எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.

எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.

மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.

இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.

அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.

முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

சந்திரவதனா
யேர்மனி
 
 

Comments


Solian - யாழ் களத்தில்

மேற்கோள்: அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.

இதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை... ஏறக்குறைய 10 வருடங்கள் ஒன்றாக ஜேர்மன் நாட்டு பெண்களைத் திருமணம் செய்த மூவரின் அனுபவங்களை கேட்டறிந்தவன் என்றவகையில் நான் அறிந்தவையாவன... ஒருவருக்கு 5 பிள்ளைகள்.. மிகவும் நல்ல குடும்பம் என்றவகையில்தான் வாழ்ந்தார்கள். தொழிற்சாலை ஒன்றில் நல்லதொரு பதவியில் இருந்தார். திடீரென அவரது வேலை பறிபோக.. மனைவி வெளியில் பிடித்து விட்டுவிட்டார்.

மற்றைய இருவருக்கு தற்போது 45 வயதுக்கு மேல்.. காரணம்.. 'வயதாகிவிட்டதாம்!' (புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.)

Soliyan
ஞாயிறு ஐப்பசி 31, 2004 2:33 am
-----------------------------------------------------------

 

kuruvikal - யாழ் களத்தில்

நம்மாக்கள் சரியான சுயநலவாதிகள்.... காதலை வைச்சே கலியாணத்தை முடிச்சிடுவாங்கள்...பிறகெங்க பிரியுறதும் சேருறதும்.... என்ன கஸ்டப்பட்டாலும் வண்டி ஓட்ட வேண்டியதுதான்.... மேற்கத்தேயன் அப்படியில்ல அவன் லவ்விலும் சுதந்திரம் கொடுக்கிறான்...சுதந்திரமா உணர்வுகளை வெளிப்படுத்த விடுறான் அழுத்தங்கள் கொடுத்து சாதிக்க நினைக்கிறது குறைவு...ஆனா என்ன பணமில்லையோ காதல் அம்போ....அந்தளவிலதான் அவயின்ர லவ்...ஆனா எங்கட ஆக்களவிட கொஞ்சம் சுதந்திரம் இருக்கு.....!

ஆனா அவங்கட லவ்வ வரையறுக்கிறது வலு கஸ்டம் எங்கட வரையறுக்கிறதும் சுகம்...நீடித்தும் வாழும்...! மற்றும்படி காதலிச்சு கலியாணம் முடிச்சா பிரச்சனை எண்டுறது எங்க ஆக்களில எங்கினையன் ஈகோ கேசுகளிலதான் அதிகம்....ஆனா அவங்கள் லவ் பண்ணுவாங்கள் எல்லாம் செய்வாங்கள்..கலியாணம் எண்டா காய் வெட்டிடுவாங்கள்...அந்த லெவலிலதான் அவங்கட லவ்....அது அவங்களுக்குச் சரி பிறகு டி என் ஏ ரெஸ்ட் செய்து பிறக்கிறதுகளுக்கு அப்பா அம்மா கண்டு பிடிப்பாங்கள்..அது பொழுதுபோக்கு அவங்களுக்கு....! நமக்காகுமோ...ஆகும்...மனசு கேக்காதே....பாவம் பாத்திடுவமே....!

kuruvikal
சனி ஐப்பசி 30, 2004 8:33 pm
-----------------------------------------------------------

 

Kanani - யாழ் களத்தில்

எனது நண்பர்களின் (மேற்கத்தேய மற்றும் நம்நாட்டவர்) அனுபவத்தில் காதலை மறத்தல் மேற்கத்தேயருக்கு இலகுவாக இருக்கிறது. சிறிய பிரச்சனைகளுக்குக்கூட பிரிகிறார்கள்...கோபத்திலிருக்கும்போது காதலை உணர போதிய காலவகாசம் கொடுக்கிறார்களில்லை...அதற்குள் அடுத்த காதல் தயாராகிறது... நம்மவர் காதல் என்னதான் இழுபறிப்பட்டாலும் வண்டி ஓடும்... பிரியப்போகிறோம் என்று இருந்தவர்கள்கூட....இழுபறிப்பட்டு மீண்டும் 6 7 மாதங்களின் பின் சேர்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன்...

Kanani
சனி ஐப்பசி 30, 2004 5:00 pm

 

 


Drucken   E-Mail

Related Articles