சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம்

எனது முன்னைய அபிப்பிராயம் தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கடிதம் முதல் வாசிப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் விடயம் வாஸ்தவமானது. ஈழத்து விமர்சனத்துறை இன்னும் விரிவடையவில்லை. பேரா. கைலாசபதி கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் இருந்துகொண்டுதான் படைப்புக்களை அளவிட்டார். அவரது ரசனையின் உண்மைகள் வேறாக இருந்ததற்கு ஒரு உதாரணங் குறிப்பிடுவார்கள். அவரது சகவகுப்பு நண்பனான யு.ஆர். அனந்தமூர்த்தியின் சமஸ்காரா நாவலை வெகுவாகப் புகழ்ந்து நண்பர்கட்குக் கூறிய கைலாசபதி, அந்நாவல் பற்றி எழுத்தில் எங்கணும் ஒரு வரி எழுதவே இல்லை. காரணம், அந்நாவல் வர்க்கம், மார்க்சிசம் பற்றி எதுவுமே பேசவில்லை என்பதுதான். இவ்வாறாக இலக்கியம் ஏற்படுத்தும் உள்மன விகாசங்களை அறுத்து, இயந்திரத்தனமாக விமர்சனத்தைக் கையாண்டவர் கைலாசபதி. கா.சிவத்தம்பியோ வேறொரு கோணம். அவர் இலக்கியப் படைப்புக்களை தான் கற்ற சமூகவியல் தத்துவத்துடன் உரசி கோட்பாடுகளாகக் குறுக்கினார். உயிரற்ற வரைவிலக்கணங்களைத் தேடி படைப்புக்களைப் பார்த்தார். சிவசேகரம் தானொரு கவிஞராக இருந்தும் பிற இலக்கியப் படைப்புக்குள் அறிவித்தல்களையும், கோசங்களையும் தேடுவதில் கண்ணைக் குத்தி, அது இல்லாதபோது நக்கலையும், கேலியையும் பெய்து விமர்சனங்களை வக்கிரப்படுத்தினார். இவர்கள் எல்லோரிடமிருந்தும் புறந்து நிற்பவர் எம்.ஏ. நு•மான் ஒருவர்தான். அவர்தான் நம்பிக்கைக் குரியவர். ஆரம்பத்தில் கைலாசபதியின் அடியாகக் கிளம்பி இன்று தனக்கேயுரித்தான விமரிசனப் பார்வையை வகுத்துக் கொண்டுள்ளார். ஈழத்து விமர்சனத்துறைக்குள் புதிதாக வந்த செல்வி திருச்சந்திரன் போன்றோரை நான் இன்னும் படிக்கவில்லை. படிக்காதவரை கருத்து இல்லைத்தானே.

ஜெயமோகனோடு உடன்படமுடியாத விசயமென்னவென்றால் வெறும் அழகியல்ரீதியான விமர்சனமொன்று இருப்பதாக அவர் வாதிடுவதுதான். ஒரு இலக்கியப் படைப்பை முற்கூட்டிய திட்டங்கள், கோட்பாடுகள், கத்தி, கடப்பாரை அலவாங்குகள் போன்ற ஆயுதங்களுடன் அணுகுவதை சிறந்த படைப்பாளியாகிய ஜெயமோகனே அங்கீகரிக்கமாட்டார் என நினைக்கிறேன். குறித்த படைப்பின் மீதான அழகியல் அம்சங்களை காரணக்கூறுகளுடன் எடுத்தாயும்போது ஏலவே அம்மொழிக்குரித்தான படைப்புக்களின் விழுமியங்களையும் மனது கோர்த்துக்கொள்ளும். ஆகவே அது ஒரு வரலாற்றுரீதியான கணிப்புக்கு அண்மித்ததாக அமையும். ஆக, வரலாற்றுரீதியான தரஅடுக்குகளை கணித்துத்தான் அழகியல்ரீதியான விமரிசனமே உருவாகிறது என்று நினைக்கிறேன். இதற்கு நேர்மாறான விதத்தில் மு.தளையசிங்கம் வரலாற்றுரீதியான பார்வையோடு தனது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி(தலைப்பே சான்று) என்ற நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார். மு.தளையசிங்கத்தின் படைப்பு மனம் அழகியலுக்கு அதிக அக்கறையைக் கொடுத்ததன் விளைவு, வரலாற்றுரீதியான விமர்சனத்தின் புதிய வார்ப்பாக அவரது பார்வை நிலைத்தது. (இக்கருத்தை மறுப்பவர்கள் தயவுசெய்து மு.தவின் மேற்படி நூலைப் படித்தபின் விவாதித்தல் சாலும்) மு.தவின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி கட்டுரை கணிப்புக்கெடுக்கும் காலத்தில்தான் தேவகாந்தன் குறிப்பிட்டதுபோல ஈழத்து இலக்கியத்தில் சொற்காமத்தின் புயல் அடித்தது. யோ.பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன், எஸ்.பொ. (எஸ்.பொ.வில் மு.தவிற்கு மனச்சாய்வு உண்டு) ஈறாக சொல்வித்தையே இலக்கியவித்தையாக மயங்கியபோது மு.தளையசிங்கம் வாழ்க்கை தொடர்பான தேடலும், அழகிய நகலெடுப்புமான படைப்புக்களின் தேவை குறித்து வினவினார்.

மற்றும், வேதசகாயகுமாரின் ஈழத்துச்சிறுகதை விமர்சனக் கட்டுரை தொடர்பாக நான் எழுதிய கடிதம், மறுத்தல் ஒன்றையே குறியாகக் கொண்டபோன்ற பாவனையை ஜெயமோகனின் கடிதம் சுட்டுகிறது. உண்மையில் கரிசனவயப்பட்டு, போதாமைகளைக் குறிப்பிடுவது ஒரு வாசகனின் கடமையல்லாது வேறென்னவாம். சும்மா வாசித்து சமன் சற்றுங் குலையாமல் தேமேயன்று இருப்பது எவ்வகை வாசகத்தரம் என்றும் எனக்கு விளங்கவில்லை.

வேதசகாயகுமார் ஈழத்துச் சிறுகதையின் போக்கைக் கணிப்பதற்கு தனது மனவிருப்பமான இலக்கியப் படைப்புக்களையே சான்றாக எடுத்துள்ளார். இது ஒரு நல்ல ஆய்வுக்கான போக்காக எனக்குத் தோன்றவில்லை. ஒரு எடுகோளைத் தரலாம் என நினைக்கிறேன்.

போரெதிர்ப்பு மட்டுமே கருவாகத் தெரிவுசெய்து வட்டார வழக்கில் கதைகளை எழுதும் சக்கரவர்த்தியின் படைப்புக்களை விமர்சனத்திற்கு எடுத்துள்ள வேதசகாயகுமார் தேசியவிடுதலையின்(?) இன்றியமையாத தேவை, அதற்குள் ஆலோல்படும் இடர்கள் குறித்து எழுதப்பட்ட போராதரவாளர்களான படைப்பாளர்களின் படைப்புக்களைக் கணிப்புக்கெடுக்க முயன்றதாகத் தெரியவில்லை. இதே போலத்தான் ஈழத்து பெண் படைப்பாளிகளும் விடுபட்டுள்ளனர். அவர்களது கவனிப்பும், தேவைகளும், சிந்தனைகளும் வேறாக இருக்கும். சிலவேளை பெண்படைப்பாளர்களிடம் ஆன்மீக உச்சமும், தேடலும் இல்லாமல் இருக்கலாம் ஏனெனில் அவர்கள்தானே நிஐவாழ்க்கையை முதலில் எதிர்கொள்பவர்கள்? விடுபடலைக் குறிப்பிடுவது பிழையாகக் கணிக்கப்படலாகாது என்று மீண்டும் ஒரு தடவை ஜெயமோகனுக்குக் கூறிக் கொள்கிறேன்.

கடைசியாக பட்டியல் தாத்தா க.நா.சு அவர்கள் ஒரு நல்ல இலக்கிய விமரிசகனுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள் என்ன என்று எழுதியுள்ளதை கீழே தருகிறேன்.

இலக்கிய விமரிசகனுக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் இதுதான்: பற்றுக்களை வளர்த்துக்கொள், ஒன்றல்ல, நு¡றல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம், லட்சம் என்று பற்றுக்களை வளர்த்துக்கொள். பார்ப்பானுடைய நோக்கையும், அதற்கெதிர்மாறானதாக இன்று கருதப்படும் பார்ப்பானல்லாதவனுடைய நோக்கையும் புரிந்து செரித்துக்கொள்ளக் கற்றுக்கொள். அதேபோல பண்டைநோக்கையும், இன்றைய நோக்கையும், கம்யூனிஸ்டை எதிர்ப்பவனுடைய நோக்கையும் அறிந்துகொள்ள நிதானம் தவறாமல் அநுபவிக்கப் புரிந்துகொள். இப்படிப் பற்றுக்களை வளர்ப்பதே இலக்கிய விமரிசகனின் தகுதியை வளர்க்கும். இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் சாட்சிபூர்வமாக நிற்பதைத்தான் தன் இலக்கிய விமரிசனத்திற்கு தாரமாகக் கொள்ளவேண்டும் இலக்கிய விமரிசகன். பற்றறுத்துக்கொள்வது சாத்தியமல்ல- பற்றை வளர்த்துக்கொண்டு, இலக்கியத்தை ஆயிரம் கோணங்களிலிருந்து ஒருங்கே பார்த்து அநுபவிக்கத் தெரிந்தவன்தான் நல்ல இலக்கிய விமரிசகன்.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- ஜீவன்.கந்தையா
Quelle - பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30

Related Articles