தியானம் நோய் தீர்க்குமா?

தியானம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையோடு இணைந்தது. புராணங்களில் நாம் அறிந்த ஞானிகளும் முனிவர்களும் இவற்றைக் கடைப்பிடித்து ஆன்மீக உச்சங்களை எட்டியுள்ளார்கள். அவர்கள் மட்டுமின்றி இன்றைய சாமிகளும் ஆசாமிகளும் கூட இவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். தொடர்ந்து செய்யும்படி ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். பல ஆன்மீக நிறுவனங்கள் இலவச தியான வகுப்புகளை நடத்தவும் செய்கின்றன.

கீழைத்தேய வாழ்வியலோடு கூடிய தியானம் இப்பொழுது மேலை நாடுகளிலும் பிரபலமாகிவிட்டது. அமெரிக்க அரசின் ஆதரவோடு 2007ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9.4 சதவிகிதமானோர் அதற்கு முந்தைய ஒரு வருட காலப்பகுதியில் தியானம் செய்திருப்பது தெரியவந்தது.

தியானங்கள் பல வகைப்படும். ஆயினும் அவற்றின் அடிப்படை நோக்கமானது ஒன்றுதான். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளரச் செய்து உளவியல் ரீதியான சமநிலை நோக்கி முன்னேறுவதுதான். பொதுவாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோய்களிலிருந்து விடுபட்டு நல்லாரோக்கியமான நிலையை அடைவதற்கான முயற்சியாகக் கொள்ளலாம்.

 அடிப்படைத் தேவைகள்
தியானம் செய்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன?

முக்கியமாக அமைதியான சூழல் தேவை. புறச் சூழலுக்கள் எம்மை ஈர்த்துவிடும் புலன்கள் ஐந்து ஆகும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றை ஐம்புலன்கள் என்றார்கள். இவற்றால் எமது சிந்தனைகள் திசைமாறச் செய்யாத அமைதியான இடம் தேவை.

தியானம் செய்யும்போது எமது உடல் சௌகர்யமாக இருக்க வேண்டும்.

 • கால்களை மடக்கிப் பத்மாசனம் போட்டு, முதுகை நேர்கம்பமாக நிமிர்த்தி வைத்து, கையிரண்டையும் முழங்கால்கள் மேல் வைத்திருப்பது ஆன்றோர் வழி வந்த முறை. நின்றோ, 
 • நடந்தோ, நிமிர்ந்தோ, படுத்தோ கூடத் தியானம் செய்யலாம். எவ்வாறாயினும் சௌகரியமாக இருந்தால் போதுமானது. ஆயினும் சொகுசு மிகுந்து தூங்காதிருந்தால் சரி!

தியானம் இருக்கும்போது முழுக் கவனமும் ஏதாவது ஒன்றில் பதிந்திருக்க வேண்டும்.

 • ஒளியைத் தியானம் பண்ணுவர் சிலர், 
 • ஒரு மந்திரத்தில், அல்லது நாமத்தில் கவனத்தை விழுத்துவர் சிலர். 
 • தனக்குகந்த கடவுளின் உருவத்தில் 
 • அல்லது உருவமில்லா உள்ளொளியில் அமைதி காண்பர் வேறு சிலர். 
 • தனது சுவாசத்தையே நினை பொருளாகக் கொள்வோரும் உண்டு.

மனைவியைத் சதாநேரமும் தியானம் பண்ணித் தாஜா செய்வது வேறு!

 • மனதைத் திறந்து வைத்திருத்தல் மற்றொரு முறையாகும். கவனத்தை திசை திருப்பும் விடயங்களை ஓர்மமாக ஒதுக்கித் தள்ளாமல் வருவதையும் போவதையும் இயல்பாக வந்துபோக விட்டுவிட்டு அதில் சிந்தனையை ஆழ்த்தாமல் திறந்த வெளியாக வைத்திருப்பதும் உண்டு.

நோய் தீர்க்க உதவுமா?

மனம் சார்ந்த நோய்கள்

ஒருவரது வாழ்வில் நெருக்கீடு அதிகரித்தால் அதனால் மனப் பதகளிப்பு, மனச்சோர்வு போன்றவற்றிற்கு அவர் ஆளாகலாம். இவை தூக்கக் குழப்பம், கோபம், எரிச்சல், மனத்திருப்தியின்மை ஆகியவற்றைக் கொண்டு வரலாம். இத்தகைய உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட தியானம் நிச்சயம் உதவும்.

உடல் சார்ந்த நோய்கள்

ஆனால் இவற்றைத் தவிர உடல் சார்ந்த நோய்களுக்கும் உதுவுமா? பல மருத்தவ ஆய்வுகள் உதவலாம் எனக் கோடி காட்டினாலும் தெளிவான முடிவுகள் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.

ஆயினும் பல உடல் சார்ந்த நோய்கள் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக

 • ஒவ்வாமைகள்,
 • ஆஸ்த்மா
 • இருதய நோய்கள்
 • மூட்டு வலிகள், உடல் வலிகள்
 • போதைப் பொருள் பாவனை 
 • உயர் இரத்த அழுத்தம் 
 • புற்றுநோய்கள்
 • உடற் களைப்பு
 • அதீதமாக உண்ணலும் எடை அதிகரித்தலும்

போன்றவை பல்வேறு மனரீதியான தாக்கங்களையும் கொண்டு வருகின்றன. இவற்றின் தாக்கத்தைக் குறைக்க தியானம் நிச்சயம் உதவும்.

ஆயினும் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வழமையான மருந்துகளுக்குப் பதிலாக தியானம் முழுமையாகக் கைகொடுக்காது. எனவே அத்தகைய நோய்களை தியானம் முற்றாகப் பூரணமாக்கும் என்ற எண்ணத்துடன் அவற்றைச் செய்ய வேண்டாம். நோய்க்கான மருத்துவத்தைத் தொடர வேண்டும். அதற்கு ஒத்தாசையாக தியானமும் உதவும். 

எவ்வாறு உதவுகிறது
 • எமக்கு ஏற்படுகிற நெருக்கீடுகள் பற்றி ஒரு முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்குத் துணை செய்யும்.
 • நெருகீட்டைச் சமாளிப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கான ஆற்றலை வளர்க்கிறது
 • தன்னை அறியும் (self-awareness) நிலையை அதிகரிக்கும்
 • மறை உணர்வுகளைக் (negative emotions) குறைக்கும் ஆற்றலை வளர்க்கும்
 • பல விடயங்களை மனதில் இட்டுக் குழப்பாமல் ஒன்றில் மாத்திரம் மனத்தைக் குவிக்க உதவும்.

எனவே தியானம் நிச்சயம் நோய்களின் தாக்கத்தைத் தணிப்பதில் உதவக் கூடிய ஒரு மாற்று முறை என்பதில் ஐயமில்லை. தியானத்தை ஆரம்பித்த உடனேயே பலன் கிடைக்கும் என எண்ணாதீர்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

அத்துடன் இது ஒரு தினசரிக் கடமை எனவோ மேலதிக பாரமா என எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்.

அது பலன் அளிக்கிறதா என நீங்களே முடிவு எடுக்க முயலாதீர்கள். திறந்த மனத்தோடு தொடருங்கள். காலத்திற்கு இடம் அளியுங்கள். நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உதவும்.


- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Related Articles