'மறுகா'வும் எனது கட்டுரையும்!

ட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மறுகா சிற்றிதழ், வழமைபோல் தாமதமாக வெளிவந்திருக்கிறது! இப்போது வந்திருப்பது அதன் எட்டாவது இதழாகும்.

இவ்விதழில் கட்டுரைகள் எட்டும், கவிதைகள் ஆறும், சிறுகதைகள் இரண்டும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சிறப்புப் பகுதியாக ஊடகம் என்னும் தந்திரம் என்னும்தலைப்பில் சி.சிவசேகரம், அ.யேசுராசா, தேவகௌரி, ஏ.பி.எம். இத்ரீஸ் ஆகியோர் எழுதிய நான்கு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ‘பொய்ப்பரப்புரைகளின் ஊழிக்கூத்து’ என்னும் தலையங்கம், சிற்றிதழ்களில் இடம்பெறும் கீழ்த்தரமானவிடயங்கள் பற்றிச் சாடுகிறது!

நான்எழுதிய கட்டுரை வருமாறு :

தமிழ் ஊடகங்கள் பற்றிச் சில அவதானங்கள்டகங்கள் என்னும்போது தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு இங்கு பார்க்க முடிகிற  தொலைக்காட்சி அலைவரிசைகளையும், இங்கிருந்து ஒளிபரப்பாகும் நேத்ரா, வசந்தம், சக்தி ஆகியவற்றையும், பிரதான செய்திப் பத்திரிகைகளையும், சிற்றேடுகளையும்  பற்றிப் பார்க்கலாமென நினைக்கிறேன். பரிச்சயமின்மை காரணமாய்  வானொலியைத் தவிர்த்துள்ளேன்.

இவற்றில்  சிற்றேடுகளைத்   தவிர  ஏனையவை, இலாப  நோக்கில் நடத்தப் படுபவையாகும். சிற்றேடுகள்  கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்து வெளியிடப் படுகின்றன. தாம் கொண்டுள்ள  நிலைப்பாடு சார்ந்து அவை  இயங்குகின்றன.

1.  தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி  ஊடகங்கள்  பெரிதும்  வணிக நோக்கில் இயங்குபவை. அதனால் ஜனரஞ்சக விடயங்களுக்கே  முன்னுரிமை கொடுக்கின்றன. பெரும்பாலும்  வணிகத் திரைப்படங்களை மையப்படுத்தியே அவை  தமது  நிகழ்ச்சிகளை  ஒழுங்குசெய்கின்றன. திரைப்படங்கள், அவை தொடர்பான - பாடல், நடிக  நடிகையர்,  நகைச்சுவை பற்றிய -  நிகழ்ச்சிகளாகவே  ஏராளமானவை உள்ளன. அவ்வாறே வேறு நிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கிற் குரியனவாகவே   உள்ளன. காத்திரமானவகையில், அறிவுக்கு உதவுபவையாக  அமைபவை வெகுசிலதான். அத்தோடு, தாம் கொண்டுள்ள அரசியல் சார்புக்கு உதவும் வகையிலான செய்திகளுக்கும்,  நிகழ்வுகளுக்கும்,  பிரமுகர்களுக்கும்  முக்கியத்துவம்  கொடுக்கின்றன.பண்டிகைகளின்போதும்  மற்றும் முக்கிய நாள்களின்போதும்கூடப்  பெரும்பாலும்  திரைப் படங்களை மையப்படுத்தியே, முழுநாளும் நிகழ்ச்சிகளை  அமைக்கும் 'மொக்கைத்தனத்தை யும்' காணலாம். மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லியபடி -  விளம்பரங்களின்மூலம் பெறப்படும் பெருந்தொகைப் பணத்துக்காக,  அவர்களை  மலினமான பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகள்மூலம்  மயக்கத்தில் ஆழ்த்துகின்றன; பயன்தரு விடயங்கள் சிலவாகவே உள்ளன. ஆயினும் பொதிகை, புதிய தலைமுறை, மக்கள்  ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் விளம்பரங்களுக்கு நேரம் ஒதுக்கினாலும்,பயன்தரும் விடயங்களை அதிகளவில் வழங்குகின்றன. சமூகம் ,அரசியல் ,கலை,இலக்கியம் முதலிய துறைகளில் மக்களுக்கு  விழிப்பூட்டும் முறையில் தமது நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்கின்றன ; இயல்பான முறையில் பொழுதுபோக்குவதற்குரிய  சுவையான விடயங்களையும் தருகின்றன.

2.  இலங்கையிலுள்ள நேத்ரா, வசந்தம் ஆகியன அரசாங்க நிறுவனங்களாக உள்ளன. அதன்காரணமாக அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இயைந்தவையாக தமது நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்கின்றன. அரசு  சார்புப்  பிரசாரங்கள்  முன்னுரிமை பெறுகின்றன ; மாற்றுக் கருத்துக்கள் ஒதுக்கப்படுகின்றன. தமது காட்சி நேரங்களை தமிழகத்  தொலைக்காட்சி  அலைவரிசைகளில்  ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக்கொண்டே  நிரப்புகின்றன. இதன்காரண மாக  நமது சூழல், தேவை என்பவற்றுக்குரியவை போதிய அளவில் இடம்பெறாது போகின்றன ; நம்மவரின் ஆற்றல் வளர்வதற்குரிய வாய்ப்புகளும் தட்டிப்பறிக்கப்பட்டு விடுகின்றன. தமிழக நிகழ்ச்சிகள்  பெரும்பாலும்  நாடகங்கள், திரைப்படங்கள், திரைத்துறையோடு தொடர்புறும் விடயங்களாகவே உள்ளன. சதி,கொலை,ஒழுக்கப்பிறழ்வு நடத்தைகள், பணத்துக்காக எதையும் செய்தல், வக்கரித்த மனநிலைகொண்ட பாத்திரங்கள் என்பவற்றைக்கொண்டு  கட்டமைக்கப்படும் வாய்பாட்டுரீதியிலான மிகையுணர்ச்சி  வெளிப்பாட்டு நாடகங்கள்,நமது  பார்வையாளர்களிடம்  போலியான கலை இரசனையையும் பிறழ்நிலை மனப்பாங்கையும் தோற்றுவிக்கின்றன.சுயமாக இங்கு தயாரிக்கப்படும் தொலைபேசி மூலம் பார்வையாளர்களுடன் கதைக்கும் நேரலை நிகழ்ச்சிகள், அரைவேக்காட்டுத்தனங் கொண்டவையாகவும்  உள்ளன ; நிகழ்ச்சிகளை நடத்தும்  பலர் தம்மையே முக்கியப்படுத்து கிறார்கள்  என்பதோடு, அவர்களின் மொழி உச்சரிப்புகளும்  திருத்தமானவையாக இருப்ப தில்லை. தகுதியானவர்கள் சேர்க்கப்படுவதற்குப்  பதிலாக, வேறு  'செல்வாக்குகள்'  காரணமாக  பொருத்தமற்றவர்களுக்குப்   பணி  நியமனங்கள் வழங்கப்படுவது  தெரிந்ததே! பயன்தரு  நிகழ்ச்சிகள்  சிறு அளவில்  உள்ளதையும்  மறுப்பதற்கில்லை!

'சக்தி'தொலைக்காட்சி தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் இதற்கும் பொருந்துவனவே! எனினும் செய்திகள், கலந்துரையாடல்கள் என்பவற்றில் மாற்றுக் கருத்துக்கள்  ஓரளவுக்கு  வெளிப்படுத்தப்படுகின்றன.

தமிழகத் தொலைக்காட்சிகளில் செல்வாக்குச்செலுத்தும் தமிழுடனான ஆங்கிலக் கலப்பு ( தமிங்கிலிஷ்!) , நமது தொலைக்காட்சிகளிலும்  ஓரளவுக்குக் காணப்படுகிறது.நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள், அடுத்துவருவன பற்றிய அறிவிப்புகள் என்பன ஆங்கிலத்தில் மட்டும்  காட்டப்படும் 'கோமாளித்தனமும்' காணப்படுகின்றது!தமிழ் மட்டும் தெரிந்த பார்வையாளர்கள் இவ்வாறு அவமதிக்கப்படுகிறார்கள்!

3.  நாளேடுகள்  என்றவகையில் கொழும்பிலிருந்து வீரகேசரி, தினக்குரல்,தினகரன், சுடரொளி ஆகியனவும்; யாழ்ப்பாணத்திலிருந்து உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல், தினமுரசு ஆகியனவும் வெளிவருகின்றன.  இவற்றுள் சில வார வெளியீடுகளையும் - கூடிய பக்கங்களில்-  தருகின்றன. இலாப நோக்கை  அடிப்படையாகக்கொண்டே இவை  வெளியிடப்படுகின்றன. பிரதிகளின் விற்பனையால் வருவதை விட விளம்பரங்களாலேயே பெருந்தொகைப் பணத்தை  இவை உழைக்கின்றன! பக்கவிளைவாகத்தான்  இப்பத்திரிகை களால்  சில  பயன்கள்  நமக்கு  ஏற்படுகின்றன! 

அ)  பெரும்பாலான செய்திகள் ஒன்றுபோலவே  இருக்கின்றன ; இதனால் ஒரு  நாளேட்டைப்  பார்த்தால், மற்றையவற்றை  மேலோட்டமாக மேய்ந்தால்  போதுமான தாயிருக்கும்!

ஆ)  யாழ்ப்பாணப்  பத்திரிகைகள் வேறு  ஊடகங்களில் வந்த கட்டுரைகளைப்  பிரசுரிக்கும் போது , மூல  ஊடகத்தின் பெயர் விபரங்களைத் தருவதில்லை ; வெறுமனே 'இணையம்' என்றோ' ஒரு கொழும்புப் பத்திரிகை’  என்றோதான் குறிப்பிடுகின்றன!திகதி,மாதம்,ஆண்டு முதலிய விபரங்களையும் தருவதில்லை!துல்லியத்தன்மை பேணப்படாமை கண்டிக்கத்தக்கது!

இ)  பெரும்பாலான பத்திரிகைகளில் பொறுப்பிலுள்ளவர்கள், பிரசுரத்துக்குரியதாக  ஒரு விடயத்தைத்  தெரிந்ததும், அப்படியே அச்சுக்குக் கொடுத்துவிடுகின்றனர்.அதிலுள்ள தரவுப் பிழைகள், மொழிநடைத் தவறுகள் போன்றவற்றைச் சீர்செய்து கொடுப்பதில்லை; அதாவது மூலப் பிரதியை  அச்சுக்குரிய பிரதியாக ( printing  script ) மாற்றுவதில்லை( இது சிற்றேடு களுக்கும்  பொருந்தும் ); இதனால்,  ஏராளம் தவறுகளுடனேயே கட்டுரைகளோ  செய்திகளோ  வெளிவருகின்றன.

ஈ )  தவறானமுறையில் சொற்கள், சொற்றொடர்கள்எழுதப்படுகின்றன ; ஒருமை பன்மைத் தவறுகள், செய்வினை செயப்பாட்டுவினைத் தவறுகள் பரவலாகக் காணப்படுகின் றன. பத்திரிகைத்துறைக்கு  வருபவர்களின் மொழி  அறிவுத் திறன் பற்றி  உரிய அக்கறை காட்டப்படுவதில்லை.எனவே, அவர்கள்  பிழையாக  எழுதிப்  பிரசுரிக்க, அவற்றை  வாசிப்பவர்களும் பிழையான மொழிப்  பிரயோகத்தையே  தொடர்கிறார்கள்! மொழி அறிவும் கூரிய  அவதானமுங்கொண்ட  ஒப்புநோக்குநர்களைப்  பணியில்  அமர்த்தினால் கூட ,   இத்தவறுகளைச் சீர்செய்துவிடலாம்.

உ) ஜனநாயகம்,  மாற்றுக் கருத்துகளுக்கு  மதிப்பளித்தல் பற்றியெல்லாம் வலியுறுத்தி எழுதும் பத்திரிகைகள்பல,  தமக்கு  வரும் எதிர்வினைகளைப்  பலநேரங்களில்  கண்டுகொள்வதில்லை!தமக்கு வேண்டியவர்கள் என்றால் இடம் கொடுக்கிறார்கள் ;அதேபோல்  தமக்கு வேண்டியவர்கள் சம்பந்தப்பட்டதென்றால் எதிர்வினைகளை ஒதுக்கிவிடுகிறார்கள்! எனது எதிர்வினைகள்( சொந்தப்பெயரில் எழுதப்பட்டவை ) வெளியிடப்படாது  ஓரங்கட்டப்பட்டமை, பல தடவைகளில் நடைபெற்றிருக்கின்றது .  தினகரன், மல்லிகை,சமர்,ஈழமுரசு, தாயகம்,ஞானம், தினக்குரல்,சமகாலம்  எனப்  பல ஊடகங்கள் இவ்வாறு கசப்பான அனுபவங்களை எனக்குத் தந்துள்ளன!
ஊ )  பண்பாடு, பாரம்பரியம் என்று ‘வக்காலத்து வாங்கும்’  பத்திரிகைகள் ,  சினிமா என்ற பெயரில் ஆபாசமான படங்களையும்( பல்வேறு வர்ணங்களில்!) ,  கிசுகிசுச்  செய்திகளையும்  வெளியிட்டு  பாலுணர்வு  வக்கிரத்தைப்  பரவற்படுத்துகின்றன!; இவ்வாறு செய்வதற்கு யாருமே  கூச்சப்படுவதில்லை!

எ)  கலை  இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாயிருப்பவர்களிற்  பலர் தகுதியான வர்கள்  அல்லர்! இதனாலேயே  தரங்குறைந்த கவிதைகள்,சிறுகதைகள்,கட்டுரைகள் வெளியாகின்றன ; இவற்றை வாசிப்பவர்களும் இவற்றைப் போல் சாதாரண ஆக்கங்களையே எழுதத்  தொடங்குகிறார்கள்.எமது கலை இலக்கிய  வளர்ச்சிக்கு இச்செயற்பாடுகள் தீங்கு விளைவிக் கின்றன.

ஏ)  தமிழகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து இங்குள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் மறு ஒளிபரப்புச் செய்வதுபோல், நாளேடுகளின் வாரவெளியீடுகளில் -தமிழக எழுத்தாளர்களின் பிரபல ஆக்கங்களை மறுபிரசுரமாகத்  தொடராக வெளியிடுவது அண்மையில் நடைபெறுகிறது! எழுத்தாளர்'கல்கி'யின் 'பொன்னியின்செல்வன்' நாவல்,ஞாயிறு'வீரகேசரி'யில் வருகிறது;  கல்கியின் 'பார்த்திபன் கனவு' நாவலும்,சாண்டில்யனின்'ராஜயோகம்'நாவலும்,தேவன் எழுதிய 'சின்னஞ் சிறு கதைகளு'ம் 'தினகரனி'ல்  வெளியிடப்படுகிறது! ஈழத்து எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடம், பொறுப்பற்ற முறையில் இவ்வாறு விரயமாக்கப் படுகிறது.சென்ற நூற்றாண்டின்  ஐம்பதுகள் வரை இதே தவறு நமது பத்திரிகைகளில் நடைபெற்று, எதிர்ப்புகளினால் நிறுத்தப்பட்டது; ஆனால் , மீண்டும்  அத்தகைய தவறு நிகழ்வது கண்டிக்கத்தக்கது!

ஒ)  அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற பெயரில்  வருபவை ஏற்கெனவே  வந்த  செய்திகளின் தொகுப்பாகவோ, தமது அணியின் நிலைப்பாடை  மட்டும்  மறைமுகமாக  வலியுறுத்துவனவாகவோ, தமது ஊகங்களின் அடிப்படையில்  எதிர்காலத்தில்  நிகழுமெனச் "சாத்திரம்" கூறுவனவாகவோதான் அமைகின்றன!

ஓ )  பத்திரிகைகளுக்காகக் கட்டுரை,சிறுகதை,கவிதை போன்றவற்றை எழுதித் தருபவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்கப்படுவதில்லை ; சில பத்திரிகைகள்  சிறிய  ஊதியத்தையே  வழங்குகின்றன. படைப்பாற்றலும் அறிவுழைப்பும் பணவருவாயை  ஈட்டக்கூடிய நிலைமை  உருவாக்கப்பட வேண்டும் ;அப்படியானால்தான் வினைத்திறன் கூடிய  படைப்புகள் உற்சாகத்துடன் பெருமளவில் படைக்கப்படும்!ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் உரிய  பெறுமதியைக் கொடுக்கின்றன ; தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் பெரிய தொகைகளை வழங்குகின்றன. பெரிய  முதலீட்டில் பெருந்தொகைகளை விளம்பரப் பணமாகப் பெற்றுக்கொள்ளும் எமது நாட்டுப்  பெரும் பத்திரிகைகள் மட்டும், ஏன்  தொடர்ந்தும், "பச்சத்தண்ணியில பலகாரம்  சுடவேண்டும்?"

4)  சிற்றேடுகள்  தனிநபராலோ குழுக்களாலோ வெளியிடப்படுவன. வரையறுக்கப்பட்டதெளிவான நோக்கங்களுடன், யாருடனும்  எந்த அமைப்புகளுடனும் சமரசம் செய்யாமல்  அர்ப்பணிப்புடன்செயற்படவேண்டியது அடிப்படையானது. மேலோட்டமான ஜனரஞ்சக விடயங்களுக்கு  இடம்தராது தரத்தைப் பேணிக்கொள்வதும்  முக்கியமானது.

அ)  நிலைத்துவிடவேண்டுமென்ற  குறிக்கோளுடன் சமரசப் போக்கைப் பல சிற்றேடுகள் கடைப்பிடிக்கின்றன.இதனால்  தரவீழ்ச்சியும் மதிப்பீடுகளில்  சரிவும்  ஏற்படுகின்றன. .நீண்டகாலமாக வந்துகொண்டுள்ள இதழ்களில்  இப்பலவீனத்தைத்  தெளிவாகக் காணலாம்.

ஆ)  சிற்றேடுகளை  வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்குமளவுக்கு,  தேவையான முதிர்ச்சி  பலரிடம் இல்லாமையைக் காணமுடிகிறது. வெறுமனே  அங்குமிங்கும் விடயங்களைச் சேர்த்து -  தொகுத்து  வெளியிடப்படுகின்றது ; ஆனால்,  சரியான தேர்வு நடைபெறுவதில்லை ;  தமது இலக்குகளைக்  குறிப்பிட்டு   அவற்றை  நோக்கி  ஆற்றுப்படுத்துவதுமில்லை.

இ) மொழிநடைக் குறைபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன ; அச்சுப்  படி  திருத்துவதிலும் உரிய  கவனமும்  திறனும் காட்டப்படுவதில்லை.

ஈ) மாற்றுக் கருத்துகளுக்கு  உரிய இடம்  தரப்படுவதில்லை; குறிப்பாக இதழின் பலவீனங்களைச் சுட்டுவதை விரும்பாத நிலைமையே காணப்படுகிறது.சிலரை மிகையாக உயர்த்திப் பிடிப்பதற்கும்  பிடிக்காதவர்களைத்  தாக்குவதற்கும்  வழங்கப்படும் முக்கியத்துவம் ,  எதிர்வினைகளுக்குப்  போதியளவில்  தரப்படுவதில்லை.

உ)  கலை  இலக்கிய  விருதுகள்,  அவற்றை  வழங்கும் நிறுவனங்களான -  சாகித்திய மண்டலம்,மாகாண கலாசாரத் துறை,பழம்பெரும் இலக்கிய  அமைப்புகள் என்பன தொடர்பான குளறுபடிகள் தொடர்கின்றபோதும்,  அவை அம்பலப்படுத்தப்படுவது பெரிதும்  நிகழ்வதில்லை.இவற்றுட ன் மட்டுமல்லாது -   பெரும்  பத்திரிகைகளுடனும், வேறு  கலாசார  நிறுவனங்களுடனும்,  பல்கலைக்கழகம்  சார்ந்த "விமர்சகர்"களுடனும் முரண்படா நிலைப்பாடைப்  பல  சிற்றேடுகள்  கொண்டுள்ளன; எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய "நன்மைகளை" இழந்துவிடக்கூடாது  என்ற  விழிப்புணர்வே  காரணம். ஆனால், சிற்றேட்டு   இயக்கத்தின் ஆதாரக் கருத்துநிலைக்கு இது  முற்றிலும்  மாறானது!

இறுதியாக ஒன்று, எனது  அவதானக் கருத்துக்கள் எதிர்மறை அம்சங்களையே  முன்வைப்பதாகச் சிலருக்குப்  படலாம். அதற்கு எனது பதில்  இதுதான் :

குறைபாடுகளில் கவனங்கொண்டு செம்மைப் படுத்தும்போதே எந்தச் செயலும் படைப்பும் நேர்த்தியை அடையும்.

அ. யேசுராசா
- 24.03.2013            

Related Articles