எழுத்தின் ஆற்றல்

எழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது.

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது.

பத்து எழுத்தாளர்கள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார்.

தான் வாழும் Baden-Wuerttemberg மாநிலத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெண் பொலிஸாரின் (Michele Kiesewetter) கொலையையும், மற்றும் தான் வாழும் நகரத்தில் இருந்த கூ-குளுக்ஸ்-கிளான் (Ku-Klux-Klan) திரைமறைவு இயக்கத்தின் செயற்பாடுகளையும் அவர் தனது எழுத்தில் அந்தப் புத்தகத்தில் வெளிக் கொணர்ந்திருந்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=623b6075-8a4a-4437-a88c-5fb0324c045c

புத்தகம் வெளிவந்த சில நாட்களிலேயே அதன் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்து விட்டன. அதன் வெளியீட்டாளர்கள் அந்தப் புத்தகத்தை மீண்டும் மறுபிரசுரம் செய்திருந்தார்கள்.

ஒரு பொலிஸின் கொலையை திட்டமிட்டே புலனாய்வுத்துறை திசை திருப்பி விசாரணைகளை மேற்கொண்டதா? சாட்சியங்கள் மறைக்கப் பட்டனவா? சாட்சியங்களை வேண்டும் என்றே அழித்தார்களா? கொலையாளிகள் இன்னும் தண்டணை பெறாமல் உலாவி வருகின்றார்களா? என பலவித கேள்விகளையும், காவல்துறையின் மேல் விமர்சனங்களையும் அந்த புத்தகம் ஏற்படுத்தி இருந்தது. இதன் எதிரொலியாக இந்த விடயம் Baden-Wuerttemberg மாநிலத்தின் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தின் பின்னர் இதில் மறைந்திருக்கும் மர்மத்தை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த ஒரு விசாரணைக் குழு வேண்டும் என்று கடந்த வருடமே மாநிலப் பாராளுமன்றத்தில் முடிவானது.

இந்த வருடம் இது சம்பந்தமாக அந்தக் குழு தங்களது அமர்வை 16.02.2015 ஆரம்பித்திருந்தது. துமிலன் எழுதி இருந்த தரவுகள் மற்றும் அவரது ஆய்வுகள் அங்கே விவாதத்திற்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த அமர்வில் துமிலன் தனது விளக்க உரையை பாராளுமன்றத்தில் வழங்குவதற்காக அழைக்கப் பட்டிருந்தார்.

வழமையாக அரசியல்வாதிகளை பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டுப் பேட்டி எடுப்பார்கள். இங்கே பத்திரிகையாளனை அரசியல்வாதிகள் கேள்வி கேட்டு விபரங்களை அறிந்து கொண்டார்கள். அவர்களின் கேள்விகளுக்கு தனது விளக்கங்களை துமிலன் பாராளுமன்றத்தில் அளித்தார்.

அன்றைய அந்தக் கேள்வி நேர நிகழ்வில், துமிலனுடன் Spiegel சஞ்சிகையின் ஓய்வு பெற்ற பிரதான ஆசிரியர் Stefan Aust மற்றும் Heimat schutz என்ற புத்தகத்தின் எழுத்தாளரில் ஒருவருமான Dirk Laabs ம் பங்கு கொண்டிருந்தனர்.

யேர்மனியன் புகழ் பெற்ற குற்றவியல் எழுத்தாளர் Wolfgang Schorlau பார்வையாளராக அங்கே வந்திருந்தார்.

எழுத்தாளர்களுடனான இந்தக் கேள்வி நேரமும் விளக்க உரைகளும் ஏறத்தாள ஆறு மணி நேரங்கள் இடம் பெற்றிருந்தன.

விசாரணைக் குழுவின் இரண்டாவது அமர்வு 02.03.2015இல் இடம் பெற்றது. அன்று இடம் பெற்ற அமர்வில், பெண் பொலிஸின் (Michele Kiesewetter) கொலை விடயமாக சாட்சி சொல்லச் சென்ற புளோரியான் (Florian. H) என்ற இளைஞனின் மரணம் பேசு பொருளாக இருந்தது. புளோரியான், சிலகாலம் நியோ நாசி அமைப்பில் இருந்து பின்னர் விலகிக் கொண்டவன். இவனின் வதிவிடம் கைல்புறோன் (Heilbronn) என்ற நகரம்.

2007இல் கைல்புறோன் நகரில் சேவையில் இருந்த இரு பொலிசார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் Michele Kiesewetter ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். ஒரு ஆண் பொலிஸ் (Martin.A) படுகாயம் அடைந்திருந்தார். அவர்களது ஆயுதங்கள் கொலையாளி அல்லது கொலையாளிகளால் எடுத்துச் செல்லப் பட்டிருந்தன.

தனக்கு கொலையாளியைத் தெரியும் என புளோரியான் சிலருக்குச் சொல்லப் போக, புளோரியானை விசாரணைக்காக மாநிலத்தின் தலைநகர் ஸ்ருட்காட்டிற்கு (Stuttgart) புலனாய்வுத்துறை அழைத்திருந்தது.

http://www.swr.de/landesschau-aktuell/bw/nsu-untersuchungsausschuss-in-bw-journalisten-sollen-licht-ins-dunkel-bringen/-/id=1622/nid=1622/did=15092086/1lfhhfn/index.html

மாலை 5.00 மணிக்கு புளோரியானது விசாரணைக்கான நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அன்று காலை 9.00 மணிக்கு புளோரியானது வாகனம் தீப்பற்றி எரிந்து அந்த வாகனத்துக்குள்ளேயே புளோரியான் இறந்து கிடந்தான். புளோரியானது வாகனத்தில் புளோரியானது கைத்தொலைபேசியும், மற்றும் மடிக்கணினியும் பாதுகாப்பாகவே இருந்தன. ஆனால் வாகனத்தின் திறப்பை மட்டும் காணவில்லை.

பரீட்சையில் கிடைத்த குறைந்த புள்ளிகள், காதலில் ஏற்பட்ட தடுமாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலால் தனது காருக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டான் என அவனது மரணத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது.

அப்படியாயின் வாகனத்தின் திறப்பிற்கு என்னவாயிற்று? தனது நகரத்தில் தன்னை அழித்து க் கொள்ளாமல் எதற்காக சாட்சி சொல்ல வந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டான்? என்ற கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் இல்லை.

இது தற்கொலையாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் இது ஒரு கொலையாகத்தான் இருக்கும் எனவும் அரசல் புரசலாக பேச்சுக்கள் இருந்த போதிலும் அதை ஆணித்தரமாக துணிந்து பத்திரிகையில் எழுதியது துமிலன் ஒருவரே.

http://www.swr.de/landesschau-aktuell/bw/stuttgart-selvakumaran-man-muss-die-offenen-spuren-verfolgen/-/id=1622/did=15168792/nid=1622/zmnst/index.html

புளோரியானின் பெற்றோரும் சரி, காதலியும் சரி புளோரியான் திடமாகத்தான் இருந்தான். அவனது மனநிலையில் எந்தவிதப் பாதிப்புகளும் இருந்ததில்லை என்று அன்றே சொல்லி இருந்தார்கள். இப்பொழுதும் 03.03.2015 இல் நடந்த பாராளுமன்ற விசாரணை அமர்வில் மீண்டும் அதை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களோடான விசாரணைகளின் பொழுது ஊடகங்கள் பாராளுமன்றுக்குள் அனுமதிக்கப்பட வில்லை.

பெண் பொலிஸ் Michele Kiesewetter இன் கொலை இடம் பெற்ற அன்று இரத்தக்கறைகளுடன் சிலரைக் கண்டதாக கைல்புறோன் (Heilbronn) நகரத்தில் பன்னிரண்டு சாட்சியங்கள் பதியப் பட்டிருந்தன. அவர்கள் தந்திருந்த தகவல் அடிப்படைகளில் வரையப் பட்ட மாதிரிப் படங்களை வெளியிட்ட காவல்துறை பின்னர் அவற்றை எதற்காக திரும்பப் பெற்றுக் கொண்டது? என்பது துமிலனது கேள்வியாக இருக்கிறது.

தங்களது வாகனத்தில் தங்களையே சுட்டுக் கொண்டு இறந்ததாக(?) கருதப்பட்ட Mundlos, Boehnhardt இருவரது உடல்களும் இருந்த வாகனத்தில் கண்டெடுக்கப் பட்ட இரண்டு துப்பாக்கிகள் Michele Kiesewetter இன் கொலையின் பொழுது எடுத்துச் செல்லப்பட்டவை என்றும் அதனால் அவர்கள்தான் கொலையாளிகள் எனவும் புலானாய்வுத்துறை அந்த வழக்கை முடித்து மூடி வைத்து விடுகிறது.

ஆனால் கைல்புறோன் நகரத்தில் சாட்சியங்கள் அடிப்படையில் வரையப்பட்டிருந்த மாதிரி உருவங்கள் Mundlos, Boehnhardt இருவருடனும் ஒத்துப் போகவில்லையே என்பது அடுத்த கேள்வியாக இருக்கிறது.

பேர்லின் நகர புலனாய்வுத்துறை அதிகாரி Hajo Funke „இந்தக் கொலையின் புலன் விசாரணை தவறாக நடத்தப் பட்டிருக்கிறது' என்று தனது பேட்டியில் சொல்லி இருக்கின்றார். இது விடயமாக யேர்மனிய அரச முதன்மைத் தொலைக் காட்சியான ARD ஒரு விபரணத்தை Tagesthemen என்ற நிகழ்ச்சியில் துமிலனடனான விளக்கங்களுடன் 02.03.2015 இல் வெளியிட்டிருந்தது.

https://www.tagesschau.de/inland/nsu-133.html

07.06.3015 அன்று பத்திரிகைகளில் முதற் பக்கத்தில் தலைப்புச் செய்தி ஒன்று வந்திருக்கிறது. "Baden-Wuerttemberg மாநிலத்தில் குற்றவியல் ஆணையர் பதவியில் இருந்த Jörk.B என்பவர் கூ-குளுக்ஸ்-கிளான் உடன் தொடர்பு வைத்திருந்தது உறுதியாயிற்று. புளோரியானின் மரணம் பற்றி இவரிடம் விசாரணை ஆரம்பம்“

அச்சுறுத்தலுக்கு பயந்து விடாத எழுத்துக்கான வெற்றி இது.

ஆழ்வாப்பிள்ளை
07.03.2015

Related Articles