நமக்கான ஓவியம்

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளின் குடிமக்கள் எதற்காக, யாருடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே தங்களை அழித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மனிதனிற்கும் மூச்சு முட்டுமளவுக்கு கந்தக வாசனையும், காது ஓயாது கேட்கும் வெடிச்சத்தங்களும், கண்ணைக் குருடாக்கும் புகை மூட்டங்களும் அவனைத் திகைப்படையச் செய்திருந்தன.

ஏன் எதற்கு எனும் சொற்கள் வலுவிழந்து வெறும் பயம் மட்டுமே அவர்களை ஆட்கொண்டிருந்தது. மக்கள் மத்தியிலிருந்த கலைஞர்கள் வாயடைத்துப் போனார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் எது கலை? இந்தச் சூழ்நிலைக்கு மாற்றாக மக்களைக் களிப்படைய வைப்பதற்காக ஒரு கலை வடிவத்தை உருவாக்குவதா? அப்படிச் செய்தால் அது யதார்த்தமானதா? வெறும் போலியானதாக தீக்கோழி தலையை மண்ணில் புதைத்துக் கொள்வது போல இருக்காதா?

கலைகளின் நோக்கம் போலிகளை உருவாக்கி மக்களைக் கனவு காண வைப்பதா? அவ்வாறின்றி உண்மைச் சூழலை அப்படியே படம்பிடிப்பதாக கலைகளை மாற்றுவதா? அப்படி மாற்ற முயற்சிக்கும் போது அவர்கள் நிஜத்தில் அனுபவிக்கும் வேதனையை விட அவை ஏதாவது புது அனுபவத்தைத் தந்துவிட முடியுமா? அல்லது பாரம்பரிய கலைகளை அப்படியே பிரதி பண்ணுவதா? அதனால் மக்களுக்கோ, சமூகத்துக்கோ ஏதாவது பயன் உண்டா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய கலைஞர்களுக்கும், பார்ப்பதற்கு மக்களுக்கும் நேரம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளால் எல்லாத்தரப்பு கலைஞர்களுமே உறை நிலைக்குப் போனார்கள். இந்தச் சூழ்நிலைக்கு கலையின் எதிர்வினை என்ன?

கலைகளுக்கான நோக்கமும் அதன் தேவையும் எல்லாத் தரப்பு மக்களாலும் கலைஞர்களாலும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. வெறும் போரையும், மக்களின் அழிவையும் எதிர்பார்க்கும் ஒரு சமுதாயத்திற்கு, மனித இனத்திற்கு கலை தேவையா எனும் கோபம் கலைஞர்கள் மத்தியில் உருவானது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு கலைஞர்களின் (குறிப்பாக ஓவியக் கலைஞர்கள்) ஒருமித்த சிந்தனையால் "டாடா'' எனும் பேரியக்கம் உருவானது.

டாடா'' என்பது எதைக் கூறுகிறது. அதன்கருத்து நிலை என்ன என்பது பற்றி அது தோற்றம் பெற்ற ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. டாடா உண்மையில் ஓர் கலை இயக்கம் அல்ல. புதிய கலைக் கொள்கைகளை உருவாக்குவதும் அதன் நோக்கம் அல்ல. ஆனால் போரின் வலிகளால் தாக்கப்பட்டவர்களின் சிந்தனையில் உதித்ததே அது. புதிய பரிமாணங்களையும், புதிய வழிகாட்டல்களையும், புதிய கலைக்கோட்பாடுகளையும் இருபதாம் நூற்றாண்டுக்கு அறிமுகப்படுத்திய டாடா இயக்கம், அதுவரை இருந்து வந்த அத்தனை கலைச் செயற்பாடுகளையும் உடைத்தெறிந்தது. அந்த இயக்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை. டாடா எனும் பெயரே ஏதேச்சையாக அந்த இயக்கத்திலிருந்தவர்களால் சூட்டப்பட்டதுதான். ஒருவருக்கொருவர் முற்றிலும் எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்களே அந்த இயக்கத்தில் உறுப்பினரானார்கள். சூரிச் நகரிலும், நியூயோர்க் நகரிலும் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்திய டாடா இயக்கத்தின் ஒரே நிகழ்ச்சி நிரல் "எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் இருப்பது' அதன் செல்வாக்கால் பின்னாட்களில் புதிய கலைக்கொள்கைகளும், மனித மனதின் கட்டற்ற விடுதலையும், கலைஞர்களின் சுதந்திரச் செயற்பாடுகளும் கலைகளில் வலியுறுத்தப்பட்டன.


டாடா இயக்கத்தின் உறுப்பினரான "மாசல் டூசம்' என்கிற ஓவியர், ஆண்கள் சிறுநீர் கழிக்கும் சிறுநீர்க்குழியை மலசல கூடத்திலிருந்து பெயர்த்தெடுத்து, ஒரு ஓவியக் கண்காட்சியில் பல ஓவியங்களுடன் இதையும் ஓர் ஓவியமாக வைத்தார். ஓவியங்களின் கீழ் ஓவியர் தன் கையொப்பத்தை இடுவது போல டூசம் இந்த சலக் குழியின் அடியில் கையொப்பத்தையும் இட்டார். அந்த ஓவியக் கண்காட்சி மக்களை பேரதிர்ச்சி அடைய வைத்தது. அது பல கேள்விகளை எழுப்பியது. ஓவியம் என்றால் என்ன, தட்டையான பரப்பில் இருந்தால் மட்டுமே அது ஓவியமா? உருவங்கள் இருந்தால் மாத்திரமே ஒன்றை ஓவியமாக அங்கீகரிக்க முடியுமா? ஏனையவற்றை ஓவியமாக அங்கீகரிக்க முடிந்த மக்களால் ஏன் ஒரு சலக் குழியை ஓவியமாக அங்கீகரிக்க முடியாது. டூசம் எழுப்பிய கேள்விகள் தர்க்க ரீதியாகவும், கோட்பாடு ரீதியாகவும் மக்களால் எதிர்கொள்ள முடியாதனவாகின. ஒன்றை புதிதாகப் படைப்பது மாத்திரம் ஓவியமல்ல, ஏற்கெனவே இருக்கும் ஒன்றை புதிய கோணத்தில் பார்ப்பதும் ஓவியச் செயற்பாடுதான். உருவங்களைச் செய்பவன் கலைஞன் என்றால் மலக்குழியைச் செய்தவனும் ஒரு கலைஞன்தானே? ஏன் அவனது "கலைப்படைப்பை'' ஒரு காட்சிக் கூடத்தில் வைக்கக்கூடாது?

இவரின் செயலால் அதிகாரம் சார்ந்த ஓவியச் சூழலின் செயற்பாடுகள் தரைமட்டமாகின. மலக்குழியை செய்த கலைஞன் ஓவியர்களுக்குச் சமனாய் உயர்த்தப்பட்டான். அதிகாரத்தை அழிக்கும் செயல் முறையான கலையில் ஏற்பட்டிருந்த அதிகாரப் போக்குகளை டூசம் களைந்தார். ஓவியர்களிடையே உயர்வு, தாழ்வு இல்லை. எல்லாக் கலைப்படைப்பும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் உடையது. அவ்வவ் தனித்துவங்களுடனேயே அவற்றை நோக்க வேண்டும். ஒரு கதிரைய உருவாக்கும் தச்சன் எவ்விதத்திலும் ஒரு சிற்பியை விடக் குறைந்தவனல்ல என்கிற கருத்து நிலைமாற்றம் ஓவிய உலகில் ஏற்பட இவரின் செயற்பாடுகள் வழிகோலின. இந்த வகையான சிந்தனைகளுக்கெல்லாம் மூலமாக இருந்தது டாடா இயக்கம். நம்முடைய கலாரசனையைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை நமது சமூகமும், அனுபவமும் ஆகும். அனுபவம் என்பது நாம் பெற்றுக் கொண்ட கல்வி முறைகள், தனிப்பட்ட ரசனை, தேடல் என்பவற்றினூடாக வருவது. நாம் எப்போதுமே ஏதாவதொரு கருதுகோளுக்கோ அல்லது தத்துவங்களுக்கோ சார்பாக இயங்குகிறோம். இந்த சார்புத்தன்மையானது நமது நம்பிக்கைகளின் அடிப்படையிலிருந்து எழுவது மனித மனம் ஒத்த நம்பிக்கைகளின் கோர்க்கப்பட்ட சரடாக கட்டப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கைகள் காலத்திற்குக் காலம் சிற்சில மாறுதல்களுக்கு உட்பட்டுத் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. அவையே எமது எண்ணங்களாகவும், சிந்தனையாகவும் வெளிப்படுகிறது. அவனது தேடலும், அறிவும் விருத்தியடைகிறபோது மீண்டும் புதிய நம்பிக்கைகள் புதிய எண்ணங்கள் சிந்தனைகள் உருவாகின்றன.

வெவ்வேறு ஓவியப் போக்குககளை வெவ்வேறு நிலையிலுள்ளவர்கள் ஆழமாக நம்புவதற்கும் இந்த நம்பிக்கையே துணை போகிறது. யதார்த்த ஓவியப் பண்பை நம்புகிற ஒருவருக்கு யதார்த்த ஓவியமே ஓவியமா நவீன ஓவியப் பண்பை நம்புகிற ஒருவருக்கு நவீன ஓவியமே ஓவியமாகவும் தோன்றுவதற்கு அவர்களின் அடிமன நம்பிக்கைகள் காரணமாகின்றன. இந்த நம்பிக்கைகளே அவர்களின் ரசனையைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் நம்பிக்கையும் அவனைப் பொறுத்தளவில் சரியானதே. அவன் தனது அனுபவத்துக்கூடாக தேடிய அவற்றை எந்தச் சூழ்நிலையிலும் இன்னுமொரு மனிதனால் ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விட நினைக்கிற ஒவ்வொரு செயலும் அதிகாரம் சார்ந்ததாக உருமாறுகிறது. உயர் ரசனை எனும் கருத்துத்தளத்தின் மேல் நின்று மற்றையவற்றை ரசனை இல்லாதது என்று சொல்கின்ற அவற்றை நிராகரிப்பதற்கான விளக்கங்கள்,தர்க்கங்கள் ஆகிய யாவும் தனது அதிகாரத்தை கட்டமைக்கின்ற பிறர் மீது வலிந்து திணிக்கின்ற செயல்முறைதான்.

ஓவியன் என்பவன் யார்? என்பதற்கு நமது அனுபவத்தினூடாக, வரலாறுகளினூடாக விடை தேட முற்பட்டோமானால், கண்காட்சியில் அல்லது மற்றவர்களின் பார்வைக்கு வைப்பதற்காக, ஒரு சட்டகத்துக்குள் வர்ணங்களால் உருவாக்கப்பட்ட ஓவியத்தை வரைந்தவன் என்கிற விடை கிடைக்கும். இவற்றையே நாம் ஓவியமாக அல்லது  "உன்னத கலைப்படைப்பாக'' அங்கீகரிக்கிறோம். மறுதலையாக, பத்திரிகைளில் (கொமிக்ஸ்) தொடர் சித்திரம் கீறுவோர், Cartoon போடுவோர், விளம்பரப் பலகைகளில் வரைவோர் உட்பட அனைத்து உதிரிச் செயற்பாட்டாளர்களையும் நம்மாலும், அவற்றை வரைவோராலும் ஓவியர்களாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணம், நமது அனுபவத்துக்கூடாக நாம் பெற்றுக் கொண்ட நம்பிக்கைகள். ஆனாலும், அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்டளவு பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஓவியங்களையே ஓவியமாக நம்பும் அந்தப் பார்வையாளர்களின் நம்பிக்கைகளை, அவர்களின் ரசனைகளை நாம் எமது அறிவியல் அதிகாரத்தால் சிதறடிக்கிறோம். 1950களின் கால கட்டத்தில் "வெகுசன ஓவியம்'' (popular Art) எனும் ஓவிய இயக்கம் இவ்வாறான அதிகாரம் சார்ந்த கலாரசனைக்கெதிரான செயல் முறைகளை உருவாக்கியது. பெரும்பாலான, அடித்தட்டு மக்களால் பார்க்கப்படும் இவ்வாறான ஓவியங்களை கண்காட்சிச் சாலைகளுக்குள் கொண்டு சென்றது. அது வரையில் பத்திரிகைகளில் பார்த்துப் பழகிய தொடர் சித்திரங்கள் (கொமிக்ஸ்) பெரிய அளவு கன்வஸ்களில் வரையப்பட்டு ஓவியக் காட்சியில் வைக்கப்பட்டது. விளம்பரப் பலகைகளில் உள்ள விளம்பரப் பொருட்கள் அதே வடிவத்துடன் கீறப்பட்டு அவையும் ஓவியமாக அங்கீகரிக்கப்பட்டன. ஓவியர் அண்டி வார்ஹோல் இந்தச் செயல்முறைகளில் முக்கிய பங்காற்றினார். இந்தத் தொடர் செயற்பாடுகளால் ஓவிய உலகில் இருந்த அதிகாரம் சார்ந்த மற்றும் "உன்னத'' என்னும் அடையாளங்களுடன் வந்த ஓவியங்களுக்கு நிகராக சாதாரண ஓவியங்களும், அடித்தட்டு மக்களால் ரசிக்கப்படும் ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஓவியத்தின் பரப்பும், ரசனையும் விசாலமாக்கப்பட்டது.

ஈழத்து ஓவியப் பரப்பில் பல்வேறுபட்ட ஓவியப் போக்குகள் காணப்படுகின்றன. வெளிப்படையாக எல்லோரும் அங்கீகரிக்கும் ஓவிய வகைகளாக மரபுசார் யதார்த்த ஓவிய முறைகளும், நவீன ஓவிய முறைகளும் அமைகின்றன. 

"ஈழத்தின் ஓவியர்கள்'' எனும் பட்டியலுக்குள் இந்த இருவகை ஓவியங்களை ஆக்கும் "கண்காட்சி'' ஓவியர்களே மீண்டும் மீண்டும்பேசப்படுகிறார்கள். இவற்றை மட்டுமே ஓவியமாக ஏற்றுக் கொள்ளும் பாங்கு பெரும்பாலான அறிவுசார், மேல்தட்டு மக்களிடையே உள்ளது. இவர்களின் செயல்பாடுகள் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல என்ற போதிலும் வரலாற்று ரீதியில் இவர்களின் பங்களிப்பு 100, 150 வருடங்களுக்குள் அடங்கியதாகவே இருக்கிறது. இந்தக் கால கட்டத்திற்கு முன் இவ்வாறான ஓவியங்கள் உருவாக்கப்பட்டது வெகுகுறைவு. ஓவியங்களுக்கான கருப்பொருளின் தளம் விரிதல், நவீன உத்திகளைக் கையாள்தல் ஓவியத்தை ஒரு தனிப்பெரும் கலையாக ஸ்தாபித்து எடுத்தல் போன்றவை இவர்களின் உன்னத பணியாயிருந்தது. ஆனாலும், ஓவியம் என்கிற வரையறையை ஒரு கட்டத்துக்கு மேல் நீட்ட முடியாதவர்களாக அவர்கள் இருந்தார்கள். வரலாற்று நோக்கில் ஈழத் தமிழர்களின் ஓவிய மரபானது எப்போதுமே தனியாக சட்டகங்களுக்குள் காணப்பட்டதல்ல. இந்த மரபு தனித்த வடிவம் ஒன்றிற்கப்பால், பிரயோக ஓவியமாகவே இருந்திருக்கிறது. பிரயோக ஓவியம் என்பது மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் அமைக்கப்படுவது எடுத்துக்காட்டாக உடைகளில் அலங்காரங்களாகவும், அவற்றின் பிரத்தியேக நிறச்சேர்வைகளாகவும், ஆபரண வடிமைப்புக்களாகவும், பாய், மேசை விரிப்புப் போன்ற பின்னல் வகைகளாகவும், சுடுமண் சட்டிபானைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. இன்னும் விசாலமாக தச்சுவேலைகளிலும், வீட்டு வடிவமைப்பிலும், கோவில் சடங்கு முறைகளிலும், அலங்கார சோடனை முறைகளிலும் அவை பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்துமே ஈழத்தமிழருக்கான தனித்த வடிவங்களாகவும் ஓவிய மரபாகவும் இருக்கின்றது. ஓவியம் என்கின்ற தனிப்பிரிவுக்குள் இவர்களே இவற்றை அடக்காத போதும், அவை ஓவியம் சார் செயற்பாடுகளாகவே அமைந்தன. இந்த ஓவியப் பண்பாட்டை நாம் மிகச்சாதாரணமாக புறங்கையால் தட்டிவிட முடியாது. அவற்றினுள் இருக்கும் அழகியல் தனித்துவம் ஈழத் தமிழருக்கான ஓவிய அடையாளம் என்பதையும் நிராகரித்து விடமுடியாது.

ஈழத்தமிழரின் ஓவியக் கலையில் ஆர்வமுடைய பலரும் ஈழத்தமிழருக்கான ஓவிய வடிவம் எவ்வாறிருக்க வேண்டும் எனச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்திலேதான் மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஓவிய மறுமலர்ச்சி இயக்கங்களின் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.நம்மில் ஏராளமான ஓவியர்கள் ஒன்றில் ஐரோப்பிய ஓவியப் பாரம்பரியத்தை பின்பற்றுபவர்களாகவோ அன்றில் இந்திய ஓவியப் பாரம்பரியத்தை பின்பற்றுபவர்களாகவோதான் இருக்கிறார்கள். ஓவிய மொழி எமக்கானதாக இன்றி இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஓவியருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் பரந்த ஆளுமைகளும் இருக்கலாம். ஆனால், அவற்றில் ஈழத்தமிழர்களுக்கான அடையாளங்கள் இல்லை. பலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் நமக்கான அடையாளம் என்பது நமது போரியல் வாழ்வு அவலங்களைச் சொல்வது மட்டுமல்ல, அவை நமது வாழ்வியல் தடயங்கள் மாத்திரமே. அதற்கும் மேலாக நமது சொந்த ஓவிய மொழி இன்னும் பயில் நிலையிலேயே உள்ளது. சிலர் ஆரோக்கியமான பல முயற்சிகளைச் செய்திருந்தபோதும் (எடுத்துக்காட்டு நிலாந்தன்) அவை முழு வீச்சையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.

இந்த வகையில் தென்னிந்திய ஓவியக் கலைஞர்கள் தமக்கான சுய வடிவத்தை தமது வேரிலிருந்தே பெற்றுக் கொண்ட முறை நமக்குப் பாடமாக அமைகிறது. ஓவியர் பணிக்கர், தென்னிந்திய மாந்திரீக, கிராமத்து வடிவங்களையும், எழுத்துக்களையும் தனது ஊற்றாகக் கொண்டார். ஆதிமூலம் கோவில் மற்றும் கிராமத்து சிற்பங்களிலிருந்து தனக்கான ஓவியமொழியை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறே பல தென்னிந்திய ஓவியர்களின் ஓவியமொழியும் தங்களுக்கான பிரத்தியேக அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஈழத்து ஓவியர்களின் நிலை வேறாக இருக்கிறது. இந்தப் போக்குகளிலிருந்து விடுபட்டு நமக்கான ஓவியப் பொது மொழியை உருவாக்குவதற்கு நாம் இரண்டு விதமான செயற்பாடுகளில் இறங்க வேண்டும். ஒன்று எமக்கான பிரத்தியேக ஓவிய வடிவங்களிலிருந்து நமது ஓவியங்கள் அமைதல். எடுத்துக்காட்டாக நாட்டுக்கூத்து, ஆடல் வடிவம், எமது ஓவியங்களுக்கான கோட்டுருவ அசைவை தரலாம். எமது கிராமப்புற சடங்கு அமைப்புகள், அதிலுள்ள நிறச் சேர்க்கைகள் எமக்கு இன்னுமொரு பயிற்சிக் களமாக அமையலாம். இவை மட்டுமன்றி இன்னும் ஏராளமான களங்கள், எமக்கான வேர்களோடு எம்மிடையே இருக்கிறது, அவை பற்றிய ஆழமான தேடல்கள் ஓவியர்களிடையே வளர வேண்டும். நாம் ஓவிய நுட்பங்களை வெளியில் தேடுவதை விடுத்து நமக்குள் இருக்கும் பரப்பிலிருந்து பெறுவது ஆரோக்கியமானது. இரண்டாவது, ஓவியம் சார்பான பரப்பை விஸ்தரிப்பதும் ஓவியர்களுக்கும், கைவினைக் கலைஞர்கள் என்று அழைக்கப்படுவோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை இல்லாதொழிப்பது. இதன் மூலம் எமது பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் படைப்புக்கள் பொதுப் பார்வைக்கு வருகின்றன. இன்னுமொரு வகையில் இச் செயற்பாடு அடித்தட்டு மக்களின் வரிவடிவங்களை ஓவிய மொழியாகக் கொள்வதற்குச் சமமானது. இதற்கு ஓவியர்களினதும், பார்வையாளர்களினதும் பார்வை வீச்சு விசாலமாக்கப்பட வேண்டியிருக்கிறது.

இவையெல்லாம் குறித்த ஒரு காலப்பகுதியுள் நிகழ்ந்து விடக்கூடியவை அல்ல. மாறாக கட்டம் கட்டமாக பல தொடர் செயற்பாடுகளினூடாக அடையப்பட வேண்டியவை. இவையே எமக்கான எதிர்கால ஓவியமாக அமையும்.

 - தமிழினி

Related Articles