செய்நன்றி

பிறந்த இடத்திலேயே வாழ்ந்து இறந்துவிடும் பாக்கியம் பலருக்கு இன்றைய காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. பழைய வாழ்க்கையை அசை போடும் நிகழ்வுகளும், பால்ய நண்பர்களை மீண்டும் சந்திக்க மாட்டோமா  என்ற  உள்ளிருக்கும் ஆசைகளும் கூடவே வந்து கொண்டிருக்கும். இதில் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள், தொழில் சார்ந்தவர்கள், அங்கு உதவி செய்தவர்கள், ஏற்றி விட்ட நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள்.. என்று பலர் அன்றாடம் நினைவுகளில் வந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

ஆலாலும் பலர் தங்களுக்குத் தேவையான  உதவிகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் காணாமல் போய்விடுவார்கள். வந்த பாதையை, முன்பு வாழ்ந்த வாழ்க்கையை மறந்து வசதியான வாழ்க்கைக்குள் ஐக்கியமாகி விடுவார்கள். வீதியில் எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தாலும் கூட „ஆ.. எப்பிடி இருக்கிறீர்கள்? அவசரமாகப் போகிறேன். பிறகு கதைக்கிறேன்'  அவ்வளவுதான் அவர்களிடம் இருந்து வரும். அதன் பின்னர் அப்படியே அவர்கள் மறைந்து போய் விடுவார்கள். மீண்டும் எங்காவது எப்போதாவது இதே பல்லவி தொடரும். அல்லது இல்லாமலே போய்விடும்.

சமீபத்தில் யேர்மனிய தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த போது இந்த நினைவுகள்தான் என்னுள் படங்களாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சி என்னுள்ளும் ஒரு மகிழ்வைத் தந்தது. எனது இரு கண்களிலும் மெலிதான ஒரு ஈரக்கசிவு.

59 வயதான டீற்றர் போலன் ஒரு யேர்மனியப் பொப் பாடகர். பொப் பாடகர் என்ற  வகையிலேயே அதிகமாக யேர்மனியில் பிரபல்லயமானவர். ஆனாலும் பன்முகக் கலைஞர். இசை அமைப்பாளர், பாடகர், கவிஞர், தொலைக் காட்சி நிகழ்ச்சி நடுவர், இசைத்தடடு வெளியீட்டாளர், தயாரிப்பாளர்... என அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். யேர்மனிய அரச தொலைக்காட்சியின் செய்திக்கு முன்னராக வரும் இசை கூட இவர் கோர்த்த இசைதான். இவர் இசை அமைத்து இவரது நண்பர் தோமஸ் உடன் பாடி எண்பதின் ஆரம்பத்தில் வெளியான „செரி செரி லேடி..' „யூ ஆர் மை கார்ட் யூ ஆர் மை லவ்..' என்ற பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் விற்பனைச் சாதனையின் சிகரத்தைத் தொட்டன.

29.09.2013 யேர்மனியத் தொலைக்காட்சியில் சுப்பர் ரலண்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. யேர்மனியர் மட்டுமன்றி உலகநாடுகளில் இருந்து பலர் வந்து பங்கு கொள்ளும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி அது. டீற்றர்  போலன் பிரதான நடுவராக அமர்ந்திருந்தார். மேடையில் 70 வயது முதியவர் கையில் கிளாரினெற்; உடன் வந்து நின்றார். அவரைக் கண்டதும் டீற்றர் போலனின் முகத்தில் ஒரு சலனம். மேடையில் நின்றவர் தன்னை மைக்கின் முன் நின்று அறிமுகம் செய்யத் தொடங்கினார். „ எனது பெயர் ரைனர் பெல்சென். வயது 70. கிளாரினெற்றில் ஒரு மெலடியை வாசித்து எனது திறமையை உங்களுக்குக் காண்பிக்க வந்திருக்கிறேன்' அவர் பேசத் தொடங்கிய போதே  டீற்றர் போலன் தனது இருக்கையை விட்டு எழுந்து விட்டார். „ரைனர் நீயா?'  டீற்றரினால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர். „எனக்கு வார்த்தைகள் எல்லாம் மறந்து போயிற்று. பேசமுடியவில்லையே'  சொல்லிக் கொண்டே மேடையேறினார். தனது இரு கைகளை நீட்டி ரைனரை இறுகத் தழுவிக் கொண்டார்.

„உன்னைச் சந்தித்து 35 வருடங்களுக்கு மேலாகி விட்டது. எப்பிடி இருக்கிறாய்?. நலமாக இருக்கிறாயா?..' டீற்றரிடம் இருந்து வார்த்தைகள் தடுமாறி வந்து கொண்டிருந்தன. ரைனர் டீற்றரின் தழுவலில் மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பார்வையாளராக வந்திருந்தவர்களிடம் என்ன நடக்கிறது என்று தெரியாத ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. இயற்கையில் தனது அணுகுமுறையிலும், தீர்ப்பு வழங்குவதிலும், விமர்சனங்களை வைப்பதிலும் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கும் டீற்றரா மேடையில் கண்கள் கலங்க நின்று கொண்டிருப்பது என்று அவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்ததில் ஆச்சரியம் இல்லைத்தான்.
டீற்றரே அங்கிருந்த அமைதியை நீக்கினார். „இதோ.. இங்கே நின்றிருக்கும் ரைனர்தான் என்னை இசை உலகுக்கு அறிமுகம் செய்தவர். பல்கலைக் கழக படிப்பை முடித்து விட்டு, இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற நினைவோடு அலைந்த எனக்கு யாருமே உதவவில்லை. நூற்றுக் கணக்கான இசைத் தயாரிப்பாளர்கள், நிறுவனங்களுக்கு விண்ணப்பங்கள் செய்தபோதும் அவை எல்லாமே திரும்பி வந்தனவே தவிர, என்னை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. ரைனர் சின்னதாக ஒரு நிறுவனம் வைத்திருந்தார். அவர்தான் என்னை ஆதரித்தார். அங்கிருந்துதான் என் இசைப் பயணம் தொடங்கியது. இவர் இல்லை என்றால், இந்தளவுக்கு நான் வர வாய்ப்பேயில்லை.' டீற்றர் பேசுவதை அமைதியாக முகம் முழுவதும் சிரிப்புடன்; கேட்டுக் கொண்டிருந்த ரைனர் தனது வார்த்தைகளையும் அங்கே தந்தார்.

„டீற்றர் என்ற அந்த இளைஞன் கையில் கிற்றாருடன் என்னை வந்து சந்தித்த போதே புரிந்து கொண்டேன். இந்த இளைஞன் சாதிக்கப் பிறந்தவன் என்று. தான் கோர்த்து வந்த இசையை டீற்றர் என் முன் தவள விட்ட போதே அது மேலும் நிரூபணமாயிற்று. டீற்றரிடம் அசாத்தியமான திறமை இருக்கிறது. அதுவே அவனை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது'
ரைனர் பேசும் போதே அரங்கில் இருந்தவர்கள், நடுவர்கள் எல்லோரும் எழுந்து நின்று ரைனருக்கு கரகோசம் செய்து தங்களது வாழ்த்துக்களையும் அன்புகளையும் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். டீற்றரும் தொடர்ந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டியதால் தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். ரைனரும் ஒரு போட்டியாளராக தனது மெலடியை கிளாரினெற்றில் வாசித்து எல்லோரையும் மகிழ்வித்து, பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டு மேடையில் இருந்து நகர்ந்தார்.

வழமையாக மேடையில் திறமையாக நிகழ்ச்சியை வழங்குபவர்களுக்கு பாராட்டுக்களுடன் ஒரு நட்சத்திர மாலையை அணிவிப்பது முறை. ரைனரை திடீரென சந்தித்த இன்ப அதிர்ச்சியில் டீற்றர் அதை அறவே மறந்து போய்விட்டிருந்தார். மற்றைய நடுவர்கள் அதை டீற்றருக்கு நினைவு படுத்தவே, தன்னை சுதாகரித்துக் கொண்டு மேடையை விட்டு வெளியேறியிருந்த ரைனரை தேடி ஓடத்தொடங்கினார். மேடைக்கு உட்புறமாக ரைனரைக் கண்டு அந்த மாலையை அவருக்கு அணிவித்து விட்டு, அந்த சிறிது நேர இடைவெளியில் „ உனக்கேதும் சிரமங்கள் இருக்கிறதா? நலமா இருக்கிறாயா? எதுவும் தேவை என்றால் எனக்கு போன் செய். என்னைக் கட்டாயமாக வந்து சந்தி..' சொல்லி விட்டு அமைதியாக தனது இருக்கையை நோக்கி டீற்றர் நடந்து வந்தார்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து!

ஆழ்வாப்பிள்ளை 
5.10.2013

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை