மோனைப் பொருளே மூத்தவனே!

„பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே
மோனைப் பொருளே மூத்தவனே கணேசா இந்த ஏழையைப் பாருமையா...'

கணேசனைப் பார்த்து நாங்கள் எல்லோரும் கிண்டல் செய்து பாடும் பாடல் இது. பானை வயிறும்,  கணேசன் என்ற பெயரும் பிள்ளையாருக்கும,; கணேசனுக்கும் மகா பொருத்தம். நாங்கள், தன்னைக் கேலி செய்து பாடுவதாக அவன் எப்பொழுதும் நினைத்தது கிடையாது. புன்னகையுடன் நாங்கள் பாடுவதை ரசிப்பான். ஆனால் அவனிடம் இருந்த புன்னகை ஒரு சமயம் தொலைந்து போயிற்று. எப்பொழுதும் இறுக்கமான முகத்துடனே இருந்தான். எங்களிடம் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறானா என்ற சந்தேகம் கூட எனக்கு இருந்தது.

ஒருநாள் என்னைச் சந்திக்க ஆறு கிலோமீற்றர் தூரத்தில் இருந்து சைக்களில் வந்தான். „சந்தையிலை உனக்கு யாரையாவது தெரியுமோ?' கணேசன் என்னைக் கேட்ட பொழுது, எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏன் இந்தக் கேள்வி என்ற பாவனையுடன் அவனைப் பார்த்தேன்.

„பிலாப்பழம் வேண்டோணும் மச்சான்' என்றான்.

„அதுக்கு சந்தையிலை ஆரையாவது தெரியோணும் எண்டில்லை பழம் பிடிச்சு, விலையும் சரியா அமைஞ்சால் வாக்கிக் கொள்ளலாம்' என் பாணியில் சொன்னேன்.

„பழத்தை வெட்டி சுளைகளைத் தனியா எடுத்துத் தரோணும்..' அவன் சொன்னதில் இறுக்கம் இருந்தது.

„பகிடி விடுறியே..? சந்தை வியாபாரத்திலை களை கட்டி இருக்கு.. இந்த நேரத்திலை... அதுவும் பிலாப்பழத்தை நோண்டுற வேலை...'

„எனக்கோ வீட்டுக்கோ இல்லை மச்சான்... அவங்களுக்கு..'

அவங்களுக்கு என்ற வார்த்தை என்னை நிதானிக்க வைத்தது. கணேசனை நிமிர்ந்து பார்த்தேன்.

கணேசன் பார்வையால் ஆமோதித்தான். அந்தக் காலகட்டத்தில் பெரியவர்களுக்கு அவர்கள் „பெடியள்' எங்களுக்கு „அவங்கள்'.

„மூன்று நாளா இருக்கிறாங்கள். அங்கை இருக்கிறவையள் ஆளாளுக்கு முறை வைச்சு சாப்பாடு  குடுக்கினம். பிலாப்பழ சீசன். அவங்களுக்கு வாங்க நேரம் எங்கே. அதுதான் நான்...„ கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரைக் கொண்டு பிலாப்பழத்தை வெட்டி சுளைகளைத் தனியாக எடுப்பிக்கலாம் என்ற சிந்தனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. உடனடியாக என் நினைவில் தட்டுப்பட்டவர், என்னுடன் படித்த இராஜகோபாலின் தாயார். அவர் சந்தையில் பழ வியாபாரம் செய்பவர். கணேசனைக் கூட்டிக் கொண்டு அவரிடம் போய் விசயத்தைச் சொன்னேன். மறு வார்த்தை இல்லை. „ஒரு பதினைஞ்சு நிமிசம் பொறுத்து வா' என்றார்.

பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக கொஞ்ச நேரம் கழித்துப் போனோம். பிளாஸ்ரிக் பைகளில் போட்டு வைத்திருந்த பிலாப்பழச் சுளைகளைத் தந்தார். „எவ்வளவு?' என்று விலை கேட்டேன்.
„என்னால் முடிஞ்சது இதுதான் தம்பிமார், கொண்டே குடுங்கோ' என்றார். எவ்வளவோ கேட்டும் அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
கணேசன் பழங்களுடன் புறப்பட்டுப் போனான்.

இரண்டு நாட்களாக சந்தை ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது. அந்த நகரத்தில் நடந்த சோகமான சம்பவம் தான் அதற்குக் காரணம். ராஜகோபாலின் தாயார் இன்று பழத்துக்கு பணம் வாங்காததற்குப் பின்னணியில் அந்த சம்பவமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

„லாலா' என்கிற றஞ்சனை நாங்கள் இழந்திருந்தோம். ஒரு வானில் போராளிகள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால்; நோட்டம் பார்த்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் லாலா  பயணித்துக் கொண்டிருந்தான். அவனது சமிக்கையை வைத்தே வானில் இருப்பவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சந்தியில் அதிரடிப் படையின் ஜீப் வருவதை லாலா கண்டு விட்டான். ஆனால் உடனடியாக வானில் இருப்பவர்களுக்கு அறிவிக்க முடியவில்லை. மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு சென்று அவர்களுக்கு அறிவிக்கலாம் என்றால், அதற்குள் ஜீப் இவர்களை நெருங்கி விடும். அதுவே எல்லோருக்கும் ஆபத்தாகப் போய்விடும். இருந்த சொற்பக் கணத்தில் லாலா முடிவெடுத்தான். தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகப் படுத்தினான். அதிரடிப் படையின் ஜீப்புடன்; மோதுவது போன்று  வாகனத்தைச் செலுத்தி சந்தியில் பாதை மாற்றி ஓட்டினான். அது அந்த அதிரடிப் படைக்குப் போதுமானதாக இருந்தது. அவர்கள் அவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். வானில் பயணித்துக் கொண்டிருந்த போராளிகள் நிலமையைப் புரிந்து கொண்டார்கள். பாதையை மாற்றிக் கொண்டார்கள்.
எல்லோரும் மாலையில் இருப்பிடம் திரும்பி விட்டார்கள். லாலாவைத் தவிர. லாலாவின் உடலம் போதானா வைத்தியசாலையில் இருந்தது. சயனைற் அருந்தி இருந்தான். துப்பாக்கியால் சுட்ட அடையாளமும் அவனுடலில் இருந்தது. அதிரடிப் படையால் சுடப்பட்ட பின் சயனைற் சாப்பிட்டானா? சயனைற் சாப்பிட்ட பின்னர்தான் அவர்கள் சுட்டார்களா என்று தெரியவில்லை. பல கதைகள் ஊருக்குள் உலா வந்தன. ஆனால் பெரிதும் நொந்து போயிருந்தது, வானில் பயணித்த லாலாவின் போராளி நண்பர்கள்தான். „அந்த அதிரடிப் படையை கூண்டோடு அழிப்போம்' அவர்கள் அப்படி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

அவர்கள்தான் இப்பொழுது இரும்பு மதவடியில் கண்ணி வெடி வைத்து அதிரடிப் படையின் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுப்பதற்குத்தான் கணேசன் பழம் வாங்கிப் போகிறான்.

நாட்கள் ஓடினவே தவிர அதிரடிப்படை அந்தப் பாதையில் பயணிக்கவில்லை. யாராவது தகவல் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கதையும் மெல்ல வெளிவரத் தொடங்கியிருந்தது. நாளடைவில்  இரும்பு மதவடியில் அவர்கள் தங்கள் எதிரிகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை பலர் மறந்து போயினர். „பெடியள் கண்ணி வெடியைக் கழட்டிக் கொண்டு போட்டாங்களாம் என்;று ஒரு கதை வெளிவந்தது' அந்தப் பாதையில் பயணிக்கப் பயந்திருந்தவர்களும் தாராளமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் இலக்குக்காக காத்திருக்கிறார்கள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

ஒரு பகல் நேரம். நகரமே அந்த அதிர்வால் ஆடியது. இரும்பு மதவடியில் கண்ணி வெடித்திருந்தது. தூக்கி எறியப்பட்ட அதிரடிப் படையின் ஜீப், தான் வந்த பாதையை நோக்கியவாறு சிதைந்து போயிருந்தது. கொஞ்ச நேரம்தான் ஆகி இருக்கும். கடலில் இருந்து செல்கள் வந்து விழ ஆரம்பித்தன. நகரம் வேகமாகக் கலைய ஆரம்பித்தது. மாலையில் வீட்டில் இருந்தேன். கணேசன் வந்தான் களைத்திருந்தான். கூடவே மூன்று குடும்பங்களைக் கூட்டி வந்தான்.

'மச்சான் அங்கை இருக்கேலாது. குண்டு போடுறாங்கள். இவையள் இஞ்சை இருக்கட்டும். எல்லாம் தணிஞ்சாப் போலை போயிடுவினம்' உரிமையோடு என்னைக் கேட்டான். அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும், உணவையும் ஏற்படுத்திக் கொடுத்தேன். நன்றியோடு என் கையைப் பிடித்தான். அன்று என்னுடன்தான் அவன் இருந்தான். மறுநாட் காலை நான் எழுவதற்கு முன்னரே  அவன் எழுந்து, தான் கூட்டி வந்தவர்களுக்கான தேவைகளைச் செய்து கொண்டிருந்தான். காலையில் நானும் அவனும் ஒன்றாக உணவருந்தினோம். சாப்பாட்டுக்குப் பின் தான் போக வேண்டும் என்றான். ஏன், எதற்கு என்று நான் அவனைக் கேட்கவில்லை. எனக்குப் புரிந்திருந்தது. என்னிடம் விடைபெற்று வாசல்வரை சென்றவன், திரும்பி வந்தான்.
„மச்சான் நான் முழுக்க நனைஞ்சவன். நீ கையை மட்டும் நனைக்கிற ஆள். நாங்கள் இடங்களை மாத்திக்  கொண்டிருப்போம். உங்கள் தரவளிகளுக்குத்தான் ஆபத்து. பேசாமல் நீயும் வெளிநாடு போயிடன்' என்றான் சிரிப்பாலே பதில் சொன்னேன. பதிலுக்கு அவனும் சிரித்து விட்டுப் போனான்.

சுற்றி வளைப்பு, தலையாட்டிகள், கைதுகள், சித்திரவதைகள், சூடுகள் என நிலமைகள் மோசமாக மாறிப் போயின. எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருந்தேன். முடியாத ஒரு கட்டத்தில் நானும் விமானம் ஏறி வெளிநாடு வந்து விட்டேன்.

இங்கே நான் இருந்த அகதி முகாமில் பல நாட்டவர்கள் இருந்தார்கள். தொலைக்காட்சி ஒன்றும் வானொலிப் பெட்டி ஒன்றும் எல்லோருக்காகவும் பொதுவாக இருந்தது. தொலைக்காட்சி எப்பொழுதும் மற்றய நாட்டவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். வானொலிப் பெட்டி மட்டும் அநாதையாக இருக்கும். பிபிசி, வெரித்தாஸ் செய்திகளைக் கேட்க அந்த வானொலி எனக்குப் பயன் பட்டது. அன்றும்  செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். „நேவி சுட்டதில் கடலில் 24 தமிழர்கள் பலி' தலைப்புச் செய்தியைக் கேட்ட பொழுதே தலை கிறுகிறுத்தது. சில நாட்கள் கழித்து ஊரில் இருந்து கடிதம் வந்திருந்தது. அந்த 24 பேரில் கணேசனும் இருந்தான் என்கிற செய்தி அதில் இருந்தது.
இருபத்தியொன்பது வருடங்கள் ஆயிற்று. என்னை „வெளிநாடு போ' என்று சொன்னவனிடம் „நீயும் வா' என்று ஏன் நான் அன்று கேட்கவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு இன்றும் என்னுள்  இருக்கிறது. நான் எவ்வளவு சுயநலவாதியாக இருந்திருக்கிறேன் என்பது இப்பொழுது புரிகிறது.

- ஆழ்வாப்பிள்ளை
17.11.2013

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை