என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்!

ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு

அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்வி முறை, புதிய மனிதர்கள் என்று எல்லாமே புதியனவாக இருந்தன. ஆனால் சொர்க்கத்துக்கே செல்வதைப் போன்ற ஆனந்தத்துடன் அவள் அங்கு வந்திருந்தாள். பாடசாலையில் வெள்ளையின மாணவர்களே நிறைந்திருந்தனர். அவர்களுக்கு அவளும் அவளுடைய தோல் நிறமும் புதுமையாகத் தெரிந்தன. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சியான அனுபவம் காத்திருந்தது.

அருகில் வந்த சக மாணவர்கள் அவள் தோலை உரசிப் பார்த்தனர். அவர்களுக்கு அவளது தோலில் அழுக்கேறியதாலேயே அந்த ‘மண்ணிறம்’ வந்திருக்கலாம் என்ற எண்ணம். அவர்கள் அதற்கு முன்னர் மண்ணிறமான மனிதர்களைப் பார்த்திருக்கவில்லைப் போலும்.

இதுவொன்றும் அறுபதுகளில் நடந்த சம்பவமல்ல, எண்பதுகளின் பிற்பகுதியில் மிசசாகாவில் நடந்தது. அந்தச் சிறுமிக்கு அப்போது எதுவுமே புரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வேன் என்பதும் அப்போது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆமாம், ராதிகா சிற்சபைஈசனின் கதை இவ்வாறுதான் கனடாவில் ஆரம்பித்தது.மேவிஸ், எக்லின்ரன் பகுதியிலிருந்து மூன்று பேரூந்துகளில் பயணித்துத் தமிழ்ப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ராதிகாவுக்கு தமது பகுதியில் தமிழ்ப் பாடசாலையொன்றை ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறது. தனது தந்தையாருடன் பீல் பொதுக் கல்விச்சபைக்குச் சென்று கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்து விட்டார்கள். கத்தோலிக்க கல்விச்சபைக்கு சென்று கேட்டபோது முப்பது மாணவர்கள் வருவதாயிருந்தால் பாடசாலையொன்றை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ராதிகா வீட்டிலிருந்தே தமிழ்ப் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதன் தேவை பற்றிய பிரசுரங்களை தந்தையாருடன் சேர்ந்து தயாரித்திருக்கிறார். தமிழர்களின் வீடுகளை ஒவ்வொன்றாகத் தேடிச்சென்று ஆதரவு தேடியிருக்கிறார். இவர்களின் முயற்சியால் அந்தப் பகுதியில் தமிழ்ப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிக இளைய வயதிலேயே சமூகப்பணிகளுக்கான அடித்தளம் ராதிகாவின் மனதில் வந்திருக்க வேண்டும்.

கடந்த மே மாதம் இரண்டாம் திகதி நடைபெற்ற கனடிய பாராளுமன்றத் தோதலில் ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் போட்டியிட்ட ஈழத்தமிழரான ராதிகா சிற்சபைஈசன் பதினெண்ணாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த தடவை ராதிகா போட்டியிட்ட புதிய ஜனநாயகக்கட்சி இத்தொகுதியில் வெறும் ஆறாயிரத்துக்கு அண்மித்த வாக்குகளே பெற்றிருந்தது. ராதிகாவின் வரவு புதிய ஜனநாயகக் கட்சிக்கும், ஈழத்தமிழருக்கும் பெருத்த உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஸ்காபரோ பகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றி புதியதோர் மைல்கல்லாகப் பேசப்படுகிறது. 

ராதிகா கலைத்துறையில் மிகவும் ஆர்வமுள்ளவர். பல நாடகங்களில் நடித்திருக்கிறார். தொண்ணூறுகளில் கே.எஸ். பாலச்சந்திரன் இயக்கிய ‘குரங்கு கை தலையணைப் பஞ்சுகளாய்’ நாடகத்தில் அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தொண்ணூற்று எட்டாமாண்டு வானவில் நிகழ்ச்சியில் மேடையேறிய ‘இது ஏமாற்றமா’ நாடகத்தில் மூன்று வேறுபட்ட பாத்திரங்களில் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். ’மென்மையான வைரங்கள்’, ‘எங்கோ தொலைவில்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கே.எஸ். பாலச்சந்திரன் இயக்கிய ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். 

ராதிகா ஒரு திறமையான நடனக் கலைஞரும் கூட. நிரோதினி பரராஜசிங்கத்தின் உருவாகத்தில் ராதிகா பங்கேற்ற ‘வீரவேள்வி’ நாட்டிய நாடகம் அவருடைய நடனத்திறமையை பறைசாற்றியது. இன்னும் பல நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்..

ராதிகா கால்ரன் பல்கலைக் கழகத்தில் வர்த்தகத்துறையில் தனது இளமானிப் பட்டத்தையும், குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில் Industrial Relations துறையில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பின் உப தலைவராகவும், பின்னர் கால்ரன் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் உப தலைவராகவும் இருந்திருக்கிறார். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பின் உப தலைவராக இந்தபோது ‘சுவடுகள்’ என்ற வருடாந்த நிகழ்வையும், சஞ்சிகையையும் ஆரம்பித்தவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது துப்பரவுத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்துடன் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றி “Justice 4 Janitors” என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் உழைத்திருக்கிறார். இவை பொதுச்சேவைகான உந்துதலை அவருக்கு வழங்கியிருக்கவேண்டும். 2004ம் ஆண்டு Ed Broadbent இனுடைய வெற்றிக்காக உழைத்ததன் மூலம் புதிய ஜனநாயகக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 

ராதிகா ‘நான் ஒரு தமிழிச்சி’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர். எமது பத்திரிகையின் எழுத்தாளர்களில் ஒருவர். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரால் பட்டப்படிப்புத்துறைக்கான துறைநோக்கராக(Critic) நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் வெற்றிக்குப்பின் பணிநிமித்தம் ஒட்டாவாவிற்கு சென்று வந்திருந்தவரை அதே புன்முறுவலுடன் சந்தித்தோம்.  

மையநீரோட்ட அரசியலில் தமிழ் இளையோரின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு போதுமானதாக உள்ளதா என்ற கேள்விக்கு போதாது என்று கூறுகிறார். “தமிழ் இளையோர் என்றில்லை பொதுவாகவே இளையோரின் பங்களிப்புப் போதாது. நான் இளையோருக்கு குடியில்துறைசார் பங்களிப்பு பட்டறைகளையும் (Civil engagement workshops) தலைமைத்துவப் பட்டறைகளையும் நடத்தி வருகிறேன். பாடசாலைகள் குடியில்துறைசார் பங்களிப்புத் தொடர்பாக கற்பிப்பது போதாது. அரசு எவ்வாறு இயங்குகிறது என்று பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளும், பாடசாலைகளும், அமைப்புகளும் இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வெறுமனே இவற்றை வார்த்தைகளில் சொல்லாது செயலில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். விரைவில் ஸ்பாபரோவில் புதிய ஜனநாயகக் கட்சியின் இளையோர் அமைப்பொன்றை நான் ஆரம்பிக்கவிருக்கிறேன்.” என்று கூறுகிறார். 

ராதிகா தமிழராக இருப்பதன் முக்கியத்துவம் பற்றிக் கூறுகிறார். எந்த இனக்குழுமமாயினும் தமது அடையாளத்துடனும், காலாசார, பண்பாட்டுப் பின்னணியுடனுமிருப்பது முக்கியம். எமது பாரம்பரியத்தைத் தளமாகக் கொண்டு இயங்குவது அவசியம். உங்கள் தனித்துவத்துடன் சமூகத்தில் இணைவது முக்கியம். சில இளையோருக்கு தமது அடையாளம் தொடர்பான சிக்கல் இருக்கிறது. அதிஷ்டவசமாக எனது இளைய வயதிலேயே எமது அடையாளத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துகொண்டுவிட்டேன். எனக்கு சிறந்த பெற்றோர் வாய்த்தார்கள். அதனால் அது சாத்தியமாயிற்று என்கிறார்.  

பெற்றோருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டோம். “உங்களது பிள்ளைகள் அவர்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள், அவர்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவியுங்கள். நான் ஐந்தாம் வகுப்பிலேயே முதியோர் இல்லத்தில் தொண்டராக வேலைசெய்ய விரும்பினேன். என்னுடைய தந்தை என்னை ஊக்குவித்தார். அதிகாலையில் கூடைப்பந்து பயிற்சிக்குச் செல்ல விரும்பியபோதும், பாடசாலைக் கலைவிழாக்களில் நான் பங்குபற்றிய போதும் என்னை ஊக்குவித்தார்கள். அதானால்தான் நான் விரும்பிய பலவற்றை என்னால் சாதிக்க முடிந்தது.”

புலம்பெயர் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேட்டோம். “போரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்த ஒரு இளம்பெண் கடின உழைப்பாலும், இடைவிடா முயற்சியாலும், தொடர்ச்சியான பங்களிப்பாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியுமென்றால், உங்களாலும் இது முடியும். எந்த நாடுகளில் சட்டம் அனுமதிக்கிறதோ அங்கெல்லாம் முடியும். நான் சிறுவயதிலிருந்தே சமூகவேலைகளோடு என்னை இணைத்துப் பணியாற்றினேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தேசிய அளவில் மாற்றங்களை உருவாக்க முடியும்” ராதிகாவின் குரல் நம்பிக்கையுடன் ஒலிக்கிறது.

- கருணா
Quelle - Ponguthamil.com

Related Articles