கெரோயின்

பொல்லாத போதைப் பழக்கம்
இல்லாதிருப்பதே நல்லொழுக்கம்

கெரோயின் (Heroin), மோர்பைன் (Morphine), கொக்கயின் (Kokain), போன்ற மருந்துகளைப் பாவித்ததால் 1989ம் ஆண்டில் 991 பேரும் 1994ம் ஆண்டில் 1700 பேரும் உயிரிழந்துள்ளனர். 1989ஐயும் 1994ஐயும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் போதை மருந்தினால் இறந்தவர்களது தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

போதை மருந்துகளை விற்பனை செய்வது, அதனை வைத்திருப்பது போன்றவற்றிற்குச் சட்டப்படி அநுமதி தருவதால் இப்பிரச்சனையைக் குறைக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. இது எந்த வகையில் பயன் தரும் என்பதில் மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல் இல்லை.

போதை மருந்தைக் கையாளும் மாபியா என்று அழைக்கப்படும் கூட்டத்தினர் மிகவும் பலம் வாய்ந்து கொண்டு வருகின்ற போதிலும், UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் மாபியா கூட்டத்திற்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் UNO எடுக்கும் நடவடிக்கைகள் பல தோல்வியில் முடிந்துள்ளன. எனினும் UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் போதைப் பொருட்களைப் பாவிப்பதை சட்டபூர்வமாக்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பியாவின் எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் மத்திய ஐரோப்பியாவில் உள்ள போதைப் பொருட்களைக் கடத்தும் கூட்டங்கள் மிகவும் உசாராகச் செயற்பட ஆரம்பித்துள்ளன.

போதைப் பொருட்கள் பாவிப்பதைச் சட்ட பூர்வமாக்குவதாயின் அதற்கு உலக நாடுகள் எல்லாவற்றினதும் ஒத்துழைப்புத் தேவை.

அப்படி இல்லாத பட்சத்தில் பெரும் ஒழுங்கின்மை ஏற்படுவதற்கு இடமுண்டு.

உதாரணமாக ஹொலண்ட் நாட்டில் சில போதைப் பொருட்களுக்குச் சட்டரீதியான அநுமதி தரப்பட்டது. அநுமதி தராத மற்றைய நாடுகளில் உள்ள போதைப் பொருட் பிரியர்கள் உல்லாசப் பயணிகளாக ஹொலண்ட் நாட்டுக்குச் சென்று போதைப் பொருட்களைப் பாவிக்க இது ஏதுவாக இருந்தது.

இப்படியான சில ஒழுங்கின்மையால் உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகிறது. இவ் ஒத்துழைப்பிற்கு எல்லா நாடுகளும் முன்வருமா என்ற பெரியதொரு கேள்வியும் எழாமல் இல்லை.

போதைப்பொருட்களின் பாவனையை சட்டபூர்வமாக்குவதால், போதைப் பொருட்களை கையாளுவதால் ஏற்படும் பல குற்றச் செயல்கள் இல்லாமல் போவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் போதைப் பொருட்களைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் உண்டா என்று கேட்கும் பட்சத்தில், இல்லை என்ற பதிலே முன்வந்து நிற்கிறது.

மருத்துவர் மூலம் போதைப்பொருட்களைக் கொடுத்தால் என்ன? என்று இன்னுமொரு அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றியளிக்காது என்பதை இரண்டு காரணங்களால் விளக்கலாம். ஒன்று மருத்துவரின் வேலைக்கு இது பொருத்தமானதாக இல்லை. மற்றையது மருத்துவரிடம் கிடைக்கும் போதைப்பொருட்களின் விலையை விட, கறுப்புச்சந்தையில் கிடைக்கும் போதைப் பொருட்களின் விலை மலிவாக இருக்கிறது.

ஆகவே சட்டரீதியான அநுமதி என்பது இப்பிரச்சனையை சிக்கலாக்குமே தவிர, ஒரு போதும் ஒரு தீர்வாகாது.

அப்படியாயின் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த முடியாதா? என்ற கேள்வி முன் எழுகிறது.

முடியும். அரசாங்கங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் செயற்பாடுகள் இங்கு முக்கியமானவை. அவை ஒன்று கூடி வரும் போது இதற்கொரு தீர்வைக் காண முடியும்.

போதைப் பொருட்களைக் கையாளும் கூட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் இன்னும் பலமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். போதைப் பொருட்கள் மக்களின் கைகளைச் சென்றடையாதவாறு பாதுகாக்க வேண்டும். மருந்துக் கடைகளில், நாட்டு எல்லைகளில், விமான நிலயங்களில் ஒவ்வொரு அரசாங்கமும் பெரியசோதனைகளை ஏற்படுத்தி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனையளர்கள், பாவனையாளர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் பலமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் விற்பனையாளர்களைக் கைது செய்யும் பட்சத்தில் எந்தவித கருணைகளுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

போதைப் பொருட்களின் பாவனையாளர்களும், அதில் ஆர்வம் உள்ளவர்களும் இப்போதைப் பழக்களிலிருந்து பயந்து ஒதுங்கும் வகையில் அரசாங்கத்தின் தண்டனைகள் கடுமையானதாக இருக்கவேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை நிலையங்களை காவல்துறையினர் கண்டுபிடித்து அங்கு கடமையாற்றல் வேண்டும். காவல்துறையினர் கண்காணிப்பதால் போதைப் பொருட்களின் பாவனையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் தொடர்புகள் இல்லாமல் போய் விட வாய்ப்புகள் உண்டு.

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு சிறைத் தண்டனைகள் மட்டுமின்றி அவர்களிடம் தண்டனையாகப் பணங்களையும் அறவிடுதல் வேண்டும். இப்பணங்களை போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை செய்யவும், சிகிச்சைக்குத் தேவையான இடங்கள், படுக்கைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தவும் வேண்டும்.

தங்களது பிள்ளைகள் இத் தீயபழக்கங்களுக்கு அடிமையாகாத வண்ணம் பெற்றோர்களின் செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.

இளைய பருவத்தினர் இப் பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதற்கான காரணிகளும் சூழ்நிலைகளும் என்ன?

சில ஆய்வாளர்களின் கணிப்பின்படி கீழே தரப்பட்ட காரணங்களே இளைய பருவத்தினரை இத்தீய வழிக்கு இழுத்துச் செல்கின்றன.

1. புதிய விடயங்களை அறிய, அநுபவித்துப் பார்க்க உள்ள ஆசைகள்.

2. படிப்பில் உள்ள சிரமங்கள், அல்லது இதர பிரச்சனைகள்.

3. காதல் தோல்வி, அல்லது மனது விரக்தியடைந்த துன்பமான சூழ்நிலைகள்.

4. பொழுதுகள் போகாமல் சலிப்புகள் உண்டாகும் நிலை.

5. பெற்றோரது தவறான வழிகாட்டல்.

6. போதைப்பொருட்களைப் பாவிப்பவர்களாகப் பெற்றோரே இருத்தல்.

இந்தக் காரணிகள் பிள்ளைகளைத் பொல்லாத போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்காதிருக்க.............

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் கணவனும் மனைவியும் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளனர். எனினும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்திலேயும் தங்களது பிள்ளைகளுக்கு நேரங்களை ஒதுக்கி அவர்களிடம் அன்பாகப் பழக வேண்டும்.

போதைப் பொருட்களால் வரும் கேடுகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

அவர்கள் மனங்களில் எந்த விதமான தனிமை உணர்வுகளோ, விரக்தியான எண்ணங்களோ தோன்றாதபடி நட்புடன் பழகி அவர்கள் மனங்களை ஆட்கொள்ள வேண்டும்.

இதேபோல் பாடசாலைகளும் இது விடயத்தில் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

ஏனெனில்......

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளும் போதைப்பொருட்களின் விற்பனை நிலையம் அல்லது பரிமாறிக்கொள்ளப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களின் வயதுக்கேற்ப, போதைப்பொருட்களின் பாவனையால் வரும் கேடுகள் விளக்கிச் சொல்லப்படல் வேண்டும். அதிர்ச்சி, தெரப்பி படங்கள் மூலம் அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்காட்ட முடியும்.

போதைப்பொருட்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு ஆசிரியராவது நியமிக்கப்படல் வேண்டும். இவ் ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் ஏற்படும் பட்சத்தில், அதனை பெற்றோருக்கு அறியத்தரல் வேண்டும்.

இத்தீய பழக்கங்கள் உள்ள மாணவர்களுடன் தனியாகக் கதைத்து, இப்பழக்கங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் வல்லமையுள்ளவர்களாக இவ் ஆசிரியர்கள் இருக்கவேண்டும்.

எனவே போதைப்பொருட்களுக்கு சட்டபூர்வமான அநுமதி தருவதால் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோரைத் தடுக்க முடியாது. வருமுன் காக்கும் தன்மையாலும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளாலுமே இவ்விடையத்தில் அதிகளவிலான வெற்றியை காணமுடியும்.

திலீபன் செல்வகுமாரன்
பிரசுரம்: இளங்காற்று (மார்ச் 1997)


Drucken   E-Mail

Related Articles