தீபாவளி - காரணங்களும் காரியங்களும்

சில விடயங்களில் எப்பொழுதும் நாங்கள்  தெளிவு இல்லை.  ஏன், எதற்கு என்ற கேள்விகள்  எங்களிடம் அரிது என நினைக்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜெர்மனியர், ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, சொன்ன வார்த்தைகள் நீண்ட நாட்களாக எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தன.

அவர் சொன்னது இதுதான். 'ஒரு தடவை கொலண்டில்  உள்ள வாசிகசாலைக்குச்  சென்றிருந்தேன். அங்கிருந்த  ஒரு புத்தகத்தில்  உங்களைப் (தமிழரைப் ) பற்றிய  குறிப்பு இருந்தது. அதில் தமிழர்கள் என்றால் குள்ளமானவர்கள், கறுப்பு நிறமானவர்கள், பல்லு வெளியில் துருத்திக் கொண்டிருக்கும், தங்களுக்குத் தேவையானவர் ஒருவர் போனால் அவர் பின்னால்  ஆட்டு மந்தை  போல் எல்லோரும்    போய்க் கொண்டிருப்பார்கள்  என்று எழுதியிருந்தது' என்றார்.  அன்று அவர் என்னைக் கேலி செய்கிறாரா  அல்லது உண்மையாகத் தான் வாசித்ததைத்தான்  சொல்கிறாரா  என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனாலும்  அன்று  ஒல்லாந்தர் எங்களை ஆண்ட பொழுது நாங்கள் அப்படித்தான்  இருந்தோமா?  இன்று கால ஓட்டத்தில் எங்களிடம் மாறுதல்கள் வந்து விட்டனவா? இல்லை இன்னும் அப்படித்தானா? என்னுள் இன்னும் ஒலித்துக்  கொண்டிருக்கும் கேள்விகள் இது.

ஐப்பசி  மாதம் அமாவாசைக்கு  முதல் நாள் இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். ஏன் கொண்டாடுகிறோம்  என்று கேட்டால்  ஆள் ஆளுக்கு  ஒரு கதை சொல்கிறார்கள்.

லட்சுமி அமாவாசை தினத்தில் அவதரித்தார்  அதனால் அன்றைய தினம் செல்வத்தினை வைத்து லட்சுமி பூஜை செய்கிறோம் என்கிறார்கள்  ஒருசிலர்.

சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிந்த பின்னர் சிவன் சக்தியை தன்னுள் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரராக உருவமெடுத்த நாள்தான் தீபாவளி என்கிறார்கள்  வேறு சிலர்.

வாமன அவதாரத்தின் போது பூமியில் சிறை வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமியை விஷ்ணு விடுவித்த நாள்தான்  தீபாவளி என்று புராணத்தை ஆதாரம் காட்டுகிறார்கள் சிலர்.

கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுங்கள்  என்று அன்றே கிருஷ்ணர்  சொல்லிவிட்டரே  என்று சண்டைக்கு வருகிறார்கள் ஒரு சாரார்.

பாண்டவர்கள் தங்களது 12 ஆண்டுகால வனவாசத்தை முடித்து  நாடு திரும்பிய  நாளை குடிமக்கள் தீபம் ஏற்றிக் கொண்டாடினார்கள் . ஆகவே நாங்கள் கொண்டாடுகிறோம். என்ன தப்பு?  என்று கேள்விகள் வைக்கிறார்கள் கொஞ்சப் பேர்.

இராமன், சீதா, இலட்சுமணன்  மூவரும்  இராவண வதம் முடிந்து நாடு திரும்பிய நாளில் தீபங்கள் ஏற்றி மக்கள் வரவேற்றார்கள். அதை கொண்டாடி  மகிழ்கிறோம்  என்கிறது ஒரு கூட்டம்.

விக்ரமாதித்தன் உஜ்ஜினியில் அரசனாகப் பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக சரித்திரச் சான்றை முன் வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

சமணர்களோ மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாள்தான் தீபாவளி என்கின்றார்கள்.

சீக்கியர்களோ  1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய நாள்தான் தீபாவளி. அதைத்தான் நாங்கள் காலகாலமாகக் கொண்டாடி வருகிறோம்  என்கிறார்கள்.

ஆக ஒரு காரணத்திற்காக இல்லாமல், மக்கள் பல காரணங்களுக்காகத்தான் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இனத்தவர்களும் தங்களுக்கு ஏற்றவாறு தீபாவளி என்ற நாளை ஒழுங்கமைத்துக் கொண்டார்கள் என்பது, அவர்களது தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கான காரணங்களை வைத்துப் பார்க்கும் பொழுது தெரிகிறது. இதில் தமிழர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான காரணத்தை எங்கே  கொண்டிருக்கிறார்கள்  என்று தேடினால் நரகாசுரன் வதம்தான் வருகிறது. நரகன் என்ற அரசன் திராவிடன் என்று தெரிகிறது. அரசனை அசுரன் ஆக்கியது ஆரியன் என்பதும் புரிகிறது. மனைவியை அனுப்பி கபடமாகத்தான் அந்த அரசனை கிருஷ்ணர் கொன்றார் என்பதும் புராணத்தில் வருகிறது. ஆக ஒரு திராவிடன் இறந்ததை, அல்லது ஒருவன் மரணித்ததை ஐம்பத்து நாலு கோடியே நாற்பத்தி மூன்று இலட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகளாக (நரகாசுரன் வாழ்ந்த காலத்தை இப்படித்தான் புராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்) மறக்காமல் கொண்டாடி வருகிறோம்.

தலைவர் பிராபகரனுடன் ஒரு தடவை உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது „சில வேளை இந்தப் போராட்டம் தோற்றுப் போனால் ..?' என்று சங்கடமான ஒரு கேள்வியை வைத்தேன். இந்தக் கேள்வியால்  அவரிடம் இருந்து கடும் தொனியில் பதில் வரும். என்னைக் கடிந்து கொள்வார் என்ற பயமும் என்னிடம் இருந்தது. ஆனால் அவரிடம் இருந்து வந்த பதிலோ அவரது முகத்தைப்  போல் தெளிவாக இருந்தது. எந்தவித கோபங்களோ, எரிச்சல்களோ இல்லாமல் அவர் சொன்னார். „ எங்களை வில்லன்களாக்கிப் போட்டு அவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள்'

நம் கண் முன்னாலேயே எத்தனை அநியாயங்கள், எவ்வளவு திமிரான பேச்சுக்கள், எத்தனை அடக்கு முறைகள். எல்லாவற்றையும் அரங்கேற்றி இன்று அரசாளும் இராட்சத பக்சாக்களைப் பார்க்கும் பொழுது, அன்றைய காலகட்டத்தில் நரகனின் நிலை தெளிவாகிறது. நாளை நாம் விழுந்த நாளை அவர்களுடன் சேர்ந்து நம் தலைமுறை கொண்டாடலாம். அதுவே சிறிலங்காவில் இன்னுமொரு தீபாவளி நாளாக உருவாகலாம். விடுமுறை, உறவினர்கள் வருகை, நண்பர்களுடன் கொண்டாட்டம், புத்தாடை, பலகாரங்கள், அபிமான நடிகர்களின் புதுத் திரைப் படங்கள், வாணங்கள், வெடிகள், வேடிக்கைகள் என்று இன்னும் பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.;

இந்துக்கள் பண்டிகையில் மது, மாமிசம் இடம் பிடிக்கும் ஒரு பண்டிகை. ஏறக்குறைய எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனாலும் தீபாவளி எதற்கு? ஏன் கொண்டாடுகிறோம்? தெளிவில்லை. ஆனால் கை விட முடியவில்லை.

- ஆழ்வாப்பிள்ளை
1.11.2013

Related Articles