கிராமக்கோடு

நகரத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் வடமராட்சிக்கான நீதிமன்றம் அமைந்திருந்தது. கிராமங்களுக்கான சிறு சிறு வழக்குகளைக் கையாள்வதற்கு கிராமிய மட்டத்திலான நீதிமன்றம் ஒன்று பருத்தித்துறை-யாழ்ப்பாண பிரதான வீதியை ஒட்டி, நகரில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. அந்தக் கிராமிய நீதிமன்றம் ஒரு திறந்த மண்டபமாகவே இருந்தது. மூன்று பக்கமும் அரைச் சுவர் கட்டப் பட்டிருக்கும். அந்த மண்டபத்துக்கு மூன்று பக்கத்தாலும் உள்ளே நுளையலாம். கதவுகள் கிடையாது. உள்ளே இருப்பதற்கு இருக்கைகள் கிடையாது. மன்றம் கூடும் பொழுது எழுந்துதான் நிற்க வேண்டும். உள்ளே நிற்பவர்கள் அந்த அரைச் சுவரில் சாய்ந்திருப்பார்கள். வெளியே நிற்பவர்கள் சுவரில் கை வைத்தோ அல்லது சுவரில் வைத்த கையால் நாடியைத் தாங்கிய வண்ணமோ நின்று கொண்டு மன்றில் நடப்பதைப் பார்த்து அவ்வப்போது ஆளாளுக்கு விமர்சனம் தந்து கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் நாங்கள் அந்த அரைச் சுவரில் ஏறி அமர்ந்திருப்போம். அந்த நீதிமன்றத்தினால் அதையொட்டி அமைந்திருந்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு „கிராமக் கோட்டடி' என்ற பெயர் ஏற்பட்டு, அதனால் அந்த ஊருக்கே கிராமக் கோடு என்ற பெயர் நிலைத்து விட்டது.

கிராம நீதிமன்றம் கூடாத வேளைகளில் அந்தக் கட்டிடம் சிறுவர்களாக இருந்த எங்களுக்கு ஒரு விளையாடும் கூடம். எப்போதாவதுதான்  மன்றம் கூடும். யாராவது மன்றத்தைக் காலையில் கூட்டிக் கழுவினால், எங்களுக்குத் தெரிந்து விடும். இன்று மன்றம் கூடப் போகிறது என்று. அந்த மன்றில் நடக்கும் வழக்குகள் ரசிக்கத்தக்கவையாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் சின்னச் சின்ன பிணக்குகளை பலத்த வாதங்கள் கூச்சல்கள், ஏச்சுப் பேச்சுக்கள், இழுபறிகள் மத்தியில் தீர்க்க முற்படுவார்கள். ஆனால் முழுதாகத் தீர்த்து வைத்தார்கள் என்று சொல்ல முடியாது, முயற்சித்துப் பார்ப்பார்கள் அவ்வளவுதான். வழக்கு முடிந்து வெளியேறும்போது ஆளை ஆள் முறைத்துப் பார்த்துக் கொண்டுதான் செல்வார்கள்.

'அவன் வீட்டுப் பனைமரத்திலே இருந்து நொங்கு விழுந்து என்ரை வீட்டு ஓடு உடைஞ்சு போச்சு. மன்றம் தலையிட்டு நட்ட ஈடு வாங்கித் தரோணும்' என்றொரு வழக்கு.

'எங்கடை வீட்டுச் சுவருக்கும் அவையளின்ரை வேலிக்கும் நாலடி இருந்தது. இப்ப பாத்தால் மூன்றடிக்குக் குறைவா இருக்கு.'

அது முந்தியும் அப்பிடித்தான். நீர் அப்ப சரியாக அளக்க இல்லை.'

நாங்கள் சரியாத்தான் அளந்து வைச்சனாங்கள்.' இப்படி இன்னொரு வழக்கு.

„அவங்கள் வீட்டு தென்னோலை எப்ப எங்கடை தலையிலை விழுமோ என்று பயமா இருக்கு. ஒழுங்கா வெட்டச் சொல்லுங்கோ. இல்லாட்டில் தென்னையைத் தறிக்கச் சொல்லுங்கோ' இப்படி ஒரு வழக்கு.

பல தரப்பட்ட வழக்குகள்  அங்கே நடந்தாலும் என்னைக் கவர்ந்தது என்னவோ கோழி சம்பந்தப் பட்ட வழக்குகளே. அதிலும் சுவாம்பிள்ளையரும், சந்தியாப்பிள்ளையரும் கோழிக்கும், முட்டைக்குமாக மோதும் அழகே அழகு.

சுவாம்பிள்ளையரும், சந்தியாப்பிள்ளையரும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஓய்வூதியம் எடுத்துக் கொண்டு வீட்டில் கதிரையில் சாய்ந்திருந்து டெய்லி நியூஸ் பத்திரிகை  வாசித்துக் கொண்டு இருப்பவர்கள். வாசிப்பினூடே அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஓரக் கண்ணால் நோட்டம் விடுவதுதான் அவர்களது முழுமையான வேலை. எப்பொழுதும் இருவரும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் சண்டை அதிகமாகி ஆளையாள் கறுவிக் கொண்டால் „உன்னை விட்டேனா பார்' என்று ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு கிராமக் கோடு ஏறி விடுவார்கள். அநேகமாக அது கோழி சம்பந்தமான வழக்காகவே இருக்கும்.

„என்ரை கோழி அவன்ரை வீட்டிலை முட்டை இட்டது. அதை மெதுவா அமுக்கிட்டான்'

„இவரின்ரை கோழி எப்பவுமே அடைக் கோழி அது முட்டை இடுறதாவது. விழல் கதை எல்லோ கதைக்கிறார்.'

„எங்கடை வீட்டுக்குள்ளை அடைச்சு வைச்சால் முட்டை போடுது. உம்முடைய வீட்டுக்குள்ளை வந்தால்தான் அடை காக்குதாக்கும்.'

„இப்படி கோழியைக் காணேல்லை. அதை இவன்  அடிச்சுச் சாப்பிட்டிட்டான். கோழி முட்டையை அடிச்சுக் குடிச்சிட்டான். அது எங்கடை கோழி போட்ட முட்டை' என்று இருவரும் மன்றத்தில் போடும் சண்டையை ஒரு சினிமா போல பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். பின் நாட்களில் அந்த மன்றம் கூடாமலேயே விட்டு விட்டது. ஏன் எதற்கு என்று எனக்குக் காரணம் தெரியவில்லை.

நீண்ட வருடங்களுக்குப் பின்னர் சமீபத்தில் யேர்மன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று சுவாம்பிள்ளையர், சந்தியாப்பிள்ளையர், கிராமக் கோடு எல்லாவற்றையும் என் நினைவில் கொண்டு வந்தது.

றோலன்ட்டும்(வயது 69), றைனரும்(வயது 60) அயல் வீட்டுக்காரரர்கள். றோலன்ட் வளர்க்கும் சேவல், நேரம் அறியாமல் கூவுவது றைனரின் அமைதியைக் கெடுத்து விடுகிறது. இரவில் தூக்கம் இன்மை. சேவல் திடீரென கூவும் போது திடுக்கிடுதல், அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம் எல்லாவற்றையும் தாங்க முடியாமல் றைனர் நீதிமன்றம் போனார். சேவலின் கூவல் 100 டெசிபெல் இருப்பதை அவதானித்த நீதிபதி மாலை 8மணி முதல் காலை 8மணி வரையும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையும் சேவலின் கூவல் றைனரை இடையூறு செய்யா வண்ணம் பார்த்துக் கொள்ளும் படி றோலன்டுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அன்பாக வளர்த்த சேவலை அறுத்துப் போடவோ, விற்கவோ றோலன்ட்டுக்கு மனம் வரவில்லை. சேவலுக்கு என்று ஒரு கூடு தயாரித்தார். அந்தக் கூண்டில் இருந்து சத்தம் வெளியே வராமல் இருக்க பிரத்தியேகமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். நீதிமன்றம் சொன்ன நேரத்தில் சேவல் கூண்டுக்குள் இருக்கும். மற்றைய நேரங்களில் சேவல் வெளியே உலாவரும். செட்டையை விரித்து அடித்துக் கூவ ஆரம்பிக்கும். சட்டம் அதற்கு இடம் கொடுத்தது. சேவல் அடைக்கப் படும் நேரம் தவிர்த்து மற்றைய நேரங்களில் அது போடும் கர்ணகடுரமான கொக்கரக்கோவிற்காக, றைனரால் றோலன்டோடு சண்டை போட முடியவில்லை.

சேவல் வெளியே வரும் நேரத்தில் கூவுவதை எப்படித் தடுக்கலாம் என்று றைனரும் யோசித்துப் பார்த்தார். சட்டத்தரணியோடு கலந்தும் ஆலோசித்தார். எதுவுமே செய்ய வாய்ப்பு இருக்கவில்லை. றைனர் நகரசபைக்கு இது விடயமாக எழுதிப் பார்த்தார். றோலன்ட் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம்தான் நடக்கிறார். ஒன்றும் செய்வதற்கு இல்லை என அங்கிருந்து பதில் வந்தது. என்ன செய்யலாம் என்று தவித்தவருக்கு தை பிறந்த பொழுது வழியும் பிறந்தது.

தை மாதம் 6ம் திகதி றோலன்ட் வழக்கம் போல் வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். சற்றுத் தாமதமாகி விட்டது. நேரத்தைப் பார்த்தார். மதியம் 1.19. வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சேவலைப் பிடித்து அவசரமாக கூண்டில் அடைத்து விட்டார். றைனர் வீட்டைப் பார்த்தார். அமைதியாக இருந்தது. இனி ஒரு தடைவ இப்படியான தவறு நடக்கக் கூடாது எனத் தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால், அந்தப் பத்தொன்பது நிமிடங்களும் வெளியே நின்ற சேவல் எத்தனை தடைவ கூவியது என்பதையும் அது எப்படிக் கூவியது என்பதையும் றைனர் பதிவு செய்திருந்ததை றோலன்ட் அறிந்திருக்கவில்லை.

மீண்டும் நீதிமன்றம். றோலன்ட் நடந்த தவறுக்கு வருந்தினார். இனி ஒரு தடைவ இது போல் நடவாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார். திறமையான றைனரின் சட்டத்தரணியின் வாதத்தின் முன்னால் றோலன்டால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. றைனரின் மன அழுத்தத்திற்குக் காரணமாக இருந்ததாலும் நீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடிக்காததாலும் 25,000 யூரோக்கள் தண்டணைப் பணமாக நீதிமன்றம் றோலன்டிற்கு அறிவித்தது. பணத்தைக் கட்டாவிட்டால் அதற்கு இணையான சிறைவாசத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தது.

என்னிடம் ஏது பணம். எனது பென்சன் எனக்கே போதாது. இதற்குள் 25,000 யூரோவுக்கு எங்கே போவேன். மே மாதம் சிறைக்குப் போகத்தான் இருக்கு.' „அப்படியானால் சேவல்?'

„நான் திரும்பி வரும் வரை அதுவும் உள்ளேதான் இருக்கும்' என்று றோலன்ட் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.

காலங்கள் எவ்வளவு கடந்தாலும், அது எந்த நாடானாலும் சரி சுவாம்பிள்ளைகளும,; சந்தியாப்பிள்ளைகளும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.

ஆழ்வாப்பிள்ளை
29.4.2014

 


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை