இணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது?

ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது?

இனி வரும் காலங்களில் இணைய இதழா, அச்சுப் பதிப்பா எது முன்னிலையில் நிற்கப் போகிறது? எது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறப் போகிறது?

இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் "பதிப்பாகத்தான் வரவேண்டும்" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.

இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாமலேயே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களிடம் எழலாம். அந்த எத்தனையோ பேர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியே அடுக்காகப் பல கேள்விகள் உள்ளன.

ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலை நிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.

ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. அவன் தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அதன் படைப்பாளிகள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அவைகளை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?

தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 15ஆண்டுகளாக உலா வந்த பூவரசு இப்போது தனது 16வது ஆண்டில் சிறிய தளர்ச்சியையும், ஒரு வித களைப்பையும் கண்டிருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

1991 இல் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. ஐரோப்பிய அவசரத்தில், புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் பூவரசு 16வருடங்களைத் தொட்டிருப்பது ஒரு சாதனையே. இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகையின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.

அதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறியதில்லை.

புலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.

இம்முறை நான் இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பூவரசின் தளர்ச்சியும், களைப்பும் மட்டுமல்ல. இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனமுந்தான்.

இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி.புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இவைகளுக்குள் சற்று அதிகமான ஈர்ப்பைத் தந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம். இது ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதை ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அந்த உரையாடலின் போதுள்ள இளையோரின், ஏன் வயதானோரின் மனநிலைகள், கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.

பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே "சட்" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

பூவரசு தொடர வேண்டுமென்றால், அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். தொடர்ந்து வருவார்களா? ஆதரவைத் தொடர்ந்தும் தருவார்களா?

இணைய இதழ்கள், தொலைக்காட்சிகள் போல அதிவேகமாய்ச் செய்திகளை மூலை முடுக்குகள் எல்லாம் பாய வைக்கின்றன. இன்பமோ, துன்பமோ எதுவாயினும் உடனடியாக அறியவும், உணரவும் ஏதுவாகின்றன. அச்சுப்பதிப்புகளால் அது முடிவதில்லை. அதுவும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் போரும், புலம் பெயர்வும் மிகவும் ஐதாக, உலகம் பூராவும் தூவி விட்ட நிலையில் ஒரு அச்சுப்பதிப்பு பலரையும் சென்றடைவது என்பது அவ்வளவு சாத்தியமான காரியமல்ல. ஆனாலும் என்றைக்கும் ஒரு ஆவணமாக பத்திரமாக எம்மோடு கூட இருக்கப் போவதும், நினைத்த போதெல்லாம் எந்த நிலையில் இருந்தும் நாம் ஆசுவசமாகப் படிப்பதற்கு ஏதுவானதும் ஒரு அச்சுப்பதிப்பே. ஒரு அச்சுப் பதிப்பைப் படிப்பதில் உள்ள அலாதியான சுகம்; இணைய இதழில் ஒருபோதும் வந்து விடாது. இருந்தும், வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால், இணைய இதழ்கள்தான் வாழும் என்பது போன்றதான ஒரு அச்சம் கலந்த பிரமை ஏற்படுகிறது.

சந்திரவதனா
17.8.2006

 

Post a comment On: Manaosai


paarvai said...

என்ன தான் சொன்னாலும்; புத்தகமாகப் படிப்பதில் அலாதியான சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன்.இது என் சொந்தக் கருத்து.
யோகன் பாரிஸ்


 
 
Chandravathanaa said...

நன்றி யோகன்.
புத்தகமாகப் படிப்பதில் அலாதியான சுகம்.
அதை நானும் உணர்கிறேன்.


 
 
chinthamani said...

புத்தகங்கள் எத்தனை பிரசுரமாகின்றனவோ, அதிலும் சில பகுதியே படிப்பவர்களைச் சென்றடைகிறது. இணையத்தளங்கள் பல்கோடி மக்களால் பார்வையிடப் படுகிறது.
ஒப்பீடு செய்தால் இணையத்தளங்களில் வெளியாகும் சங்கதிகள் மிக வேகமாகப் பலரிடம் செல்கிறது.

அச்சுப்பதிப்பாக புத்தகத்தைக் கையில் வைத்து வாசிப்பது யோகன் குறிப்பிட்டது போல அலாதி சுகமானது. எப்போதும் பதிப்பாக இருக்கப் போவது. எப்போதும் கையில் வைத்திருக்கக் கூடியது. ஒப்பீடு செய்தால் ஒரு வாசகனால் அதிகம் நேசிக்கப் படுவது அச்சுப் பதிப்பு.


 
 
சின்னக்குட்டி said...

அச்சு பதிவை கோயிலை,குளத்திலை தோட்டத்திலை பஸ் ஸ்ராணடிலை ரயிலிலை.. எங்கங்கை ஹாயாக இருக்கிற இடத்தில் எல்லாம் படிச்க்காலாம... அச்சு பதிவு தான் எனது சொய்ஸ்...


 
 
Chandravathanaa said...

சிந்தாமணி, சின்னக்குட்டி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

 
 
 
இலவசக்கொத்தனார் said...

நாவல்கள் மற்றும் கதைகள் அச்சுப் பதிப்பில் இருந்தால் நமக்கு தேவைப் படும் நேரத்தில் தேவைப்படும் இடங்களில் படிக்கலாம்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் படிக்க வேண்டிய தகவல் இணைய இதழாக இருந்தால் அனேகம் பேரை விரைவில் சென்றடைய ஏதுவாக இருக்கும்.

இன்றைய பல வார மாத இதழ்கள் இவ்வகையைச் சார்ந்தவைகளே.


 
 
Sivabalan said...

நல்ல தலைப்பு.

நன்றாக எழுதியுள்ளீர்கள்..


எனது ஆதரவு அச்சுகே


 
 
மலைநாடான் said...

தகவலுக்கு இணையமும், ஆவணத்திற்கு அச்சுப்பதிப்பும், சிறந்தது என்பதே எனது அபிப்பிராயம். அதே வேளை புலத்தில் குறிப்பிட்ட வாசகர்களை மட்டும் கொண்டிருக்கும் ( படைப்பாளிகளே வாசகர்களாக இருக்கும்) சஞ்சிகைகள், இணையத்தை தேர்வு செய்வது அவற்றின் ஆயுளை நீடிக்கும். ஆனால் இணையத்தில் பக்கம்பக்கமாக எழுதுவதோ வாசிப்பதோ நம் ஆயுளை விரைவில் முடிக்கும். நல்தோர் ஆய்வுப்பதிவு.
நன்றி!


 
 
சந்திப்பு said...

நவீன யுகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான். அதே சமயத்தில் இணைய இதழ்கள பவலான மக்களச் சென்றடைந்தாலும், அச்சிதழ் தவிர்க்க முடியாதது. இணை இதழில் வாசிப்பவர்களின் மனநிலை ஒரே மாதிரி அமைவதில்லை. அது ஆடு மேய்வது போல்தான் இருக்கிறது. எனவ அச்சிதழின் வளர்ச்சியும் இதன் ஊடே சேர்ந்து வளர வேண்டும். இன்னும் இன்டர்நெட் சென்றடையாத பகுதிகள் ஏராளம். அதேபோல் எழுத்தறிவும் இல்லாத மக்கள் ஏராளம். நல்ல இதழ்களும், நல்ல கருத்துக்களும் இருக்குமானால் அதன் வெற்றி தவிர்க்க முடியாதது.


 
 
Chandravathanaa said...

இலவசக் கொத்தனார், சிவபாலன், மலைநாடான், சந்திப்பு
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

உங்கள் கருத்துக்களும் மிகவும் ஏற்புடையதான கருத்துக்களே.
இணைய இதழ்கள் என்றால் என்ன பதிப்பு இதழ்கள் என்றால் என்ன இரண்டுமே
வெவ்வேறு விதமான நன்மை தீமைகமளைக் கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று ஆழமாக
ஆராய்ந்து நோக்க வேண்டிய விடயம். வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால்,
இணையஇதழ்கள்தான் வாழும் போல் தோன்றுகிறது.


 
 
villandam said...

நல்ல பதிவு.


 
 
டிசே தமிழன் said...

சந்திரவதனா, இரண்டு ஊடகங்களுக்கு தங்களுக்குரிய அனுகூலங்கள்/பிரதிகூலங்களைக் கொண்டிருக்கின்றன என்றே நம்புகின்றேன். இங்கே பின்னூட்டங்களில் பலர் குறிப்பிட்டமாதிரி, படைப்புக்களை அச்சுப்பதிப்பில் வாசிப்பதில் இருக்கும் சுகம் அலாதியானது. இணையம் குறுகிய காலத்தில் மிகப்பெரும் பாய்ச்சலை நடத்திக்கொண்டிருந்தாலும், அச்சுப்பதிப்பு காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து கூடவே வருமென்றே நம்புகின்றேன்.
.......
/இவைகளுக்குள் இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம் ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதைப் ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாக இரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அப்போதுள்ள இளையோரின் ஏன் வயதானோரின் மனநிலைகள் கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது./

இந்தக் கதையை இணையத்தில் வாசித்தாயும் நினைவுண்டு (கதையின் முக்கியபாத்திரத்துக்கு நோய் வந்து வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பது...என்றால் நான் வாசித்த கதையும் நீங்கள் குறிப்பிடும் கதையும் ஒன்றே நினைக்கின்றேன்). ஆசிரியர் அழகாய் கதையை விவரித்துச் சென்றிருப்பார். இதுவரை எழுத்தில் முன்வைக்காத இணைய அரட்டைகளை பதிவு செய்த புனைவில் இது முதன்மையானது என்றே நினைக்கின்றேன். இதை வாசித்தபொழுதுகளில், சாரு நிவேதிதா தனது நாவல்தான் இணைய உலகத்தை/அரட்டைகளை பதிவுசெய்யப்போகும் புதினம் என்று விளம்பரப்படுத்தியபோது இந்தக் கதை குறித்து அவருக்கு எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனினும் இந்தக்கதையின் முடிவு ஒரு சினிமாத்தனமாய் முடிந்ததில் ஒருவித ஏமாற்றமே எனக்கு ஏற்பட்டிருந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும்.


 
 
Chandravathanaa said...

டி.சே.தமிழன்

இணைய இதழ்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நீங்கள் கூறுவது போல அனுகூலங்களும் பிரதிகூலங்களும் இரு பக்கங்களிலுமே இருக்கின்றன.
உங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புவோம்.


 
 
Chandravathanaa said...

டிசே.தமிழன்
அன்று பதில் எழுதும் போது உங்கள் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் பதில எழுதவில்லை என்பதை இப்போதுதான் கவனித்தேன்.
இராஜன் முருகவேலின் அந்தக் கதை பற்றிய எனது கருத்தை தனியாக எழுதலாம் என்றிருக்கிறேன். நீங்கள் வாசித்த கதையும் அதே கதைதான் என நினைக்கிறேன். கடைசி அத்தியாயத்தை இன்னும் ஒரு முறை வாசித்து விட்டு அது பற்றி உங்களுக்குப் பதில் தருகிறேன்.


 
 
சோழியான் said...

நன்றி சந்திரவதனா அவர்களே! மற்றும் டிசே அவர்களே!
டிசே அவர்களின் கருத்துப்போல.. முடிவு சினிமாத்தன்மையில்தான் அமைந்துவிட்டது. அந்த கதையை ஆரம்பிக்கும்போது, இணையத்துடன் பரிச்சயமான இளைஞர்கள் வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை முதன்மைப்படுத்தியே எழுதினேன். அதனால்தான் அதன் தலைப்பும் ஒரு சினிமாப் பாடல் வரியானது. அத்தோடு, சில சேதிகளை அவர்களுடன் பகிர்வதோடு, கதை எளிமையாக முடிவடையவேண்டும் என எண்ணினேன். ஆக, அந்த நேரத்தில் அந்த முடிவு தலைப்பிற்கு பொருத்தமாக அமையும் எனவும், ஓரளவு சினிமாத்தனமான முடிவை இளைஞர்கள் வரவேற்பார்கள் எனவும் நினைத்தேன். ஆனால் பலர் அந்த முடிவு சினிமாத்தனமாக உள்ளதென கூறியுள்ளார்கள்.
ஆக, இளைஞர்கள் எதை இரசிப்பார்கள், எதை இரசிக்கமாட்டார்கள் என வீணாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதை இதனூடு பெற்றுக் கொண்டேன். நன்றி.
அன்புடன், இராஜன்.


 
 
Kanags said...

கல்கியின் தொடர் நாவல்களை வாரா வாரம் வினுவின் சித்திரங்களுடன் ஒரே புத்தகமாக பைன்ட் பண்ணி வாசிப்பதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லையே.


 
 
Chandravathanaa said...

இராஜன், கனாக்ஸ்

உங்குள் கருத்துக்களுக்கு நன்றி


 
 
Chandravathanaa said...

இராஜன் முருகவேலின் "ஐஸ்கிறீம் சிலையே நீதானே" தொடரை திவாகரன் தனது நிலமுற்றத்தில் தொடராகப் பதிந்து வருகிறார். வாசிக்க விரும்புவோருக்கு ஐஸ்கிறீம் சிலையே நீதானே

 

Related Articles