அலாரிப்பும் அங்காலாய்ப்பும்!

தாய் சிக்கன், தந்தூரிச் சிக்கன், பட்டர் சிக்கன், சிக்கன் பூரி, கிட்னி பிரை ஸ்மால் சிக்கன், நண்டுக்கறி, இறால் குழம்பு, இறால் பிரட்டல், கணவாய்ப் பிரட்டல், சுறாக் குழம்பு, சுறாப் பொரியல், ஆட்டுக்கால் குழம்பு, ஆட்டு இறைச்சிக் குழம்பு, ஆட்டிறைச்சிப் பிரட்டல், உருளைக் கிழங்குப் பிரட்டல், மரவள்ளிக் கிழங்குப் பிரட்டல், சொதி, பச்சை மிளகாய்ச் சம்பல், சிவத்த மிளகாய்ச் சம்பல், கொத்தமல்லித் துவையல், இடியப்பம், பிட்டு, நூடுல்ஸ், மரக்கறி நூடுல்ஸ், பூநகரிக் குத்தரிசிச் சோறு, ஜஸ்மின் அரிசிச் சோறு, பஸ்மதிஅரிசிச் சோறு, பிரியாணி...

இதை எல்லாம் ஏன் இங்கே வரிசைப் படுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒருவேளை சமையல் குறிப்புகள் எழுதும் நோக்கமா என ஐயப் படுகிறீர்களா?

பயப்படாதீர்கள் அப்படியான அஜீரண வேலைகளை நான் செய்யப் போவதில்லை. பிறகு எதற்காக என்றா கேட்கிறீர்கள்? பின்னர் சொல்கிறேன்.

எனக்கு அருகில் இருந்த பொதுமகன் நெளிந்து வளைந்து நிறையவே சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். அவரின் இவ்வாறான அசைவுகளால் மேடையில் நடந்து கொண்டிருந்த அரங்கேற்றத்தில்  என்னால் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. மரியாதை நிமித்தம் மிகப் பொறுமையாக   பேசாமல் இருந்தேன். ஆனால் வரவர பொதுமகனின் அசைவுகள் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் மேடையில் நடக்கும் அரங்கேற்ற முத்திரைக்கான அசைவுகளை விட இவரது அசைவுகள் அதிகமாகி விடுமோ என்ற பயம் எனக்கு வந்து விட்டது.

பொறுமையை இழந்து விட்டிருந்தேன்.

„ஏன் என்னாச்சு?' நிகழ்ச்சிக்கு இடையூறு வராத வண்ணம் பொதுமகனைப் பார்த்து மெதுவாகக் கேட்டேன்.

„ஒன்றும் இல்லை' என பொதுமகன் கண்களால் ஜாடை காட்டினார்.

„பிறகு எதுக்கு இருக்கையில் இருந்து அங்கேயும் இங்கேயுமாக நெளிந்து கொண்டிருக்கிறீங்கள்?'

„கொஞ்சம் கூட இறுக்கிப் போட்டன்'

அரங்கேற்றத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மதிய உணவு தந்திருந்தார்கள். வெள்ளித் தட்டின் நடுவே வாழை இலை போட்டு அதன் மேல் சோறு பருப்பு  வைத்து அவற்றைச் சுற்றி ஒன்பது வெள்ளிக் கிண்ணங்களில் விதவிதமான கறிகளுடன் வடகம், அப்பளம், மோர் மிளகாய்ப் பொரியலுடன் வடை, பாயாசம் என மதியச் சாப்பாடு பலமாக இருந்தது.

அதைத்தான் பொதுமகன்  கொஞ்சம் கூடவா இறுக்கிப் போட்டார் எனப் புரிந்தது.

காற்றில் ஏதோ ஒரு வாடை. பொதுமகனின் உபயமோ? ஐயம் கொண்டு அவரைப் பார்த்தேன்.

„மூச்சுக் காற்று உள்ளே போகமாலும், வெளியே வராமலும் சரியான கஸ்ரமா இருந்தது. ஏவறை விட்டாப் போலைதான் ஆறுதலா இருக்கு'

பொதுமகன் ஏப்பம் விடவும் இடைவேளை வரவும் சரியாக இருந்தது.

மண்டபத்திற்கு வெளியே பலவிதமான கேக்குகள், தேநீர், கோப்பி, குளிர்பானங்கள் என அமர்க்களமாக இருந்தது. அவற்றிற்கு நடுவே பொதுமகனின் நடமாட்டம் தெரிந்தது. என்னைக் கண்டவுடன் ஒரு நமட்டுச் சிரிப்பைக் காட்டி விட்டு அவர் தனது கடமையிலேயே கண்ணாக இருந்தார்.

மண்டபத்திற்கு வெளியே நிற்கையில் குளிர் காற்று இதமாக இருந்தது. காற்றும் சுத்தமாக இருந்தது. நேரம் போனது தெரியவில்லை.

„அரங்கேற்றம் துடங்கீட்டுது“

ஆரவாரங்கள் கேட்டு மண்டபத்திற்குள் வந்து அமர்ந்தேன்.

பொதுமகனைப் பார்த்தேன் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். தூங்கும் நிலைக்கு வந்து விட்டார் எனத் தெரிந்தது.

மெதுவாகச் செருமினேன்.

திரும்பி என்னைப் பார்த்தார்.  „நான் நினைச்சன் நீங்கள் வீட்டை போயிட்டீங்கள் எண்டு'

„நிகழ்ச்சி முடிய ஆக்களை கண்டு சொல்லிட்டுப் போறதுதானே முறை'

'அதுதான் எனக்கும் உள்ள பிரச்சினை. அரங்கேற்றம் முடிஞ்சாப் போலை மொய் குடுத்து, போட்டோவுக்கு போஸ் குடுக்காட்டில் வந்தது போனது தெரியாமல் போயிடும். மொய் குடுத்த உடனை பறந்திடுவன்'

'அப்ப இரவுச் சாப்பாட்டுக்கு நிக்கேல்லையோ?'

'இரவுச் சாப்பாடும் இருக்கே?'

'அழைப்பிதழை சரியாப் பாக்கேல்லைப் போலை..'

பொதுமகனின் முகம் கொஞ்சம் மாறிப் போயிருந்தது. இரவுச் சாப்பாட்டுக்கு வயிற்றில் இடமிருக்குதோ என்ற கவலை அவருக்கு வந்து விட்டிருந்தது.

அப்பொழுதுதான் நான் முன்னர் குறிப்பிட்ட தாய் சிக்கன் தொட்டு… இரவுச் சாப்பாட்டுக்கு இருந்த அயிட்டங்களை  அவர் காதுக்குள் சொன்னேன்.

'என்னது இவ்வளவுமா? சொல்லவேயில்லை' பொதுமகனுக்கு சங்கடமாக இருந்தது. 'எல்லாமாக நாற்பத்தியேழு ஐயிட்டங்கள் வரும் போலை'

நான் அதை ஆமோதித்தேன்.

'என்ன செய்யலாம்' என்று பொதுமகன் என்னிடம் கேட்டார்

'நான் ஒரு கதை சொல்லவா?'

'இப்பவா? எதுக்கு?'

'சொல்லுறன் கேளுங்களேன்'

'பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன். அவன் ஒரு சாப்பாட்டுப் பிரியன். எப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடிந்தவுடன் வாய்க்குள் இரண்டு விரல்களை விட்டு வாந்தி எடுத்து விட்டு அடுத்த சாப்பாட்டுக்குத் தயாராகி விடுவான்'

பொதுமகன் கதை சொல்வதை நிறுத்தும் படி ஜாடை காட்டினார்.

'இரண்டு விரல் விட இடமிருந்தால் இன்னும் இரண்டு கேக் துண்டை உள்ளே தள்ளி இருக்க மாட்டேனா?'

பொதுமகனின் இந்தக் கேள்விக்குப் பிறகு என்னால் மேற்கொண்டு வாயைத் திறக்க முடியவில்லை. மௌனமாகி விட்டேன்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தேன். தூரத்தில் பொதுமகன் நடக்க முடியாமல் சிரமப்பட்டு நடந்து போவது தெரிந்தது. கூப்பிட்டுப் பார்த்தேன். அவர் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நிற்கவும் இல்லை. ஓடிச் சென்று இடை மறித்தேன்.

„என்ன மூச்சிரைக்க ஓடிவாறீங்கள்?' பொதுமகன் என்னிடம் கேட்டார்.

„கனதரம் கூப்பிட்டன். நீங்கள் நிக்கேல்லை'

„எனக்கு கேக்கேல்லை'

பசியில் காது அடைக்கும் என்பார்கள். இவருக்கு அதிகம் புசித்ததால் அடைத்திருக்கிறது.

'நிகழ்ச்சி எப்பிடி இருந்தது?' அவரிடம் கேட்டேன்.

'அசத்திப் போட்டான். ஒரு நிகழ்ச்சியிலையும் இப்பிடி ஒருத்தரும் சாப்பாடு போடேலை'

'கன சாப்பாடு  மிஞ்சிப் போட்டுதாம்' எனது கவலையைச் சொன்னேன்.

'அதுக்கு தண்ணியும் தந்திருக்கோணும். வழிச்சு துடைச்சிருப்பம்'

'அப்ப நிகழ்ச்சியைப் பற்றி..?'

'அதுதானே சொன்னன் அசத்திப் போட்டான். ஒரு நிகழ்ச்சியிலையும் இப்பிடி ஒருத்தரும் சாப்பாடு போடேலை எண்டு'

பொதுமகனுக்கு எரிச்சல் வந்திருக்க வேண்டும். அவரது பேச்சில் அது தெரிந்தது. மேற்கொண்டு கதைக்கும் நிலையில் அவர் இல்லை என்பது புரிந்தது.

அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்தேன்.

கொட்டிச் சிதறிக்கிடந்த உணவுகளைக் கூட்டி அள்ளிக் கொண்டிருந்தார்கள்.

பயிருக்குப் போக வேண்டிய நீரை நாங்கள் திசை மாற்றிப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் எளிதில் எல்லாவற்றையும் மறந்து போகிறவர்களா?

ஐ.ஆர்.நாதன்
03.10.2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை