கலாபூஷணம் சோ.ராமேஸ்வரன்

தேசியப் பத்திரிகைகளில் பல தொடர் நவீனங்களையும், சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கும் இவரது படைப்புகள் இலக்கிய சஞ்சிகைகளில் பதிவாகியதாகத் தெரியவில்லை. இந்தப் புறம்போக்குதன்மையிலிருந்து சோ.ராமேஸ்வரனை மீட்டெடுப்பது இலக்கிய ஆர்வலர்களின் உச்சக் கடமையாகும். அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்." என சமரசன் என்ற புனைபெயரில் எழுதும் விமர்சகர் ஒருவர் யாழினி" என்ற ராமேஸ்வரனின் நாவலுக்கு வீரகேசரியில் விமர்சனம் எழுதியிருந்தார்.

Rameswaran is currently one of the fine short story writers in Thamil in this country" என பிரபல விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் 2005 ஓகஸ்ட் 5ஆம் திகதிய “Daily News பத்திரிகையில் "Gleanings"  என்ற தனது பத்தி எழுத்தில் நூலாசிரியரின் முகவரியைத் தேடுகிறார்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதுகையில் குறிப்பிட்டிருந்தார்.

 தமிழ் இலக்கிய உலகுக்கு ராமேஸ்வரன் நல்கிய பங்களிப்பினைக் கௌரவப்படுத்துமுகமாக 15.12.2012இல் அவருக்கு கலாபூஷணம்" என்ற பட்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. இது தொடர்பான விழா கொழும்பு ஜோன் டீ சில்வா அரங்கில் நடைபெற்ற போது, அவருக்கு விருதும், சான்றுப்பத்திரமும் வழங்கப்பட்டன.

1950இல் மார்ச் 31ஆம் திகதி அனுராதபுரத்தில் பிறந்தவர் ராமேஸ்வரன். அவரது சொந்த ஊர் வடமராட்சி மண்ணுக்குரிய புலோலி மத்தியில் அடங்கும் பருத்தித்துறையில் உள்ள ஆத்தியடி. படித்தது பெரும்பாலும் கொழும்பில்தான் - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி (1995-1997). 1958ஆம் ஆண்டு ஜூன் கலவரத்தின் பின் ஒன்றரை வருடங்கள் பருத்தித்துறையில் படித்தார்.

சிறு வயதிலேயே, அதாவது 15 வயதிலேயே எழுதுவதில் ஆர்வம். இவர் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகள் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்த கண்ணன்" என்ற சிறுவர் சஞ்சிகையில்; வெளியாகியுள்ளன. தனது படைப்புக்கள் அச்சுவாகனத்தில் ஏறவே, எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவருள் பெருக்கெடுத்தோட கண்ணன்" இதழுக்கேற்ற கதைகளை எழுதி, அதற்கு அனுப்பிவைத்தார். என்ன காரணத்தினாலோ அக்கதைகள் பிரசுரமாகவில்லை. ஆனால், அவர் மனம் தளரவில்லை. எழுதுவதைத் தொடர்ந்தார். நகைச்சுவைத் துணுக்குகளை சிந்தாமணி" பத்திரிகைக்கு எழுதியனுப்பினார். அவை வெளியாகின. அவற்றில் ஒன்று பரிசுக்கும் தெரிவாகியிருந்தது.

அடுத்து அவரது கவனம் சிறுகதைத் துறைக்குத் திரும்பியது. முதலில் சிறுகதையொன்றை எழுதி அதை வீரகேசரி வார வெளியீட்டின்" ஆசிரியராகத் திகழ்ந்த அமரர் பொன்.இராஜகோபாலிடம் கையளித்தார்;. ஆனால், அவரது சிறுகதையின் பாணி அமரருக்கு பிடிக்கவில்லை போலஞம். அதைத் திருப்பித் திருப்பி மூன்று முறை எழுதச் செய்வித்தார். மூன்றாவது முறை எழுதிவிட்டு, அமரரிடம் நீட்டியிருந்தார். அது 185, கிராண்ட்பாஸ் வீதியில் இருந்து வெளிவரவேயில்லை. மனம் சலித்த ராமேஸ்வரன் அக்கதையை சிந்தாமணிக்கு" அனுப்பினார். சிறுகதைக்கு பிள்ளையார் சுழி போட்டது போல் அக்கதை அதில் 1969ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி வெளியாகியது. அக்கதைதான் அப்பா வரமாட்டார்.

அதன் பின் இது வரை (2013) நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ராமேஸ்வரன் எழுதிவிட்டார். அவற்றில் பெரும்பாலானவை பத்திரிகைகளில்/நூல்களில் வெளியாகியுள்ளன. இவற்றுள் அரைவாசிக் கதைகள் சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு, இரு சிறுகதைத் தொகுதிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளன. ஏனையவை சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இருபத்தியிரண்டு சிறுகதைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளன.

தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் தெளிவான ஓட்டங்கள், எளிமையான, இயல்பான உரையாடல்கள் மூலம் கதைகளை நகர்த்தும் திறமை, இவை ராமேஸ்வரனிடத்தில் உள்ள நேரான அம்சங்கள்" என புலோலியர் ஆ.இரத்தினவேலோன் தனது நூல் ஆய்வு என்ற பத்தியில் பஞ்சம்" என்ற ராமேஸ்வரனின் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் வாழ்க்கை

ராமேஸ்வரன் தனது தொழில் வாழ்க்கையை வீரகேசரி/மித்திரன்" பத்திரிகைகளுக்கு வவுனியா நிருபராக ஆரம்பித்தார். 22 நொவம்பர் 1971இலிருந்து 5 செப்ரெம்பர் 1974 வரை அவர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். அச்சமயத்தில் தனது தொழிலை அவர் திறம்படச் செய்தாகப் பலராலும் பாராட்டப்பட்டார். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த அமரர்களான எக்ஸ்.எம்.செல்லத்தம்பு, த.சிவசிதம்பரம் போன்றோருடன் மிக நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார். மாவட்ட மட்டத்தில் (வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள்) மிகவும் சிறந்த நிருபராக வீரகேசரி" தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். பல கொலை, தற்கொலை, பாலியல்வல்லுறவு சம்பவங்களை மிகவும் சுவைபட எழுதியிருந்தார். அத்துடன் அரசியல் கூட்டங்களின் குறிப்புகளையும் அழகுற தொகுத்து எழுதியிருந்தார்.

அச் சமயத்தில் இவரது தந்தை எஸ்.சோமசுந்தரம் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரிவின் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார். இவரது தந்தை 1976ஆம் ஆண்டில் தனது 55 வயதில் சேவையிலிருந்து இளைப்பாறிவிட்டு துணைவியாருடன் தமது சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு இறைபணிகளை நீண்ட காலம் செய்ததுடன், போர்க்காலச் சூழலில் கூட கொழும்பில் உள்ள மகன்களுடன் வாழ வேண்டும் என்ற எண்ணமின்றி ஊரில் இருந்தார். பின் நோய்வாய்ப்புற்ற நிலையில் இருவரும் 1998இல் கொழும்புக்கு வந்து சில மாதங்களின் பின் ராமேஸ்வரனின் தாயாரும், அதைத் தொடர்ந்து மூன்று மாதங்களினுள் தந்தையாரும் இயற்கையெய்தினர். இருவரது பதவுடல்களும் பொரளை இந்து மயானத்தின் பலரது கண்ணீர் அஞ்சலிகளுக்கிடையே அக்கினியுடன் சங்கமமாகின.

இருவருமே தமது மகனின் இலக்கியத் துறையின் ஈடுபாட்டுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். ராமேஸ்வரனின் மௌன ஓலங்கள்" என்ற நாவலை தந்தையார் மூன்று தடவைகள் வாசித்ததாக மகனிடம் கூறியிருந்தார். அவருக்கு அந் நாவல் நன்றாகப் பிடித்துவிட்டதாம்.

வவுனியாவில் வாழ்ந்த நான்கு ஆண்டுகளில் நிருபர் பணியைச் செய்தவாறே ராமேஸ்வரன் நிறைய சிறுகதைகளையும், தொடர்கதைகளையும், சிறுவர் நவீனத்தையும் வீரகேசரி, “மித்திரன் வாரமலர், மித்திரன்" ஆகிய பத்திரிகைகளுக்கு எழுதினார். அத்துடன் சிரித்திரன் நகைச்சுவை இதழுக்கு நகைச்சுவை விடயதானங்களை அனுப்பிவைத்தார். மற்றும் அஞ்சலி, “கதம்பம், “செய்தி ஆகிய சஞ்சிகைகளுக்கும் சிறுகதைகளை எழுதினார்.

ராமேஸ்வரனின் முதலாவது தொடர்கதை விமலா என்றொரு பெண் தெய்வம்". இது மித்திரன்" தினசரியில் 1972இல் 28 அத்தியாயங்களில் வெளிவந்தது.

மேடையேற்றப்பட்ட நாடகங்கள்

வவுனியாவில் வாழ்ந்த போது ராமேஸ்வரன் மூன்று நாடகங்களை மேடையேற்றினார். நாடகங்களின் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என முக்கிய பொறுப்புக்களை சுமந்த ராமேஸ்வரன், தனது ஒரேயொரு நாடகத்திலேயே நடித்திருக்கிறார். மூன்றுமே முழு நீள நகைச்சுவை நாடகங்களாகும்.

இவற்றில் சிங்கப்ப10ர் மாமா" என்ற நாடகம் முதல் தடவையாக வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயக் கட்டிட நிதிக்காக வவுனியா தமிழ் மகா வித்தியாலய அரங்கில் 25.9.1973இலும், இரண்டாவது தடவையாக இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வவுனியா கிளை நகர சபை திறந்த வெளி அரங்கில் நடத்திய காப்புறுதி வார இறுதி நாள் கொண்டாட்டத்தில் 15.10.1973இலும் மேடையேற்றப்பட்டது. இதன் பின்னர் மலேஷியா மாமி" என்ற நாடகம் 06.02.1974இல் வவுனியா நகர சபை திறந்த வெளி அரங்கில் மேடையேற்றப்பட்டது. ராமேஸ்வரனின் மூன்றாவது நாடகம் ஓ! யோஜனா". இது 26.03.1974இல் இதே அரங்கில் மேடையேற்றப்பட்டது. இதன் கதாநாயகனாக நடித்தவர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராக விளங்கிய எஸ். (உடுவை) தில்லைநடராஜா. மூன்று நாடகங்களுக்கும் ஒப்பனைக் கலைஞர் அண்மையில் காலமான யாழ்ப்பாணத்தில் புகழ்பத்த பெஞ்சமின்.

மேடை நாடகங்கள் மட்டுமன்றி, தொலைக்காட்சி நாடகங்களிலும் ராமேஸ்வரன் தனது பங்களிப்பினைச் செய்துள்ளார். 1992-93ஆம் ஆண்டுகளில் நான்கு தடவைகள் தேசிய தொலைக்காட்சிகளில் 22 வாரங்கள் ஒளிபரப்பான சுர அசுர" என்ற நாடகத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். அதில் ஓரிரு காட்சிகளிலும் நடித்துள்ளார். வீணா ஜயக்கொடி தமிழ் பாத்திரமொன்றை இதில் ஏற்றிருந்ததுடன், அவர் தனது சொந்தக் குரலிலேயே தமிழும் பேசினார். அத்துடன் 1994இல் சக்தி"யில் ஒளிபரப்பான சூரிய உதயம்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில் உதவி இயக்குனராகச் செயற்பட்டார். தேசிய சமாதானப் பேரவையின் தயாரிப்பில் நண்பன்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டதுடன், ஓரிரு காட்சிகளிலும் நடித்தார். துரதிர்ஷ்டவசமாக இது ஒளிபரப்பப்படவில்லை.

வவுனியாவில் நிருபர் தொழிலுக்கு அவர் முழுக்கு போடவேண்டியிருந்தது. வீரகேசரி" தாபனத்தில்  உதவி ஆசிரியர் தேவை" என்ற விளம்பரத்திற்கு இவர் அனுப்பிய விண்ணப்பத்திற்காக பரீட்சையொன்றில் தோற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். பரீட்சையில் தேறிய இருவரில் ஒருவர் ராமேஸ்வரன். 1974 ஓகஸ்ட 6ஆம் திகதியிலிருந்து இவர் உதவி ஆசிரியராகப் பதவியேற்றார். 1980 மார்ச் 31ஆம் திகதி வரை இங்கு பணிபுரிந்தார். ராஜினாமா செய்யும் தறுவாயில் இவர் வீரகேசரி"யில் விவரணச்சித்திர ஆசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டிருந்தார்.

1980 ஏப்ரல் 1ஆம் திகதி (முட்டாள் தினம்) ராமேஸ்வரன் 114, விஜேராம மாவத்தை, கொழும்பு 7இல் உள்ள கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகத்தில் தகவல் வெளியீட்டு உத்தியோகத்தராகக் கடமையைப் பொறுப்பேற்றார். கமநலம்" என்ற சஞ்சிகையின் ஆசிரியர்; பொறுப்பே இவருக்கு முதலில் வழங்கப்பட்டிருந்தது. இது ஒரு காலாண்டுச் சஞ்சிகை. கமத்தொழில் என்ற துறை அவருக்கு புரியாது என்ற போதிலும், இவர் அதை திறம்படச் செய்தார் என்றே கூறவேண்டும். ஆண்டுகள் கடக்க அந் நிறுவகத்தின் பெயர் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2005ஆம் ஆண்டில் இவருக்கு பதவியுயர்வு கிடைத்தது. தகவல் வெளியீட்டு உத்தியோகத்தராக 25 ஆண்டுகள் பதவி வகித்த இவருக்கு வெளியீட்டு அலகின் பதில் தலைவர் என்ற பதவி கிட்டியது. அந்தப் பொறுப்புடன் நிறுவகத்தினால் வெளியிடப்படும் Weekly Food Commodities Bulletin, Monthly Food Information Bulletin மற்றும் HARTI News Letter ஆகியவற்றின் பதிப்பாசிரியரானார். இந் நிறுவகத்தினால் வெளியிடப்படும் Sri Lanka Journal of Agrarian Studies என்ற அரையாண்டு ஆராய்ச்சி இதழின் முகாமைத்துவ ஆசிரியராகவும் விளங்கினார். அத்துடன் ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பும் இவர் மீது சுமத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி அச்சொட்டாக 30 ஆண்டுகள் அதில் பணிபுரிந்த பின்னர் தனது 60ஆவது வயதில் இவர் சேவையிலிருந்து இளைப்பாறினார்.

இந் நிறுவகத்தில் இவர் பணிபுரிந்த போதும் பத்திரிகை உலகுடனான தொடர்பை துண்டிக்கவில்லை. தொடர்ந்துமே வீரகேசரி வார வெளியீடு", “மித்திரன் தினசரி", மித்திரன் வாரமலர்", “தினகரன் வார மலர் ஆகியவற்றுக்கு சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவைத் தொடர்கள் என எழுதிக் குவித்தார்.

இவர் மித்திரன் வாரமலரில்" 1985இல் ரம் பதில்" என்ற மகுடத்தில் ஆரம்பித்து வைத்த கேள்வி-பதில் என்ற பகுதி தொடர்ந்துமே வெளிவருகின்றது. இவர் இதை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து நடத்திவிட்டு என்ன காரணத்தினாலோ விட்டுவிட்டார்.

பத்திரிகைகளில் தொடராக வெளியாகிய ஆக்கங்கள்

வீரகேசரி வார வெளியீடு", “மித்திரன் தினசரி", “மித்திரன் வாரமலர்" ஆகிய பத்திரிகைகளில் இவர் தொடராக எழுதியவற்றை பின்வரும் அட்டவணை தெளிவுபடுத்துகின்றது.

                                       

பத்திரிகையின் பெயர்

விபரம்

வெளியான ஆண்டு

அத்தியாயங்களின்/இதழ்களின் எண்ணிக்கை

வீரகேசரி வார வெளியீடு

1

நிறைவேறாத சொர்க்கங்கள்

தொடர் கதை

1992

14 அத்தியாயங்கள்

2

இந்த நாடகம் அந்த மேடையில்

தொடர் கதை

1995

41 அத்தியாயங்கள்

3

மனம் என்னும் மேடையில்

தொடர் கதை

2012

20 அத்தியாயங்கள்

4

வாடா மச்சான் ஊருக்கு

நகைச்சுவைத் தொடர்

1991

40க்கு மேற்பட்ட இதழ்கள்

5

அக்கரைக்கு இக்கரை பச்சை

நகைச்சுவைத் தொடர்

1993

45க்கு மேற்பட்ட இதழ்கள்

6

வடக்கு வாசல்

நகைச்சுவைத் தொடர்

1992

6 இதழ்கள்

7

கொழும்பில் ஒரு தகிங்கிணதோம்

நகைச்சுவைத் தொடர்

1992

20க்கு மேற்பட்ட இதழ்கள்

8

அக்கப்போர்   

 

நகைச்சுவைத் தொடர்

1994

6 இதழ்கள்

9

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே  

நகைச்சுவைத் தொடர்

1996

8 இதழ்கள்

மித்திரன் வாரமலர்

1

காதல் நீரில் தோன்றும் நிழலல்ல             

தொடர் கதை

1977

17 அத்தியாயங்கள்

2

ஒரு தாயும், மகனும் வாழ்கிறார்கள்

தொடர் கதை

1985

18 அத்தியாயங்கள்

3

உலகம் சுற்றும் மனோ

தொடர் கதை

1983

11 அத்தியாயங்கள்

4

விடிந்தால் வினிதா    

தொடர் கதை

1996

32 அத்தியாயங்கள்

5

ராத்திரிப் பொழுது காத்திருக்கு   

தொடர் கதை

1985

21 அத்தியாயங்கள்

6

டோக்கியோ அழைக்கிறது

தொடர் கதை

1981

10 அத்தியாயங்கள்

7

ராஜ்னீஸ் சுவாமியின் அதிர்ச்சி உலகம்              

உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு

1979

8 அத்தியாயங்கள்

8

ஒரு மனோதத்துவ டாக்டரின் ஏட்டிலிருந்து       

உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு

1980

15 இதழ்கள்

9

மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ஒப்பிலாமணி

நகைச்சுவைத் தொடர்

1992

8 அத்தியாயங்கள்

மித்திரன் தினசரி

1

விமலா என்று ஒரு பெண் தெய்வம்

தொடர் கதை  

1972

28 அத்தியாயங்கள்

2

என் காதலர்கள்       

தொடர் கதை  

1972

28 அத்தியாயங்கள்

3

உன் முகம் என் நெஞ்சில்

தொடர் கதை  

1985

10 அத்தியாயங்கள்

4

உறங்காத பறவைகள்

தொடர் கதை  

1981

13 அத்தியாயங்கள்

5

இளைய நிலா அழுகிறது

தொடர் கதை  

1981

37 அத்தியாயங்கள்

6

யோகராணி கொழும்புக்குப் போகிறாள்

தொடர் கதை  

1985

24 அத்தியாயங்கள்

7

13, பொன்சேகா வீதி

தொடர் கதை  

1985

32 அத்தியாயங்கள்

8

கசக்கும் இளமை

தொடர் கதை  

1985

10 அத்தியாயங்கள்

9

மர்மக் காதலி

தொடர் கதை  

1979

26 அத்தியாயங்கள்

10

அடிமைப் பெண் நெமி

தொடர் கதை  

1983

34 அத்தியாயங்கள்

11

அந்த ஆறு இரவுகள்

தொடர் கதை  

1983

40 அத்தியாயங்கள்

12

என்றும், எப்பொழுதும் பேசுவதற்கு மட்டும்

தொடர் கதை  

1985

10 அத்தியாயங்கள்

13

உயிரின் விலை        தொடர் கதை

தொடர் கதை  

1985

24 அத்தியாயங்கள்

14

அம்பிகா... அம்பி... அம்... ...

தொடர் கதை  

1984

43 அத்தியாயங்கள்

15

இதோ... இதோ....

தொடர் கதை  

1984

6 அத்தியாயங்கள்

16

தேவி.... ஸ்ரீ.... தேவி

தொடர் கதை  

1984

6 அத்தியாயங்கள்

17

காதலுக்கு கண்ணுண்டு       

தொடர் கதை  

1981

43 அத்தியாயங்கள்

18

வேர்ஜினியா

தொடர் கதை  

1981

7 அத்தியாயங்கள்

19

உச்சக் கட்டம்

தொடர் கதை  

1985

25 அத்தியாயங்கள்

20

ரோஸி... மை டார்லிங் ரோஸி

தொடர் கதை  

1984

43 அத்தியாயங்கள்

21

அன்ஜி அவள் ஒரு...

தொடர் கதை  

1984

21 அத்தியாயங்கள்

22

ஒரு சாமித்தம்பியும், ஒரு டுஷ்யந்தியும்

தொடர் கதை  

1984

6 அத்தியாயங்கள்

23

அந்த 14 நாட்கள்

தொடர் கதை  

1984

38 அத்தியாயங்கள்

 

பத்திரிகைகளில்/நூல்களில் வெளிவந்த சிறுகதைகள்

அப்பா வரமாட்டார்" என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து இதுவரை அவர் நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். தற்போது அவர் பார்வையில் கிட்டுகின்ற அப்பா வரமாட்டார்" உட்பட 72 சிறுகதைகளின் விபரம் வருமாறு:

1. ஒரு ஆறு வழி பிரித்து ஓடுகிறது 2.  விழித்தெழும் உணர்வுகளுக்கு சாட்டை 3. தொடரும் சிறுகதை   4. சுதந்திரக் காற்று 5. என்று தணியும் இந்தப் போராட்டம் 6. டில்ருக்ஷியும், ஒரு பாலன் அய்யாவும்    7.மிஸிஸ்சமரக்கொடியிள் அனெக்ஸ்8. ஓர் ஆச்சரியக்குறி கேள்விக்குறியாகிறது 9. சொந்த மண்   10.டிராபிக் புளொக்11. மண்ணை நம்பி... 12. பஞ்சம் 13. ஒரு கப்டனும்ஒரு பிராமணச் சிறுவனும்    14. சிறிபாலபுர மாத்தையா15.அவளும்”, அவளும் 16. ஊரில ஓர் அம்மா 17. தீபாவளி போனஸ்”      18. ஊர் திருந்தாது 19. ஒரு திரை விலகுகிறது 20. மேடை முழக்கம்  21. பெண்மையின் மென்மை    22. பண்டாரவும், அந்த நெடிந்துயர்ந்த மரமும் 23. அது ரஷ்யாவின் கலாசாரமாம் 24. புண்ணிய பூமி      25. தணிக்கப்படுவதல்ல மனிதப் பெறுமதிகள் 26. அசகியத்திலும் சுகமே 27. எங்கட ஊர் பரியாரியார்    28. விடலைப் பருவத்திலே... 29. ஜிம்மியின் இறுதிச் சடங்குகள் 30.      கண் திறந்த போது... 31. இருள் விலகுகின்றது 32. சேனாதீரவும், அந்தப் பெண்களும் 33. பழைய உறவின் புதிய ஆரம்பம் 34. நியாயம், தர்மம்... 35. புதிய வீட்டில் 36. மலர் வளையத்திற்கும் வாசமுண்டு 37. பவளக்கொடி 38. வாழ்வதற்காக சாவதா 39. தற்குறி 40. நியதி 41. பைத்தியம் 42. போராட்டம் 43. அம்மா 44. வைதீகம் 45. மொழி 46. மலர்கள் 47. முகவரியைத் தேடுகிறார்கள் 48. பால்ய திருமணம் 49. சா வரம் 50. ஒரு விடியல் பொழுதில் 51. ஒரு தூணும், ஆறேழு பலூன்களும் 52. சூறாவளியின் முன்னே ஒரு தீபம் 53. தவறுகள் திருத்தப்படலாம் 54. பனந் தோட்டத்து மாம்பழம் 55. கலாசார விலங்குகள் 56. நிரந்தர வதிவிடத்துடன் ஒரு மணப்பெண்! 57. பொருளாதாரத் தடை 58. இருள் விலகுகிறது 59. போராட்டமும், வடிவங்களும் 60. நீர்வீழ்ச்சி பின்னோக்கிப் பாய்வதில்லை 61. கோயில் காணியில் ஓர் எச்சரிக்கைப் பலகை 62. சில்லறைத்தனங்கள் 63. மூன்றாம் வகுப்பு மனிதர்கள் 64. வணக்கம் யாழ்ப்பாணம் 65. விடியாத இரவு 66. பிரசவ வலி   67. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை 68. லண்டனில் ஒரு போராட்டம் 69. வன்னி மாப்பிள்ளை 70. குட்டி 71. மனித உரிமைகள் சட்டத்தரணி 72. அப்பா வரமாட்டார்

இவை ஒன்றில் பத்திரிகைகளில் அல்லது அவரது நூல்களில் வெளியாகியுள்ளன. இப்பட்டியலில் மித்திரன்" தினசரியில் வெளிவந்த கதைகள் உள்ளடக்கப்படவில்லை.

உள்நாட்டு/சர்வதேச போட்டிகளில் பரிசுகள்

நாவல்/சிறுகதைத் தொகுப்பு

ராமேஸ்வரன் நிறைய நாவல்களை எழுதியுள்ள போதிலும், இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது வடக்கும், தெற்கும்" என்ற நாவல்தான். மாத்தறை மாவட்டத்திலுள்ள மக்கள் சமாதான இலக்கிய மன்றம் 1995இல் நடத்திய கையெழுத்து பிரதியிலான நாவல் போட்டியில் இவரது பிரதிக்கு முதல் பரிசு கிடைத்தது. இதை அம்மன்றமே தனது செலவில் அச்சடித்து வெளியிட்டிருந்தது.

இதே நாவல் (நூலுருவில்) அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அனைத்துக் கலாசார நிகழ்ச்சித் திட்டத்தையொட்டி நடைபெற்ற தமிழ் மொழித்தின விழாவில் மூன்றாவது பரிசைப் பெற்றது. இது 1996ஆம் ஆண்டிலாகும்.

சத்தியங்கள் சமாதிகளாவதில்லை" என்ற ராமேஸ்வரனின் நாவல் (நூலுருவில்) 1997இல் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அனைத்துக் கலாசார நிகழ்ச்சித்திட்டத்தையொட்டி நடைபெற்ற தமிழ் மொழித்தின விழாவில் மூன்றாவது பரிசைப் பெற்றது.

ராமேஸ்வரன் எழுதி வெளியிட்ட புதிய வீட்டில்" என்ற சிறுகதைத் தொகுப்பு (நூலுருவில்) அரச கரும மொழிகள் திணைக்களம் கலாசாரங்களுக்கிடையிலான செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமான மொழித் தின விழாவில் முதலாவது பரிசைப் பெற்றுக்கொண்டது.

பரிசுபெற்ற சிறுகதைகள்

சிறுகதைப் போட்டி சம்பந்தமாக தகவல் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தால் தனது சிறுகதையை ராமேஸ்வரன் அப்போட்டிக்கு அனுப்பிவிடுவார். அனேகமாக அவர் எழுதிய சகல கதைகளுமே பரிசுக்குரியனவையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே கதையை ஒரே நேரத்தில் நடைபெற்ற இரு போட்டிகளுக்கு அனுப்பி அது பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமேஸ்வரன் எழுதிய 22 சிறுகதைகள் பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:

இல.

பெயர்

போட்டி நடத்திய நிறுவனம்

பரிசு விபரம்

ஆண்டு

1

சிறிபாலபுர மாத்தையா                

இலங்கை சூழல் பத்திரிகையாளர் மன்றம், நுகேகொடை  

முதலாவது பரிசு

1994

2

ஒரு கப்டனும் ஒரு பிராமணச் சிறுவனும்                 

இலங்கை தமிழ்ச் சங்கம், விக்ரோறியா, அவுஸ்திரேலியா

இரண்டாவது பரிசு

 

1995

 

 

சூரியன் பத்திரிகை, கனடா

இரண்டாவது பரிசு

1995

3

பாதை தவறாமல்                     

 

மக்கள் சமாதான இலக்கிய மன்றம், மாத்தறை

முதலாவது பரிசு

1995

4

ஆளில கொஞ்சம் ஐமிச்சம்       

மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம்

முதலாவது பரிசு       

1995

5

நியாயம், தர்மம்...                            

 

கலாசார, சமய அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி

முதலாவது பரிசு

1998

6

சேனாதீரவும், அந்தப் பெண்களும்                   

கலாசார, சமய அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி

இரண்டாவது பரிசு

1999

7

வாழ்வதற்காக சாவதா                

மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கம் பாரிஸ் கிளை

முதலாவது பரிசு

1999

8

ஊரில் ஒரு அம்மா                   

ஜனனிஇதழ் நடத்திய சிறுகதைப் போட்டி

ஆறுதல் பரிசு

1999

9

முகவரியைத் தேடுகிறார்கள்

லண்டன் பபாள ராகங்கள்

முதலாவது பரிசு

2004

10

பெண்மையின் மென்மை                               

விடியல் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், அக்கரைப்பற்று

இரண்டாவது பரிசு

2005

11

பொருளாதாரத் தடை  

லண்டன் பபாள ராகங்க       

ஆறுதல் பரிசு

2005

12

ஒரு தூணும், ஆறேழு பலூன்களும்  

வீரகேசரிபவள விழா

ஆறுதல் பரிசு 

2005

13

Water

Daily News short story competition

ஆறுதல் பரிசு 

2005

14

நீர்வீழ்ச்சி பின்னோக்கிப் பாய்வதில்லை

லண்டன் புதினம் பத்திரிகை

ஆறுதல் பரிசு 

2006

15

கோயில் காணியில் ஓர் எச்சரிக்கைப் பலகை

தமிழ்ச் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்

முதலாவது பரிசு

2006

16

ஒரு விடியல் பொழுதில்       

லண்டன் பபாள ராகங்கள்

ஆறுதல் பரிசு

2007

17

இது ஒரு பிரெஞ்சுக் கலியாணம்

வானமுதம்தமிழ் ஒலிபரப்பு சேவை, மெல்பேர்ண், அவுஸ்திரேலியா

மூன்றாவது பரிசு

2008

18

கலாசார விலங்குகள் 

கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமை அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி

மூன்றாவது பரிசு

2008

19

பிரசவ வலி

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக்குழு ஏற்பாடு செய்த உழைக்கும் மக்கள் கலைவிழா 2008

இரண்டாவது பரிசு

2008

20

பயங்கரவாதத்திலிருந்து விடுதலை 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்       

ஆறுதல் பரிசு 

2010

21

மனித உரிமைகள் சட்டத்தரணி   

ஜனசங்சதய இலக்கிய விழா

பாராட்டுப் பரிசு

2011

22

வன்னி மாப்பிள்ளை

இலங்கையர்க்கோன் சிறுகதைப் போட்டி    

மூன்றாவது பரிசு

2011

                                                                              

விருதுகள்

முகவரியைத் தேடுகிறார்கள்" என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு 2005ஆம் ஆண்டில் அரச இலக்கிய விருதை (சாஹித்திய மண்டல விருது) ஈட்டிக்கொடுத்தது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மகிந்த யாபா அபேவர்தன விருதை வழங்கினார்.

கானல் நீர் கங்கையாகிறது" என்ற நாடக நூலுக்காக ராமேஸ்வரனுக்கு 2007இல் அரச இலக்கிய விருது வழங்கப்பட்டது. இது தொடர்பான விழா ஹொறண ஸ்ரீபாலி வித்தியாலய புதிய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ராமேஸ்வரன் தமக்குரிய விருதை பிரதமராக விளங்கிய கௌரவ ரத்னசிறி விக்ரமநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந் நூலை எஸ்.கொடகே சஹ சகோதரயோ என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

ராமேஸ்வரன் இதுவரை தமிழில் ஆறு சிறுவர் இலக்கியத்தைப் படைத்துள்ளார். இவற்றுள் திசை மாறிய பாதைகள்" மற்றும் வாழ நினைத்தால் வாழலாம்" ஆகியவை வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசுகளை முறையே 1998இலும், 2005இலும் பெற்றுக்கொண்டன.

நூல்கள்

இதுவரை ராமேஸ்வரனின் 43 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, குறுநாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியன அடங்குகின்றன.

இந் நூல்களில் அரைவாசிக்கு மேற்பட்டவை வெவ்வேறு தாபனங்களின் நிதி அனுசரணையைப் பெற்றுக் கொண்டன அல்லது அவற்றினால் வெளியிடப்பட்டன.

கொழும்பு 7இல் உள்ள தேசிய நூலக ஆவணாக்கல் சேவைகள் சபை பின்வரும் நூல்களுக்கு நிதி அனுசரணை அளித்தது: 1. நிலாக்கால இருள் (நாவல்) 2. இன்றல்ல நாளையே கலியாணம் (நாவல்) 3. ஒரு விடியல் பொழுதில் (சிறுகதைத் தொகுப்பு) 4. புதிய வீட்டில் (சிறுகதைத் தொகுப்பு) 5. வாழ நினைத்தால் வாழலாம் (சிறுவர் இலக்கியம்) 6. நிழல் (குறுநாவல்)

மாத்தறை, மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தின் வெளியீடு: 1.வடக்கும், தெற்கும் (நாவல்)

கொழும்பு 10இல் உள்ள எஸ்.கொடகே சஹ சகோதரயோ என்ற வெளியீட்டு நிறுவனத்தின் வெளியீடு:   1. கனகு (நாவல்) 2. திவிய உதேசா திவி புதன்னோ (சிங்களம் - சிறுகதைத் தொகுப்பு) 3. நிதாஸே வா ரலி (சிங்களம் - சிறுகதைத் தொகுப்பு) 4. புண்ய பமி (சிங்களம் - சிறுகதைத் தொகுப்பு)

5. உதுர சஹ தகுண (சிங்களம் - நாவல்) 6. கானல் நீர் கங்கையாகிறது (நாடகம்)

கொழும்பு 11இல் உள்ள எம்.டி.குணசேன அன்ட் கோ என்ற வெளியீட்டு நிறுவனத்தின் வெளியீடு:       1.மணமாலிய வீ ஹெற்ற தவஸே (சிங்களம் - நாவல்). இந்நாவலின் இரண்டாவது பதிப்பினையும் மேற்படி நிறுவனம் வெளியிட்டிருந்தது.

பத்தரமுலலவில் உள்ள இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபையின் நிதி அனுசரணை:          1. தாயைக் காத்த தனயன் (சிறுவர் இலக்கியம்) 2. படித்து மகிழ பயன்மிகு பத்துக் கதைகள் (சிறுவர் இலக்கியம்) 3. அந்த அழகான பனை (சிறுவர் இலக்கியம்) 4. சதியை வென்ற சாதுரியம் (சிறுவர் இலக்கியம்)

இரத்மலானையில் உள்ள சர்வோதய விஷ்வலேகா என்ற வெளியீட்டு நிறுவனத்தின் அனுசரணையிலான வெளியீடு: திசை மாறிய பாதைகள் (சிறுவர் இலக்கியம்)

கொழும்பு 8இல் உள்ள பால்நிலை வள நிலையத்தின் வெளியீடு: துயரத்தில் வருந்துவது ஏன்?” (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு - நாவல்)

சுவிற்சர்லாந்தில உள்ள Task Force Sight and Life என்ற நிறுவனத்தின் வெளியீடு:         1. தேகாரோக்கியத்திலும், நோயிலும் விற்றமின் A பற்றிய SIGHT AND LIFE வழிகாட்டி நூல்         2. ஆரோக்கியமான கண்கள் செயற்பாட்டு நூல் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு)

ராமேஸ்வரனின் 18 நூல்களுக்கு அவரது துணைவியாரே டைப்செட்டிங்செய்திருந்தார். அதேவேளை 08 நூல்களுக்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவரது மகன் பிரசன்னா அட்டைப் படங்களை அமைத்துக் கொடுத்திருந்தார்.

ராமேஸ்வரனின் நூல்களை கே.எஸ்.சிவகுமாரன் (தமிழிலும், ஆங்கிலத்திலும்), அன்னலட்சுமி இராஜதுரை, புலோலியர் ஆ.இரத்தினவேலோன், ம.தேவகௌரி, சூரியகுமாரி பஞ்சநாதன், சமரசன், கே.விஜயன், ஆ.தேவராஜா (ஆங்கிலத்தில்), லோரன்ஸ் செல்வநாயகம், இப்னு அசுமத், மு.ஸ்ரீ.கௌரிசங்கர், வி.ரெட்லி ஹரிசன், செ.யோகநாதன், தில்லை, அந்தனி ஜீவா, வ.இராசையா, கோணேஸ்வரன், இ.மீரா, சுபத்ரா மணியன், ஜெ.பாரதி, ஜெ.கவிதா, கே.ஆர்.டேவிட், என்.எம்.அமீன், ரமணன், எஸ்.ஜி.புஞ்சிஹேவா (சிங்களத்தில்) என 25 விமர்சகர்கள் பத்திரிகைகளில் விமர்சனம் செய்துள்ளனர்.

நாவல்கள் பற்றி......

யோகராணி கொழும்புக்குப் போகிறாள் (1992)

இந் நாவல் 1985இல் மித்திரன் தினசரியில் தொடராக வெளியிடப்பட்டது. இதுவே நூல் வடிவில் வெளியான ராமேஸ்வரனின் முதலாவது படைப்பு. ஈழத்து இலக்கியகர்த்தாக்களின் நூல்களை வெளியிட்டு, அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நூல் இது.

இந் நூல் குறித்து புலோலியர் ஆ.இரத்தினவேலோன் விமர்சனமொன்றை 04.04.93ஆந் திகதிய வீரகேசரி வார வெளியீட்டில்" எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்தார்: வீரகேசரி வார வெளியீட்டில் சில காலங்களாகத் தொடராக நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதிப் பிரபலம் பெற்ற ராமேஸ்வரன் தான் நாவல் சிருஷ்டிப்பதிலும் சளைத்தவரல்லர் என்பதனை இப்படைப்பின் மூலம் நிரூபிக்க முயன்றிருக்கிறார். சமுதாயப் பிரக்ஞையுடன், மொழியியல், உளவியல், பாலியல் போன்ற பல்வேறு அறிவியல் பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட இந்நூல் ஆசிரியரின் கன்னி முயற்சியாகவே வெளிவந்திருப்பது சோ.ராமேஸ்வரனிற்கு நாவல் இலக்கியத்திலும் நல்லதோர் எதிர்காலம் உண்டு என்பதையே எண்ண வைத்திருக்கிறது........

மொத்தத்தில் தெணியான், புலோலியர் க.சதாசிவம், செ.கதிர்காமநாதன், நெல்லை க.பேரன், ஏ.ரி.நித்தியகீர்த்தி வரிசையில் வடமராட்சிக்கு இன்னொரு நல்ல நாவலாசிரியராக சோ.ராமேஸ்வரனும் இந்நாவல் மூலம் இனங்காட்டப்பட்டிருக்கிறார் என மிகத் தாராளமாகவே கூறலாம்.

இவர்களும் வாழ்கிறார்கள் (1993)

"இருபது வருடங்களுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்துச் சூழலில் எழுதப்பட்டது இந் நாவல். மிதமிஞ்சிய குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தான் மேற்கொள்ளும் ஆசிரியத் தொழிலின் மகத்துவத்தை உணராது மனம்போன போக்கில் வாழும் ஓர் ஆசிரியரின் மகள், தன் கணவனை இழந்த நிலையில் சிறுவனான தனது மகனுடன் வாழ்க்கையில் எதிர்நோக்கும் கஷ்டங்கள் இக்கதையில் விபரிக்கப்படுகின்றது என இந் நாவலுக்கு லக்ஷ்மி என்ற பெயரில் எழுதிவரும் அன்னலட்சுமி ராஜதுரை விமர்சனமொன்றை 11.06.1993ஆந் திகதிய வீரகேசரி வாரவெளியீட்டில்" எழுதியிருந்தார்.

சுயமரியாதை, கௌரவம் ஆகியவற்றைப் பேண வேண்டும், தன் ஒரே மகனைப் படிப்பித்து ஆளாக்க வேண்டும்@ தன் குடிகாரத் தந்தையை திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நல்ல நோக்கங்களைக் கொண்ட அழகிய இளம் விதவையான விசாலாட்சி தனிமையாக வறுமையோடு மட்டுமல்ல, சூழலுடனும் போராடுவதை ஆசிரியர் எளிமையாக விபரிக்கின்றார். நெருப்பு வெம்மையில் இருந்து அப்பம் சுட்டுக் காலங்கடத்த நேர்ந்த தனது துர்ப்பாக்கியத்தினை நினைத்து மனம் குமுறுவது, பெரிய மனிதர் போர்வையில் உள்ள சேவயர்செல்லப்புவின் இழிநடத்தைக்கு பலியாகாமல் அவள் போராடுவது, சமூகத்தில் தனித்து நிற்க முடியாத அவலத்தினை நினைத்து ஏங்கும் போது அவளை இரண்டாந்தாராமாகத் திருமணம் செய்து கொள்ள முன்வந்த 26 வயதுடைய இளைஞனான சங்கக்கடை மனேஜர் சுந்தரலிங்கத்தின் கோரிக்கையையிட்டு நிதானமாகச் சிந்தித்து அவனது உண்மையான அன்பினை உணர்ந்து துணிந்து ஏற்பது ஆகியவற்றினையும் ஆசிரியர் நல்லமுறையில் எடுத்துக்கூறுகின்றார்.

இருப்பினும் ரோஷம் நிறைந்த சுந்தரலிங்கம் தன்னைத் தாக்கிய தனது எதிரி காந்தனைப் பழிக்குப் பழிவாங்க வைராக்கியம் கொண்டு அவனுடன் ஒரு நாள் மோதி சண்டையிட்டு உயிர் துறக்க, தந்தையையும் ஏற்கனவே பறிகொடுத்த நிலையில் தனித்து நிற்கும் விசாலாட்சி மீண்டும் விதவையாகி மீண்டும் அப்பம் சுட்டு மகனுடன் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளாகின்றாள் என்று ஆசிரியர் கதையை முடித்து விசாலாட்சி மீது அனுதாபத்தினை ஏற்படுத்துவதில் வெற்றி காண்கிறார்.

இயல்பான கதை, இயல்பான உரையாடல்கள், எளிமையான கிராமத்துச் சூழல் கதையோட்டமும் விறுவிறுப்பாக இருக்கிறது. சேவயர்செல்லப்பு, வாத்தியார் கணபதிப்பிள்ளை, ஊருக்குப் பெரியவரான மணியகாரன் மாணிக்கம்பிள்ளை, அவரது அசட்டு வேலைக்காரன் கோவிந்தன் ஆகிய பாத்திர வார்ப்புகளும் யதார்த்தமாக மனதில் நிற்கின்றன.

இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் கடந்து போன ஒரு காலப் பகுதியின் யாழ்ப்பாண சமூக நிலையை ஓரளவு தொட்டுக் காட்டுகின்றது எனலாம். சோ.ராமேஸ்வரனின் இம்முயற்சி பாராட்டுக்குரியது என லக்ஷ்மி மேலும் குறிப்பிட்டுள்ளார்

இலட்சியப் பயணம் (1994)

1985இல் மித்திரன் தினசரியில் தொடர்ந்து 37 நாட்கள் இளைய நிலா அழுகிறது" என்ற பெயரில் வெளியாகிய இந் நாவல் பல மாற்றங்களுடன் மெருகூட்டப்பட்டு இலட்சியப் பயணம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

இதற்கு லக்ஷ்மி விமர்சனமொன்றை 27.08.1994ஆம் திகதிய வீரகேசரி வாரவெளியீட்டில்" எழுதியிருந்தார். சில பகுதிகள் வருமாறு:

யாழ்ப்பாணம், கொழும்பு நகர் ஆகிய இருவகைப் புலங்களிலும் கதை நகர்கின்றது. தனது பெரிய குடும்பத்தை, வறுமையின் கொடும்பிடியில் இருந்து மீட்டு, ஒளிபெறச் செய்ய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட ஓர் இளைஞனின் கதை இந்த இலட்சியப் பயணம். ஐந்து சகோதரிகளையும், விதவைத் தாயாரையும், விதவைத் தமக்கையையும், அவளது குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஓர் இளைஞனின் பரிதாப நிலையை ஆசிரியர் விறுவிறுப்பாகவும், சுவை குன்றாமலும் விபரிக்கின்றார். அண்ணனும் மதுபோதையில் மிதந்து உதவி செய்வதைக் கைவிட்ட நிலையில் தன் குடும்பத்தை உழைத்துக் காப்பாற்றும் பொருட்டு, தன் பல்கலைக்கழக இறுதியாண்டுப் படிப்பைக் கைவிட்ட தியாகு என்ற அந்த இளைஞன் படும் கஷ்டங்கள், அவன் பிரேமா என்ற பெண் மீது கொள்ளும் காதல், விதவையான தனது தமக்கை மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவனது ஆசை யாவற்றினையும் விபரிக்கையில் 1985ஆம் ஆண்டைய யாழ்ப்பாணத்துச் சூழ்நிலையைப் பொருத்தமாக ஆங்காங்கு எடுத்துக்காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும்.

செக்கிங்’, ராணுவ நோட்டங்கள், குண்டுத்தாக்குதல் பீதிகள், ஊரில் வாழ முடியாத நிலையில் இளைஞர்கள் பாதுகாப்புக்கும், உழைப்புக்குமாக வெளிநாடுகளுக்கு எவ்வளவோ சிரமங்களை மேற்கொண்டு செல்லத் தொடங்கியமை போன்றவற்றினையும் ஆங்காங்கு தொட்டுக்காட்டுவதோடு, ஓர் இளைஞனதும் ஏக்கங்களையும், அபிலாஷைகளையும் இயல்பாகக் காட்டுகின்றார். காதல் உணர்வுகளும் அப்படியே.

தியாகுவின் நண்பர்கள் பலரும் ஜெர்மனி, பிரான்ஸ் என்று வெளிநாடுகளுக்குச் செல்ல, ‘நானும் ஏன் ஜேர்மனிக்குச் செல்லக்கூடாது? அதனால் எனது குடும்பக் கஷ்டங்கள் எல்லாம் சொற்ப கால உழைப்பில் தீர்ந்து விடுமே!என்று நினைத்து அவன் அந்த முடிவில் உறுதியாகி பணத்துக்கு ஓடித் திரிந்து இறுதியில் பிரேமாவின் பண உதவியுடன் பயணம் புறப்படுகின்ற போது, அது அவனின் இலட்சியப் பயணமாகின்றது. ஆனால், ஏஜென்ஸிக்காரர்கள் ஏமாற்ற அவன் பாங்கொக்கில் இருந்து வெறுங்கையாகத் திரும்பி வருவது, எமது நாட்டு இளைஞர்கள் பலருக்கு நேர்ந்த, கசப்பான அனுபவங்களின் ஒரு துளியாகும். நம்பிக்கைகள் யாவற்றையும் இழந்து ஊர் திரும்பும் தியாகுவுக்கு, அவனது நிராதரவான வாழ்வுக்கு ஒரு நம்பிக்கையாய் பிரேமாவை ஆசிரியர் காட்டுவது வரவேற்கக்கூடியதாக உள்ளது.

இலட்சியப் பயணம், இன்றைய காலகட்டத்து நிகழ்வு. அதிலும் குறிப்பாக 1985ஆம் ஆண்டு கால யாழ்ப்பாணச் சூழலை ஓரளவு பிரதிபலிக்கும் ஒரு நாவல் என்ற வகையில் சோ.ராமேஸ்வரனின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மௌன ஓலங்கள் (1995)

1992இல் வீரகேசரி வார வெளியீட்டில்" நிறைவேறாத சொர்க்கங்கள்" என்ற தலைப்பில் வெளியாகியிருந்த இந் நாவல் மௌன ஓலங்கள்" என பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந் நாவலையிட்டு கே.விஜயன் 03.11.1995இன் வீரகேசரி தினசரியில் ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளர். இதில் சில துளிகள்: இது ஒரு கண்ணீர் கதை. நளினி திருமணம் முடித்த மூன்றாம் நாளே கணவனைப் பறிகொடுக்கிறாள். இளமையின் குறும்பான கனவுகளுடன் காத்திருந்தவளுக்கு விதியின் கொடூரமான தாக்குதல்.

கணவன் கடும் நோய்க்காளானவன். இல்லற வாழ்வில் ஈடுபடும் தகுதியில்லாதவன். தனது துயரங்களை மனதிலிருந்து அகற்றுவதற்காக கொழும்பு செல்கிறாள். அங்கே பிலிப் எனும் கிறிஸ்தவனின் நேசிப்புக்கு ஆளாகிறாள். பிலிப்பும் மனைவியை சில மாதங்களுக்குள்ளே இழந்தவன். நளினியை அத்தான் முறையான விநோதன் அளவு கடந்து சிநேகித்த பொழுதும், அவனை ஒரு சகோதர உணர்வுடனேயே நளினி காண்கிறாள். நளினி - பிலிப் வாழ்வில் மதம் குறுக்கிட்ட பொழுதும் பிலிப் அதனை தகர்த்தெறிய தயாராகவிருக்கிறான்.

இவ்வாறு சுற்றிச் சுழல்கின்ற கதையின் முடிவினை இங்கே சொல்ல விரும்பவில்லை. விமர்சனங்களில் நான் எப்பொழுதும் முடிவுகளைத் தவிர்ப்பதுண்டு.

நகைச்சுவையான வசனங்களை எழுதுவதில் ஆசிரியர் வல்லவர். இந்நாவலில் துயரம் பொதிந்த சொற்களையும், கவிதைமயமான வரிகளையும் நிறைத்துள்ளார்.

வடக்கும் தெற்கும் (1996)

1995இல் மாத்தறையில் உள்ள சமாதான இலக்கிய மன்றம் நடத்திய கையெழுத்தப் பிரதியிலான போட்டியில் முதலாவது பரிசு பெற்ற இந் நாவல் இம் மன்றத்தினாலேயே நூலாக வெளியிடப்பட்டிருந்தது. இதன் இரண்டாவது பதிப்பினை ராமேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.

நூலாக வெளியிடப்பட்ட இந் நாவலை தினகரன்" ஆசிரியர் தனது தினசரி பத்திரிகைகளில் தொடராக வெளியிட்டார்.

இந் நாவல் தனக்கு ஒரு திருப்புமுனை என்றே ராமேஸ்வரன் நம்புகின்றார். இலக்கிய உலகிற்கு தன்னைப் புடம்போட்டு காட்டிய நாவலாக இதை அவர் கருதுகிறார். இந் நாவல் சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு உதுர சஹ தகுண" என்ற பெயரில் எஸ்.கொடகே சஹ சகோதரயோ என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

அச் சமயத்தில் நிகழ்ந்த யுத்தம், அது தொடர்பான தாற்பரியம், மக்களின் எண்ணம், போராளிகளின் மனப்போக்குகள், இனப்பிரச்சனையின் ஆழ அகலம் என யாவற்றையும் ராமேஸ்வரன் வெகு அழகாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருந்தார். சமகால வரலாற்றில் சில அத்தியாயங்கள் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டிருந்தன.

இந் நாவலுக்கு நிறையவே விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இதற்கு விமர்சகர் ஆ.தேவராஜன் ஓர் ஆழமான விமர்சனத்தை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இந்த விமர்சனம் ஒரேயொரு விமர்சனம் The Sunday Leader பத்திரிகையில் 18.08.1996இலும், The Island பத்திரிகையில் 16.09.1996இலும், The Daily News பத்திரிகையில் 21.07.1996இலும் வெளியாகியிருந்தது. அந்த விமர்சனத்திலிருந்து சில துளிகள்:

The author, unlike most people who spout the idea of inter-marriage between Sinhalese and Tamils as the solution for achieving peace has delved deep into the causes of the ethnic conflict which is driving the country slowly but steadily towards an irretrievable state of dire poverty and starvation...

 

The novel has been neatly structured by the author, a skill so personal to him. The dialogues in two different contexts and places, makes it clear to the reader the root cause of the ethnic conflict. He does not stop at that. He exposes the small vested interest groups that with the sole aim of preserving their different vested interests hold the country - its prosperity and posterity - to ransom. He also exposes the cheap politician who leans heavily on these vested interest groups to gain power and to preserve the power gains, relegating the country and its future to the back-stage.”

இன்றல்ல நாளையே கலியாணம் (1996)

இது 13, பொன்சேகா வீதி என்ற பெயரில் 1985இல் 32 அத்தியாயங்களாக மித்திரன் தினசரியில்" தொடராக வெளியிடப்பட்டது. பின்னர் வழமைபோல் ராமேஸ்வரனால் மெருகூட்டப்பட்டு இன்றல்ல நாளையே கலியாணம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந் நூல் சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு மணமாலிய வீ ஹெற்ற தவஸே" என்ற பெயரில் எம்.டி.குணசேன அன்ட் கோ என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. பின்னர் இதன் இரண்டாவது பதிப்பையும் இந் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. 29.12.1996ஆம் திகதிய வீரகேசரியில் மு.ஸ்ரீ கௌரிசங்கர் விமர்சனமொன்றை எழுதியிருந்தார். அவர் குறிப்பிடுகின்றார்:

எமது தமிழ் சமுதாயத்தில் என்றென்றும் மாறாப் பிரச்சினையாக விளங்கும் சீதனப் பிரச்சினையையும், அதனையொட்டி ஏற்படும் உப பிரச்சினைகளான பெண்கள் வேலைக்குப் போதல், காதல் மற்றும் வதிவிடப் பிரச்சினைகள் என்பவற்றையும் பிரதான கருப்பொருள்களாகக் கொண்டு சோ.ராமேஸ்வரன் தமது ஒன்பதாவது படைப்பாக இச் சமூக நாவலை வெளியிட்டுள்ளார். வழமைபோல் நூல் ஆசிரியரின் தனித்துவம் அவரின் வடமராட்சி மண்ணிற்கே உரிய மொழி வளத்திலும், உரைநடை அமைப்பிலும் தெரிகின்றது. அத்துடன் ஆரம்பம் முதல் இறுதி வரை நூல் ரூபங்களில் கூறியுள்ளமையும் இந் நாவலில் தென்படுகின்றது.

சிறப்பான கதைக் கோர்வை, உரை நடை என்பவற்றால் வாசகர்களைக் கவர்வதில் ஆசிரியர் வெற்றி வென்றுள்ளார் என்றே கூற வேண்டும். மேலும், காதலில் தோல்வியடைந்த பெண்கள் அனைவரும் வாழ்க்கையே முடிந்துவிட்டது எனத் துவளாமல் இன்று எமது கல்யாணம் நடைபெறாவிட்டாலும் நாளை நடக்கும் என நம்புகின்றனர்.

சத்தியங்கள் சமாதிகளாவதில்லை (1996)

வடக்கும், தெற்கும்" நாவலில் தமிழ் இனத்தின் உரிமைகளை வழங்கும் போதே இன ஐக்கியம் இந்நாட்டில் ஏற்பட முடியும் எனவும், இதற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிந்துணர்வும் அவசியம் எனவும் எல்லைக் கிராம இளைஞன் காமினி மூலம் வலியுறுத்திய ஆசிரியர் இந் நாவலில் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு கலப்புத் திருமணம் ஒரு தீர்வாகாது என்ற கருத்தை இராணுவ வீரன் பண்டார மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ள மு.ஸ்ரீகௌரிசங்கர் என்ற விமர்சகர் இது குறித்து நீண்ட விமர்சனமொன்றை 29.06.1997ஆம் திகதிய தினகரன் வாரமலரில்" எழுதியுள்ளார். அதில் உள்ள முக்கிய பகுதிகள் வருமாறு:

இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, இம் முறை இராணுவ வீரன் ஒருவனின் உண்மையான ஆதங்கங்களையும், உள்ளுணர்வுகளையும், சார்புரீதியான நியாயத்தையும், ஆழமான சிந்தனைகளையும் வெகு இயல்பாக ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார். சிங்களக் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, அவர்கள் மூலமாகவே எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர் ராமேஸ்வரன் உறுதியாக இருந்துள்ளமை இந்நாவலில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது...

பண்டார மரணமடையாமல் தொடர்ந்தும் இராணுவத்தில் சேவையாற்றுவதாகச் சித்தரிக்கப்பட்டமை பண்டார போன்றோர் படைகளில் இருக்கும் வரையில் மனித உணர்வுகளும், கலாசார விழுமியங்களும், அப்பாவி மக்களின் நித்திய வாழ்க்கையும் என்றென்றும் பேணிப் பாதுகாக்கப்படும் அதேவேளை, வற்றையொட்டிய அவனது சத்தியவேட்கை சமாதியாகாது என்றும் நாம் நம்ப முடியும்....

வடக்கும், தெற்கும்" நாவலைத் தொடர்ந்து இவ்வாறான ஒரு விறுவிறுப்பான, வித்தியாசமான, துணிச்சலான நாவலைப் படைத்த ஆசிரியர் சோ.ராமேஸ்வரன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாடகம் அந்த மேடையில்.... (1997)

ரமணன் என்ற விமர்சகர் 18.10.1999ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

சுரேஷ், அவருக்கு கலியாண வாழ்க்கை எண்டால் என்னென்டே தெரியாது" என்கிறாள் நிருபா.

ஷீலாவிட்டை இருந்து எப்ப, எப்படி விடுதலை கிடைக்கும் எண்டு ஒவ்வொரு நாளா எண்ணிக் கொண்டிருக்கிறன்" என்கிறான் சுரேஷ்.

நான் ரேகாவை கலியாணம் கட்டுறதில என்ன பிழை?" எனக் கேட்கிறார் கிருஷ்ணராஜ்.

நான் உங்களைக் கைப்பிடிக்க விரும்புறன். ரேகா மூலம் கிடைக்காத சந்தோஷத்தை  உங்கள் மூலம் பெறத்துடிக்கிறேன்" என ஷீலாவுக்கு ஜெபநேசன் கடிதம் எழுதுகிறான்.

சுரேஷ் என்னை விட்டுட்டு போக நான் விடமாட்டன். அப்படி இருந்தும் அவர் என்னை விட்டுப் போனால் அதால ஏற்படுற வெற்றிடத்தை நான் நிரப்பமாட்டான்" என உறுதியாக சொல்கிறாள் ஷீலா.

நீங்க நினைக்கிற மாதிரி நாங்க புருஷன் பெஞ்சாதி மாதிரி வாழ்றதில எனக்கு இஷ்டமில்லை" என ரேகா வலியுறுத்துகிறாள்.

சுரேஷ் - ஷீலா, ஜெபநேசன் - ரேகா, கிருஷ்ணராஜ் - நிருபா

திருமணமான இந்த தம்பதிகளில் சிலர் தமது திருமண வாழ்வில் தொலைந்ததை" மாற்றுவழி" மூலம் தேட முற்படுவதையும், அது அவர்களை எங்கு கொண்டு சென்று நிறுத்துகிறது என்பதையும் மிக அழகாக, தத்ரூபமாக சோ.ராமேஸ்வரன் தனது இந்த நாடகம் அந்த மேடையில்......" என்ற நாவலில் விபரித்துள்ளார்.

"நாங்க எல்லாருமே ஒருவருக்கொருவர் புதிராயிருக்கிறம். அதேவேளை, கேள்விக்குறியும் கூட... மூண்டு சோடிகளும் மீண்டும் ஒண்டு சேரவேணும். இல்லாவிட்டால் பிரிஞ்சு, புதிய சோடியை கரம்பிடிக்க வேணும். எனவே, இந்த விசயத்தில் எல்லாரும் ஒருமித்த முடிவுக்கு வரவேணும்" என்கிறான் ஜெபநேசன்.

இப்படியே கதை செல்கிறது. வாசித்துப் பார்த்தால் தான் இதன் இனிமை புரியும். மறக்க முடியாத அனுபவம் கிட்டும்."

சிவபுரத்து சைவர்கள் (1998)

இந் நூலுக்கு நிறையவே விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

மதம் என்பது தனக்கென தனியானதொரு இயங்குதளத்தைக் கொண்டதல்ல. பல்வேறுபட்ட சமயம், இனம், சாதி என்ற சமூகக் குழுக்களுடன் உறவாடுகின்ற போது மதத்தின் தனித்துவம் பல்வேறுபட்ட பரிமாணங்கஙடாக மாற்றமுறுகிறது. தத்தமது மதம் தருகின்ற அனுபவங்களை அயலாருடன் பகிர்ந்துகொள்ளும் போது மத மாற்றங்கள் திட்டமிடப்பட்டும், திட்டமிடப்படாமலும் தனி மனிதருள் செயற்படத் தொடங்குகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களது தாய் மொழியாக தமிழ் மொழி இன்று காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே, இந்துக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவத் தொடங்கியதம் இம் மாற்றத்தை எதிர்த்து ஆறுமுகநாவலர் போன்றோர் சுதேசியத்தை வலியுறுத்தி இந்து மேலாண்மைத் தத்துவத்தைப் போதித்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.

இந் நிலையில் மத ஒழுக்கநெறிகளையும், தத்தமது மதங்களின் சமூகப் பெறுமானங்களையும் வலுப்படுத்த இயக்கரீதியாக செயற்படத் தொடங்கினார். அதன் வெளிப்படையாகவே தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நவீன இலக்கியத்தில் மதமாற்றம் தொடர்பான சர்ச்சைகள் நீண்ட விவாதத்திற்கு உட்பட்டு அவை இலக்கியங்களாகவும் பரிணமிக்கத் தொடங்கின. மதங்களுக்கும், ஆட்சி முறைகளுக்கும் இடையே நெருங்கிய உறவு காணப்பட்டதால் குறித்த மதத்தைச் சார்ந்து இயங்கவேண்டிய வில்லங்க நிலை அனேகருக்கு ஏற்பட்டது. இதனடியாக மதம் மாறியோருக்கும், மதம் மாற்றியோருக்கும் எதிராகப் பல்வகைப்பட்ட குரல்கள் ஒலித்தன. இத்தகைய நிகழ்வின் தொடர்ச்சியாகவே, சோ.ராமேஸ்வரனின் சிவபுரத்து சைவர்கள்" அமைந்துள்ளது.

இலங்கையில் இன்று இடம்பெறும் யுத்தத்தின் கோர நிகழ்வுகள், அதனடியாக மக்கள் அகதிகளாக்கப்படல் என்பவற்றை அடித்தளமாகக் கொண்டு நாவல் நகர்கிறது. மதமாற்றம் என்பது திட்டமிடப்பட்டு எவ்வாறு நலிந்த மக்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது என்பதை ஆசிரியர் தனது நாவலில் வெளிப்படையாகவே கூறிச் செல்கிறார்.

இவ்வாறு சூரியகுமாரி பஞ்சநாதன் 30.04.1999ஆந் திகதிய வீரகேசரியில் விமர்சனம் எழுதியுள்ளார்.

நிலாக்கால இருள் (2000)

2000 ஜூலை 30இன் தினகரன் வாரமலரில் லோரன்ஸ் செல்வநாயகத்தின் விமர்சனம் பின்வருமாறு அமைந்திருந்தது:

தாயின் வற்புறுத்தலினால் நிர்ப்பந்திக்கப்பட்ட பிரதீப் நிரோஷாவை விருப்பமில்லாமல் திருமணம் முடிக்கின்றான். திருமண வாழ்விலும் கூட தன் இளமையின் எதிர்பார்ப்புக்களை அனுபவிக்க முடியாமல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஜடமாக வாழ்கிறாள் நிரோஷா. எனினும், தன் உண்மை நிலையை அவளிடம் கூறிவிடுகிறான் பிரதீப். இதனை முன்கொண்ட சம்பாஷணைகளைச் சிறப்பாகப் புனைந்துள்ளார் நூலாசிரியர். அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகளா?” இது பிரதீப். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.இது நிரோஷா.

நீர் இரட்டைக் குழந்தைகளையும் இழந்த நிலையில்தானே இருக்கிறீர்?” என பிரதீப் கூற முற்பட அவன் தளர்ச்சியிலும் ஒரு நம்பிக்கையைக் கொண்டுள்ளதை அடுத்து வரும் வரிகள் இங்கிதமாக எடுத்துக் கூறுகின்றன.

தேனிலவுக் குளியலில் நனைந்து, தெவிட்டாத இரவுதனைக் கழிப்பதற்குக் கட்டிலில் அமர்ந்திருந்த போது நான் உன்னை உண்மையாகவே விரும்பவில்லை என்று காரணத்தோடு விளக்கும் பிரதீப், நிரோஷா சம்பாஷணைகள் இயற்கைக்கு முரண்பட்டாலும், கதையின் ஓட்டத்திற்குப் பொருந்துகின்றன.

யாழ்ப்பாணத்து மண் வாசனை, பெண்மை, பண்பாடு, இறுக்கம், தளர்வு இவைகள் அளவோடு  கையாளப்பட்டிருக்கின்றன. நடத்தைகளுக்கு இலக்கணம் கற்பிக்க முற்படும் இடங்கள் தவறி இடருகின்றன. ஆசிரியரின் எழுத்துத்துறை அனுபவம், அவர் பேனாவில் அவருக்கிருந்த காதல் எழுத்துருவில் வடிவெடுத்திருக்கும் போது ஒரு இனிய கதை பிறக்கிறது.

நாவலுக்கோ, சிறுகதைக்கோ ராமேஸ்வரன் புதியவரல்ல. கருவின் முதிர்ச்சியில் முற்றிய கதிராக தலைசாய்த்து நிற்கிறது அவரது எழுத்து அனுபவம்.

சிவபுரத்து கனவுகள் (2000)

இலங்கையின் சிரேஷ்ட எழுத்தாளர் சோ.ராமேஸ்வரனின் சிவபுரத்து கனவுகள் எனும் சமகால வரலாற்று நாவல் ஒன்று வெளிவந்துள்ளது. நூலாசிரியர் இதற்கு முன்னர் சிவபுரத்து சைவர்கள் என்ற நாவலைப் படைத்திருந்தமையும், வாசகர்கள் மத்தியில் அந்த நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த கற்பனைத்திறன் கொண்ட நூலாசிரியர் ராமேஸ்வரன் சிவபுரம் எனும் நகரொன்றைச் சிருஷ்டித்து, காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ற கதாபாத்திரங்களைக் கச்சிதமாக உருவாக்கி சிறப்பாக நாவலைப் படைத்திருக்கிறார்.

இலங்கையைச் சூழ்ந்துள்ள யுத்த மேகம் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை நாசூக்காகச் சொல்கிறது சிவபுரத்து கனவுகள்.

ராமேஸ்வரனின் கதைகள் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்குச் சற்றும் பங்கம் இழைக்காமல் அவரது பாணியில் கதை நகர்கிறது. இவர் எழுதுகின்ற சாதாரண சொற்கோர்வை வரிகள் எல்லாத் தரத்தாரையும் வாசிப்புக்கு ஈர்க்கும்தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 20.05.2001ஆம் திகதிய தினகரன் வாரமலரில் லோரன்ஸ் செல்வநாயகம் எழுதியுள்ளார்.

இதில் பின்குறிப்பாக இந்த விடயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். இந் நாவலைத் தொடர்ந்து மூன்றாவது பாகமாக சிவபுரத்து வெளிச்சம்" என்ற பெயரில் நாவலை பத்து வருடங்களுக்கு முன்னரேயே ராமேஸ்வரன் எழுதி முடித்துவிட்டார். ஆனால், ஏதோ காரணத்தினால் அதை இது வரை வெளியிடவில்லை.

கனகு (2003)நமது வாழ்நாளில் பல வகையான மனிதர்களை நாம் சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துமுள்ளோம். ஆனாலும், எந்த ஒருவரினதும் மனக்கிடக்கைகளை எவராலும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிவதில்லை. சிலர் திறந்த மனதுடனும், சிலர் மூடி மறைத்தும் தமது எண்ணங்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள், ஆசாபாசங்கள், மனிதாபிமானம் போன்ற உணர்ச்சிகள் நிறையவே இருக்கின்றன. இவை மனித  விழுமிய இயல்புகள். இவையற்றவர்கள் மனிதர்கள் என்று கூறப்படுவது ஏற்க முடியாததொன்றே. இவ்வியல்புகளை எத்தகைய துன்ப வேளையிலும் சமுதாய வரையறைக்குள் மீறாது, வாழ்க்கை என்ற கடலில் நீந்திச் செல்பவனே உண்மையான மனிதன். இவ்வாறான வைராக்கியம் நிறைந்த தூய உள்ளங்களின் புனிதமான பாதை தான் கனகு" என்னும் இந் நாவலின் அடித்தளம். என தனது உரையில் ராமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்

.யாழினி (2007)

யாழினி நாவலை ஒரு அரசியல் நாவலாகவே வகைப்படுத்த முடிகிறது. ஓரினம் இன்னோரினத்தின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் மதிக்கும் போது மனித சமத்துவம், சகோதரத்துவம், தோழமை என்பன வாழ்வில் முகிழ்க்கும். இதன் மூலம் இன முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி இடப்படும். நல்லதோர் விடிவு தேறும். இந்நாவல் சமுதாயத்துக்குக் கூறும் செய்தி இதுவே! இதையோர் எதிர்வு என்ற மட்டிலாவது வைத்து இந்நாவலை வரவேற்கலாம். இவ்வெதிர்வு மானுடத்தை மேம்படுத்துவதாக இருப்பதால் வாசகரது மனதைக் கௌவும்.

இது சமரசன் என்ற விமர்சகரின் கருத்தாகும். இது 09.08.2008ஆந் திகதிய வீரகேசரியில் வெளியாகியிருந்தது.

அக்கரைக்கு இக்கரை பச்சை (1995)

இலங்கையின் இலக்கியப் பரப்பில் நகைச்சுவைப் பரிமாணத்தின் அறுவடைகள் அரிதாகவே இருந்து வருகின்றன. நகைச்சுவையாக கருத்துக்களைக் கூறி சிந்திக்கவும் வைக்க முடியும் என்ற ரீதியில் எழுதியவர்களுள் சோ.ராமேஸ்வரன் குறிப்பிடக்கூடியவர். சமகால நிகழ்வுகளின் தாற்பரியமே எப்போதும் இவரது நகைச்சுவை எழுத்தின் அடிநாதமாக விளங்கும். சிக்கலான சங்கதிகளையெல்லாம் சிரிக்கவைத்தே கூறி, சிந்திக்கவும் வைக்கவல்ல ஆற்றல் ராமேஸ்வரனிடம் நிறையவே உண்டு.

இவ்வாறு வீரகேசரி வார வெளியீட்டில் புலோலியர் ஆ.இரத்தினவேலோன் குறிப்பிட்டுள்ளார்.

குறு நாவல்

நிழல் (1998)

இது ராமேஸ்வரன் எழுதிய ஒரேயொரு குறுநாவலாகும். வாழ்க்கையில் வெற்றியீட்டுவதும் தோல்வியடைவதும் வாழ்வின் ஒரு நியதியாகும். தோல்வியிலும் வெற்றியை ஈட்டலாம் என்பது ராமேஸ்வரனின் அபிப்பிராயமாகும். இதை ஆதாரமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார்.

மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள்

ராமேஸ்வரன் தமிழில் எழுதி சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்த உதுர சஹ தகுண" (1998), மணமாலிய வீ ஹெற்ற தவஸே" (2006) மற்றும் பண்டார சஹ சசி"  (2008) ஆகிய மூன்று நாவல்கள்

மணமாலிய ஹெற்ற தவஸ." என்ற நூல் எம்.டி.குணசேன அன்ட் கோ என்ற வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு, இரண்டாவது பதிப்பு 2009இல் வெளியிடப்பட்டது. இது இன்றல்ல நாளையே கலியாணம்" என்ற நாவலின் மொழிபெயர்ப்பாகும்.

பண்டார சஹ சசி" என்ற நாவல் ராமேஸ்வரனினால் வெளியிடப்பட்டதுடன், இது யாழினி" நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பாகும். இவ்விரு நூல்களையும் திஸ்ஸமஹரகமவைச் சேர்ந்த சரத் ஆனந்த மொழிபெயர்த்திருந்தார்.

உதுர சஹ தகுண" என்ற நூல் கொடகே சஹ சகோதரயோ என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. இது வடக்கும் தெற்கும்" என்ற நாவலின் மொழிபெயர்ப்பாகும். இதை பாலித குணரத்ன என்பவர் மொழிபெயர்த்திருந்தார்.

மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்புகள்

சிங்களம்

ராமேஸ்வரனின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு அவை மூன்று சிறுகதைத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிதாஸே வா ரலி" (1996), புண்ய பமி" (1998), திவ்ய உதேஸா திவி புதன்னோ" (2007) ஆகியன இத் தொகுப்புக்களாகும்.

ஆங்கிலம்

ஆங்கிலத்தில் Air of Freedom என்ற தொகுப்பு 1996இல் வெளியிட்டப்பட்டது.

சிறுகதைத் தொகுப்பு

ராமேஸ்வரனின் 12 சிறுகதைத் தொகுப்புகள் தமிழில் 8, சிங்களத்தில் 3, ஆங்கிலத்தில் 1 என வெளியிடப்பட்டுள்ளன.

சுதந்திரக் காற்று (1994)

இது ராமேஸ்வரனின் வெளியிடப்பட்ட முதலாவது சிறுகதைத் தொகுப்பு. இத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒன்றைத் தவிர யாவுமே வீரகேசரி வார வெளியீட்டில் வெளியானவையாகும்.

பஞ்சம் (1995)

இத் தொகுப்பில் தண்ணீர், பஞ்சம், ஜீவகாருண்யம், சனப்பெருக்கம், தாய்ப்பாசம், சமூக விழுமியம் போன்ற பரந்துபட்ட கருப்பொருள்களை மையமாக வைத்து ஒன்பது சிறுகதைகள் வெளியிடப்பட்டுள்ளன. ராமேஸ்வரனுக்கு அதிகளவு புகழைத் தேடிக் கொடுத்த சிறிபாலபுர மாத்தையா", “ஒரு கப்டனும் ஒரு பிரமாணச் சிறுவனும்" என்ற இரு கதைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புண்ணிய பமி (1997)

இந்நூல் பதினொரு கதைகளை உள்ளடக்கியிருந்ததுடன், பெண்மை, இனக்குரோதம், கலாசாரம், மனிதாபிமானம், மனிதப் பெறுமதிகள் போன்ற கருப்பொருட்களை சிறுகதைகள் மையமாகக் கொண்டிருந்தன.

புதிய வீட்டில் (2000)

2000இல் வெளியிடப்பட்ட இந் நூல் சமகாலப் பிரச்சினைகள் - குறிப்பாக கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக எமது நாட்டு மக்கள் அனைவரையும் பாதித்த இனப்பிரச்சனையை கருப்பொருளாக வைத்து புனைந்த கதைகளும், வேறு கருப்பொருளிலான கதைகளும் என ஏழு கதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போராட்டம் (2001)

சமகாலப் பிரச்சனைகளைக் கருப்பொருளாக வைத்து எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகள் இத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு விடியல் பொழுதில் (2006)

ஏழு சிறுகதைகளை உள்ளடக்கியுள்ள இத் தொகுப்பு நமது நாட்டு மக்களை ஆட்டிப்படைக்கும் அன்றாடப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து கதைகள் எழுதப்பட்டுள்ளன.

முகவரியைத் தேடுகிறார்கள் (2004)

1994க்கும், 2004க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களினுள் ராமேஸ்வரன் எழுதி, வெவ்வேறு போட்டிகள் பரிசுகளை ஈட்டிய பத்து சிறுகதைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2004இல் வெளியிடப்பட்ட இந் நூலுக்கு 2005இல் அரச இலக்கிய விருது கிட்டியது.

இந் நூலையிட்டு சுபத்ரா மணியன் (வீரகேசரி), கே.எஸ்.சிவகுமாரன் (Daily News)> லோரன்ஸ் செல்வா (தினகரன் வாரமஞ்சரி) ஆகியோர் மிகவும் ஆழமான விமர்சனங்களை எழுதியுள்ளனர்.

செல்வத்துடனும், சீரும் சிறப்புமாகவும் வாழ்ந்த நம் தமிழர்கள் நாடோடிகளாய் புலம்பெயர்ந்து, அவலமான வாழ்வில் கலாசாரம் துறந்து, இன அடையாளம் கலைந்து, கலைக்க முடியாத ஒப்பனையாய் வாழுகின்றதற்கான காரணங்களை துல்லியமாக ஒரு வரலாற்று முக்கியத்துவத்தை கீறிச் செல்லும் கதை மாந்தர்கள் தான் எல்லா கதைகளிலும் உலாவருகிறார்கள். இதுவே, இந்த சழுத்தாளரின் வெற்றி. நமது சமூகத்தை மதிக்கவும், அதன் தாற்பரியத்தை உணர்ந்து கொள்வதற்கும், சமூக அவலத்தை மீள்பரிசீலனை செய்வதற்கும் இக்கதைகள் தூண்டுகின்றன.

இந்த சிறுகதைத் தொகுப்பு ஈழத்து இலக்கிய உலகிற்கு கிடைத்துள்ள ஒரு தனித்துவமான கதைக் களஞ்சியம் எனலாம். இது போன்ற மேலும் பல சிறுகதைகளை எழுத்தாளர் எழுத வேண்டும். அவை நம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என 20.05.2005ஆம் திகதிய வீரகேசரியில் சுபத்ரா மணியன் குறிப்பிட்டுள்ளார்.

கலாசார விலங்குகள் (2007)

இத் தொகுப்பு வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களையும், எமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் இடம்பெறும் சம்பவங்களையும் வைத்து 12 சிறுகதைகளை உள்ளடக்கியிருந்தது. இச்சிறுகதைத் தொகுப்பு இடப்பெயர்வு, புலப்பெயர்வு, கலாசாரம், பண்பாடு, பண்பாட்டு மாற்றம், மண்வாசனை, அன்றாட வாழ்வின் நெளிவுசுளிவுகளை கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது.

நாடகம்

கானல் நீர் கங்கையாகிறது

ஒரு சமூக நாடகத்தையும், இரு நகைச்சுவை நாடகங்களையும் உள்ளடக்கிய இந்நூல் 2006இல் வெளியிடப்பட்டது. இம் மூன்று நாடகங்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பப்பட்டிருந்தன.

இந் நூலுக்கு 2007இல் அரச இலக்கிய விருது கிட்டியது.

கறுப்பும் வெள்ளையும்

பாடசாலைகளில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளில் மேடையேற்றப்படலாம் என்ற நோக்கில் இந் நூல் வெளியிடப்பட்டதாக ராமேஸ்வரன் கூறுகிறார். மொத்தமாக 17 சிறிய நகைச்சுவை நாடகங்கள் உள்ளன. சகல நாடகங்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கதம்பம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டன.

சிறுவர் இலக்கியம்

தமிழில் 6 நூல்கள், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் தலா ஒரு நூல் என எட்டு நூல்களை 1997க்கும் 2007க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ராமேஸ்வரன் வெளியிட்டார். விபரம் வருமாறு:

படித்து மகிழ பயன்மிகு பத்துக் கதைகள் (1997),திசை மாறிய பாதைகள் (1998),சதியை வென்ற சாதுரியம் (2001),அந்த அழகான ப10னை (2002),வாழ நினைத்தால் வாழலாம் (2005),மவ ரக்ககென் வீர புத்தா (சிங்களம்) (2006), “That Beautiful Cat”  (2006), தாயைக் காத்த தனயன் (2007).

இவற்றில் திசைமாறிய பறவைகள்" மற்றும் வாழ நினைத்தால் வாழலாம்" ஆகிய நூல்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின் இலக்கிய நூற்பரிசு கிட்டியது.

மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலம்/தமிழ் நூல்கள்

ஆங்கிலத்தில் இருந்து மூன்று நூல்களை ராமேஸ்வரன் தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். துயரத்தில் வருந்துவது ஏன்?" என்ற நூல் சிறுவர் இலக்கியத் துறை சார்ந்தது. இது 1999இல் வெளியிடப்பட்டது. மற்றிரு நூல்களான ஆரோக்கியமான கண்கள் செயற்பாட்டு நூல் (2001) மற்றும் தேகாரோக்கியத்திலும், நோயிலும் விற்றமின் A பற்றிய SIGHT AND LIFE வழிகாட்டி நூல் (2002) ஆகியன மருத்துவ விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவையாகும்.

சிங்களத்தில் வெளியான நூல்களுக்கான விமர்சனங்கள்

சிங்களத்தில் வெளியான ராமேஸ்வரனின் நூல்களுக்கு சிங்களப் பத்திரிகைகளில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவை மொழிபெயர்க்கப்படாததினால் இங்கு வெளியிடப்படவில்லை.

ஆங்கிலதமிழ் மொழிபெயர்ப்பில் பாண்டித்தியம் பெற்ற ராமேஸ்வரன் இதுவரை எண்ணிக்கையற்ற அறிக்கைகளையும், நூல்களையும், விளம்பரங்களையும் மற்றும் பல்வேறுபட்ட ஆவணங்களையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இவர் ஆத்தியடி ராமேஷ், எஸ்.ராமேஷ், ராமேஷ், புஷ்பா தங்கராஜா, ஆத்தியடியூரான், செல்வி ராமேஸ்வரன் மற்றும் ஆர்.பிரசன்னா ஆகிய புனைப்பெயர்களிலும் தனது ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ராமேஸ்வரன் தனது நூல்களில் ஒரேயொரு நூலுக்கு மட்டுமே (சிவபுரத்து சைவர்கள்) வெளியீட்டு விழாவை நடத்தினார். இது 04.04.1999ஆந் திகதி கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பதவிவகித்த எஸ்.தில்லைநடராஜாவின் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுகத்தை தினக்குரல்" பிரதம ஆசிரியராகவிருந்த ஆர்.சிவநேசச்செல்வனும், மதிப்புரையை எழுத்தாளர் செ.யோகநாதனும், விமர்சனத்தை எழுத்தாளர் சூரியகுமாரி பஞ்சநாதனும் ஆற்றினார்கள். வரவேற்புரையை புலோலியர் ஆ.இரத்தினவேலோனும், நன்றியுரையை ராமேஸ்வரன் பிரசன்னாவும் நிகழ்த்தினர்.

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட விஞ்ஞான முரசு" என்ற சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் ராமேஸ்வரன் விளங்கினார். தற்போது கொழும்பு கதிர்காமத் தொண்டர் சபையின் பொருளாளராக் கௌரப் பணி செய்கிறார்.

2008ஆம் ஆண்டின் பின்னர் ராமேஸ்வரனின் நூல்கள் எவையுமே வெளியிடப்படவில்லை. ஏற்கனவே எழுதிவைத்துள்ள சிவபுரத்து வெளிச்சம் என்ற நாவலையும், வீரகேசரி வார வெளியீட்டில் வெளியான மனம் என்னும் மேடையில் நாவலையும், இது வரை வெளியிடப்படாத 10 சிறுகதைகளை உள்ளடக்கி ஒரு சிறுகதைத் தொகுப்பையும், வடக்கும் தெற்கும் நாவலின் இரண்டாம் பாகத்தையும் வெளியிடும் நோக்கத்தில் இருக்கின்றார்.

Related Articles