படைப்புகளிற்கான அன்பளிப்பு – சில ஞாபகங்கள்..!

முன்னர், எண்பதுகளில்(1980ற்குப் பின்னர்) நான் மேல்வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலங்கையில் இரண்டு தமிழ் பத்திரிகைகள் பிரசித்தி பெற்ற தேசியப் பத்திரிகைகளாக இருந்தன. ஒன்று 'வீரகேசரி', மற்றையது 'தினகரன்' ! வடக்கில் 'ஈழநாடு', 'ஈழமுரசு' ஆகியவை முக்கிய பத்திரிகைகளாக மக்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்தன.

முதற் தடவையாக (1981)ல் 'வீரகேசரிக்கு' என் சிறுகதையொன்றை அனுப்பி வைத்த போது அதனைப் பிரசுரித்து, அன்பளிப்பாக 30/-ரூபா இலங்கைப் பணம் காசோலையாகவும் அனுப்பி வைத்திருந்தார்கள். கதையை அனுப்பும் போது அன்பளிப்பெல்லாம் அனுப்புவார்கள் என்ற விடயம் எனக்குத் தெரியாது. அது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது! அது போலவே 'தினகரன்' பத்திரிகைக்கு எனது அடுத்த கதையை அனுப்பி வைத்த போது அவர்களும் என் கதையைப் பிரசுரித்து, 20/-ரூபா காசோலையும் அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார்கள்.

பின்னர் சில காலம் கழிய 'வீரகேசரி'யில் எனது கதை வெளிவந்த போது அதற்குரிய அன்பளிப்பாக 50/-ரூபா காசோலை வரத்தொடங்கியிருந்தது!  நான் படித்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் எனது படைப்புகளிற்காகக் கிடைக்கும் அந்த அன்பளிப்புகள் எனக்கு உற்சாகத்தையும் ஒருவித ஊக்குவிப்பையும் ஏற்படுத்தின! காசோலை கிடைத்ததும் உடனேயே அதனை மாற்றி, என் எழுத்து வேலைகளிற்குத் தேவையான வெள்ளைத்தாள், பேனாக்கள், பேப்பர் கிளிப்ஸ், ரிப்பெக்ஸ்... என்று முக்கியமானவற்றை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு விடுவேன்.இதே காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த சில சஞ்சிகைகளிலும் என் கதைகள் பிரசுரமாகியிருந்த போது அதற்காக அவர்களிடமிருந்து அந்த மாத சஞ்சிகைகள் தபாலில் வந்து சேர்ந்திருக்கின்றன.  அதே நேரம் மாறாக ஒரு சில சஞ்சிகைகள் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளை நடாத்தி, அதனூடாகப் படைப்பாளிகளை ஊக்குவித்து சிறப்பு அன்பளிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த 'சிரித்திரன்' சஞ்சிகை பற்றிக் குறிப்பிட வேண்டும். அந்த இதழ் வருடம் ஒரு முறை சிறுகதைப் போட்டிகளை நடாத்தி வந்து கொண்டிருந்தது. அதற்கு (1983 அல்லது 84ஆக இருக்கலாம்) நான் எழுதிய சிவப்புப் பொறிகள் என்ற கதை பரிசிலைப் பெற்றுக் கொண்டதால் பரிசுத் தொகையான 100/-ரூபாவை நேரில் வந்து தம்மிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திரு.சிவஞானசுந்தரம் அவர்கள் தனது கைப்படக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். நான் அதனைப் பெறுவதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதிக்குப் போகவேண்டும்! நாட்டுநிலமை அத்தனை சாதகமானதாக இல்லாத காலம் அது! பிரளயத்திற்கு முன்னதான ஒருவித அசாதாரண அமைதி நிலவியிருந்த காலம்! வீதிகளில் அதிகம் யாரையும் காணமுடியாது. அந்தவொரு நிலமையில் அன்பளிப்பைப் பெறுவதற்குப் போகத்தான் வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதனைப் பெறும் சாக்கில் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஒன்று கிடைக்கும் என்பதில் எனக்கு அதிக ஆர்வமாக இருந்தது. பின்னர் ஒரு நாள் தனியாக பஸ்ஸில் புறப்பட்டுப் போனேன். என்னுடன் கூட வருவதற்கு உகந்த நண்பர்களோ உறவினர்களோ அச்சமயம் யாரும் பொருத்தமாக இருக்கவில்லை. விருப்பமிருக்கும் நண்பிகள் தனியாக யாழ் செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்!

ஆனால் அம்மா எனக்கு அனுமதி தந்திருந்ததால் நான் போனேன். அந்த மதிய வெயிலில் கே.கே.எஸ் வீதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி, அந்த முகவரியை விசாரித்து, நடந்து போகும் போது என்னுள் ஏற்பட்டிருந்த பதற்றம் இன்னும் எனக்கு ஞாபகம்! இராணுவ ஜீப் வண்டிகள் ஏதும் வீதியில் தெரிந்து விடுமோ என்ற பயம் தான் அதிகம்! இசகுபிசகாக எதுவும் வந்து தாக்கக் கூடியதான வயதும் பருவமும் அது! அரைப்பாவாடை சட்டை, சுருள்முடி, இரட்டைப்பின்னல்! இது தான் எனது தோற்றத்தின் முக்கியமான அடையாளமாக இருந்திருக்கிறது. அந்நேரம் என்னை யாராவது கார்ட்டூனில் வரைய நேர்ந்திருந்தால் இவற்றைத்தான் முதன்மைப்படுத்தி வரைந்திருக்கக்கூடும் – 2002, 2003ம் ஆண்டுகளில் நான் ஐ.பி.சி அனைத்துலக வானொலியில் பகுதிநேரப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஓரிரு தடவைகள் 'ஈழமுரசு' பத்திரிகை ஆசிரியர் திரு.திருச்செல்வம் அவர்களின் அரசியல் விமர்சன உரையை கனடாவிலிருந்து தொலைபேசியூடாக ஒலிப்பதிவு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அச்சமயங்களில் அவருடனான பிரத்தியேக உரையாடலின் போது ஒருதடவை "உங்கள் இரட்டைப் பின்னல், சுருள்முடி யாவும் இப்பவும் அப்படியே தான் இருக்கிறதா" என்று அவர் குறும்பாகக் கேட்டபின்னர் தான் எனது தோற்றம் எப்படி அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்திக் கொண்டேன் - குறிப்பிட்டபடி ஒருவாறு 'சிரித்திரன்' ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களையும் அவரின் மனைவியையும் நேரில் சந்தித்து, சில மணிநேரங்கள் உரையாடிவிட்டு புறப்படும்போது அவர்களின் அன்பையும் உற்சாகத்தையும் கலந்து, குறிப்பிட்ட அன்பளிப்புத்தொகையையும் தந்து என்னை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள்! "சிரித்திரன்" இதழில் வரும் நகைச்சுவை எழுத்துக்களிற்கும் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லாதது போலிருந்த அவரின் சாதாரண தோற்றமும் இயல்பான சுபாவமும் பற்றி ஆச்சரியப்பட்டவாறே அந்தச் சந்திப்பும் பயணமும் மகிழ்வுடன் நிறைவுற்றது!

பின்னர் 1984-85ல் யாழ்.இலக்கியவட்டம் நடாத்திய 'இரசிகமணி கனக செந்தில்நாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் எனது குறுநாவலிற்குப் பரிசில் கிடைத்திருப்பதாகவும் அன்பளிப்பாக 400/-ரூபாக்களும் சான்றிதழும் வழங்கவிருப்பதாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பத்திரிகைகளிலும் அந்தச் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தச் செய்திகள் பத்திரிகையில் வெளியாகியிருந்த தினத்தன்று என் சகோதரியின் திருமணநாள். திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு வாழையிலை போட்டு பந்தியில் உணவு பரிமாறிக்கொண்டிருந்தேன். பந்தியில் இருந்த உதயன் புத்தகசாலை உரிமையாளர் திரு.குலசிங்கம் அவர்களுக்கு வாழையிலையில் சோறு போடும் போது தான் "வாழ்த்துக்கள் சந்திரா...உங்கள் 'நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்' குறுநாவல் பரிசுபெற்றிருக்கிறது...." என்று அன்போடு வாழ்த்தினார். சகோதரியின் திருமணத்திற்காக ஒரு வாரமாக தூக்கமில்லாமல் அயராது வீட்டுவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த வேளையில் அந்த சேதி எனக்கு மிகவும் இனிப்பாக இருந்தது!

சேலையை வெகு நேர்த்தியாகவெல்லாம் உடுத்திக்கொள்ளத் தெரியாத காலம் அது! ஒருவாறு சேலை உடுத்திக் கொண்டு குறிப்பிட்ட யாழ். மண்டபம் (நாவலர் மண்டபம் என்று நினைக்கிறேன்) ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே இலங்கையின் வடபகுதியில் வாழும் முக்கியமான எழுத்தாளார்கள் பலர் பிரசன்னமாகியிருந்தார்கள். எனக்குரிய பரிசு பிரபல பேராசிரியர் சொக்கன் அவர்களினால் எனக்கு வழங்கப்பட்டது! அந்த நிகழ்வு இன்றைக்கும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு தான்!

பின்னர் படைப்பிற்கான அன்பளிப்பு என்று கிடைத்தது, நான் புலம்பெயர்ந்து இலண்டன் வந்த பிறகு பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் எழுதிய 'அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்' என்ற சிறுகதைக்கான தங்கப்பதக்கம்! அதனை "தமிழன்" பத்திரிகை ஆசிரியர் திரு.ராஜகோபால் அவர்கள் கொண்டு வந்து கையளித்திருந்தார்.

அதற்குப் பின்னர் சில புலம்பெயர் பத்திரிகைகளில் எனது படைப்புகள் வெளியாகியிருக்கின்ற போதிலும், நீண்ட வருடங்களின் பின்னர் 'படைப்புளிற்கான அன்பளிப்பு' என்று ஒன்று என்னை வந்தடைந்திருப்பது இப்போது தான்! இந்த அன்பளிப்பு தபாலில் வந்து சேர்ந்த போது தான், கடந்த காலத்தில் எனக்குக் கிடைத்த, படைப்புகளிற்கான அன்பளிப்புகள் பற்றிய நினைவுகள் மீண்டும் என் நெஞ்சினுள் கிளர்ந்து கொண்டது!

இரண்டு நாட்களிற்கு முன்னர் மூன்று நூல்கள் இந்தியாவிலிருந்து எனக்கு அன்பளிப்பாக தபாலில் வந்திருக்கிறது!

1. சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள் (200-2003)
2. ஒரு நகரமும் ஒரு கிராமமும் - எஸ்.நீலகண்டன்
3. மௌனப் பனி  ரகசியப் பனி - காலச்சுவடு மொழிபெயர்ப்புக் கதைகள்

காலச்சுவடு 167வது இதழில் எனது "கடவுளின் உரை" சிறுகதை வெளிவந்திருந்தமைக்காக இந்த நூல்களை ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் எனக்கு அன்பளிப்புச் செய்திருக்கிறது!

படைப்பிற்கான அன்பளிப்பு என்பது அந்தப் படைப்பிற்கும் படைப்பாளிக்கும் கொடுக்கப்படும் மரியாதையும் ஊக்குவிப்பும் என்பதற்குமப்பால் படைப்புலகிற்கான ஒரு கௌரவமும் ஆகும்!

அதற்காக என்றென்றும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்!

- சந்திரா இரவீந்திரன்
4.12.2013

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை