குண்டுச் சட்டியும் குதிரை ஓட்டமும்

ஒரு சனிக்கிழமை.

கட்டுமான கடை ஒன்றில் எனக்குத் தேவையான பொருள் ஒன்று வாங்கச் சென்றிருந்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. சமையலறை யன்னலில் திரைச்சீலை தொங்க விடுவதற்கான ஒரு „கிளிப்' தான் எனக்குத் தேவைப்பட்டது. நான் தேடிய கிளிப் அங்கே இருந்தது.  எனக்குத் தேவைப்பட்டதோ ஒன்றுதான். ஐந்து, பத்து என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் அங்கிருந்த கிளிப்போ ஐம்பது சேர்ந்த பொதியாக கடைத்தட்டில், அழகான பெட்டி ஒன்றுக்குள் அடக்கமாக அமர்ந்திருந்தது. அவ்வளவையும் வாங்கி என்ன செய்வது?

வேறேதாவது தட்டுக்களில் தனியாக தட்டுப்படலாம் என்ற நம்பிக்கையோடு கடையை வலம் வந்து கொண்டிருந்தேன். பொருட்கள் எல்லாம் அவையவைக்கான தளங்களில் அழகழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வலம் வந்து கொண்டிருந்த எனக்கு தூரத்தில் இருந்த ஒரு தளத்தில் உயரமான ஏணியில் நின்று பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும் உருவம் ஒன்று தட்டுப் பட்டது. பார்த்தவுடன் விளங்கிக் கொண்டேன். „அவர் நம்ம ஆள்தான்' என்று.

சரி. அவரிடம்  நலம் விசாரித்து, நான் தேடும் கிளிப்பைப் பற்றியும் கேட்டுப் பார்க்கலாம் என்ற நோக்குடன் அவர் இருக்கும் இடத்தை நோக்கிப் போனேன்.

 „அண்ணை தமிழோ?'

„ஓமோம்'

சொன்னவர் ஏணியை விட்டு இறங்கி வந்தார்.

வந்தவர் கேட்க ஆரம்பித்தார்.

„உங்களை நான் ஒருநாளும் சந்திக்கேல்லை. புதுசா இந்த நகரத்துக்கு வந்தனீங்களோ?'

„இல்லை நான் கனகாலமா இங்கைதான் இருக்கிறன்'

„அப்பிடியே. நான் ரண்டு வருசமா இங்கை இருக்கிறன் ஒரு நாளும் காணேல்லை'

நான் முப்பது வருசமா இங்கேதான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல  விளைந்தேன். ஆனால் சொல்லவில்லை. கேள்வியை திசை மாற்றினேன்

„இந்தக் கடைக்கு கனதரம் வந்திருக்கிறன். உங்களைப் பாக்கேல்லை'

„இப்பதான் மூன்று கிழமையா வேலை செய்யிறன்'

„ஆ நல்லது'

'நீங்கள் ஊரிலை எந்த இடம்?'

ஊரைச் சொன்னேன்.

„நான் அங்கை வந்திருக்கிறன். கோட்டு வாசல் அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வாறனாங்கள்'

அர்ச்சகராக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.

„கடவுள், கோயில் இரண்டிலும் இருந்து நான் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஆள்'

„ஏன் நாத்திகரோ? நாங்கள் பூசைக்கு நாதஸ்வரம் வாசிக்கிறதுக்கு அங்கை வாறனாங்கள்'

அவர் நாதஸ்வரம் என்ற சொல்லை உச்சரித்ததும், நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லி வைத்தது நினைவுக்கு வந்தது.

எனது நண்பர் தனது மகனின் திருமணத்தை அடுத்த வருடம் செய்வதற்கு தீர்மானித்து இருக்கிறார். அதற்கு நாதஸ்வரம் இருந்தால் நல்லது. யாரையாவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் சொல்லி வைத்திருக்கிறார். இப்போ கையில் வெண்ணை கிடைத்திருக்கிறது. இங்கே எனக்கு முன்னால் நாதஸ்வரம் ஒன்று சிரித்துக் கொண்டிருக்கிறது.

„இஞ்சை வேலை கொஞ்சம் கஸ்ரம்' எனது  நாதஸ்வர சிந்தனையை அவர் கலைத்தார். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவரே தொடர்ந்தார்.

„நாலு மணித்தியாலம்தான் வேலை. ரக்ஸ் அது இது எண்டு கழிச்சு ஒரு சனிக்கிழமைக்கு முப்பது முப்பத்தைஞ்சு யூரோதான் கிடைக்கும்'

„இப்பிடியான வேலைக்கு இதுக்கு மேலை தரமாட்டாங்கள். வீட்டிலை சும்மா இருக்கிறதுக்கு இது பரவாயில்லைத் தானே?'

„எங்கை சும்மா இருக்கிறதுக்கு நேரம்? ஆராவது கலியாண வீட்டுக்கு கேட்டால் நாதஸ்வரம் வாசிக்கப் போயிடுவம். இந்தக் கிழமை ஒண்டும் இல்லாததாலை  இஞ்சை நிக்கிறன்.

பழம் நழுவுகிறது பாலில் விழப் போகிறது. அந்த உணர்வு எனக்கு வந்திருந்தது. விட்டால் அவர் தனது புலம்பலுக்கான கச்சேரியை வாசிக்க ஆரம்பித்து விடுவார். நானே முந்திக் கொண்டேன். அடுத்த வருடம் நடக்க இருக்கும் எனது நண்பனின் மகனின் திருமணத்தைப் பற்றிச் சொன்னேன்.

„ஒரு பிரச்சினையும் இல்லை. எப்ப நாள் எண்டு நேரத்தக்குச் சொல்லிப் போடுங்கோ'

எந்த நாள் திருமணம் என்று நண்பரிடம் கேட்டுச் சொல்வது எனக்கு பிரச்சினையாக இருக்காது. ஆனால் நாதஸ்வரம் வாசிப்பதற்கு அவர்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது தெரிந்தால் நண்பருக்குச் சொல்லலாம் என்ற எண்ணம்.

„எவ்வளவு  காசு எண்டதை சொன்னீங்களெண்டால்...'

„ஒரு கலியாணத்துக்கு நாங்கள் 1200 யூரோ வேண்டுறனாங்கள்' சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.

தொகை நாலு இலக்கத்தில் வந்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் நாதஸ்வரத்துக்கு 350 கொடுத்ததாக இன்னும் ஒரு நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார். மூன்று வருடத்துக்குள் இவ்வளவு மாற்றமா?  அல்லது எனது முகத்தில் ஏதாவது எழுதி வைத்திருக்கிறதா?

எனது அதிருப்தியை உடனேயே சொன்னேன்.

„நான் நினைக்கிறன் உங்கடை ரேற் கூட எண்டு. நான் அறிய ஒரு கலியாணத்தக்கு 350க்கு வந்து வாசிச்சவையள்'

„அப்பிடி எண்டால் அது ஒரு செற்றா இருக்கும். நாங்கள் ரண்டு செற்'

„ஒரு கலியாணம்தானே ஒரு செற் போதும்தானே'

„ஓகே அப்பிடி எண்டால் ஐநாறுக்கு வாசிக்கிறம். அதுவும் உங்களுக்காக. இப்ப நாங்கள் ஒரு ஊர்க்காரராயிற்றம் பாருங்கோ'

350க்கு  நாதஸ்வரம் வாசித்தார்கள் என்கிறேன். இவரோ எனக்காக ஐநூறுக்கு வாசிக்கலாம் என்கிறார். பத்து நிமிசத்திற்கு முன்னாடி சந்தித்தவருக்கும் என்னைப் பற்றி உடனேயே விளங்கி விடுகிறது.

எனது மௌனம் அவரைப் பேச வைத்தது.

„மாப்பிளை அழைப்பில் இருந்து தாலி கட்டுற வரைக்கும் நாலு மணித்தியாலத்துக்கு வாசிப்பம். 500 குடுத்தால் போதும். சந்தோசத்துக்கு வேணுமெண்டால் ஒரு மணித்தியாலம் எக்ஸ்ரா சும்மா வாசிச்சிட்டுப் போறம்'

எனது குரங்குப் புத்தி உடனேயே கேட்டு வைத்தது.

„எக்ஸ்ரா சும்மா வாசிக்கிறதைப் பற்றிச் சொன்னிங்களே. அதை மட்டும் வாசிச்சுப் போட்டு போனால் என்ன?'

கண்ணகியே பார்க்காத பார்வை அது. அன்பர் ஏணியில் ஏறி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

யேர்மன்காரனிடம் நாலு மணித்தியாலங்கள்  வேலை செய்தால் 30 யூரோக்கள். அதே மணித்தியாலங்கள் தமிழனிடம் வேலை செய்தால் 300 யூரோக்கள்.

யேர்மன்காரனை விட நாங்கள் பத்து மடங்கு மேல்.

திரைச் சீலைக்கான கிளிப் நினைவுக்கு வர உதிரியாகக் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தேன்.

ஐ.ஆர்.நாதன்
10.10.2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை