தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்!

மனச்சாய்வு இல்லாத ஓர் விமர்சகனை தமிழிலக்கியத்தில் காண்பது அபூர்வம். இது அபிலாசையாகிப் போய்விடக் கூடியதாகத்தான் ரசனை வேறுபாடுகள் மனித இயல்பாக இருக்கிறது. இலக்கிய ஆய்வாளன் என்பவன் முடிவுகளை நோக்கி நகர்பவன்தான். வாசிப்பி னூடாக கொள்முதல் செய்த முடிவுகளுக்கான சான்றாதாரக் குறிப்புக்கள், அடிக்கோடுகளுக்காக அலையும் ஒருவனைத்தான் இலக்கிய ஆய்வாளனாக இதுவரை நான் கண்டு வருகிறேன். ஆக, வாசக சாத்தியத்தில் இருந்துதான் ரசனையின் பாற்பட்ட தேடல், விமர்சக கருத்துக்களை பதிவு செய்தலாக மாறும். ஒரு வாசகன் - அவனை தமிழக, ஈழ பாகுபாடற்றுப் பார்த்தாலும் - தான் கற்று, உள்வாங்கிய படைப்புக்களின் பொதுப்போக்கு, எதிர்ப்போக்கு பற்றிய தெளிவுகளை வெளியிட முழுஉரிமை உடையவன் ஆகிறான். வாசகன் என்ற சக்கரத்தில்தானே படைப்புக்கள் பயணிக்க முடியும்.

வேதசகாயகுமாருடைய கட்டுரைக்கு பல ஆண்டுகள் முன்பாகவே ஈழத்துத் தமிழிலக்கியம் குறித்து டாக்டர். மு.வரதராசன் எழுதியிருக்கிறார். அப்போதும் வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு. மு.வரதராசனின் கட்டுரையில் செ.கணேசலிங்கன் உச்சமாகப் பதிவு பெற்றிருக்கிறார். வேதசகாயகுமாரின் கணிப்பு வலயத்திற்குள் செ.கணேசலிங்கனே இல்லை. இது நியாயமேயாயினும் அவரவர் மனச்சாய்வும், வாசிப்பு விசாலமும்தான் காரணம் என்பது சொல்லாமலே புரியும்.

யாழ்ப்பாணத்துக் குடும்ப உறவுகள், வாழ்வியல் நெறிமுறைகளில் நேரடிப் பரிச்சயம் உள்ள ஒரு ஈழவாசகனுக்கு சாதாரணமான கதையாகத் தோன்றக்கூடிய மு.தளையசிங்கத்தின் கோட்டை சிறுகதை, வேதசகாயகுமாருக்கு அசாதாரண உச்சமாக தோற்றி ஈழச் சிறுகதை வரலாற்றுப் போக்குக்கு பிரிகோடாக வைக்கப்படுகிறது. இதே புதுயுகம் பிறக்கிறது சிறுகதைத்தொகுதியில் உள்ள பிறத்தியாள், தேடல் போன்ற சிறுகதைகள் ஈழவாசகனுக்கு முக்கியமானதாகத் தோன்ற வல்லிய காரணங்கள் சாத்தியமாக இருக்கின்றன. (மேற்படி புதுயுகம் பிறக்கிறது தொகுதியை 17 ஆண்டுகளுக்கு முன் படித்த ஞாபக பலத்தில்தான் இதைக் கூறுகிறேன்.) கோட்டை கதையின் சிறப்புக்கு அக்கதை நாயகன் தியாகு விளாடிமிர் நபக்கோவின் லொலிடா நாவலைப் படிப்பதும், ஆன்ம விடுதலை பற்றி சிந்திப்பதும் வேதசகாயகுமாரின் கவனிப்புக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ஏனெனில் கோட்டை சிறுகதைக்கு இணையாகவோ, மேலாகவோ கு.ப.ராவின் சில சிறுகதைகளை எம்மால் நினைவுகூர முடியுமல்லவா?

தமிழிலக்கிய விமர்சனமென்பதை பெயர்ப்பட்டியல் வாயிலாக பயின்றுவரும் மந்தைத்தனத்திற்கும் நாம் ஆட்பட்டிருக்கிறோம். இத்தொண்டூழியத்தை தொடங்கிவைத்த உழவாரப்படையாளி யார் என்று நானறியேன்! பெயர் விடுபடல் அல்லது நிராகரிப்பு என்ற கோபாவேசத்தில் இருந்து எதிர்வினைகள் சரமாகக் கிளம்புகின்றன. இந்த சரமழைக்குள் இலக்கியக்கருத்துக்கள் அடியுண்டு ஓரம்போய்விடுகின்றன. இவ்வகை (அ)தர்மயுத்தத்திலும் வாசகனுக்கு நன்மைகள் கிடைக்கவே செய்கின்றன. அவன் படிக்கவேண்டிய பட்டியல் மேலும் விரிகிறது.

வேதசகாயகுமாரின் ஈழத்தமிழ்ச் சிறுகதை தொடர்பாக எழுதப்பட்ட எதிர்வினைகளைப் படித்தபோது எனக்கு எழுந்த சந்தேகம் ஒன்றை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன். மேற்குறிப்பிட்ட கட்டுரை ஒரு இந்தியத்தமிழ் வாசகனின் பார்வையில் பதிவுசெய்யப்படுவதாக கட்டுரையாசிரியர் பாதுகாப்புவலயத்தை சிருஸ்டித்து விட்டார் எனினும் கட்டுரைப் போக்கில் அவர் சிறந்த தேடலுள்ள வாசகனென்ற பாதையில் தவறவிடப்பட்ட ஈழ, புகலிட பெண்படைப்பாளிகளைப் பற்றி தேவகாந்தன், வ.ந.கிரிதரன் கூட கவனிப்புச் செய்யவில்லை.

குறமகள், யோகா பாலச்சந்திரன், கோகிலா மகேந்திரன், பவானி ஆழ்வாப்பிள்ளை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இன்றைய தலைமுறையில் ஈழத்திலும் புகலிடத்திலும் சிறுகதைகள் எழுதும் பல முக்கியமான படைப்பாளிகள் என தவற விடப்பட்டுள்ளவர்களது சிறுகதைகள் விமர்சக கருத்துருவங்களை ஏற்படுத்தக் கூடிய படைப்பாளிகளேயாகும். இவர்களை கருத்தில் எடுக்காமல் ஈழச்சிறுகதைகள் பற்றி விமர்சிக்க முடியாது என்பதே எனது திண்ணம்.

- ஜெயரூபன் (மைக்கேல்)


- ஜீவன்.கந்தையா
Quelle - பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30

Related Articles