சமாதிக்குப் போகாத சன்மானம்

இராஜ வீதி. நிறைந்த சுத்தமாக இருந்தது. அதில் நடந்து செல்கையில் மனது சலனமில்லாது அமைதியாக இருந்தது. வீதித்தரையில் பாறைகளினூடாக நீர்விழுந்து ஓடிக் கொண்டிருந்தது. விழுந்து ஓடும் நீர் தெறித்து உடை நனைந்து விடுமோ என்ற அச்சம் கொண்டு கொஞ்சம் தள்ளி நின்றேன். என்னைப் போல் பலரும் அப்படி நின்றதை பின்னர்தான் அவதானித்தேன். சற்று பார்வையைக் கூராக்கி அவதானித்த பொழுதுதான் புரிந்தது. அது உண்மையான நீர் வீழ்ச்சி அல்ல. அற்புதமாக தரையில் தீட்டப்பட்ட ஒரு அழகான ஓவியம் என்று. சுற்றி நின்றவர்களையும் அந்த அதிசயமான ஓவியம் வெகுவாகக் கவர்ந்திருந்ததை அவதானித்தேன்.

வேலைக்குப் புறப்படும் முன் வான்நிலை பார்ப்பது எனது வழக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வரப் போகிறது. தரையில் தீட்டப் பட்ட அந்த அழகிய ஓவியம் அழிந்து போய்விடப் போகிறது.

தரையில் வரைந்த ஓவியனின் உழைப்பையும் அது அழித்து விடும். கவலையோடு „யார் இதை வரைந்திருப்பார்கள்?' விழிகளை ஓவியத்தின் கீழே ஓடவிட்டேன். அங்கே கையெழுத்து இருக்கவில்லை. ஒரு கோரிக்கைதான் இருந்தது. அதனருகே ஒரு தொப்பி ஒன்று தவமிருந்தது.

„பல ஓவியர்கள் தாங்கள் வாழும் நாட்களில் தங்கள் படைப்புகளுக்கான சன்மானத்தைப் பெறுவதில்லை. இறந்த பின்னரே அவர்களுக்கான ஊதியம் கிடைக்கின்றது. வாழும் நாளில் இந்த ஓவியனுக்கு ஏதாவது தாருங்கள்'

ஓவியத்தின் கீழே அதை வரைந்தவன் எழுதியிருந்த  வாசகங்கள் அவனின் மனதின் வலியை துல்லியமாகத் தெரிவித்திருந்தன.ஓவியத்தை விடுத்து அதை வரைந்த ஓவியனைத் தேடினேன். ஓரத்தில் ஒரு மரத்தின் கீழே அவன் தரையில் அமர்ந்திருந்தான். அவனது கைகளில் கலந்திருந்த வர்ணங்கள் அவனை அடையாளம் காண்பித்தன. ஓவியத்தில் இருந்த வரிகளைவிட அவனது முகத்தில் வரிகள் அதிகம் இருந்தன. ஓவியத்தில் இருந்த ஒளிர்ப்பு அவனிடம் இல்லை. படைப்பை இரசிக்க முடிந்தது. படைப்பாளியைப் பார்த்துப் பரிதாபப் படத்தான் என்னால் முடிந்தது. மழைத்துளி மெதுவாக விழ ஆரம்பித்தது. எல்லோரும் அவசரமானார்கள். என்னால் முடிந்ததை தொப்பியில் போட்டு விட்டு நானும் நகர்ந்தேன்.

ஓவியர் வின்சென்ட் வான் கோ  நினைவுக்கு வந்தார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்த அவரால், தனது வாழ்நாளில் ஒரே ஒரு ஓவியத்தைத்தான் விற்க முடிந்தது. அதுவும் அவர் பட்ட கடனுக்காகப் பாவம் பார்த்து, தேனீர் கடைக்காரர் வாங்கிக் கொண்டது. வாங்கிய கடைக்காரர்  கூட அந்த ஓவியத்தைச் சுவரில் மாட்டியிருக்கலாம். மாறாக கூரையில் உள்ள  ஓட்டையில் இருந்து ஒழுகும் தண்ணீரைத் தடுக்க, வான் கோவின் அந்த ஓவியத்தை கூரையின் மேல் சொருகி விட்டார். அன்று வான் கோ எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார். வர்ணங்களும், தூரிகைகளும் வாங்கவே பணம் இல்லாமல்,  „உணர்வு வெளிப்பாடு' எனும் நவீன பாணியை ஓவியத் துறையில் அறிமுகம் செய்த அவர் மேற்கொண்டு வாழ முடியாமல் 1890 இல்  தனது 37 வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். சரியாக நூறாண்டுகளுக்குப் பின்னால் 1990இல்  அவரது டொக்டர் கேச் எனும் ஓவியம் அமெரிக்காவில் 100 மில்லியன் டொலர்களுக்கு விலை போனது. வாழ்நாளில் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமும், ஊதியமும் இறந்த பிறகே அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதைத்தான் இன்று அழகான ஓவியத்துடன் அதிக அறிமுகம் இல்லாத இந்த ஓவியனும் எழுதி வைத்திருக்கிறான்.

கடந்த வருடம் நான் பார்த்த மலையாளப் படமான „செல்லுலாய்ட்'  எனது நினைவில் வந்த மற்றொன்று. மலையாள முதல் சினிமாத் தயாரிப்பாளரான ஜே. சி. டானியல் அவர்களைப் பற்றிய திரைப்படம்.

வாழ்நாளில் ஜே. சி. டானியலுக்குக் கிடைக்காத அங்கீகாரம் அவர் இறந்த பின்னரே அவருக்குக் கிடைத்திருக்கிறது.

குறைந்த சாதியில் உள்ள பெண்ணான ரோசியை தனது முதல் மலையாளப் படமான விகதகுமாரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தது அவரது திரைத்துறையை இல்லாமல் செய்து விட்டது. குறைந்த சாதிக்காரப் பெண் ஒருத்தி நாயர் பெண்ணாக வேடம் போடுவதும், நகைகள் அணிவதும், வீணை வாசிப்பதும் உயர் சாதிக்காரர்களால் அன்று ஒத்துக் கொள்ள முடியாது இருந்தது. விளைவு விகதகுமாரன் திரைப்படம், திரையிடப்பட்ட இடங்களில் கலவரங்கள். நட்டப் பட்டுப் போன ஜே. சி. டானியலை மீண்டும் சினிமாவுக்கு இழுத்து வரும் அன்றைய பிரபல்யமான நடிகர் பி.யு. சின்னப்பா, இருந்ததையும் பிடுங்கிக் கொள்கிறார். சொத்துகள் எல்லாம் இழந்து, இறுதியில் தான் தயாரித்த விகதகுமாரன் திரைப்படச் சுருளையும் தீக்குப் பலி கொடுத்து எதுவுமே இல்லாமல் வறுமையிலேயே இறந்து போகுகிறார் ஜே.சி.டானியல்.

இவரது கதையைத்தான் செல்லுலாய்ட் என்ற திரைப் படத்தில் இயக்குனர் கமல் அழகாகச் செதுக்கி இருக்கிறார். பிருத்திவிராஜ் ஜே.சி. டானியல் வேடம் ஏற்றிருந்தார். அவரது மனைவியாக மம்தா மோகன்தாஸ்  நடித்திருக்கிறார். சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் நடந்த கதையை அதே கால கட்டத்துக்கு அழைத்துச் சென்று காண்பிக்கிறார் இயக்குனர் கமல். மலையாள நடிகர்கள் என்பதால் எல்லாமே இயல்பாகவும் இருக்கின்றன. பி.யு. சின்னப்பாவாக வரும் மதன் பாப் நடிப்பில் மிகைப் படுத்துகிறார். தமிழ் நடிகர்கள் இப்படித்தான் மிகையாக நடிப்பார்கள் என்று சொல்வதற்காகத்தான் இயக்குனர் கமல் அப்படி அவரை நடிக்க வைத்தாரா தெரியவில்லை. ரோசியாக வரும் நந்தினி நிறையவே பார்வையாளர்களது அனுதாபத்தைப் பெறுகிறார். ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணின் ஆசைகளையும் அன்றைய காலங்களில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும்  நந்தினி அந்தத் திரைப் படத்தில் வெளிப் படுத்துகிறார். இந்தத் திரைப்படம் பல விடயங்களைச் சொல்கின்றது. நாயர்கள், நம்பூதிரிகள் சமூகங்களின் சாதி வெறி. மலையாளிகள் எழிதில் அடுத்த இனத்தை அங்கீகரிக்காத நிலை என்று பலதைச் சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் வாழும் காலத்தில் அங்கீகரிக்கப் படாத ஒரு கலைஞனின் வரலாறு என்பதே கதையின் முதுகெலும்பு.

சமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தி வாசித்தேன். செல்லுலாய்ட் திரைப்படத்தை சில இளைஞர்கள் இணைந்து தமிழில் ஜே.சி. டானியல் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். தங்களது வீடுகள் நகைகள் எல்லாவற்றையும் விற்று மிகச் சிறப்பான முறையில் புதிய தொழில் நுட்பத்தில வாய் அசைவுகளுக்கு ஏற்ப தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்களாம். „படம் நன்றாக வந்திருக்கின்றது. ஆனால் படத்தைத் திரையிட உரிமையாளர்கள் திரையரங்குகளை தருகிறார்கள் இல்லை. இப்படியே போனால் நட்டப் பட்டு நாங்கள் தெருவுக்கு வந்து விடுவோம் என்று ஆதங்கப் பட்டிருந்தார்கள்.

அன்று தான் தயாரித்த திரைப்படத்தை திரையிட முடியாமல் ஜே.சி.டானியல் கலங்கி நின்றார். இன்று அவர் பற்றிய திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்தவர்கள் திரையிட முடியாமல் கலங்கி நிற்கிறார்கள்.

ஆழ்வாப்பிள்ளை
18.01.2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை