அழைப்புமணி

பத்தி/Column/Kolumn Zugriffe: 6645
நடுநிசியில் விழிப்பு வந்ததற்கான காரணம் சட்டென்று புரியவில்லை. நெஞ்சு படபடத்தது. உடல் பயத்தில் வெலவெலத்தது. யாராவது அழைப்பு மணியை அழுத்தியிருப்பார்களோ?

பிரமையா, கனவா புரியவில்லை. குழப்பமாக இருந்தது.

சிந்தனைகளின் மீது அறைவது போல மீண்டும் அழைப்பு மணி. இப்போது அது கனவோ, பிரமையோ அல்ல என்பது உறுதியாயிற்று. தூக்கம் முற்றாகக் கலைந்து நெஞ்சு இன்னும் அதிகமாகப் படபடத்தது. அசையவே பயமாக இருந்தது.

என்னவன் என் அருகில்தான் படுத்திருந்தான். ஆனால் அவனும் அசைவற்றுக் கிடப்பது போலவே உணர்ந்தேன். தலையைத் திருப்பாமலே 'சத்தம் கேட்டதா?' என்றேன். 'ம்..' என்ற அவன் பதிலிலும் குழப்பம்.

வெறும் அழைப்பு மணிக்கு இத்தனை குழப்பம் ஏன்? என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவரிடமும் எழலாம். அது அர்த்தஜாமம் என்பதையும் விட, நாம் ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஓரிரு வருடங்கள்தான் ஓடியிருந்தன. ஓடியிருந்தன என்று சொல்வதை விட நகர்ந்திருந்தன என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

அந்த ஓரிரு வருடங்களிலும் நாம் சில மாதங்களை அகதிமுகாம்களில் கழித்து விட்டு, அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. ஜேர்மனியோடு ஒட்டவும் முடியாமல், விட்டிட்டு போர் சூழ்ந்த எமது நாட்டுக்கு ஓடவும் முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்த 1987ம் ஆண்டுக் காலப்பகுதியின் ஒரு மாதம் அது.

அப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

ஆனால் அன்றைய அர்த்தஜாம அழைப்புமணி சற்று வித்தியாசமானது. எமது அட்டவணைக்குள் அடங்காதது. கனவா, பிரமையா எனச் சிந்திக்க வைத்த அழைப்பு மணி நிமிடங்கள் கரையக் கரைய அடிக்கடி அழைத்து சிந்தனைகளையே மழுங்கடித்தது.

அந்த வாரத்தில் ஜேர்மனியின் மன்கைம் நகரை ஒட்டிய ஒரு கிராமத்தில் அகதிகள் அதிகமாக வாழும் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்குள் நெருப்புக் குண்டு எறியப் பட்டு கணவன், மனைவி, மூன்று குழந்தைகள் என ஐவர் கொல்லப் பட்ட செய்தி எம்மையெல்லாம் கலக்கியிருந்தது.

நாம் வாழும் நகரம் மன்கைம் போன்று நாசிகள் வாழும் இடமல்ல. பழமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அமைதியான அழகான நகரம். மாடிக்கு இரு குடும்பமாக ஆறு குடும்பங்கள் வாழும் மூன்று மாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் எங்கள் குடியிருப்பு. ஐந்து அறைகள் கொண்ட விசாலமான வீடு. ஊர் வீடுகள் போல விசாலமாக இல்லாவிட்டாலும் அகதியாகத் தஞ்சம் கோரிய எங்களுக்கு வசதியாக அமைந்த வீடே அது. ஐந்து ஜேர்மனியக் குடும்பங்களுக்கு நடுவில் நாம் ஒரு வெளிநாட்டவர். எமது நகரில் ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும் உயிர் காக்க ஓடி வந்து இன்னொரு நாட்டில் எரிந்து கருகி உயிரைக் கொடுத்தது எமது இலங்கைத் தமிழர் என்ற செய்தியில் நாமும் தடுமாறிப் போய்த்தான் இருந்தோம்.

இந்த நிலையில் நடுநிசியில் அழைப்புமணி கேட்டதும் ஓடிப்போய் கதவைத் திறக்கும் தைரியம் எனக்குத் துப்பரவாக இல்லை. எனது கணவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது பார்ப்போம் என இருவரும் அசையாது படுத்திருந்தோம்.

இப்போது எமது கதவில் பலமாக உதையும் அல்லது இடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் அழைப்பு மணி கீழே வீட்டுக்கு வெளியில் இருந்து அழுத்துவதால் வருகிறதா அல்லது எங்கள் இரண்டாவது மாடிக்கே வந்து அழுத்தப் படுகிறதா என்பது தெரியாதிருந்தது. இப்போது திடமாகத் தெரிந்தது. ஒருவரோ அன்றிப் பலரோ இரண்டாவது மாடியில் உள்ள எமது வீட்டு வாசலில் நின்று கதவை இடிக்கிறார்கள் என்பது.

எனது கற்பனைகள் இப்போது விரியத் தொடங்கி தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கத்திகள், கோடரிகளுடன் வந்திருப்பார்களோ? கதவை இடித்துத் திறந்து வந்து எம்மை வெட்டுவார்களோ? கொட்டன்களால் அடிப்பார்களோ? நடுங்காத குறை. வீட்டுக்குள் பிள்ளகைள் மூவரினதும் நித்திரை மூச்சுக்களும், சுவர்க்கடிகாரத்தின் டிக், டிக் ஓசையும் தெளிவாகக் கேட்டன. என்ன செய்வதென்று தெரியாத அந்தப் பதட்டமான நிலையில் "பொலிசுக்குப் போன் பண்ணுவோம்" என நான்தான் எனது கணவருக்கு ஐடியா கொடுத்தேன்.

இப்போது கதவின் மீது இடைவிடாது இடி விழுந்து கொண்டே இருந்தது. யாரோ உதைவது போன்ற சத்தமே அது. எனது கணவர் ´கதவைத் திறக்கலாம்´ என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலத் தெரிந்தது. நான் தடுத்து விட்டேன். எல்லாம் சைகைகளாலேயே. எமது கதை வெளியில் நிற்பவர்களின் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தேன்.

வாசற்கதவுக்குப் பக்கத்தில் கொறிடோரில்தான் தொலைபேசி இருக்கிறது. இப்போது போல கைகளில் கொண்டு திரியக் கூடிய தொலைபேசியோ அல்லது மொபைல் தொலைபேசியோ அப்போது ஜேர்மனியின் சாதாரண வீடுகளில் இருக்கவில்லை. சுழற்றி அடிக்கும் தொலைபேசி மட்டுமே இருந்தது. வாசற்கதவிலிருந்து கொறிடோரின் இடது பக்கம் வரவேற்பறை. அதைத் தொடர்ந்து மகளின் அறை.. வலது பக்கம் சமையலறை. தொடர்ந்து மூத்தவனதும், சின்னவனதும் அறைகள். கடைசிதான் எமது படுக்கையறை. வெளியில் நிற்பவர்கள் கதவை உடைத்தால் முதலில் எமது பிள்ளைகளின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்கள் என்ற எண்ணம் என் மூளையில் உறைத்துக் கொண்டிருந்தது. அதனால் நானும், கணவருமாக மெதுமெதுவாகத் தொலைபேசியை நோக்கி நடந்தோம். கதவின் மீதான உதை நெஞ்சின் மீது விழுவது போன்ற உணர்வு. பயத்தில் கால்கள் பின்னின.

ஒருவாறு தொலைபேசியைச் சுழற்றி பொலிசுக்கு விடயத்தை சொல்லத் தொடங்கிய போது நாக்குழறியது. ஜேர்மனிக்கு வந்து சில வருடங்கள்தான் என்பதால் எனது மொழிஅறிவும் அந்தமாதிரித்தான் இருந்தது. ஒருவாறு தட்டித் தடவிச் சொல்லி முடிப்பதற்குள் பல தடவைகள் கதவு இடிக்கப் பட்டு விட்டது. சத்தம் பொலிசுக்கும் தொலைபேசி வழியே கேட்டதால் „எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம். நாங்கள் உடனே வருகிறோம்' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்கள்.

அவர்கள் வந்து சேர்வதற்கு எடுத்த அந்த சில நிமிட நேரங்களுக்குள் எங்கள் வீட்டுக்கதவு உடைக்கப் பட்டு விட்டது. ஒரு மல்லன் போன்ற தோற்றம் கொண்ட ஜேர்மனியன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தான். எனக்கு சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கின.

வந்தவன் "ஏன் நீ இங்கே வந்தாய்? இது எனது இடம்..." என்று சொல்லிக் கோபமாகத் திட்டியபடி நேரே என் கணவரை நோக்கி விரைந்து கையை ஓங்கினான். எனது கணவர் சற்றுத் தாமதித்திருந்தாலும் அவனது உரத்த பெரிய கைகள் என் கணவரைப் பலமாகத் தாக்கியிருக்கும். அந்தக் கணத்தில் நான் என் உறைவு நிலையிலிருந்து விழித்து அலறி விட்டேன். அவன் வெளிநாட்டவரை வெறுக்கும் நாசிதான் என்பது எனக்குள் உறுதியாயிற்று.

எனது கணவருக்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. சடாரென்று அவனது இரு கைகளையும் பின் பக்கமாக மடக்கிப் பிடித்து ஏதோ ஒருவித பூட்டுப் போட்டார். அவனை அசையவிடாது அப்படியே நிலத்தில் வீழ்த்தி, அமத்திப் பிடித்தார். ஊரிலே சான்டோ மாஸ்டரிடம் அவர் மல்யுத்தம் பழிகியிருந்ததும், எனது தம்பிமாருடன் விளையாட்டுக்கு பூட்டுப் போட்டுக் கழட்டச் சொல்வதும் அப்போதுதான் என் ஞாபகத்தில் வந்தது. எனக்கு இன்னும் நெஞ்சின் படபடப்பு அடங்கிவில்லையாயினும் ஒருவித நிம்மதி பிறந்தது. பொலிஸ் வரும் வரை தாக்குப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையும் கூடவே வந்தது.

என் கணவரை விட உயரத்திலும் சரி, பருமனிலும் சரி பெரியவனாகத் தோற்றமளித்த அவன் அந்தப் பூட்டிலிருந்து விடுபட முடியாத நிலையில் கத்திக் கொண்டிருந்தான். எங்களைப் பலமாகத் திட்டிக் கொண்டிருந்தான். 'ஏன், இங்கே வந்தீர்கள்?' என்று அடிக்கடி கேட்டான். இந்த அமளியில் எனது மகளும் சின்னவனும் தூக்கம் கலைந்து எழுந்து வந்து விட்டார்கள். எனது அலறல்தான் அவர்களை எழுப்பியிருக்க வேண்டும்.

மூத்தவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே. நான் அவனது அறைக்குச் சென்று அவனைத் தட்டி எழுப்பி "வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா? எழும்பி வா" என்றேன். எழும்பி வந்தவன் நிலைமையைப் புரிந்தவனாய் ஓடிச் சென்று தும்புத்தடியை எடுத்து வந்து, விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, அந்த ஜேர்மனியனின் பின்புயத்தில் இரு அடி கொடுத்து "ஏன் எங்கடை வீட்டை வந்தனி?" எனறு உரத்துக் கேட்டான்.

இதற்குள் பொலிஸ்காரர்கள் இருவர் வந்து விட எனது கணவர் தான் போட்ட பூட்டைத் தளர்த்தி அவனை விடுவித்தார். ஒரு பொலிஸ் அவனிடம் ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு அவனை வெளியில் அழைத்துச் செல்ல மற்றைய பொலிஸ் எம்மிடம் நடந்தவைகளைக் கேட்டு எழுதி கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான்.

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இரு பொலிசுமாக வந்து அசௌகரியங்களுக்கு வருந்துவதாகச் சொல்லி, "நாளை காலையில் ஆட்களை அனுப்புகிறோம். வந்து கதவைத் திருத்தித் தருவார்கள்" என்றும் சொல்லிச் சென்றார்கள்.

எல்லாம் ஓய்ந்தது போல இருந்தாலும் எம்மால் உள்ளார ஓய முடியவில்லை. கதவு உடைந்திருப்பதால் வீட்டைப் பூட்ட முடியாதிருந்தது. யாராவது மீண்டும் வீட்டுக்குள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சின்னவனும், மகளும் தமது படுக்கைகளில் படுக்க மறுத்து எமது படுக்கையறைக்குள் புகுந்து விட்டார்கள். எவரும் சட்டென்று கதவைத் திறந்து வீட்டுக்குள் வந்து விட முடியாத படி வீட்டில் உள்ள கதிரைகள், மேசை என்று எல்லாவற்றையும் கதவோடு அண்டி வைத்தாலும் என்னாலும், கணவராலும் கூட அதற்கு மேல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

விடியுது விடிய முன்னமே எமது வீட்டு வாசலில் இரு தச்சர்கள் வந்து நின்றார்கள். கதவை அழகாகத் திருத்தி விட்டு எம்மிடம் கையெழுத்து மட்டும் வாங்கிச் சென்றார்கள். அதற்கான கட்டணத்தை உடைத்தவனே கட்ட வேண்டும் என்றார்கள்.

இரவின் தாக்கம் எமது அடுத்தநாள் காலையையும் அசாதாரணமாக்கியிருந்தது. ´தொடர்ந்து ஜேர்மனியில் வாழ முடியுமா´ என்ற குழப்பம் நிறைந்த கேள்வி எங்களுக்குள். அன்று சனிக்கிழமை என்பதால் பிள்ளைகளும் வீட்டில்தான் நின்றார்கள்.

ஒரு பதினொரு மணியளவில் எமது வீட்டின் அழைப்பு மணி. நான்தான் ஓடிப்போய் சாத்தியிருந்த கதவைத் திறந்தேன். அவனேதான். இரவு எங்களைக் குழப்பிய அதே ஜேர்மனியன் வாசலில் நின்றான். நான் அதிர்ந்து போய் அலறுவதற்கிடையில்.. "பயப்படாதே. நான் மன்னிப்புக் கேட்கத்தான் வந்திருக்கிறேன்" என்றான். நான் கொஞ்சம் அமைதியாகினேன்.

"இரவு தந்த அசௌகரியத்துக்கு மன்னித்துக் கொள். நான் நேற்று ஒரு பார்ட்டியில் நிறையக் குடித்திருந்தேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் வெளியிலிருந்து வந்தேன். மாறித்தான் உனது வீட்டைத் தட்டினேன். உனக்கு மேலே மூன்றாவது மாடியில்தான் நான் எனது குடும்பத்துடன் வசிக்கிறேன். குடிபோதையில் மூன்றாவது மாடிக்குப் பதிலாக இரண்டாவது மாடியில் உள்ள உனது வீட்டுக்குள் நுழைந்து விட்டேன். மன்னித்துக் கொள்" என்றான்.

சந்திரவதனா
ஜேர்மனி
12.6.2008


பிரசுரம் - July யுகமாயினி

கருத்துக்கள்
Drucken

Related Articles

அந்த நாட்கள்

அவள் வருகிறாள்

சில பக்கங்கள்

தவிர்க்க முடியாதவைகளாய்...

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை