காதல்.......மோதலா?

காதல் என்பது வெள்ளப் பெருக்கு போன்றது. யாரிடம் ஏன், எப்போது வருகின்றது என்பதற்கு பதில் இல்லை என்பதால் காதல் இல்லை என்று இல்லை!காதலை தூய அன்பு என்று அர்த்தம் கொள்பவர்களும் உண்டு. காதலை காமத்துடன் இணைத்துக் கதைப்பவர்களும் உண்டு. காதல் என்பதே ‘இல்லை’ என்று சொல்பவர்களும் இல்லாதில்லை. ஆனால் காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவர இயலாததாக இருக்கின்றது என்பது மட்டுமல்ல நிலையற்றதாக இருக்கின்றது என்பதும் இதன் தனி அம்சமே.

காதலால் பல சாம்ராஜ்யங்கள் அழிந்தன. பல உருவாகின. பல யுத்தங்கள், இலக்கியங்கள் காதலால் வந்தன. நெப்போலியன் ஜோசபினுடன் என்று காதலில் தோற்றாரோ அன்றே அவருடைய சாம்ராஜ்யமும் அழிந்தது, அதே போல் ஒரு தமிழ் பெண்ணின் காதலே ஈழத் துயரின் தொடக்கம் ஆகியது. காதலால் தாஜ்மஹால் என்ற அழியாத அடையாளத்தை உருவாக்கினார் ஆனால் அதே காதல் அவரை பட்டியமும் இட்டு சாகவும் வழி வகுத்தது,  பைபிளில் பொல்லாத காதலால் கொலைகாரனாகிய தாவிதையும் அவன் கண்ணீர் வாழ்க்கையும்  காணலாம். ஒரு நபர் இன்னொருவரை விரும்புவதற்க்கும், நேசிப்பதற்க்கும் அவர் மேல் கொண்டுள்ள மதிப்பு,  உயர்ந்த எண்ணமாக இருக்கலாம். ஆனால் அதுவே காதல் என்று முடிவுக்கு வர இயலாதது. காதல் அதையும் கடந்த உணர்வுபூர்வமான ஒரு நிலையாகும்.  நாம் ஒருவரை விரும்ப, நம் விருப்பு- வெறுப்பு, சமூக, சூழல், மனநிலை, ஆளுமை,   உயிரியல்-இராசயண மாற்றங்களும் காரணமே. தன்மை கொண்டு நோக்கும் போது காதலுக்கு ஒரு நிலையான தன்மை இல்லாதது என்று தெரியும் போது அன்பு ஒன்றே என்றென்ன்றும் அழியாததும் முடிவில்லாததுமாக இருக்கின்றது என்பது பலருடைய கருத்தாகவும் விளங்குகின்றது.

காதலுக்கு முதல் சுழி இடுவதும், அதே போல் காதல் தோல்வியால் துவண்டு விழுவதும் ஆண்களே. தன் தாயை ஆண் பெண் இரு பாலர் இரண்டு விதத்தில் பார்க்கின்றனர். வளர்ந்த பெண் அம்மாவை தன்னை போல் ஒரு சக மனுஷியாக துவங்கும் போது ஆண்களுக்கு அம்மா என்பது அன்பையும்  பாசத்தையும் சேர்த்து தந்து தன் உணர்வவோடு கலந்த உயர்ந்த உறவாக காண்கின்றனர்.  வளர்ந்து விட்ட நிலையில் புதிய ஒரு பெண்ணை தன் வாழ்க்கையில் சந்திக்கும் போது அதே அன்பையும் பாசத்தையும் தன் காதலியிடம்/மனைவியிடம் பெற துடிப்பதாக காணலாம்.  ஒரு நேர்காணலில் நடிகர் கமல் ஹாசன் தன்  காதல் வாழ்க்கையின் தோல்விக்கு காரணமாக காதலியில் தன் அம்மாவின் பாசத்தை காண்பதே என்று குறிப்பிட்டார்.  சில முரட்டு கணவர்களை   பெண்கள் தாய்மை அன்பில் தன் பக்கம் ஈர்ப்பதின் காரணம் கூட இதுவே.

ஒரு முறை விஜய் தொலைகாட்சியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அம்மா என்பவர், தன் அன்புக்கு, பணிவிடைக்கு கணக்கு பார்ப்பதில்லை. மனைவிகளின் அன்போ பிரதிபலன் பார்த்தே இருக்கின்றது என ஒரு கணவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. ஆண்கள், மனதில் உறைந்து கிடக்கு அம்மா என்ற அழியாத அன்பின் பிம்பத்தை மனைவி/காதலி என்ற கண்ணாடி வழியாக பார்க்க துடிக்கின்றனர்.

காதல் ஒரு வகையில் ஆண்களின் பலவீனமே!  காதல் தோல்வி என்பது (நேரம் போக்கு, விளையாட்டாக காதலை காண்பவர்களை தவிர்த்து) கள்ளம் கபடமற்ற ஆழமான   உணர்வுக்கு அடிமையானவர்களுக்கு பெரும் துயரே!  அவர்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றும் காரணியாக பல பொழுதும் அவர்கள் உயிரை குடிக்கும் ஏன் சில பொழுது தத்துவ ஞானியாக மாற்ற கூடியதாகவும் காதல் மாறுகின்றது.  பெண்களை போல் காதல் தீயில் இருந்து எளிதாக தப்பித்து கொள்ள இயலாது ஆண்களே எரிந்து சாம்பலாகின்றனர்.

காதல் பிறப்பது/ துவங்வது எங்கு ஆகினும், சென்று சேர வேண்டியது நிச்சயமாக திருமணத்தில் தான் இருக்க வேண்டும்.  திருமணம் என்பது   அங்கீகாரம் மட்டுமல்ல வெவ்வேறு இரு நபர்கள் பரிபூர்ணமாக தங்களை ஏற்று கொண்டு தங்கள் இதயத்தால் இணையும் போது காதல் தெய்வீக தன்மை அடைகின்றது.  ஏற்றுக் கொள்வது என்பது இருவரும் பலத்தையும், பலவீனத்தையும் நன்மையையும் அவர்களிலுள்ள திண்மையையும்  ஏற்று கொள்ளுகின்றனர் என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.

ஆனால் பல பொழுதும் திருமணங்கள் என்பது காதலின் மூடு விழா கொண்டாடும் நிகழ்வாக  பரிணமிக்கின்றது என்பதே உண்மை.  காதலால்  மறையப்பட்ட பல நல்லதும் கெட்டதும் ஆன விடயங்கள் திருமணம் ஆன பின்பு தெளிவாக விளங்குவதும்,  திருமணம் என்பது தங்களை மாறி மாறி குற்றம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும், ஆளவும்-அடக்கவும்  நிபந்தனையற்ற அனுமதி சீட்டாக மாறிய போது காதல் கசந்து  திருமணம் என்பது அர்த்தமற்ற ஒரு சடங்காக மாறுகின்றது.  நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, புரிதல், அங்கிகாரம் என உயர் பண்புகள் இருக்க வேண்டிய இடத்தில் சந்தேகம், சண்டை சச்சரவுகள் என போர் தொடுக்கும் தளமாக மாறுகின்றது திருமணம்!!   கல்யாணத்தில் காதல் ஒளிந்து கொள்ள உறவுகள் கசந்து உணர்வு பூர்வமான ஒன்றிப்பு இல்லாது வெறும் உடல் கூடலாக மாறி காதலின் வெப்பமோ, ஆவேசமோ அற்ற உயிரற்ற வாழ்க்கையாகி மாறுகின்றது திருமண வாழ்க்கை.  

சமூக சூழல் காரணமாக பல பொழுதும் திருமணத்தின் பின்பு காதலை வெளிப்படுத்த இரு நபர்களும் முயற்ச்சி எடுப்பது இல்லை.  ‘இனி எனக்கு தான்’ என்ற அதீத தற்காப்பு நிலையும் புகுந்து விட ஆண்மை, ஆணவம், ஆளுமை, எல்லாம் ஒன்று சேர காதல் கசந்து திருமண பந்தம்  கேலிக்குரியதாக மாறுகின்றது.  பல ஆண்கள் திருமணம் பின்பு மனைவிக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்வதில்லை.  இந்த நிலையை உரமிட என்றே பெண் பித்தன், பெண்டாட்டி தாசன் என்ற கேலி பேச்சும் ஒன்று சேர காதலை வெளிப்படுத்தாது காதல் வாழ்வுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். 

காதல் என்பது உடல் சார்ந்த உறவு என்பதை விட  அன்பின் பிரதிபலிப்பாக, உணர்வுள்ள உறவாகவும்,  தன்னை முழுமையாக அங்கீகரிக்கும், அளவற்ற அன்பு செலுத்தும் உறவு என எதிர் பார்த்திருக்கும் பெண்களுக்கு திருமணம் என்பது உப்பு சப்பற்ற அடிமை வாழ்க்கை என்ற உணர்வு தலை தூக்க விடுதலை என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல துணிகின்றனர். பல காதல் மனைவிகளுக்கு பற்றி கொள்ளும் சந்தேகம் என்ற நோயும் சேர்ந்து ஆட, வாழ்க்கையே அவதாளமாகி, அபஸ்வரம் ஆகி மாறுகின்றது சில வீடுகளில்.  பல மனைவிகள் காதல் கணவர்களை தங்கள் வாழ்நாள் அடிமை என்றும் தன்னிடம் போல் மற்றவர்களிடமும் காதலில் விழுந்து விடுவாரோ என்ற பயத்தினாலே இவர்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்தாது அழித்து விடுகின்றனர்.  இதனால் பல ஆண்கள் காதலில் கண்டவரல்ல தன் மனைவி இப்போது என்று தெரிய வரும் போது வாழ்க்கையில்  இருந்து ஓடி ஒளிக்கவும், சிலரோ தற்கொலை முடிவை தேடுவதும் இன்னும் பலரோ தத்துவ ஞானிகளாக மாறி “காதல் என்பது அங்கீகரிக்கப் படாத தெய்வீகம் திருமணம் என்பது அங்கீகரிக்கப் பட்ட விபசாரம்” என்ற முடிவை எட்டுகின்றனர்.

இயற்கையால் ஒரு போதும் சந்திக்கயிராத இரு துருவங்களான வித்தியாசமான ஆசாபாசங்கள் கொண்டு படைக்கப்பட்ட ஆண் பெண் இருவரும் காதல் என்ற ஒரே உணர்வால் ஒரே கோட்டில் பயணித்து ஒரே புள்ளியில் சேர்ந்து  திருமணம் என்ற பந்ததால் ஒன்றாகி அதே நிலையில் நிலைத்து ஒன்றாய் இருப்பது தீராத தூய வெள்ளப் பெருக்கு போன்ற காதலால் மட்டுமே!!! 

நேசம் மரணத்தை போல் வலியது
அதின் தழல் அக்கினி தழலும் அதின் ஜுவாலை கடும்
ஜுவாலையுமாயிருக்கின்றது.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது
ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்திற்க்காகக் கொடுத்தாலும்
அது அசட்டை பண்ணப்படும்

உன்னதப் பாட்டு(8:6)

For love is as strong as death
Its burns like blazing fire
Like a mighty flame
Many waters cannot quench love
Rivers cannot wash it away
If one were to give all the wealth of his house for love
It would be utterly scorned

             

- J.P Josephine Baba 

Related Articles