ஐயாக்குட்டி

நான் ரசித்த படங்களில் ஒன்று குணா. அதில் கமலஹாசன் மூளைவளர்ச்சி குன்றிய ஒருவராக நடிகின்றார். ஒரு பெண்ணை உயிருக்கு மேலாகக் காதலிக்கிறார். காதலிப்பதோடு நில்லாமல் தன் காதலியை கடத்திச் சென்று மலை உச்சியில் உள்ள குகை ஒன்றில் தங்க வைத்துள்ளார். அந்தக் காதலை சில வரிகளில் சொல்ல அவர் காதலி அதை பாட்டாகப் பாடுவார்.

"மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது"

 இந்த வரிகள் குகைச்சுவர்களில் பட்டு எதிரொலிக்கும். அதே மாதிரி சிலவேளைகளில் இடையிடையே என் மனதிலும் எதிரொலிக்கும். நேரம் கிடைக்கும் போது சிலசில கட்டங்களை டிவிடியில் போட்டுப் பார்ப்பேன். ஆனால் என் மனைவி அதைத் தடுத்து விடுவா. அவவின் எண்ணம் இந்த மனுஷனுக்கு குணா மாதிரி தட்டி போட்டுதோ என்று. ஆனால் எனது பழைய நினைவுகளை மீட்டும் போதுதான் அதன் உள்ளார்த்தம் புரிந்தது.

அப்பாவின் வேலை எப்போதும் ஒரு ஆசுபத்திரியில்தான். எனவே எங்கள் சிறுபிராயத்தில் ஆசுபத்திரியை அண்டிய இடங்களிலேயே வாழ்ந்தோம். நான் மூன்று வயதாக இருக்கும் போது அப்பா முல்லேரியா ஆசுப்பத்திரியில் வேலை  செய்தார். அவருக்கு ஆசுப்பத்திரிக்குப் பக்கத்தில் quarters கொடுத்து இருந்தார்கள். களுபோவில வீடுமாதிரி இது பெரிதல்ல. ஆனால் அளவான வீடு. பெரிய காணி. வீட்டில் தென்னை, முருங்கை, பப்பாசி, மரவள்ளி போன்ற மரங்களும் வேலியில் கோப்பி போன்ற மரங்களும் நிறையவே இருந்தன. அப்பா அம்மாவோடு நாம் நான்கு பிள்ளைகள்

அப்பா வேலை செய்யும் ஆசுபத்திரி மனநோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் இடம். அவர்களில் பலவகை. ஐயாக்குட்டி தீவிர மனநோயாளியாக இருந்து இப்பொழுது சிறிது குணமடைந்து வெளியே நடமாட அனுமதி உள்ளவன் . அவன் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று வேலைகள் செய்து அதற்குப் பிரதியாக உணவுப் பண்டங்களைப் பெறுவான். எங்கள் வீட்டுக்கும் வந்து போவான்.

ஐயாக்குட்டி பெருத்த தேகமும், சராசரி உயரமும் கொண்டவன். ஏறத்தாழ நாற்பது வயது இருக்கும். அவனுக்கு சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லை. பழகும் அனைவரையும் சொந்தங்களாகவே நினைப்பான். படிப்படியாக அவனுக்கு எங்கள் மேலே மிகுந்த பாசம் அதிகரித்தது. இப்பொழுது அவன் வேறு வீடுகளுக்கு செல்வதைக் குறைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கே நேரே வந்து விடுவான். வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். பாரதியாரின் கண்ணன் என் சேவகன் பாடல் தான் அவனை நினைத்தால் ஞாபகத்துக்கு வரும்.

எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை காண்பதற்கே
என்ன தவம் செய்து விட்டேன்
சொன்னபடி கேட்பான்
துணிமணிகள் காத்திடுவான்

சின்ன குழந்தைகளுக்கு
சிங்கார பாட்டிசைப்பான்
கண்ணை இமை காப்பதுபோல்
என்குடும்பம் வண்ணமுற காத்திடுவான்

கொடுத்ததெல்லாம் செய்திடுவான்
கூலி ஒன்றும் கேளான்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் ...


ஐயாக்குட்டியை சரியாக வர்ணிக்க பாரதியார் போன்ற மகாகவியே கைகொடுக்க வேண்டும்.

மாலை வேளைகளில் நாங்கள் ஐயாக்குட்டியுடன் பக்கத்திலுள்ள றப்பர்த் தோட்டங்களுக்கு போய் யாரும் பார்க்காத சமயத்தில் ரப்பர் பால் உள்ள சிரட்டைகளைக் கள்ளமாக எடுப்பது எமது வழக்கமாகி விட்டது. அந்த ரப்பர்ப் பாலில் பந்து செய்து விளையாடியது இன்று போலுள்ளது. அவன் சமீபத்தில் குணமடைந்த அல்லது குணமடைந்து வரும் மனநோயாளியான போதிலும் எனது பெற்றோர் அவனுடன் எங்களை அனுப்புவதில் எந்தத தயக்கமும் காட்டுவதில்லை.

 நாங்கள் மட்டுமல்ல எங்கள் பெரியப்பாவின் பிள்ளைகள், மூத்தமாமாவின் பிள்ளைகள் எல்லோரும் விடுமுறையில் வந்து எம்மோடு நிற்பார்கள். அப்போது நாம் ஐயாக்குட்டியுடன் சேர்ந்து அடிக்கும் கூத்து மறக்க முடியாதது. தொட்டாச்சுருங்கி செடியோடு விளையாடுவது தொடங்கி ரப்பர்தோட்டத்தில் ரப்பர்பால் திருடுவது எல்லாம் அத்துபடி. சிரட்டையில் வடியும் ரப்பர்பாலை எடுத்து பந்து செய்து விளையாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

அவனுடைய அன்றாட கருமங்களில் ஒன்று ஒருவயதான தம்பியை விறாந்தையில் இருந்து விழாமல் பார்ப்பது. அவன் விறாந்தையில் இருந்து கொண்டு எங்களோடு விளையாடுவான் இடைக்கிடை குசினியில் உள்ள அம்மாவோடு கதைப்பான். தம்பி விறாந்தையின் விளிம்புக்குச் சென்றால் தம்பியை அதட்டி மேலும் போகாமல் தடுப்பான். அதையும் மீறி தம்பி விளிம்புக்குச் சென்றால் அம்மாவைச் சத்தமாக கூபிட்டு தம்பியை வந்து தூக்கச் சொல்லுவான்.

மேலும் அவனுக்கு பிடித்த ஒன்று விறாந்தயில் மல்லாக்காக படித்திருந்து கொண்டு எங்களை அவன் நெஞ்சில் கால்களில் மிதித்து தொங்குமாறு கூறுவான். அக்கா அண்ணா நான் எல்லோரும் அவன் நெஞ்சில் எகிறி தொங்குவோம். இது எங்களுக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு. பின்னர் அப்பா சொல்ல விளங்கியது அவனுக்கு மூட்டுநோ இருந்தது என்றும் நாம் ஏறி மிதிப்பது அவனுக்கு ஒத்தடம் கொடுப்பது மாதிரி.

எந்தவொரு இனிமையான அனுபவுமும் பலகாலம் நிலைபதில்லை. அவ்வாறேதான் ஐயாக்குட்டியுடன் எங்கள் பொழுதும். அண்ணா பாடசாலைக்கு செல்லும் பருவம் வந்து விட்டது. அப்பா முல்லேரியாவில் நல்ல பாடசாலை இல்லையென்று எங்களை ஊருக்கு அனுப்ப தீர்மானித்தார். அம்மா ஐயாக்குட்டிக்கு போவதற்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்கூறினா . ஐயாக்குட்டி அதிர்ச்சி அடைந்தான். அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை.வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. கையில் இருந்த தேங்காயை கோபத்துடன் எறிந்து விட்டு விறுவிறு என்று நடந்து ஆசுபத்திரிக்கு போய்விட்டான். எங்கள் எல்லோருடைய மனமும் அவன் எறிந்த தேங்காய் போல் சுக்குநூறாக உடைந்து கிடந்தது.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. Time and tide wait for no one. நாம் ஊருக்கு போகும் நாள் வந்தது. நாம் போவதற்கு தயாராக இருந்தோம். அப்பாவின் வாடகைகார் வாசலில் வந்து நின்றது. காரை கண்டவுடன் எங்களுக்கு ஏகப்பட்ட சந்தோசம். அதுதான் நான் அறிந்த முதல் கார்பயணம். ஓடிபோய் காருக்குள் ஏறினோம். ஐயாக்குட்டி எங்களை சலனமில்லாமல் பார்த்தபடி பேசாமல் நின்றான். அம்மா வீட்குள் இருந்து வந்து காரில் ஏறச்சென்றா. அவவால் ஐயாக்குட்டியை தாண்டிச் செல்லமுடியவில்லை.

இருவரும் ஒரு வசனம் கூட பேசவில்லை. பேசாமல் அப்படியே நின்றனர்.

"பேசமறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி"

கண்ணதாசன் வரிகள்

 

ஐயாக்குட்டிக்கு அம்மாவிடம் இருந்த பாசமும் அம்மாவிற்கு அவனிடம் இருந்த பாசமும் இந்த பிரிவை தாங்கமுடியாதவை.  அப்பா அம்மாவிடம் அவனுக்காக செய்த சாப்பாட்டை குடுக்கும்படி கூறினர். அம்மா வாழையிலையில் சுற்றிய ரொட்டியையும் பச்சை சம்பலையும் அவனிடன் கொடுத்தா. ஆம் அவனுக்கு அவ்வாறு எளிமையான உணவுகள்தான் பிடிக்கும். ஆனால் நிறைய வேண்டும்.

அவன் வாங்காமல் எதோ ஏகாந்தத்தில் இருந்தான். அப்பா அதட்டினார் "சாப்பாட்டை வாங்கு", ஐயாக்குட்டி வேண்டாவெறுப்பாக வாங்கினான். அப்பா மீண்டும் அதட்டினார் "பிள்ளை காருக்குள் ஏறும்". ஆம் அப்பாவுக்கு அம்மாவும் ஒரு பிள்ளை மாதிரிதான். அம்மா காருக்குள் பின்சீட்டில் எங்களுடன் ஏறினா. அப்பா அதை தொடர்ந்து முன்சீட்டில் ஏறினார்.

கார் வெளிக்கிட தயார் ஆனது. அப்பா கார் ஜன்னலின் ஊடாக ஐயாக்குட்டியை கூப்பிட்டார். ஐயாக்குட்டி கிட்டே வந்தான், அப்பா அவனுடைய கையில் சில நோட்டுக்களை திணித்து "இதை செலவுக்கு வைத்திரு" என்று கூறினர். அவன் "ஐயா இது எனக்கு வேண்டாம்" என கூறினான். அப்பாவின் கண்கள் ஈராமாக இருந்ததை நான் இப்போதுதான் முதல் முறையாக என் வாழ்க்கையில்  பார்க்கின்றேன். ஆனால் அவர் கஷ்டபட்டு தன் சோகத்தை மறைத்ததையும் என்னால் தெளிவாக உணரமுடிந்தது. அப்பா மீண்டும் அதட்டினார். அவன் அப்பாவின் சொல்லை மீறமுடியாமல் பணத்தை வாங்கினான்.

அப்பா டிரைவரிடம் காரை எடுக்கும்படி கூறினார். நாங்கள் பின்ஜன்னலின் ஊடாக அவனுக்கு கைஅசைத்த படியே. அம்மாவும் அப்பாவும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அப்படியே முன்னர் பார்த்தபடி இருந்தனர். அவன் மறையும் மட்டும் நாங்கள் கைஅசைப்பதை நிறுத்தவில்லை. இறுதியாக ரயிலில் ஏறினோம். அத்துடன் நாங்கள் ஐயாக்குட்டியை மறந்துவிட்டு ரயில் பயணத்தை ரசித்தோம்.

மதியஉணவுவேளை வந்தது. அப்பா மேலே உள்ள சூட்கேசில் இருந்த உணவு பார்சலை எடுத்து பிரித்தார். அதில் இருந்த ரொட்டியை கண்டதும் அம்மாவின் முகம் மாறதொடங்கியது. கேவிகேவி அழுதா. அப்பா ஆறுதல்படுத்தினார். அப்பா அம்மாவின் கவலையை குறைக்க பொய்க்கு ஐயாக்குட்டியை ஊருக்கு கூப்பிட போவதாக கூறினார், அம்மாவிற்கு நான்கு பிள்ளைகள் என்றாலும் மனதாலும் வயதாலும் அவ குழந்தைதான். 25 வயதில் நான்கு பிள்ளைகள். பிறந்தவீட்டில் நான்கு சகோதரர்களுக்கு ஒரேஒரு பெண்பிள்ளை. அம்மாவின் அழுகையை அப்பாவால் நிறுத்த முடியவில்லை, பயணம் முழுவதும் அம்மா ஒன்றும் சாப்பிடவில்லை. அப்பாவும்தான். 

பின்னர் அப்பா விசாரித்ததில் ஐயாக்குட்டி அங்கு முல்லேரியாவில் இல்லை என்றும் தனது சொந்தஊருக்கு போய்விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் நாம் அறிந்தவரை அவன் முல்லேரியாவில் இருந்தபோது அவனை பார்க்க சொந்தம் என்று எவரும் வரவில்லை. பந்தம் என்று நாங்கள் இருந்தோம். இப்போது அவனுக்கு சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை.

எமது குடும்பத்துக்கும் ஐயாக்குட்டிகும் இருந்த உறவை சாதாரண வார்த்தைகளில் கூறமுடியாது. அதையும் தாண்டி புனிதமானது. ஐயாக்குட்டியை நினைவுகூர எங்களிடம் ஒரு போட்டோ கூடஇல்லை. ஆனால் நிச்சயமாக அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, நான்  எங்களின் வாழ்வுள்ளவரை அவனை எம் நினைவில் இருந்து நீக்கமுடியாது . நாங்கள் மட்டுமல்ல எங்கள் மாமா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகளாலும் அவனை மறக்கமுடியாது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்.

விசாகுலன்
Quelle - Thendral Friday, 8 March 2013

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை