க. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்

Kandiah Ratnasingam ( க இரத்தினசிங்கம்)நெருக்கடியில்தான் ஒருவருடைய முக்கியமும் முதன்மையும் தெரியும். ஆபத்திலேதான் நண்பர்களை நன்றாக உணர முடியும் என்று சொல்வார்கள். வன்னியில் போர் தீவிரமடைந்திருந்த1990 களின் பிற்கூறில் தொடர்புகளை அரசாங்கம் முடிந்தளவுக்குத் தடுத்திருந்தது. போர் நடக்கும் பகுதிகள் மட்டுமல்ல, அரச கட்டுப்பாடில்லாத பகுதிகளில் என்ன நடக்கிறது என்று வெளியேதெரியாத வகையில் இறுக்கத்தைப் பேணியது. அரச கட்டுப்பாடில்லாத பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தன. அதனால், அங்கே மிக மோசமான பொருளாதாரத்தடைகளையும் தகவல் மற்றும் போக்குவரத்து ஊடாட்டத்தடைகளையும் அமூல் படுத்தியிருந்தது. ஏறக்குறைய உலகத்துடன் துண்டிக்கப்பட்ட நிலை.

அந்த நாட்களில் வெரித்தாஸ் தமிழ்ப்பணி, பி.பிஸி தமிழோசை, ஐ.பி.ஸி தமிழ் போன்ற வானொலிகளே முடிந்தளவுக்கு மூடப்பட்ட பிரதேசத்தின் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தஇறுக்கத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அங்கே என்ன நடக்கிறது? மக்களுக்கான நிர்வாகம் எவ்வாறு இயங்குகிறது போன்ற தகவல்கள் வெளியே பெரிதாகத் தெரியாது. இதை எந்தப் பரபரப்பும் இல்லாமல் முடிந்தளவுக்குப் பொது வெளியில் வெளிப்படுத்தினார் க.இரத்தினசிங்கம்.

ஆனால், இது வெடிகுண்டின்மேல் தலையை வைத்துத் தூங்குவதற்குச் சமம். ஏனென்றால், வன்னியிலிருந்து கொண்டு சொந்தப் பெயரில் செய்திகளையும் தகவல்களையும் வெளியேஊடகங்களில் வெளிப்படுத்திக் கொண்டு தென்பகுதிக்கு - அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குப் போய் வர முடியாது. படையினரின், புலனாய்வுப்பிரிவின் தீவிர கண்காணிப்பு - விசாரணைப்பொறிக்குள் சிக்கி வேண்டி வரும்.

ஆனால், இதைக் கடந்து துணிச்சலாக இயங்கினார் இரத்தினசிங்கம். இதற்கொரு வழியை அவர் கண்டு பிடித்திருந்தார். அப்போது வன்னியில் பிடிக்கப்படும் ஒளிப்படங்களை (Photos) பிரின்ட் போடுவதாக இருந்தால் அவற்றை வன்னிக்கு வெளியே போக வேண்டும். வன்னியில் பிரின்ட் போடுவதற்கான வசதிகள் இருக்கவில்லை. எனவே படமாக்கப்பட்ட பிலிம் சுருள்களை எடுத்துச் சென்று தென்பகுதியில் பிரின்ட் போட்டுக் கொண்டு வருவார்கள். இரத்தினசிங்கமும் இதைச் செய்தார்.

அந்த நாட்களில் இது ஒரு வருவாய் தரும் தொழில். இந்தத் தொழிலோடு தன்னை இணைத்துக் கொண்டு, கொழும்பு “தினக்குரல்” பத்திரிகையின் மூலம் வன்னி நிலைமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இரத்தினசிங்கம். தினக்குரலில் தேவகௌரியும் பாரதியும் இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். வெறுமனே கட்டுரைகளையும் செய்திக்குறிப்புகளையும் எழுதிக் கொண்டிருக்காமல், வன்னி - நெருக்கடிச் சூழலில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பலரை நேர்காணல் செய்து, சம்மந்தப்பட்டர்களுடைய வாய்மொழிச் சாட்சியமாக வெளியிட்டார் இரத்தினசிங்கம்.

அந்த நேர்காணல்களின் மூலமாக ஒவ்வொரு துறையிலும் என்ன நடக்கிறது? என்ன வகையான சவால்கள் உள்ளன? மக்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? எனப் பல உள் விசயங்கள்வெளியே கொண்டு வரப்பட்டது. ஏறக்குறைய அவை ஒரு காலகட்ட சமூக வரலாற்றுப் பதிவுகள்.  இப்பொழுது அவற்றை மீளப் படிக்கும்போது இரத்தினசிங்கத்தின் அந்த முயற்சியின் பெறுமதி கூடுதலாகப் புரிகிறது.

இந்த நேர்காணல்களையும் பதிவுகளையும் பார்த்த அன்றைய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி. இராசநாயம், ”நேர்காணல்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே“ என்று கேட்டார்.

“செய்யலாம். ஆனால், அதற்கான நிதி வேணுமே” என்று பதிலளித்தார் இரத்தினசிங்கம்.

நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் இராசநாயகம்.

சொன்னமாதிரியே கிளிநொச்சி மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பை ஸ்தாபித்து, அதன் மூலமாக வெளியீட்டுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார் இராசநாயகம்.

இந்த வாய்ப்புக் கிடைத்தவுடன், நேர்காணல்களில் தேர்வு செய்யப்பட்டு “மண்ணின் வேர்கள்” என ஒரு நூலாக்கப்பட்டது.   கஜானியின் ஒளிப்படத்துடன் இந்த நூல் வெளியானது.

இந்த நேர்காணல் தொகுப்பில் பாதிக்குமேலானவை பொதுத்துறைகளில் பணியாற்றுவோருடையவை. ஏனையவவை கலை, இலக்கியத் துறையில் செயற்படுவோருடையது. இதைப்பற்றி ஒரு சுருக்கமான குறிப்பையும் முன்னுரையாக இரத்தினசிங்கம் எழுதியிருந்தார். இப்பொழுது படிக்கும்போது அந்தப் பதிவின் கனதி பெரிதாகத் தெரிகிறது.

அந்த நூலில் ஒரு இடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “மிக இறுக்கமான பொருளாதார நெருக்கடியும் வாழ்க்கை அவலமும் தொடர்பாடல் துண்டிப்புகளும் சூழ்ந்த காலத்தில் அகதிகளாக வாழ்ந்த போது இந்தவாறு நேர்காணல்களைச் செய்ய வேண்டும். அதன்வழியே எங்களுடைய சமூக இயக்கத்தின் உயிரோட்டமாக இருக்கும் மனிதர்களின் உழைப்பையும் சிந்தனையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நெருக்கடிகள் நிறைந்த காலகட்டத்தில் துயரமும் அவலமுமே வாழ்வாக இருக்கும். இந்த நிலையில் பொறுப்போடு சமூகக் கடமைகளில் ஈடுபட்டுழைத்த மனிதர்களை சமூகத்துக்கும் காலத்துக்கும் அடையாளம் காட்டவேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறு செய்வது கடமை எனவும் எனக்குப் பட்டது.

இதில் கூடுதலாக எனது தேர்வு பெண் ஆளுமைகளாகவே இருந்திருக்கிறது. இதை நான் திட்டமிட்டுச் செய்யவில்லை. ஆனால், சமூக நிலையில் பெண்களின் உழைப்பும் ஆளுமையும் அதிகமாக இருக்கின்ற போதும் அது புறக்கணிக்கப்பட்டோ கவனிக்கப்படாமலிருப்பதோ துயரத்துக்குரிய நிகழ்வாகவே தொடர்கிறது. இது எனக்கு எப்போதும் ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. இதனால் நேர்காணல்களின் போது என்னை அறியாமவே பெண் ஆளுமைகளின் மீது கூடுதல் கவனம் திரும்பியிருக்கிறது.

இந்த நேர்காணல்களை தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் ஒரு வெகுஜன ஊடகத்தின் வழி வெளிக் கொணர்வதற்கு எம். தேவகௌரி துணையாக இருந்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இதேவேளை கொழும்பிற்குச் சென்று வரும்போது பத்திரிகைகளோடு மல்லிகை, தாயகம் போன்ற இதழ்களையும் தவறாமல் கொண்டு வருவார். இலக்கிய இதழ்கள் உள்பட பத்திரிகைகள் முறையாக வரமுடியாத சூழலில் வாசிப்பவர்களுக்கு இந்த மாதிரி இதழ்கள் அமிர்தம். பெருங்கொடை. மல்லிகையோடு மல்லிகைப் பந்தல் வெளியீடுகளும் சேர்ந்து வரும். இதன் மூலமாக ஜீவாவுக்கும் இரத்தினசிங்கத்திற்குமிடையில் நல்லதொரு உறவும் வளர்ந்தது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

ஜீவாவின் மகன் திலீபன், கொழும்பில் ஒளிப்படங்களைப் பிரதியிடும் நிறுவமொன்றை வைத்திருந்தார். வன்னியிலிருந்து கொண்டு செல்லும் பிலிம் சுருள்களை திலீபனின் நிறுவனத்தில் பிரின்ட் போட்டுக்கொள்வது இரத்தினசிங்கத்துக்கு மேலதிக வசதியாக அமைந்தது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.

மல்லிகையைக் கொண்டு வந்து தரும்போது மல்லிகைக்கு எழுதுமாறு கேட்பார். அதிலே உரிமையோடு கூடிய மெல்லிய வற்புறுத்தல் இருக்கும். மல்லிகையின் ஆண்டு மலர் ஒன்றுக்கு கவிதைகள் சிலவற்றை இரத்தினசிங்கத்தின் மூலமாகக் கொடுத்து அனுப்பினேன். ஜீவாவின் சுகநலன்களை சொல்வார். எங்களுடைய நலன்களையும் நிலைமையைப் பற்றியும் ஜீவாவுடன் பகிர்ந்து கொள்வார்.

2005 ஆம் ஆண்டு என்று நினைவு. இரத்தினசிங்கம் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருந்தார். அதனுடைய குடிபுகுதல் நிகழ்வை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களோடு தான் விரும்புகின்ற – மதிக்கின்ற வேறு சில ஆளுமைகளையும் அழைத்துக் கொண்டாடுவதற்கு அவருக்கொரு விருப்பம். இதைப்பற்றி ஒரு மாலை நேரம் வந்து பேசினார்.

“நல்ல யோசினை. செய்யலாம்” என்றேன்.

“ஆனால், நீ்ங்கள்தான் ஏற்பாடு செய்ய வேணும். சிலரோடு பழக்கமுண்டு. மற்ற ஆட்களுக்கு நீங்கள்தான் சொல்லி, வர வைக்க வேணும்” என்றார்.

சம்மதித்தேன். இருவருமாகச் சேர்ந்து சென்று எல்லோரையும் அழைத்தோம்.

எல்லோருமே வந்திருந்தார்கள். கருணை ரவி, ஈழநாதம் ஜெயராஜ், பு. சத்தியமூர்த்தி, வேலணையூர் சுரேஸ், அநாமிகன், ப. தயாளன், பெருமாள் கணேசன், விஜயசேகரன், அன்ரன் அன்பழகன், பஸீர் காக்கா, வே. பாலகுமாரன், தி.தவபாலன், அமரதாஸ், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், மண்டைதீவு கலைச்செல்வி, நா.யோகேந்திரநாதன், ஆதிலட்சுமி, உதயலட்சுமி, நிலாந்தன், மு. திருநாவுக்கரவு என அன்று வன்னியிலிருந்த எல்லோரும் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

வேறு யாருமே செய்திருக்காத ஒரு நிகழ்வாக இரத்தினசிங்கத்தின் புதுவீட்டு நிகழ்ச்சி நடந்தது.

இது நடந்து ஒரு வாரமிருக்கும். ஒரு காலை நேரத்தில் சிறியதொரு பொதியுடன் வந்தார் இரத்தினசிங்கம். சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவர் பொதியைக் கைகளில் தந்தார். வியப்போடு பிரித்துப் பார்த்தேன். நாங்கள் அணிவகுத்து குறூப்பாக நின்று எடுத்த போட்டோவை பெரிய சைஸில் பிரின்ட் போட்டு எடுத்து வந்திருந்தார். கூடவே புத்தகமொன்றையும் தந்தார். அதிலே அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அத்தனைபேரும் நின்றோம். அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அந்த அணிப் படத்தை வீடு தேடிச் சென்று கொடுத்தார்.

இப்படி வித்தியாசமாக, எதையாவது புதிதாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் இரத்தினசிங்கம்.

நூல் வெளியீடுகளுக்கும் இலக்கியச் சந்திப்புகளுக்கும் தவறாமல் வந்து கலந்து கொள்வார். புத்தகங்களை வாங்கிச் செல்வார். வாசித்த பிறகு தனிப்பட அபிப்பிராயங்களைச் சொல்வார். “அதை எழுதுங்கள்” என்றால், “அதெல்லாம் நமக்குச் சரிப்படாது. விமர்சனத்துக்கு நிறையப்படிக்க வேணும். கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம் போன்ற ஆட்களைப் பார்த்தீங்களா? பெரிய படிப்பாளிகள். நான் அப்பிடியான ஆளில்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். அதற்காக விமர்சனம் செய்ய முடியுமா?” என்று கேட்டு, அதையே பதிலாக்கி விடுவார்.

இரத்தினசிங்கம் பாடசாலைக் கல்வியோடு இளவயதிலேயே தொழில் செய்வதற்காக பரந்தனில் இயங்கிய இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து வேலை செய்யத் தொடங்கியிருந்தார். இதனால் அவரால் மேற்கொண்டு படித்துப் பட்டம் பெற முடியவில்லை. இரசாயனத்தொழிற்சாலை வேலையோடு விவசாயத்தையும் பார்க்கவே நேரம் போதாமலிருந்தது. எனினும் எப்போதும் வாசிப்பை கைவிடவில்லை.

புத்தகங்களைக் கண்டால் அதிலேயே அவருடைய கவனம் எப்போதுமிருக்கும். “இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று அந்தப் புத்தகத்தைக் காட்டிக் கேட்பார். கொடுத்தால். வாசித்த பிறகு, அப்படியே திருப்பிக் கொண்டு வந்து தருவார். படித்ததைப் பற்றி சுருக்கமாகச் சொல்வார். என்றைக்கும் தன்னை முதன்மைப்படுத்தியோ, பெருமைப்படுத்தியோ பேசமாட்டார். நீங்கள் எல்லாம் பெரிய ஆட்கள் என்று மற்றவர்களை உயர்த்தியே பேசுவார். தன்னைக் குறித்த ஒரு பணிவு நிலை மனப்பாங்கு அவரிடமிருந்தது. பதிலாக அவருடன் எல்லோரும் பழகினார்கள்.

இரத்தினசிங்கம் எவரிடமும் எதையும் கேட்டுக் கடமைப்பட மாட்டார். சிரமப்படுத்தவும் மாட்டார். அப்படித்தான் அவர் எதையாவது கேட்டாலும் யாராலும் அதை மறுக்க முடியாது. ஏனென்றால், இலகுவாக அவர் யாரிடமும் எதையும் கேட்டுப் பெறும் ஆளல்ல. எல்லாவற்றுக்கும் அப்பால் நேர்மையாளர். கடினமான உழைப்பாளி வேறு. எப்போதும் களைத்து வேர்த்த நிலையிலேயே இருப்பார். யாரோடும் அவர் முரண்பட்டோ மனம் நோகும்படியோ பேசுவதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்வார். இந்த மாதிரியான மனிதர்கள் வாழ்ந்த தலைமுறை ஒன்று நம்மிடமிருந்தது. அதனுடைய கடைசிப் பிரதிநிதிகளாக இரத்தினசிங்கத்தின் வயதை ஒத்தவர்கள் மட்டுமே அங்குமிங்குமாக உள்ளனர்.

இரத்தினசிங்கத்திற்கு எட்டுப் பிள்ளைகள். அதில் ஒருவர் போராளி. ஆனையிறவில் நடந்த சமரொன்றில்  சாவடைந்திருந்தார். இன்னொரு மகன் தென்பகுதியில் காணாமல் போய் விட்டார். இந்த இரண்டு பிள்ளைகளைப் பற்றிய துயரம் அவருடைய அடி மனதில் தணியாத நெருப்பாக எப்போதுமிருந்தது. பேச்சுவாக்கில் இருவரைப்பற்றியும் துயரம் தோயக் கதைகள் சொல்வார்.

த. அகிலன் இரத்தினசிங்கத்தைப் பற்றி நல்லதொரு பதிவினை முன்பு எழுதியதாக நினைவு. அதிகமாக எழுதாமல், தீவிரமாகச் செயற்படுவதாகக் காட்டிக் கொள்ளாமல், நெருக்கடி நிலையில் செய்ய வேண்டிய வேலைகளைச் சத்தமில்லாமல் செய்கின்ற பலருண்டு. அதில் ஒருவர் இரத்தினசிங்கம். இந்த மாதிரியான மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சூழலும் இருக்கிறார்கள். இவர்களால்தான் அதிகமான நற்காரியங்கள் நல்லபடியாக நிறைவேறுகின்றன. ஆனால், இவர்கள் யாரிடத்திலிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. எதையும் எவருக்கும் வலியுறுத்துவதுமில்லை.

மழையைப்போல, காற்றை, வெயிலைப்போல இயற்கையாக இருந்து செயலாற்றி விட்டுப் போய்விடுகிறார்கள். நாம் எப்போதும் செல்லும் வழியில் நின்ற நிழல் மரமொன்று இன்று திடீரென இல்லாததைப்போல ஆகி விட்டது.

இரத்தினசிங்கம் இப்பொழுது நினைவாகி விட்டார்.

- கருணாகரன்
Quelle . thenee.com

Related Articles