நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது

ஆனைவிழுந்தான் சந்தியில் இருந்தது அந்த மயானம். மயானத்தை ஒட்டி இருந்த  வீதி எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும். அந்த வழியாக தனியாகப் போகும் போது ஒரு வித அச்சம் இருக்கும்.  ஆனாலும்  நண்பர்களோடு வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பொழுது அந்த மயானத்துக்குள் ஒரு தடவை போய் வலம் வந்து விட்டே போவோம்.  வாய்க்கரிசி போடும் பொழுது வீசப் படும் அரிசியோடு கலந்திருக்கும் ஐந்து, பத்து சத நாணயக் குற்றிகளோடு, சில சமயங்களில் ஐம்பது சத நாணயங்களும்  யார் கண்களிலும் படாமல் எங்களுக்காக ஒளித்துக் காத்திருக்கும். வல்லிபுரக் கோவில் கேணியில் குளித்த பின்னர் மரத்தடிகளில் ஆச்சிகள் சுட்டுக் கொண்டிருக்கும் சூடான தோசைகளை புசிக்கவும், துரைசிங்கத்தின் தமையனார் நடாத்திக் கொண்டிருந்த தேனீர் கடையில் தேத்தண்ணி ருசிக்கவும் அவை எங்களுக்குப்  பயன் பட்டிருக்கின்றன.

ஆனைவிழுந்தான் மயானத்தின் வடக்குப் பகுதியில் இருந்த காணி தனியாருக்குச் சொந்தமானது. வேலி அடைப்புகள் கிடையாது. வெள்ளை மணலை கள்ளமாக அள்ளிச் செல்ல அந்த காணியினூடாகவே வழி அமைத்து றக்டர்கள் பயணிக்கும்.

ஊரில் எங்காவது நாகபாம்பு வந்தால், பிடித்துக் கொண்டு வந்து வல்லிபுரக் கோவிலடியில் விடுவது அப்பொழுது வழமையாக இருந்தது. சாமிக்குற்றம் என்பதால் நாகப் பாம்புகளை கொல்ல மாட்டார்கள். இப்படி விடப்படும் நாகப் பாம்புகள் கோவிலை அண்டிய சவுக்குத் தோப்பிலும், பத்தைகள் உள்ள காணிகளிலுமே ஒதுங்கி வாழும். அதன் நிமித்தம் ஆனைவிழுந்தான் மயானத்தை ஒட்டி இருந்த காணியிலும் பாம்புகள் இருக்கும் என்ற பயத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி மயான அமைதியாக இருக்கும்.

வழமைக்கு மாறாக  அந்தக் காணி அன்று சனங்களால் நிறைந்திருந்தது. அங்கிருந்த மரங்களில் எல்லாம் சைக்கிள்கள் சாத்தி வைக்கப் பட்டிருந்தன. எனது றலி சைக்கிளும் அவற்றில் ஒன்றாக இருந்தது. ஒரு இளம் பெண்ணின் அதுவும் பாடசாலை மாணவியின் சடலம் அங்கே இருந்ததுதான் அன்று அந்தக் காணியில் இருந்த கூட்டத்துக்கான காரணம்.

பாடசாலைக்கு கொண்டு செல்லும் பை நிலத்தில் இருந்தது. அதனுள் இருந்து புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், கொம்பாஸ் எல்லாம்  மெதுவாக வெளியில்  எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. வெள்ளை நிற பாடசாலை சீருடையில்  தரையில் இருந்த பெண்ணின் உடலத்தின் முகம் மண் கொண்டு மூடப் பட்டிருந்தது.

„யார் பெத்த பிள்ளையோ? இப்படி செத்துப் போய் இருக்குது'

„எந்தப் பாவி இதைச் செய்தது?' என பலவிதமான அங்கலாய்ப்புகளை அங்கே கேட்கக் கூடியதாக இருந்தது.

„வீட்டிலை அக்கா இருக்கிறாதானே?' என்று ஊரில்  இருந்த  தம்பிமார்களை விசாரித்தோம். விசாரணை முடிவில் தெளிவானது. எங்கள் ஊரில் எல்லா மாணவிகளும் பத்திரமாக இருந்தார்கள் என்று. ஆகவே இறந்து இருந்தது வெளி ஊராக இருக்க வேண்டும். அது யாராக இருக்கும் என்ற  கேள்வி ஊரில் பலமாக இருந்தது.
யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் நகரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த  என்னை எனது நண்பன் கலையரசன் இடை மறித்தான்.
„மச்சான் நேற்று மத்தியானத்துக்குப் பிறகு  ஒரு பிள்ளையை  ஒருத்தன் ஆனைவிழுந்தான் பக்கம் கூட்டிக் கொண்டு போனதை நான் பார்த்தேன்டா'

„ஆளைத் தெரியுமோ?'

„புது முகங்களா இருந்துது.  முந்தி ஒருக்காலும் நான் அவையளைப்  பார்க்கை இல்லை மச்சான்'

முகத்தை மண் கொண்டு மூடி இருந்ததால் யாருக்குமே அந்தப் பாடசாலை மாணவியை யார் என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

அந்தக் கேள்வி அதிக நேரம் நிலைக்கவில்லை. மெதடிஸ் பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் மகள் என்று கண்டு பிடித்து விட்டார்கள். அந்த ஆசிரியையின் பெயரைக் கேட்டதும் எனக்குப் பெரும் கவலையாகப் போய் விட்டது. அந்த ஆசிரியை எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். அவரது கணவர் எனது வகுப்பு ஆசிரியராக இருந்தவர்.  ஆனால் இருவரும் ஏதோ காரணத்தால் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆஸ்திக்கு பெண் என்றும் ஆசைக்கு ஆண் என்றும் இரண்டு பிள்ளைகள்.  இரண்டு  பிள்ளைகளும் தாயுடனே வசித்து வந்தார்கள். மூத்தவளான மகள்தான் இப்பொழுது கொலை செய்யப் பட்டிருக்கிறாள். அவள் பெயர் கமலம்.

சம்பவம் இப்படித்தான் அரங்கேறுகிறது.
கமலம் படிக்கும் அதே பாடசாலையில்தான் தாயும் ஆசிரியையாக வேலை பார்க்கின்றார். அன்று அவளது தாய் பாடசாலைக்கு வரவில்லை.

கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு வராத்துப்பளை என்ற இடத்தில் அவளது தாய் சிகிச்சை பெறுகிறார் என்றும் கமலத்தை அழைத்து வர என்னை அனுப்பினார் எனவும் பொய் சொல்லி பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த கமலத்தை அழைத்துச் செல்கிறான் அவளது ஒன்று விட்ட சகோதரன். அவன் பெயர் வீரப்பன்.

இந்த வீரப்பன் ஒரு கடற் தொழிலாளி. சொந்தமாகப் படகு இல்லாததால் ஒரு சம்மாட்டியாரின் கீழ் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறான். சம்மாட்டியாரின் மகனுக்கு கமலத்தின் மேல் ஒரு கண். கமலமோ அவனைக் கண் கொண்டு பார்க்கவே இல்லை. கொஞ்சம் நெருங்கி வந்து „பகிடி' விட்டுப் பார்த்திருக்கிறான். கமலம் செருப்பைக் கையில் எடுத்திருக்கிறாள். அவமானம் ஏமாற்றம்  இரண்டோடும் தனது நண்பர்கள் மத்தியில் கேலிக்கு ஆளாகி விட்டிருந்தான்.  எப்படியாவது அடைந்தே தீர்வேன் என்று நண்பர்கள் மத்தியில் சபதம் எடுக்கிறான். தனது தந்தையிடம் கூலியாக வேலை பார்க்கும் வீரப்பனைக் கருவியாக்குகிறான். பணம் தருகிறேன் என்றோ சொந்தமாகப் படகு வாங்கித் தருகிறேன் என்றோ ஆசை காட்டி இருப்பான் போல, வீரப்பன் அவனது எண்ணத்துக்கு சம்மதித்து விட்டான். அதனால்தான் இப்பொழுது கமலத்தை பாடசாலையில் இருந்து பொய் சொல்லிக் கூட்டிப் போகிறான். பருத்தித்துறையில் பஸ் ஏறி கிராமக்கோட்டுச் சந்தியில் இறங்கி ஆனைவிழுந்தான் பக்கம் கமலத்துடன் போய்க் கொண்டிருக்கிறான். அப்படி அவர்கள் போகும் பொழுதுதான் கலையரசன் கண்டிருக்கிறான். ஆனால் அதன்பின் நடந்ததை யாரும் பார்க்கவும் இல்லை சொல்லவும் சாட்சிகள் இல்லை.

´கழுத்து எலும்பில் ஒரு முறிவு காணப்படுகிறது. சுவாசப் பையில் மண்கள் காணப் படுகின்றன. மயக்கம் அடைந்து விட்டிருந்த அவரை மரணித்து விட்டதாக நினைத்து மண்ணால் மூடி இருக்கலாம். மண் கொண்டு மூடியதால் மூச்சுத் திணறி மரணம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கொலைக்கான மரண சான்றிதழ்தான் இது.

கலையரசன் ஒரு சாட்சியாக வருகிறான். வீரப்பன், கமலத்தை ஆனைவிழுந்தான் பக்கம் கூட்டிச் சென்றது உறுதியாயிற்று. பாடசாலையில் கிடைத்த தகவல் மற்றும் கலையரசன் சாட்சி ஆகியவற்றால்  வீரப்பன் கைது செய்யப் படுகிறான்.

தங்களது சொந்த மகளை இழந்து விட்டது போன்று  நகரமே சோகமானது. பாடசாலை கீதத்தைப் பாடாமல் மாணவிகள் சோக கீதம் பாடினார்கள். பத்திரிகைகளுக்கு பெரும் தீனி கிடைத்தது. பல நாட்களாக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியே கமலம் கொலை வழக்காகிப் போனது.  

நகரத்தில் பிரதான சட்டத்தரணி வீரப்பனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். வீரப்பனுக்கு எதிராக இரண்டு சாட்சிகள் இருக்கின்றன. ஒன்று பாடசாலையில் இருந்து அனுமதி பெற்று கமலத்தைக் கூட்டிச் சென்றது. மற்றையது ஆனைவிழுந்தான் பக்கம் கமலத்தை அழைத்துச் சென்றதைப் பார்த்த கலையரசனிடம் இருந்தது. ஆனால் சம்மாட்டியார் மகனுக்கு எதிராக எவ்வித துப்புகளும் இல்லை. ஆக வீரப்பன்  வாயைத் திறந்தால்தான் ஏதாவது தகவலே கிடைக்கும்.

கூட்டிக் கொண்டு வருவதற்கு படகு தருவதாகச் சொன்ன பகுதி காட்டிக் கொடுக்காமல் இருந்தால் என்ன எல்லாம் தருவதாகச் சொல்லி இருக்கும்.

பணம் பலமாகப் பாய்ந்தது. அது சட்டத்தின் ஓட்டை ஒடிசல்கள் ஊடாக புகுந்து கபடி விளையாடிக் கொண்டிருந்தது. அதனால் சம்மாட்டியாரின் மகனுக்கு துளியும் சேதாரம் இல்லாமல் போயிற்று. பாதுகாப்பாக அவனை வேறு இடத்திற்கு நகர்த்தி விட்டார்கள். ஆரம்பத்தில் வேகம் பிடித்த கமலம் கொலை வழக்கு பின்னாளில் நத்தையை விட மெதுவாக நகர்ந்தது.

வருடங்கள் ஓடிற்று. கலையரசனும் இப்பொழுது வெளிநாட்டுக்குப் போய் விட்டான். சாட்சியங்கள் போதுமானதாக இல்லை. வழக்கின் வீச்சும் குறைந்து கொண்டே போனது. தமிழ் விடுதலை வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் கவனமும் அந்தப் பக்கம் போய் விட்டது.

கண்ணிவெடித் தாக்குதல்கள் அதன் பின்னால் அதிரடியாக ஊருக்குள் நுளைந்து அட்டகாசம் செய்யும் சிறிலங்கா இராணுவம் என எல்லாமே அல்லோல கல்லோலமாக இருந்தது. இந்த நிலையில் கமலம் கொலை வழக்கு மக்களின் கவனத்தில் இருந்து விலகிப் போயிற்று.

ஒருநாள் வழக்கு முடிந்து விட்டது. வீரப்பன் விடுதலை ஆனான்.

விடுதலை கிடைத்த மறுநாள் வல்வெட்டித்துறை சந்தியில் இருந்த  ஆலமரத்தில் தலை கீழாகக் கட்டப் பட்ட நிலையில் வீரப்பன் செத்திருந்தான். அவனது நெற்றியில் பொட்டு வைத்தாற் போல் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.

ஆழ்வாப்பிள்ளை
15.12.2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை