புத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்

புத்தகங்கள், வாசிப்பு… என்னும் போது என் முன்னே முதலில் வந்து நிற்பது எனது அப்பாதான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகங்கள் இல்லாமல் எனது அப்பா பயணத்தால் வந்ததில்லை. சொக்கிளேட்ஸ்… தேங்காய்ப்பூரான்… என்பதிலிருந்து அவர் கடமையிலிருக்கும் நகரத்தில் என்னென்ன பழங்கள் மலிவோ அத்தனையையும் கட்டிக் காவிக்கொண்டு வரும் அப்பாவின் சூட்கேசுக்குள் கண்டிப்பாக சில புத்தகங்களும் இருக்கும். அவைகளில் எமது வயதுக்கேற்ப சிறிய, பெரிய புத்தகங்களும் அம்மாவுக்கேற்ப புத்தகங்களும் இருக்கும்.

கடனே என்று வேண்டிக் கொண்டு வருவதோடு நின்று விடாமல் மடியில் இருத்தி வைத்து அப்புத்தகங்களில் உள்ளவைகளை வாசித்து, கூடவே அபிநயித்து அவர் சொல்லும் அழகே தனி. சின்னவயதில் அப்படி நான் கேட்ட ஒவ்வொரு கதையும் இன்னும் என்னுள் பதிந்து போயிருக்கின்றன.

´நளன் தமயந்தி` கதையை அப்பா வாசித்துச் சொல்லும் போது நளனின் சமையற்பாகத்தையும் தமயந்தியின் அழகையும் மிகவும் வர்ணித்துச் சொன்னார். அதை நான் ரசித்து எனக்குள் பதித்து வைத்திருந்தேன். பின்னர் ஒரு முறை ரவிவர்மா தமயந்தியையும் நளனையும் ஓவியமாக வரைந்திருந்ததைப் பார்த்த போது எனக்குள் பதிந்திருந்த அந்த அழகு, அவர் வரைந்த தமயந்தியில் இல்லாததால் ரவிவர்மாவுக்கு ஓவியம் வரையத் தெரியாதோ என்று யோசித்தேன்.

இதே போல இரணியன், பரதன்… போன்ற சரித்திரக்கதைகள் எல்லாமே எனது சின்ன வயதிலேயே எனது அப்பாவால் வாசித்துக் காட்டப்பட்டு என்னுள் பதிந்து போயிருப்பவை. அப்பா வரும் போது மட்டுந்தான் எமக்கு, புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டு வருவாரென்றில்லை. அவர் இலங்கையின் எந்த மூலையில் கடமையில் இருந்தாலும் கிழமையில் ஒரு நாளைக்கு அஞ்சலில் ஒரு கட்டுப் பத்திரிகையை எமக்கு அனுப்பி வைப்பார். அவைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரத்தியேகமாக வெளிவருகின்ற சிந்தாமணி, ராதா.. வில் தொடங்கி Sunday Observer வரை இருக்கும்.

அப்பாவுக்கு மட்டுந்தான் வாசிப்பு ஆர்வம் என்றிருந்திருந்தால் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. எனது அம்மாவும் அதேதான். அம்மாவுக்கு வீட்டில் நிறைய வேலைகளிருக்கும். ஆனாலும் அப்பா அனுப்பும்.., கொண்டு வரும் எல்லாப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஒன்று விடாமல் வாசித்து விடுவா. அதிலிருந்து எமக்குச் சொல்லக் கூடிய எந்தத் தகவல்களையும் சுவாரஸ்யங்களையும் தவறாது எமக்குச் சொல்லியும் விடுவா.

அதை விட ஆனந்தவிகடன், குமுதம், கல்கி.. போன்ற எல்லாச் சஞ்சிகைகளையும் வாரம் தவறாமல் வாங்கி வாசிப்பா. அவவின் பெயர் போட்ட படியே ரவுண் கடையொன்றில்(பெயர் ஞாபகமில்லை) இந்தப் புத்தகங்கள் காத்திருக்கும். சித்தப்பாமாரில் யாராவது ஒருவர் போய் அதை வாங்கிக் கொண்டு வருவார். வாசித்தவைகளை எறிந்து விடாமல் கவனமாக வைத்து… கதைகளை, கட்டுரைகளை என்று கிழித்து, சேர்த்து, கட்டி.. புத்தகங்களாக்கியும் விடுவா.

எங்கள் ஊரில் எங்கள் வீடும் வாசிகசாலை போலத்தான். ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. பலர் வந்து இரவல் வாங்கிப் போய் வாசித்து விட்டுக் கொணர்ந்து தருவார்கள். அம்மாவுக்குத் தாராள மனசு. யார் கேட்டாலும் மறுப்பதில்லை. இரவல் கொடுத்து விடுவா. திரும்பி வராமல் போன புத்தகங்களும் உள்ளன. இப்படியே நான் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகளுக்கு நடுவிலேயே பிறந்தேன். வளர்ந்தேன். வாழ்ந்தேன்.

எனக்குப் பிடித்த பல கதைகள் இன்னும் என் மனசுக்குள் உள்ளன. ஆனாலும் சில கதைகளின் தலைப்புகள் மட்டும் ஞாபகத்தில் இல்லை.

ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா. அக்கதையை நான் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்.. கதைகள் போல என் பதின்மங்களில் இருதடவைகள் வாசித்தேன்.

இந்தப் பெரிய பெரிய அரச கதைகளை நான் வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னமே 60வதுகளின் இறுதிப் பகுதியிலோ, அல்லது 70வதுகளின் ஆரம்பத்திலோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு அறிமுகமாகியது. அப்போதுதான் அது வெளிவரத் தொடங்கியதோ அல்லது அம்மாவுக்கு அப்படியொரு சஞ்சிகை வெளிவருவது அப்போதுதான் தெரிய வந்ததோ என்பது எனக்குத் தெரியாத விடயம்.

கல்கண்டு எங்கள் வீட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் தொடர்கதைகளை வாசித்து விட்டு, அடுத்த கிழமைக்காகக் காத்திருப்பது சிறுவர்களான எங்களுக்கு யுகங்களைக் கடப்பது போலிருந்தது. அண்ணன், நான், தம்பி பார்த்திபன் மூவருமே போட்டி போட்டு வாசித்தோம். யார் முதலில் என்று சண்டை பிடித்தோம். விலக்குத் தீர்ப்பதே அம்மாவுக்குப் பெரும் பாடாய் இருந்தது. அப்போது துப்பறியும் சங்கர்லால், நம்பூதிரி.. போன்ற கல்கண்டுக் கதைகளின் நாயகர்கள், வில்லர்கள் எல்லோருமே எங்களுடன் மிகவும் ஐக்கியமாகி இருந்தார்கள். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் அவர்கள் பற்றிப் பேசினோம். கதைகளை அலசினோம். வில்லன் வெளிக்கேற்றில் வரும் போதே, உள்ளிருக்கும் அறையிலிருந்து சங்கர்லால் அவர் வருகையைக் கண்டு பிடிப்பதைப் பற்றி நிறையக் கதைத்தோம். வியந்தோம். அப்போது தமிழ்வாணன் எங்கள் வீட்டில் பிரியமாகப் பேசப்படும் ஒருவராக இருந்தார். கல்கண்டில் வரும் துணுக்குச் செய்திகளைக் கூட நாங்கள் விட்டு வைப்பதில்லை. நாங்கள் மட்டுமென்ன அம்மாவும் கல்கண்டுக்காய் காத்திருப்பா.

அப்பாச்சி வீட்டுக்குப் போனால், அங்கே எனது குஞ்சையாமாரின் கேத்திரகணிதம், தூயகணிதப் புத்தகங்களுக்கிடையே பொம்மை அம்புலிமாமா.. போன்ற புத்தகங்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். எனக்கு அம்புலிமாமாக் கதைகளில் அவ்வளவான ஈடுபாடு இல்லாவிட்டாலும் “தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்” என்ற குஞ்சையாவின் வாய்ப்பாட்டைக் கேட்டுக் கொண்டு அவைகளை வாசித்து முடித்து விடுவேன். அப்பாவின் கடைசித்தம்பி – பரமகுருக்குஞ்சையா ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். வீடு முழுக்க அது முத்திரை குத்தப் பட்டிருக்கும். ஆனாலும் சினிமாப் படங்களைப் பார்த்த அளவுக்கு சினிமாச்செய்திகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. பொம்மைகளில் உள்ள படங்களைப் பார்த்து விட்டு, ஏதாவது சினிமாப்பாடல்கள் இருந்தால் அவைகளையும் மனப்பாடம் செய்து விடுவேன். மேற்கொண்டு சினிமா சம்பந்தமாக நான் வாசிப்பதில்லை.

இதை விட எங்கள் வீட்டிலும் சரி, அப்பாச்சி வீட்டிலும் சரி ரொபின்சன் குரூசோ, சிந்துபாத்.. போன்ற ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் நிறைய இருந்தன.

சுந்தரியும் ஏழு சித்திரக்குள்ளர்களும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மாயவிளக்கு, சிந்திரில்லா… போன்ற கதைப்புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்திலேயே கிடைத்தன. பின்னர் அவை பாடசாலையிலும் தமிழில் சொல்லப் பட்டன.

பஞ்சதந்திரக்கதைகள் பெரிய புத்தகமாக வீட்டில் இருந்தது. அக்கதைகளை நான் வாசிக்க முன்னரே அப்பா ஒரு புறமும் அம்மா இன்னொரு புறமுமாகச் சொல்லி விட்டார்கள். ஆனாலும் மீண்டும் அவைகளை வாசித்தேன்.

ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் திருக்குறள் மனனப்போட்டி, எழுத்துப் போட்டி இரண்டிலுமே பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மகாபாரதம், இராமாயணம் இரண்டையுமே எனது அப்பாவிடம்தான் வாசித்தேன். அவ்வப்போது துண்டுதுண்டுகளாக எங்காவது தட்டுப் பட்டவைகளை புத்தகம் வழியே வாசித்திருந்தாலும், முழுமையாக அக்கதைகளை அப்பாதான் கொஞ்சங் கொஞ்சமாகச் சொல்லி முடித்தார்.

கூடவே ஊரில் நடைபெறும் சப்பறத் திருவிழாவிலோ, அல்லது சிவராத்திரி இரவுகளிலோ நடைபெறும் கதாகலாட்சேபம், வில்லுப்பாட்டு போன்றவைகளுக்கு, அப்பா என்னையும் எனது சகோதரர்களையும் அழைத்துச் சென்று மகாபாரத, இராமாயணக் கதைகளை மனதில் பதிய வைத்தார். அப்பா எப்போதுமே இராவணன் பக்கம்தான். இது ஒரு புறம் தன்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் பாடசாலை வாழ்க்கையோடு கதைப்புத்தகங்களும் உலாவின. பாடசாலையில் கதைப் புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆசிரியர்களின் அனுமதி என்பது இருந்ததில்லை. அளவுக்கதிகமான எந்தக் கட்டுப்பாடுகளும் யாரையும் கட்டிப் போடுவதில்லைத்தானே! எல்லா மாணவர்களையும் போலவே நானும் களவாகக் கதைப்புத்தகங்களைத் தாராளமாக வாசித்தேன்.

பண்டமாற்றுப் போல மாணவிகள் மாற்றி மாற்றிப் படித்த புத்தகங்களில் அதிகப் படியான எண்ணிக்கைக்குரியவை இந்தியாவிலிருந்து வரும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ராணிமுத்து வெளியீடுகளும் எமது தாய்மண்ணில் வெளியாகும் தாயக எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட வீரகேசரி மித்ரன், வெளியீடுகளுமே. இந்த வெளியீடுகளினூடு நான் வாசித்துத் தள்ளி விட்டவை ஏராளம். இப்படி ஒரு பிரசுரமாகத்தான் செங்கைஆழியானின் வாடைக்காற்றும் என் கைக்கு வந்தது.

செங்கை ஆழியானின் வாடைக்காற்றுப் போலவே தற்சமயம் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும், பூவரசு இதழ் ஆசிரியர் இந்துமகேஸ் அவர்கள் எழுதிய ஒரு விலைமகளைக் காதலித்தேன் என்ற கதையும் அப்போது வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்து பலராலும் பேசப் பட்டது.

இப்படியும் இன்னும் சில பல சஞ்சிகைகள் வெளியீடுகள் மூலமும் அறிமுகமான எழுத்துக்களில் டொமினிக் ஜீவா, வ.அ.இராசரத்தினம், செ.யோகநாதன், செங்கை ஆழியான்.. போன்ற இன்னும் பல உடனடியாக நினைவுகளுக்குள் சிக்காத ஈழத்து எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள்.

இவர்களின் கதைகளின் நடுவே பாடசாலையில் மர்மக்கதைகளை வாசிப்பதிலும் நான் பின் நிற்கவில்லை. மர்மக்கதைகளை வாசிப்பதில் அந்தளவான பிரயோசனம் இல்லையென எனது அம்மா ஓரிரு தடவைகள் சொல்லியிருந்தாலும் வாசிக்கக் கூடாது என்ற கண்டிப்பான தடையெதுவும் விதிக்கவில்லை. பாடசாலையில் மர்மக்கதை வாசிக்கக் கூடாது என்பது கண்டிப்பான கட்டளையாக இருந்தது. ஆனாலும் எனது வகுப்பு மாணவிகளில் ஒரு சிலர் மர்மக்கதைப் பிரியர்கள். அவர்களிடமிருந்து எனக்கும் தாராளமாகக் கிடைத்ததால் அவைகளையும் தாராளமாக வாசித்து முடித்தேன்.

மிகச்சிறியதாக இருந்த எனது பாடசாலையான வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் வாசிகசாலையும் நான் பத்தாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது புதிதாகப் பெருப்பித்துக் கட்டப்பட்டு அரிய புத்தகங்களைத் தனக்குள் சேர்த்துக் கொண்டது. அதன் பின் நெற்போல், கிளித்தட்டு.. என்று விளையாட்டு மைதானத்தையே சுற்றிச் சுற்றி வந்த நானும் எனது நண்பிகளும் எமது பெரும்பான்மையான நேரத்தை வாசிகசாலைக்குள் முடக்கிக் கொண்டோம். இலக்கியப்புத்தகங்களும் அவைகள் பற்றியதான நண்பிகளுடனான அலசல்களும்… அது ஒரு ஆனந்தமான பொழுது.

ஒரு முறை, நான் க.பொ.த உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருந்த போது எங்கள் பாடசாலை வாசிகசாலைக்கு வந்த, ஆறுமுகக்கந்தவேள் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, எங்கள் ஊர் கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்திலிருந்து வெளியாகும் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றில் எனது ஆக்கத்துக்கு எனது பெயரிலேயே அதாவது என்னை எனது சகமாணவிகள் கூப்பிடும் “சந்தி” என்ற பெயரிலேயே ஓவியம் வரையப் பட்டிருந்தது. இது பாடசாலையில், மாணவிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியம் எனக்கும் ஓரளவு வரும் என்றாலும் பத்திரிகையில் வருமளவுக்கு நான் வரைந்ததில்லை. “யாரடி அது…? யாரப்பா அது…?” என்று கேள்விக்கணைகள் வேறு. அது மூனாதான் என்பது அப்போது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

எனது கணவரும் ஒரு வாசிப்புப் பிரியர் என்பதை, திருமணத்தின் பின்தான் முழுமையாக அறிந்து கொண்டேன். முதன்முதலாக எனது புகுந்த வீட்டுக்குப் போனபோது, ஏதோ ஒரு தேவைக்காக அவர்களின் ஒரு அறைக்குள் நுழைந்த போது… அங்கும் புத்தகக் குவியல். முதற்புத்தகமாக என் கண்களுக்குள் தட்டுப் பட்டது சாண்டில்யனின் ராஜமுத்திரை. எனது அம்மா போலவே அவர்களும் கதைகளைச் சேர்த்து புத்தகங்களாகக் கட்டி வைத்திருந்தார்கள். அது எனக்கு மிக இனிமையான ஆச்சரியமாகவே இருந்தது. எனது கணவரின் குடும்பம் கொப்பிகள் கட்டும் தொழிற்சாலை ஒன்றை வைத்திருந்தார்கள். Binding என்பது அவர்களுக்கு அத்துபடி. அதனால் எல்லாப் புத்தகங்களையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கட்டி வைத்திருந்தார்கள். எங்கள் திருமணம் நடந்து சில மாதங்களில் “Kamala and Brothers” என்றொரு புத்தகக் கடையையும் குடும்பமாக ஆரம்பித்தார்கள். இது தொடரும் காலங்களிலும் சுடச்சுட வரும் புத்தகங்களையெல்லாம் வாசித்துத் தள்ளுவதற்கு ஏதுவாக இருந்தது.

அந்தக் கால கட்டத்தில்தான் சுஜாதாவின் முதற் கதையான அனிதா இளம் மனைவி என்ற கதையை வாசித்தேன். அந்த நேரத்தில் சுஜாதாவின் எழுத்து நடை, கதை எழுதும் உத்தி… எல்லாமே என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என்னை மட்டுமல்ல, என் கணவரையும்தான். இருவரும் சுஜாதாவின் கதைகளை ஒன்று விடாமல் வாசித்தோம். சுஜாதாவின் கதை, எது புத்தகமாக வந்தாலும் எனது கணவர் அதைத் தப்ப விடுவதில்லை. வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார். பல இரவுகளில் கட்டிலின் ஒரு நுனியில் எனது கணவரும், மறுநுனியில் நானுமாக இருந்து, நித்திரையை மறந்து சுஜாதாவின் கதைகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்திருக்கிறோம். நான் நினைக்கிறேன், 1990க்கு முன் வெளியான சுஜாதாவின் அத்தனை கதைகளையும் நான் வாசித்திருக்கிறேன் என்று. இப்படியே புத்தகங்களும், வாசிப்பும் என்னோடும், என் வாழ்க்கையோடும் மட்டுமன்றி, என் குடும்பத்தோடும் ஒன்றியிருந்தன.

இப்படியிருக்கையில்தான் அமைதியாயிருந்த எங்கள் குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டது. ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலையோசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும் அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின. நாமுண்டு, நம் சொந்தமுண்டு… என்று கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறிபட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும் ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது. உறவுகளை மட்டுமல்ல உடைமைகளையும் இழந்தோம்.

ஓடி வந்து ஜேர்மனியில் தஞ்சம் கோரிய போது பிரிவு, துயர், தனிமை… இவை தவிர வேறெதுவும் எமக்குச் சொந்தமாக இருக்கவில்லை.

எல்லாவற்றையும் இழந்திருந்தோம். துயர் நிரம்பிய மனசுக்குள் மிதந்து வரும் நினைவுகளை மீட்டி மீட்டி வாழத் தொடங்கினோம்.

அந்தக் காலத்தில், யேர்மனியில், அதுவும் நாம் வாழும் நகரில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளிவந்தாலும் எங்கள் கைகளுக்கு அவை கிடைப்பதில்லை.

அந்தச் சமயங்களில் எனது வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. தெரியாத பாசையில் இருந்த புரியாத வரிகளை விளங்குதோ விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளினேன். சில சமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும், வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது தலையைப் பிய்த்துக் கொண்டேன்.

ஊரிலே புத்தககங்களோடேயே வாழ்ந்த எனக்கு மீண்டும் தமிழ்ப்புத்தகங்கள் ஓரளவுக்கேனும் கிடைக்க கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதன் பின்னான ஒரு பொழுதில்தான் எமக்கு எரிமலை, ஈழநாடு போன்றவற்றின் அறிமுகங்கள் கிடைத்தன. அத்தோடு இந்தியாவிலிருந்து ஆனந்தவிகடன், குமுதம், அம்புலிமாமா, Chandamama போன்றவற்றையும் சந்தா கட்டிப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினோம். இவை எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் குழந்தைகளின் வாசிப்பு அவாவுக்கும் பிரியமான தீனியாகின.

புலம் பெயர்ந்த பின்னான இந்த ஆனந்தவிகடன் குமுதம்… போன்றவைகளுடன் மட்டுமாய் இருந்த எனது வாசிப்பு உலகம் 1997 யூன் 9 ஐபிசி தமிழ் வானொலியின் வரவுக்குப் பின் சற்று விரிவடையத் தொடங்கியது.

ஐபிசி தமிழ் வானொலியில் நடைபெற்ற ஒரு நிகழ்சியினூடு சக்தி பெண்கள் இதழின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. சக்தி இதழ் 1990 ஒகஸ்டில் மைத்திரேஜியின் முழுமுயற்சியுடனும் சுகிர்தா, கலிஸ்டா இராஜநாயகம் ஆகியோரின் பங்களிப்புடனும் காலண்டிதழாக ஆரம்பிக்கப் பட்டது. எனக்கு அறிமுகமான அந்தப் பொழுதில் அவ்விதழ் ராஜினி, அநாமிகா, பிறேம்ராஜ்(நோர்வே), ரவி(சுவிஸ்) ஆகியோரின் பக்கத்துணையுடன் தயாநிதியின்(நோர்வே) முழுமுயற்சியுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. சக்தியின் வெளியீடாக 10.7.1999 இல் புது உலகம் எமை நோக்கி என்ற புத்தகம் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் வெளி வந்தது.

இந்தக் கட்டத்தில் ஐபிசியின் இதே நிகழ்ச்சியினூடு லண்டன் நலன்புரிச் சங்க வெளியீடான இன்னுமொருகாலடியின் அறிமுகமும் கிடைத்தது.

சக்தியின் மூலம் மனோகரனின் அம்மா இதழின் அறிமுகம் கிடைத்து அதையும் பெற்று வாசிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்த காலங்களில் ஓரளவுக்கேனும் பரந்துபட்ட சஞ்சிகைகள் வெளியீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன. இருந்தாலும் நான் வாழும் நகரம் தமிழர்களோ, தமிழ்க்கடைகளோ இல்லாத ஒரு நகரமாகையால் புதிய புதிய வெளியீடுகளை வலிந்து தேடிப் பெற்றாலேயன்றி சுலபமாகப் பெறுவதென்பது முடியாத காரியமாகவே இருந்தது.

அப்படியிருந்தும் நானும் எனது கணவருமாக… போகுமிடங்களிலெல்லாம் காணும் புத்தகங்களையெல்லாம் தவறாது வாங்கினோம்.

இப்போது வீடு நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறோம். அன்று ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்த நாம், கணினிக்குள்ளும் ஏன் கைத்தொலைபேசிக்குள் கூட புத்தகங்களைக் கொண்டு திரிகிறோம். இணையவெளியெங்கும் குவிந்திருக்கும் நூல்களை வாசிக்க நேரமின்றித் தவிக்கிறோம்.

- சந்திரவதனா

குறியீடு

Drucken   E-Mail

Related Articles