திரை கடல் ஓடி திரவியம் தேடு

தமிழன் திரைகடல் ஓடித் திரவியம் தேடினான். அன்றே அவனை உலகம் வியந்து பார்த்தது. ஆனாலும் அன்றைய காலங்களை விட  தமிழரை  அதிகளவு உலகம் அறிந்ததும், உலகத்தை தமிழர் அறிந்ததும் 1980களின் பிற்பாடே என்பது எனது கருத்து.

தமிழர்களின் எண்பது காலகட்டத்தின் பாரிய இடம் பெயர்வு அவர்களை  உலக நாடுகளில் பெருமளவு பரவச் செய்தது. அப்படி இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் தங்களது கலை, கலாச்சார விழுமியங்களையும் எடுத்துக் கொண்டே இடம் பெயர்ந்தார்களா? அல்லது இடம்பெயர்ந்த பலருக்கு தங்களது கலைகளில், கலாச்சாரங்களில் போதிய தெளிவுகள் இல்லையா? மேற்கத்திய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா? அன்றாடம் தொல்லைப் படும் இயந்திரமான வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு „பணம்...பணம்..' என அலைகிறார்களா தெரியவில்லை.

யேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் பலர் பார்வையாளர்களாக இருக்கும் „சுப்பர் ஸ்ரார்' நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில்  பார்த்த பொழுது  எங்களது பாரம்பரிய கலைகளும் கலாச்சாரங்களும் நினைவுக்கு வந்தன. அந்த நிகழ்ச்சியின் போட்டியாளனாக பதினேழு, பதினெட்டு வயதுக்கு இடைப்பட்டவனான தமிழ் இளைஞன் வந்திருந்தான்.

நிகழ்ச்சிக்கு வந்த அந்த இளைஞனிடம் அமெரிக்க இளைஞர்களின் பாதிப்பு நிறைந்து இருந்தது. நிகழ்ச்சி நடுவர் ஒருவர் அவனது பெயரைப் பார்த்து விட்டு „நீ தமிழனா?' என்று கேட்டு வைக்க இளைஞனும் மகிழ்ச்சி தளும்ப மீண்டும் அந்த நடுவருக்குக் கை கொடுத்தான். அந்த இளைஞன் தமிழ்ப்பாடலை அல்லது  தமிழ் நடனத்தை அங்கு தரப் போகிறான் என நடுவர்கள் நினைத்து அவனிடம் கேட்க, அந்த இளைஞனும் அதை ஆமோதித்தான். தான் தன் முயற்சியில் இசை ஒன்று கோர்த்து வந்திருக்கிறேன். அதை „கீ போர்ட்' இல் தவழவிட்டு தமிழ் நடனம் ஒன்று ஆடப் போகிறேன் என்றான்.  எனது மனதுக்குள் ஒரு குதூகலம். எங்கள் தமிழ் இளைஞர்களைப் பார்த்துப் பெருமிதம். அடுத்த தலைமுறை வெளிநாட்டில் தொலைந்து விடவில்லை. இதோ இங்கே அதிசயப் பட வைக்கப் போகிறார்கள். மனது நிம்மதியாக இருந்தது. கதிரையில் சுகமாகச் சாய்ந்து இருந்தேன். நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்த இளைஞன் தனது இசைக் கருவியில் வாசித்த இசை, „டண்டணக்கு.. டண்டணக்கு..' இசைதான். இதுதான் தமிழிசையா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த இசையை.. இல்லை இம்சையை நடுவர்கள் இரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்து பின்னணியில் இசையை ஒலிக்க விட்டு தமிழ் நடனம் ஆடப் போகிறேன் என்றான். நடுவர்கள் பெரும் தன்மையுடன் ஒத்துக் கொண்டார்கள். இளைஞன் ஆட ஆரம்பித்தான். எனக்கு மேசையின் கீழே போய் ஒழிந்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றியது. என்ன பிரயோசனம்? தீக்கோழி போல தலையை மறைத்துக் கொண்டாலும் பல மில்லியன் யேர்மனியர்கள் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள். மனது அப்பொழுதுதான் குறுகத் தொடங்கியது.

அந்த இளைஞனுக்கு தமிழ்க் கலையைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை என்பது எனக்குப் புரிந்து போனது. தமிழ் சினிமாக்களில் வரும் பாடல்களையும், ஆடல்களையுமே அவன் தமிழ்க்கலை என்று கருதுகிறான் என்று நினைக்கிறேன்.

ஒரு கால கட்டத்தில் „றெக்கோர்ட் டான்ஸ்' என்று  ஒழிவு மறைவுகளில் ஆடப்பட்ட நடனம், மெதுவாக சினிமாவுக்குள் புகுந்தது. அந்த நடனத்தையும் பொம்பாய் நடன மாதுக்களைக் கொண்டு ஆடவிட, அதற்கு  ரசிகர்களின் பேராதரவு கிடைத்து, அவர்களின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. படிப்படியாக அந்த நடனம் மெருகேற நாயகர்களும் சேர்ந்து ஆடத் தொடங்க, „டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாரும் இல்லை விளையாடு நேரில் வந்து வில்லாளா..' வையும் கடந்து வந்து விட்டோம். இந்தப் பாடல்களும், அதற்கான அபிநயங்களுமே அந்த இளைஞனுக்கு தமிழிசையாகவும் தமிழ் நடனமுமாகிப் போனதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இதைத் தனது ஒரு படைப்பாக அந்த இளைஞன் தரும் பட்சத்தில் யாருக்குமே பாதிப்பும் இல்லை, பழுதும் இல்லை. மாறாக தமிழிசை, தமிழ் நடனம் என்று அவன் தமிழை அங்கு முத்திரையிட்டதுதான் பிரச்சினையாகிப் போனது.

தொடர்ந்து அவனது நிகழ்ச்சியைப் பார்ப்போம். இளைஞனின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். நிலமையை அவதானித்த இளைஞன் தனது சந்தர்ப்பம் பறி போய்விடுமோ என்று பயந்து அவசரமாக தனக்குப் பாடவும் வரும் என்றான். „சரி பாடு' என்று அவர்கள் சந்தர்ப்பத்தை வழங்கினார்கள். பாட ஆரம்பித்தான். அவனது பாடலைப் பார்த்து, „என்ன மொழியில் பாடுகிறாய்? தமிழ் மொழிதானே..?„ என பிரதான நடுவர் கேட்க,  „இல்லை இது ஆங்கிலம்..' என இளைஞன் பதில் தந்தான்.

„புதுமையான ஆங்கிலமாக இருக்கிறதே' என அடுத்த நடுவர் ஏளனத்துடன் இடைமறிக்க, எல்லாமே குழப்பமாகிப் போனது.

„நீ வேண்டுமானால் உனது வீட்டில் தனிமையில் இருந்து பாடு. உனக்கு இசை வசப்படாது. உனக்குப் பாடவே வராது என்பது எங்களது கருத்து..' என்று தனது கருத்தை வைத்த பிரதான நடுவர் எழுந்து வந்து அவனது இசைக் கருவியின் மின் இணைப்பைத் துண்டிக்கும் நிலை வரை அங்கு மோசமாகிப் போனது.

இளைஞனுக்கு அவனது எதிர்பார்ப்பு கிட்டாமல் போனதில் ஏமாற்றம் இருந்திருக்கலாம். தனிமனிதனாக இல்லாமல் தமிழனாகத் தன்னையும், தன் கலையையும் இனம் காட்டி கேவலப்பட்டு அவன் நடுவர் கூடத்தில் இருந்து வெளியேறியது எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது.

அவன் கூடத்தை விட்டு வெளியேறிய பின்னர் இரண்டு பெண் நடுவர்கள் பேசிக் கொண்டார்கள்
„அவன் ஆடிய நடனம் அவர்களது பாரம்பரிய நடனமா? கேளிக்கை விடுதிகளில் ஆடும் நடனம் போல் இருக்கிறதே'
„எனக்குப் பார்த்தால் மருத்துவ மனிதன் (ஆபிரிக்க பழங் குடியில் அவர்களது மருத்துவர் நோய் தீர்க்க ஆடும் ஒருவித நடனம்) நடனம் போல் இருந்தது'

நடுவர்கள்  பேசிக் கொண்டதும் , நடந்து போன சம்பவங்களும் எனக்கு ஒன்றைத் தெளிவாக்கியது. நமது அடுத்த தலைமுறைக்கு எங்கள் கலை, கலாச்சார பாரம்பரியங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது. அதை அவர்களுக்கு தெளிவு படுத்த தெரிய வைக்க எங்களுக்குத்தான் நேரம் இல்லை.

கோயில் கட்டி விட்டோம், தேர் செய்து, அதில் சாமியை வைத்து  தெரு உலா வருகிறோம், அர்ச்சனைகள், அபிசேகங்கள் செய்கிறோம். இதற்கு மேல் என்ன?  மற்ற எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்.  

இப்பொழுது எங்கள் தேவை எல்லாம் பணம். நாங்கள் திரை கடல் ஓடி வராமல் விமானம் ஏறி பறந்து வந்திருக்கின்றோம். உலக நாடுகளுக்கு எங்களைத் தெரிகிறது. எங்கள் முன்னோர்கள் சொன்னது போல்  திரவியம் தேடுகின்றோம். அதற்காகத்தான் நாங்கள் இன்று ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

பின் இணைப்பு, அந்த இளைஞன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
http://www.clipfish.de/special/dsds/video/4037592/paramasuthan-mit-keyboard-beim-dsds-casting-2014/

- ஆழ்வாப்பிள்ளை
Quelle - Ponguthamil

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை