கள், இடதுசாரிக் கலை அமைப்புகள் போன்றன இன்று தப்பாட்டத்தை ஒரு ஆக்கபூர்வமான சக்தியாக முன்னெடுத்துச் செல்கின்றன.

ஆனால், இன்னும் ஜாதிய மேலாதிக்கம் நிலவும் தென் மற்றும் கிழக்கு டெல்டா மாவட்டங்களில், "பறையடித்தல்" என்பது கீழ்ஜாதியினரின் "கட்டாய அடிபணிதல்" என்ற கருத்து வலுவூன்றி இருக்கிறது. அப்பகுதியில் வாழும் இளம் தலைமுறை இந்த ஜாதிய அடையாளத்தை வெறுத்து ஒதுங்குகின்றனர். இதை அவமதிப்பாக கருதும் ஆதிக்கவாதிகள் இந்த மக்களை வதைப்பதும், அதனால் விவகாரங்கள் தலையெடுப்பதும் அவ்வப்போது நிகழ்கிறது. பல்வேறு தலித்திய இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்து விட்ட இக்கால கட்டத்தில், பல இடங்களில் இந்நிலை மாறிவிட்டாலும், ஒட்டுமொத்தமாக நீங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.

புதிய பாரதி
31.5.2009

Related Articles