புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்...

எனது மாணவப் பருவத்தில், இரசிகமணி கனகசெந்திநாதன் ‘கலைச்செல்வி’ இதழில் எழுதிய எனது நூல்நிலையம் என்ற கட்டுரையை எங்கள் ஊர் வாசிகசாலையில், வாசித்தேன். நூல்கள் சேகரிப்பதன் அவசியம், அவற்றைப் பேணுதல் பற்றிப் பல விடயங்களை அதில் அவர் எழுதியிருந்தார். நூல்களை ஒருபோதும் இரவல் கொடுக்க வேண்டாமென்றும் அதில் அறிவுறுத்தியிருந்தார். அக்கட்டுரையை வாசித்தபோது,  நூல்களைச் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் விதையாக விழுந்தது. ஆயினும், வறிய குடும்பத்தைச் சேர்ந்தவனாதலால் என்னால் நூல்கள் எதையும் அப்போது வாங்க முடியவில்லை. உண்மையில், குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, எமது சென். ஜேம்ஸ் ஆலயப் பங்குக் குரவராக இருந்த பொமிக்கோ அடிகளால் ( இவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் நன்கு பேசுவார்) வழங்கப்பட்ட இலவசப் பாடநூல்களைப் பெற்றுப் படித்தவர்களில் நானும் ஒருவன்!

பிறகு ஸ்ரான்லிக் கல்லூரியில் படித்து, 1965 இல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர  உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, வீட்டில் சும்மா இருந்தேன். ஏற்கெனவே ‘தபாற் கந்தோர்த் தலைவர் தந்தியாளர்’ சேவைக்கான போட்டிப் பரீட்சையையும் எழுதியிருந்தேன். கடற்றொழிலாளியான ஐயாவின் வருமானம் போதியதாக இருக்கவில்லை; வீட்டில் கஷ்டமான நிலைமை. எனவே நானும் ஏதாவது வேலை செய்யலாம் என முடிவெடுத்து, எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவரின்கீழ் மேசன் கூலி ஆளாகச் சேர்ந்துகொண்டேன்; நண்பர்கள் மு. புஷ்பராஜன், சி. பிரான்சிஸ் ஆகியோரும் அவ்வாறு அவருடன் ஏற்கெனவே வேலை செய்தனர். ஒருநாள் கூலியாக ஐந்து ரூபா கிடைக்கும்; ஒரு கிழமையில் ஆறு நாள்களுக்கு முப்பது ரூபா. புத்தகம் வாங்குவதற்காக ஒவ்வொருநாள் கூலியிலும் ஒரு ரூபா எனக்குத் தரவேண்டுமென, அம்மாவிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். எனவே கிழமையில் ஆறு ரூபா எனக்குக் கிடைத்தது; மாதத்தில் இருபத்துநான்கு ரூபா! மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை, நானும் புஷ்பராஜனும் காங்கேசன்துறை வீதியிலுள்ள ஸ்ரீலங்கா புத்தகசாலைக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கத் தொடங்கினோம். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்கள் – அதிலும் மலையாளத்துக்கு முன்னுரிமை. பொது அறிவு, வாழ்க்கை வரலாறுகள், அறிவுரை நூல்கள், பழந்தமிழ் இலக்கியம் பற்றிய நூல்கள்; மு. வரதராசன், நா. பார்த்தசாரதி, வி.ஸ. காண்டேகர், அகிலன் முதலியோரின் நாவல்கள்  போன்றவற்றை விரும்பி வாங்கினோம். அவ்வேளை  75சதம்,   1.25சதம், 2.00 ரூபா எனத்தான் பெரும்பாலும் புத்தகங்களின் விலைகள் இருக்கும்! தெய்வேந்திரம், கந்தசாமி ஆகிய சகோதரர்கள் ஸ்ரீலங்கா புத்தகசாலையின் உரிமையாளராக இருந்தனர். நாங்கள் அடிக்கடி வந்து இவ்வாறு வாங்கும் புத்தகங்களை அவதானித்த கந்தசாமி அவர்கள் ஒருநாள், “ இளம்பிள்ளையள் நல்ல நல்ல புத்தகங்கள் வாங்குறீங்க.... “ எனக் கூறிவிட்டு, ”ரெண்டு பேருக்கும்  டிஸ்கவுண்ட் குடும்“ என்று பற்றுச்சீட்டு எழுதுபவரிடம் சொன்னார். அது எங்களுக்கு உதவியாக அமைந்தது.
 
ஒரு வருடம் இவ்வாறு மேசன் வேலையில் கிடைத்த பணத்தில் புத்தகங்களை வாங்கினேன். தபாற் கந்தோர்த் தலைவரும் தந்தியாளரும் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அரசாங்க வர்த்தமானியில் எனது பெயர் வந்தபின், மேசன் வேலைக்குச் செல்லவேண்டாமென அம்மா தடுத்துவிட்டார். 1967 மாசியில் சேவையில் சேர்ந்து, கொழும்பிலுள்ள பிரதம தபாற் கந்தோரில் வேலை பார்க்கத் தொடங்கிய பிறகு, அம்மாவுக்குக் காசுக்கட்டளை அனுப்பும்போது எடுத்துவைக்கும்  பணத்தில், மாதாந்தம் குறித்த தொகைக்குப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் தொடர்ந்தது. கொம்பனித் தெருவிலுள்ள ரஞ்சனா புத்தக நிலையம் (புத்தகம் பற்றிய அறிவுடனும் இரசனையுடனும் அவற்றைப் பற்றிக் கதைத்து, புதிதாக வந்த நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு விற்பனையாளனை இங்கு மட்டும்தான் சந்தித்தேன்; அவரது பெயர் நினைவில்லை), மக்கள் பிரசுராலயம்; ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள ஜெயா புத்தக நிலையம், அரசு வெளியீடு; கொள்ளுப்பிட்டியிலுள்ள ரகுநாதன் பதிப்பகம், வெள்ளவத்தையிலுள்ள செ. கணேசலிங்கனின் மகாலக்ஷ்மி புத்தக நிலையம், கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்னுள்ள ராஜேஸ்வரி பவான், ஆனந்த பவான்  ஆகியவற்றிலெல்லாம் தேவையான புத்தகங்களை வாங்கினேன்; பெரும்பாலும் விரைவிலேயே அவற்றை வாசித்துவிடும் பழக்கமும் இருந்தது –  தற்போது அவ்வாறில்லை!
 
புத்தகங்கள் தொடர்பில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததென்றே சொல்லவேண்டும். இரண்டு மூன்று நண்பர்கள் சேர்ந்து புத்தகக் கடைக்குச் செல்லும்போதும் அருந்தலான புத்தகங்கள் எனது கண்ணிலேயே படும்! இவ்வாறு வேறு தருணங்களிலும். எந்தப் புத்தகக் கடையென்றாலும்  – பெண்கள் ஆவலுடன் துணிக்கடைக்குச் செல்வது போல் – அக்கறையுடன் சென்று பார்ப்பேன்; ஒரு நல்ல புத்தகம் கிடைத்தாலும் இலாபம்தானேயென நினைப்பேன். எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒருமுறை, யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள ஞானசுரபி புத்தக நிலையத்துக்கு அருகில் சைக்கிளில் வந்தபோது, சும்மா அதனுள் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணம் தோன்றியது. அங்கு பாட நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள்தான் விற்கப்படுவது தெரியும்; என்றாலும், சிலவேளை ஏதாவது அகப்படும் என்ற எண்ணம். சைக்கிளாலிறங்கி உள்ளே சென்று, அலுமாரியில் உள்ளவற்றில்  கண்ணோட்டமிட்டுவிட்டு, மூலையிலுள்ள சில புத்தகங்களை ஒவ்வொன்றாகத் தட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! பேர் லாகர்குவிஸ்டு எழுதி க.நா.சு. மொழிபெயர்த்த, நோபல் பரிசு பெற்ற சுவீடிஷ் நாவலான அன்புவழி ; எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
இவ்வாறே ஒரு நாள் காங்கேசன்துறை வீதியில் வைத்தீஸ்வரா வித்தியாலயத்துக்குச் செல்லும் சந்தியின் மூலையில் இருந்த, சண்முகநாத புத்தகசாலைக்குச் சென்றேன். பழைய கடை. அதிக புத்தகங்கள் இருக்கவில்லை; இருந்தவையும் பழையவை. தூசியாகவுமிருந்தது. கடையில் இருந்தவரிடம் சொல்லிவிட்டு, அலுமாரியுள் இருந்தவற்றைத் தட்டிப் பார்த்தேன், சங்கரராமின் மண்ணாசை, வ.ரா. எழுதிய பாரதியார் சரித்திரம், சி. சு. செல்லப்பா மொழிபெயர்த்த சிறிய இத்தாலியக் கதைப் புத்தகம், வேறு சிலவும் கிடைத்தன; சும்மா எட்டிப் பார்த்ததில் கிடைத்தவை நல்ல இலாபம்தான்!
 
1982 இல் தமிழகச் சுற்றுப் பயணத்தின்போது மதுரைக்கும் சென்றிருந்தோம்; மேலைக் கோபுர வீதியில் ஒரு லொட்ஜில் தங்கினோம். ஒரு நாள் மதிய உணவின் பின் பத்மநாப ஐயரும் குலசிங்கமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நான் சும்மா வெளியில் கிளம்பினேன். தங்கியிருந்த லொட்ஜுக்குப் பக்கத்தில் புத்தகங்களுடன் சிறிய கடையைக் கண்டேன். அங்கு சென்று, “புத்தகங்களைப் பார்க்கலாமா?” என அங்குள்ளவரிடம் கேட்க, அவர் “பாருங்க....” என்றார். வாங்கொன்றில் ஏறி, றாக்கையின் மேல்வரிசையில் உள்ளவற்றைத் தடவிப் பார்த்தேன். நிறையத் தூசி! ப.ராமஸ்வாமி எழுதிய அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர் மைக்கல் கொலின்ஸ் புத்தகம் கிடைத்தது. அதில் ஒன்பதோ பத்தோ பிரதிகள் இருந்தன. ஒன்றை வாங்கிவிட்டு, பத்மநாப ஐயரிடம் சேதி சொன்னேன்; அவர் உடனடியாக வந்து, இருந்த அவ்வளவு பிரதிகளையும் வாங்கினார். கடைக்காரருக்கு மிகுந்த மகிழ்ச்சி! “சார் எல்லாம் சிலோனா....?” என்று கேட்டுக் கதைத்தார்.
 
1973 இல், பேராதனையில் வேலை பார்த்த நான் விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அந்தக் காலங்களில் பல இடங்களுக்கும் பயணம்பண்ணி, நண்பர்களைச் சந்திப்பதும் இடங்கள் பார்ப்பதும்  வழக்கம். இம்முறை குப்பிழானிலுள்ள சண்முகனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பக்கத்து ஊரான குரும்பசிட்டியிலுள்ள இரசிகமணி கனகசெந்திநாதன், தனது நூல்களை விற்பதான செய்தியைச் சண்முகன் சொன்னார். உடனே அங்கே போவோம் என நான் வற்புறுத்தி, இருவரும் சைக்கிளில் கனகசெந்திநாதனிடம் சென்றோம். ஏற்கெனவே அவரை அறிந்திருந்த சண்முகன் என்னைப்பற்றி அவரிடம் சொன்னார். தனக்குப் பின் தனது  சேகரிப்பிலுள்ள புத்தகங்களைப் பேணுவதற்குக் குடும்பத்தில் வேறு யாரும் இல்லாத நிலையால்தான், அவற்றை விற்க அவர் முடிவெடுத்தார்; அவரிடம் பெருந்தொகையான நூல்கள் இருந்தன. நானும் சண்முகனும் தேடிப் புத்தகங்களை எடுத்தோம்; சுமார் இருபத்தைந்து நூல்களை நான் வாங்கியதாக நினைவு. ஆர்தர் கோய்ஸ்லரின் சந்நியாசியும் சர்வாதிகாரியும், கத்தரீன் ஆன் போர்ட்டர் எழுதி க.நா.சு. மொழிபெயர்த்த குருதிப்பூ, மார்க்சிம் கார்க்கியின் இலக்கியம் முதலிய அரிய புத்தகங்கள் கிடைத்தன. முந்திய நாள் செ. யோகநாதன் வந்து ஏராளமான புத்தகங்களை எடுத்துச் சென்றதாகக் கனகசெந்திநாதன் சொன்னார். ஒரு நாள் பிந்திவிட்டோம்; முதல் நாள் வந்திருந்தால் இன்னும் ஏராளமான அரிய புத்தகங்களைப் பெற்றிருக்கலாமே என்ற ஆதங்கம், எம்மிருவருக்கும் ஏற்பட்டது. புத்தகங்களைப் பெற்றபின், கட்டாயம் உணவருந்திச் செல்லவேண்டுமென அவர் கட்டாயப்படுத்தியதில், மதிய உணவை அங்கேயே சாப்பிட்டுத் திரும்பினோம்.
                                                        **
புத்தகங்களை ஒருபோதும் இரவல் கொடுக்கவேண்டாமெனவும் கனகசெந்திநாதன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். முக்கியமான புத்தகங்கள் தொலைந்துவிடும், தவிர அழுக்காகியோ கிழிந்தோ பழுதாகிவிடும் என்றும் விபரித்திருந்தார். அந்த அறிவுரையின் உண்மையைப் பின்னாளில் அனுபவரீதியில் உணரமுடிந்தது. ஆயினும், எனது புத்தகங்களை இரவல் கொடுக்கும் பழக்கம் நீண்டகாலமாக என்னிடமிருந்தது (தற்போது அவ்வாறில்லை; ஒருசில நண்பர்களுடன் மட்டும் பரிமாற்றம் இருக்கிறது). நண்பர்கள், தெரிந்தவர்கள், என்னுடன் பழகும் இளைஞர்களில் பலர் என்போருக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைக் கொடுத்து உதவினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் முதுகலைமாணிப் பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்தபோது, சுமார் முப்பது வரையான  எனது புத்தகங்கள், கொஞ்சக் காலம் அவரிடமே இருந்தன. எல்லாப் புத்தகங்களையும் யாருக்கு, எப்போது கொடுத்தாலும் குறித்து வைக்கும் பழக்கமும் இருக்கிறது. பெரும்பாலும் புத்தகங்கள் திரும்பக் கிடைத்தாலும் தவறிப் போனவையும் பழுதாக்கப்பட்டவையும் சில உண்டு. எனது கல்லூரிச் சகபாடி ஒருவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்தபோது, க.கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் புத்தகத்தை இரவல் வாங்கினார்; திரும்பத் தந்தபோது பார்த்தால், ஏராளமான இடங்களில் சிவப்புப் பேனையால் அடிக்கோடிட்டு அசிங்கப்படுத்தியிருந்தார். அவ்வாறே யாழ்ப்பாணத்தின் பிரபல கவிஞர் ஒருவர், மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் பலவற்றை ஆய்வுக் கட்டுரைக்காக எடுத்துசென்று திரும்பத் தந்தார்; பார்த்தால் அவருக்குத் தேவையான இடங்கள் பலவற்றில்  பென்சிலால் அடையாளமிட்டதோடு, ஓரங்களில் குறிப்பும் எழுதியிருந்தார். பென்சில் பாவிக்கப்பட்டதால் எரிச்சல்பட்டபடி அவற்றை அழி றபரால் சுத்தம் செய்தேன். நண்பரான கவிஞர் சு. வில்வரத்தினம், எண்பதுகளில் எடுத்துச் சென்ற இரண்டு புத்தகங்களிலும் பல பக்கங்களில் குமிழ்முனைப் பேனாவால் பல வட்டங்கள் கிறுக்கப்பட்டிருந்தன. எரிச்சலுடன் அதைச் சுட்டிக்காட்டியபோது அவர், “குழந்தைப் பிள்ளைகள் உள்ள வீடென்றால் அப்படித்தான் இருக்கும்” எனச் சாதாரணமாகக் கூறினார்; அவரிடம் எந்தச் சங்கடமுமே இருக்கவில்லை. “இரவல் புத்தகங்களைக் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவேண்டும்; இல்லையேல், நீங்க காசு கொடுத்து வாங்கி கிறுக்கக் கொடுங்க....” என நான் கோபத்துடன் கூறி, இனிமேல் இருவருக்குமிடையே புத்தகக் கொடுக்கல் வாங்கல்  இல்லை எனச் சொல்லிவிட்டேன்.
 
எழுபதுகளில் செ. யோகநாதனுடன் பழக்கமேற்பட்டது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த அவர், கத்தரீன் ஆன் போர்ட்டரின் குருதிப்பூ, கிழக்கு யேர்மன் பெண் எழுத்தாளரான அன்னா செகர்ஸ் எழுதிய நாவலான மீனவர் எழுச்சி (இது மு. புஷ்பராஜனின் புத்தகம்; படிப்பதற்காக வாங்கியிருந்தேன்.) உட்பட ஐந்து புத்தகங்களை எடுத்துச் சென்றார். பின்னொருநாள் இதை அறிந்த, யோகநாதனதும் பத்மநாப ஐயரதும் நண்பரான அ. கந்தசாமி சொன்னார்: “யோகநாதனிடம் புத்தகங்கள் கொடுத்ததா....? அப்படியானால் அது, கடல்கொண்ட தமிழகம்!” அவர் கூறியது போலவே, அந்தப் புத்தகங்கள் என்னிடம் திரும்பி வரவேயில்லை. அவர் பலரிடம் இவ்வாறு நடந்துள்ளதாகப் பின்னர் கேள்விப்பட்டேன்.
 
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எனக்குத் தெரிந்த ஒருவர் – மெய்யியல் வகுப்புகளை தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பவர் – தான் முதுமாணிப பட்டப் படிப்புப் படிப்பதாகவும் போதிய தமிழ் நூல்கள் கிடைக்கவில்லையெனவும், ஆங்கில அறிவு சுமார் என்பதால் ஆங்கில நூல்களைப் பயன்படுத்தவும்  இயலவில்லை எனவும் என்னிடம் கூறிக் கவலைப்பட்டார். என்னிடம் சிறுதொகை மெய்யியல் நூல்கள் உள்ளதைக் கூறி, இவ்விரண்டாக எடுத்துச் சென்று  பயன்படுத்தித் திரும்பத் தாருங்கள் எனக் கூறி உதவினேன். சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைப் பதிப்பாசிரியர் குழுத் தலைவராககொண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு, கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு என்ற தலைப்பில், விரிவான இரண்டு பாகங்களாக  அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக (1970) வந்துள்ளது. அதன் முதலாம் பாகத்தைப் பாவித்தபின் திருப்பித் தந்து, இரண்டாம் பாகத்தைப் பெற்றுச் சென்றார். இடையில் நிகழ்ந்த  1995  யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது, எல்லோரையும் போல் நானும் குடும்பமும் இடம்பெயர்ந்து, வன்னியிலுள்ள  கிராஞ்சிக்குச் சென்று, 1998 இல் ஊர் திரும்பினோம். என்னை முதலில் கண்டபோது, புத்தகம் காணாமல்போய்விட்டதாகவும், எப்படியும் அதன் ஒரு பிரதியைப் பெற்றுத் தருவதாகவும் அவர் சாதாரணமாகச சொன்னார்; அவரிடம் எந்த வருத்தமும் காணப்படவில்லை. என்னிடமிருந்த சுமார் ஐயாயிரம் வரையிலான புத்தகங்கள் வீட்டில் அப்படியே இருந்தன; காணாமல் போனவை யெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி, விடியோப் பிளேயர், போர்ட்டபிள் ரைப்ரைட்டர், எனது மனைவியின் தாயார் முன்பு பாவித்த எக்கோடியன், தந்தையார் பாவித்த ஹார்மோனியப் பெட்டி, நூற்றுக்கணக்கான எனது இசைநாடாக்கள், சுவர் மணிக்கூடு, பெறுமதியான சாறிகள், உடுப்புக்கள் முதலியவைதான். இதனாலெல்லாம் அவர் கூறியதை நான் நம்பவேயில்லை; அவரது “தொழிலுக்கு” தேவையான அரிய நூல் அது என்பது வெட்டவெளிச்சம்!
 
எண்பதுகளில் மௌனி கதைகள் நூலை மு. பொன்னம்பலத்திடம் கொடுக்கும்படி பத்மநாப ஐயர் கேட்டுக்கொண்டவாறு, அவரிடம் கொடுத்தேன்; மௌனி பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை எழுதுமாறு பொன்னம்பலத்தை ஐயர் அப்போது தூண்டிக்கொண்டிருந்தார். ஆயினும் கட்டுரை எழுதப்படவும் இல்லை ; எனது புத்தகம் திரும்பி வரவுமில்லை. 1989 இல் இந்திய அமைதிப்படை வடக்கில் இருந்தபோது, அதன் சார்புக் குழுக்களால் பாதுகாப்பு அச்சம்  ஏற்பட்டதில், ஆய்வாளர் மு. திருநாவுக் கரசு புங்குடுதீவிற்குப் போய் மறைவாக வசித்தார்; அங்கிருந்துகொண்டேதான் சர்வதேசி என்னும் புனைபெயரில், உலக அரசியல் பற்றிய கட்டுரைகளைக் கிழமைதோறும்  நான் கடமைபுரிந்த ‘திசை’ வாரப்பத்திரிகையில் எழுதினார். அவரைச் சந்திக்கப் புங்குடுதீவுக்குச் சென்றபோது, மு. பொன்னம்பலத்தின் வீட்டுக்கும் சென்றேன். அங்கு றாக்கையொன்றில் சிறு தொகைப் புத்தகங்கள் இருந்தன. அவற்றைத் தட்டிப் பார்த்தபோது, கே. சந்தானம் மொழிபெயர்த்த டோல்ஸ்ரோயின் ‘அன்னா கரீனா’ நாவல் தமிழ் மொழிபெயர்ப்பு  நூலைக் கண்டேன். குப்பிழான் ஐ. சண்முகனின் கையெழுத்து அதில் இருந்தது; அது அரிதான பிரதியாகும். நான் “சண்முகனின் புத்தகம் உங்களிடம் எப்படி?” என்று கேட்டேன். அவர், “ நான் அவரிடம் பெறவில்லை!” என்று கூறி, என்னிடம் இருந்ததைப் பறித்து றாக்கையில் வைத்தார். நான் பிறகு இதுபற்றிச் சண்முகனுக்குத் தெரிவித்தேன். முன்பு நான் அறிந்தவரை, அப்புத்தகம் மு. பொன்னம்பலத்திடமிருந்து சண்முகனுக்குக் கிடைக்க வில்லை.
 
1990 ஆனியில் பிரேமதாசா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சண்டை மூண்டபோதும் இடம்பெயர்ந்து கிராஞ்சிக்குச் சென்று, ஆறு மாதங்கள் வசித்தோம்; ஏனெனில், எங்கள் ஊரான குருநகர் அடிக்கடி ஷெல் வீச்சுக்கு உள்ளாகும் ஆபத்தான பகுதியாக இருந்ததால், மக்கள் இடம்பெயர்வது வழமை! ஓய்வூதியத்தை வங்கியில் பெறுவதற்காக, ஒவ்வொரு மாதமும் வன்னியிலிருந்து சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்துபோனேன். அவ்வாறு வந்து போகையில் சிறுதொகைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று, பின்னர் வரும்போது அவற்றை வைத்துவிட்டு வேறு புத்தகங்களைக் கொண்டு செல்வேன். தனது அரசியல் எழுத்துகளில் கலைத்துவம் ஏற்படுவதற்கு புனைகதை நூல்களை வாசிப்பது உதவும் எனக்கூறி, நல்ல புத்தகங்களைத் தரும்படி கேட்டதில், ஆய்வாளர் மு. திருநாவுக்கரசுக்கு முன்பிருந்தே உதவி வந்தேன். ஒருமுறை நான் கிராஞ்சியிலிருந்து வந்தபோது, ஜோர்ஜ் ஓர்வெலின் புகழ்பெற்ற நாவல்களான விலங்குப் பண்ணை, 1984 ஆகிய இருநூல்களும் எனது பயணப் பையிலிருந்தன. யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது, முக்கியமான நூல்கள் எனக்கூறி  இரண்டையும் அவரிடம் கொடுத்தேன். பிறகு அவற்றை அவர் தொலைத்துவிட்டார்! அவரிடமிருந்து யாரோ இரவல் வாங்கியுள்ளனர்; யாரென்பதையும் அவர் மறந்துவிட்டார். நஷ்டம் என்னவோ கனகசெந்திநாதன் சொன்னமாதிரி எனக்குத்தான்! கோவை சர்வோதய வெளியீடாக வந்த அவை விற்று முடிந்ததில் நீண்டகாலமாக அவற்றைப் பெற முடியவில்லை. அண்மையில்தான் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக இரண்டு நூல்களும் வந்துள்ளன!
 
1982 இன் பிற்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மு. நித்தியானந்தனும் நிர்மலாவும்,கொழும்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவ்வேளை நான், கொழும்பு மத்திய தந்திக் கந்தோரில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 1983  வைகாசியளவில் கொழும்பில் என்னைக் கண்டபோது, நிர்மலாவின் அப்பா ராஜசிங்கம் மாஸ்ரர், ஓர் உதவி செய்யமுடியுமா எனக் கேட்டார். கிழமையில் ஒரு நாள் சிறையிலுள்ள இருவரையும் பதினைந்து நிமிடங்கள் தனித்தனியாகச் சந்திக்கவும்,  சந்தித்து உணவு வழங்கவும் அனுமதி உண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வருவதில் தனக்குக் கஷ்டங்கள் உள்ளன; நான் கொழும்பில் உள்ளதால், அவரது உறவினர் ஒருவர் தரும் உணவைப் பெற்று அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே, அவர் கேட்ட உதவி. நான் ஒப்புக்கொண்டு, சுமார் மூன்று மாதங்கள் அவ்வாறு செய்தேன். சிறைச்சாலையில் தனிப் பதிவேட்டில் எனது விபரங்களைப் பதிந்து, சுப்பிரிண்டனிடம் அனுப்பி அனுமதி கிடைத்த பிறகே உள்ளே விடுவார்கள்; சுமார் ஒரு மணித்தியாலம் வரை காத்திருக்கவேண்டும். வாசிப்பதற்காகப் புத்தகங்களை நித்தியும் நிர்மலாவும் கேட்டார்கள். அவற்றை முன்புறத்திலுள்ள காவலரிடம் கொடுத்தால், மேலதிகாரிக்கு அனுப்பிப் பரிசோதித்துச் சிறிது காலத்தின் பின்னர், ‘பரீக்ஷா கரணலதீ’ என்ற சிங்கள முத்திரை பதித்து, அவர்களிடம் கொடுப்பார்கள். அவ்வாறே புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பப் பெற்று வந்தேன்.
 
1983  ஆடியில் தமிழருக்கெதிரான இன வன்முறை ஏற்பட்டது. இதற்கு ஒரு கிழமையின் முன்னர், நிர்மலாவின் சிற்றப்பா சிறைச்சாலைக்குச் சென்றிருந்தபோது, எனது புத்தகங்களை அவரிடம் கொடுத்துள்ளனர். கிருலப்பனையிலுள்ள அவரது வீடு கலவரத்தின்போது காடையர்களால் எரிக்கப்பட்டதில், எனது புத்தகங்களும் எரிந்துவிட்டன! வாசகர் வட்டம் வெளியிட்ட கு. ப. ராவின் சிறிது வெளிச்சம், பி. கேசவதேவின் மலையாள நாவலான அண்டைவீட்டார், எஸ்.வி. ராஜதுரை எழுதிய அந்நியமாதல் முதலியவை அவற்றுள் அடங்கும்.
 
எழுபதுகளின் பிற்கூறில் ஒருநாள், நாவலர் வீதியிலுள்ள நித்தி –  நிர்மலாவின்  வீட்டில் நான் இருந்தபோது, ரஜனி திரணகம (நிர்மலாவின் தங்கை) வந்தார்; அவரது கையில், மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பக வெளியீடாக வந்த, சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல்களைக் கொண்ட Tales  from  the  mountain  ஆங்கில நூல் இருந்தது; என்னிடமும் அது உண்டு. அதனைக் காட்டி, “அழகியலுணர்வுடன் எழுதப்பட்ட நல்ல கதைகள். இங்க சிவத்தம்பி கைலாசபதி ஆட்கள் ஏன் கலைத்துவத்தை ஒதுக்குகினம்....?” எனக் கேட்டார். நான் சிரித்தபடி, “அதுதான் இங்க பிரச்சினை” என்று சொன்னேன். மேலும், அந்த நூலிலுள்ள நான்கு கதைகளும் குல்சாரி, எனது முதல் ஆசிரியன், அன்னை வயல், ஜமீலா ஆகிய பெயர்களில் தனித்தனி நூல்களாகத் தமிழில் வந்திருப்பதையும் அவரிடம் தெரிவித்தேன்.
 
பிறிதொரு நாள் நான் அங்கிருந்தபோது, அவரது கணவரான தயபால திரணகம வந்திருந்தார். அவர் அப்போது கொழும்பிலோ வேறெங்கேயோ பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக இருந்தார். அவருடன் எனக்குச் சிறிது பழக்கம் உண்டு. கதைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென கொஞ்சம் பணத்தை நீட்டி, ஆங்கிலத்தில் “ஜேசு கீப் திஸ்” ( ஜேசு இதை வைத்துக் கொள்ளுங்கள்) என்றார். அதை வாங்கினேன்; ஐந்நூறு ரூபா இருந்தது. எதற்கு? என ஆங்கிலத்தில் கேட்டேன். “ஃவோ அலை” (“அலைக்காக....”) என்றார். “நீங்கள் ஒரு சிங்களவர். தமிழ் வாசிக்கத் தெரியாது. ஏன் அலைக்குக் காசு தாறீங்க?” என ஆங்கிலத்தில் கேட்டேன். “யூ ஆ டூயிங் குட் சேவிஸ். ஐ நோ தற்” என்றார். நித்தியானந்தன், நிர்மலா வழியாக அவர் அலை பற்றி அறிந்திருக்க வேண்டும். நான் அப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்!
 
1995  இடப்பெயர்வின்போது கிராஞ்சியில் வசித்தபோது, ஸ்கந்தபுரத்துக்கு (சுமார் பதினைந்து பதினாறு  கி.மீ. தூரம் இருக்கும்) சைக்கிளில் சென்று, அமரதாசிடம் தேவையான புத்தகங்களைப் பெற்றேன். ஒரே தடவையில் பத்துப் புத்தகங்கள் வரை எடுத்து வந்து, மறுபடி சென்று திருப்பிக் கொடுத்தேன். அவரிடம்  நல்ல புத்தகங்கள் ஏராளம் இருந்தன. அப்போது கவிஞர் கருணாகரன் அக்கராயனில் இருந்தார். ஒருமுறை அவரிடம் அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots நூலின் சுருங்கிய தமிழ் மொழிபெயர்ப்பான ஏழு தலைமுறைகள் நூலை வாசிப்பதற்காகப் பெற்றேன். அலுவல் காரணமாக அப்படியே நான் தருமபுரம் செல்லவேண்டும். வழியில் கிளிநொச்சியில் ஓவியர் தயாவைச் சந்தித்தேன். அவரது குடும்பம் தருமபுரத்தில் இருந்தது. அவரும் சேர்ந்து வந்தார். சுவாரசியமாகக் கதைத்தபடி சைக்கிளில் இருவரும் போனோம்; சுமார் பத்துக் கி. மீ. தூரம். எனது சைக்கிளின் கரியரில் புத்தகத்தை வைத்திருந்தேன். அதன் சுருள் கம்பி இறுக்கம் தளர்ந்திருந்ததால், அக்காலப் பரந்தன் – முல்லைத்தீவு  வீதியின் ‘பள்ளம் திட்டி’களில் சைக்கிள் ஏறி இறங்கியபோது, வழியில் எங்கோ புத்தகம் விழுந்துவிட்டது. தருமபுரத்தில்தான் இதனை அவதானித்தேன். இரவல் புத்தகம்; அரிதான முக்கிய புத்தகமுங்கூட. அது இழக்கப்பட்டதில் கவலையாகிவிட்டது. பின்னர் கருணாகரனிடம் சொன்னபோது அவருக்கும் கவலை; எனக்குக் குற்றவுணர்வு. இழப்பை ஈடுசெய்ய, அப்போது என்னிடமிருந்த அ. மார்க்ஸ் எழுதிய புத்தகமொன்றையும் வேறு இரண்டு புத்தகங்களையும் அவருக்குக் கொடுத்தேன்.
 
யாழ்ப்பாணத்திலிருந்த பத்மநாப ஐயர் தனது மனைவியின் திடீர் மரணத்தின் பின்னர், மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, 1988 முற்பகுதியில், மாமனார் வசிக்கும் மாத்தளை சென்றார். அப்படிச் செல்கையில், அவர் பாவித்த - புத்தகங்கள் வைக்கக்கூடிய - பெரியதொரு அலுமாரியை எனக்குத் தந்தார். அதைவிட நான் ஏற்கெனவே இழந்துவிட்டமௌனி கதைகள், குருதிப்பூ, சிறிது வெளிச்சம் முதலியவற்றுடன் வேறு நூல்களையும் தனது சேகரிப்பிலிருந்து அன்புடன் தந்தார்; “இடைவெளியை நிரப்பும் கோட்பாட்டுத் திட்டத்தின் கீழ்” என அதனை நான், கேலியாகச் சொல்வதுண்டு!  இதுபோலவே, நண்பரும் மருத்துவருமான கனக. சுகுமார் தான் இலண்டன் செல்லுமுன், தன்னிடமிருந்த அந்நியமாதல் நூலையும் (அதில் எனக்கிருந்த ஈடுபாட்டை நன்கு உணர்ந்திருந்ததில்) எனக்குத் தந்தார்.

அ. யேசுராசா                         
19.09.2014 

நினைவுக் குறிப்புகள் – 3

ஜீவநதி
ஐப்பசி 2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை