வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்

சிறு வயதிலிருந்தே இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களிடமும் அது ஒரு பண்பாக வளர வேண்டும். எந்தவொரு மனிதருக்கும் முதல் நண்பராக அவரது வாசிப்பே அமைய வேண்டும்.

நாம் சிலரை அவதானிக்கின்றபோது கையில் கிடைக்கின்ற எந்த கிழிந்த, கசங்கிய பத்திரிகைத்துண்டையும் கூட ஒரு தடவை படித்த பின்புதான் துாக்கிப் போடுவார்கள். சிலர் தம்மோடு எப்போதுமே ஒரு புத்தகத்தை கொண்டு திரிவார்கள். எனது தோழிகள் மலைமகள். சாம்பவி ஆகியோரும் அப்படியே இருந்தனர். சொற்ப அவகாசம் கிடைத்தாலும் எதாவது புத்தகத்தினுள் மூழ்கி விடுவார்கள்.

நான் அறிந்தவரை சமூகத்திற்கு பெறுமதியான அறிவுசார் சேவைகளை ஆற்றிய பலரும் சிறந்த வாசகர்களாகவே இருந்துள்ளனர். இந்திய போராட்ட வீரர் பகத்சிங் தன்னை துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் கடைசி நிமிடம் வரை வாசித்துக் கொண்டேயிருந்தார். இப்படியாக எத்தனையோ பெறுமதியான உதாரணங்களை வரிசைப்படுத்த முடியும்.

ஆனாலும் பலர் படித்து முடித்து ஒரு உத்தியோகம் கிடைத்ததும் தாம் படிப்பதற்காக கைகளில் புத்தகம் எடுப்பதையே நிறுத்தி விடுகிறார்கள். இதில் மிகுந்த அவலம் எதுவெனில் பல ஆசிரியர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். மக்களுக்கு முன்பாக மேடைகளில் ஏறி முழக்கமிடும் அரசியல்வாதிகளும் தமது அறிவை வளர்த்தெடுப்பதில் பின்தங்கியவர்களாகவே இருந்து விடுகிறார்கள். புதிய கருத்துக்களும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் வரண்டு போயிருக்கும் இவர்களால் இளைய தலைமுறையின் வாழ்வை நீரோட்டமுள்ள பசுமை படர்ந்த தோட்டமாக எவ்விதம் வளர்த்தெடுக்க முடியும்.

ஒரு குழந்தையின் முதலாவது ஆசிரியர் தாய்தான். கருவிலே வளரும் சிசுவினுடைய கிரகிக்கும் திறன் அதனுடைய ஏழாவது மாதங்களிலிருந்தே வளர்ச்சியடையத் தொடங்குவதை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டுள்ளது. நானறிந்தவரை ஒரு காலத்தில் பெண்களின் மனங்கவர்ந்த நாவலாசிரியர் ரமணி சந்திரன். அதனைத்தாண்டிய தேடல் உள்ள பெண்கள் மிகவும் அரிதானவர்களாகவே இருந்தனர். இன்று அதிகமாக பெண்களின் நேரத்தையும் சிந்தனைகளையும் ஆக்கிரமித்து நிற்பது தொலைக்காட்சி நாடகங்கள். இவை எந்தளவு புதிய சிந்தனைகளை விருத்தி செய்கின்றன என்பதற்கான விளக்கம் என்னைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்று.

பாடசாலைக் கல்வியானது தனது நிகழ்ச்சி நிரலின்படி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்ப்படுத்துகின்றது. பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன. அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக, சமூக பிரஞ்ஞை மிக்க கல்வியாளர்களாக உருவாக்குகின்றதா? பெயருக்குப் பின்னால் வால் போன்ற பட்டங்கள் கொண்ட சிலர் கூட இத்துப் போன பிற்போக்கு சிந்தனை மரபுகளுக்குள் இன்னமும் சிக்குப்பட்டு உழல்வதையே நடைமுறையில் காண்கிறோம்.

‘கற்றது கையளவு கல்லாதது கடலளவு’ எனக்கூறுவார்கள். வாசிப்பும் தேடலும் விரிய விரியத்தான் நாங்கள் எவ்வளவு சிறுமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களும், தமது பிள்ளைகளை மாணவர்களை சிறந்த வாசகர்களாக உருவாக்க வேண்டும். இன்றைய நவீன சாதனங்களின் பெருக்கம் சிறந்த வாசிப்புக்கு பல வழிகளை ஏற்படுத்தியிருந்த போதும், இளைய தலைமுறையினர் மேலோட்டமான பாவனைகளுடனேயே திருப்பதிப்பட்டுக் கொள்வதை அவதானிக்கிறோம். உண்மையில் வாசிப்பு என்பது ஒவ்வொருவரின் சுவாசத்தைப் போலவும் அமைகின்ற போதுதான் சிந்தனை மாற்றமும். சமூக மாற்றமும் எதிர்காலத்தை புத்தியால் வெல்லும் சாணக்கியமும் இயல்பாக உருவாகும்.

- தமிழினி ஜெயக்குமாரன்

Related Articles