அத்திக்காயும் சித்தப்பாவும்

சில விடயங்கள் மூடநம்பிக்கைகள் என்ற வகைகளுக்குள் அடங்கினாலும், சாத்திரங்கள், சம்பிரதாயங்களின் மேல் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களும், உணர்த்துதல்களும் அவ்வப்போது சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இது 1976 இல் நடந்த ஒரு சம்பவம். இது பற்றி நான் ஏற்கெனவே 2001 இல் எழுதியிருந்தேன்.
அவ்வப்போது நினைவுகளில் வந்தாலும், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும், பொங்கல் பற்றிய பேச்சுக்களின் போதும் தவறாமல் வரும் ஒரு நினைவு.


அன்று 1976 ம் ஆண்டு ஜனவரி 12ந் திகதி. நான் A/L (கபொத உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த காலம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்கிகளை வானொலியில் ஒலிக்கவிட்டு அந்த இசை பின்னணியில் ஒலிக்க நான் படித்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்தவாறே படிப்பது அதாவது Pure Maths, Applied Maths செய்வதில் எனக்கு அலாதி பிரியம். நேரம் போவதே தெரியாமல் செய்து கொண்டே இருப்பேன். அப்படியொரு இதமான மாலை நேரத்தில்தான் அன்று சித்தப்பா வந்தார்.
 
சித்தப்பா, அப்பாவின் ஒன்று விட்ட தம்பி என்பதால் நாங்கள் அவரை சித்தப்பா என்று கூப்பிட்டாலும் அவர் எங்களுக்கு ஒரு அண்ணன் போலத்தான். அம்மாவுக்கோ அவர் ஒரு பிள்ளை போல.

எங்கள் வீட்டில் எல்லா வேலைகளிலும் அவர் கை பட்டிருக்கும். எங்களுடன் சேர்ந்து எங்கள் புத்தகங்கள் கொப்பிகளுக்கு கவர் போடுவதிலிருந்து, பூமரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது வரை வீட்டிலுள்ள அத்தனை வேலைகளிலும் அவரது வாசமும் வீசும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சித்தப்பாவின் சினேகமான உறவையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் பார்த்துக் கொண்டே, உணர்ந்து கொண்டே நான் வளர்ந்தேன். அவரது வேலையின் நேர்த்தி என்னை அதிசயிக்க வைக்கும். செய்வன திருந்தச் செய் என்பதை அவர் செய்தே காட்டினார். அம்மாமேல் அவர் வைத்திருக்கும் பாசத்தில் அப்பாச்சி பொறாமைப் படுவா. எனது மாமிமார் சொல்லுவார்கள் "சின்னண்ணாவுக்கு அண்ணிதான் அம்மா" என்று.

அந்த நேசமான சித்தப்பா வந்ததும் நான் படிப்பை இடைநிறுத்தி விட்டு அவருடன் கதையளக்க எழும்பி விட்டேன். அவருடன் கதையளந்த படியே எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையில் உள்ள கதிரைகள் வரை சென்று நான் அமர, அவர் இன்னொரு கதிரையில் அமர எங்களுடன் எனது தம்பிமார், தங்கைமாரும் சேர்ந்து கொள்ள மிகவும் சுவையாகக் கதை போய்க் கொண்டிருந்தது. அம்மா மட்டும் குசினிக்குள் அடுத்த நாளுக்கு அடுத்தநாள் வரப்போகும் தைப்பொங்கலுக்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தா. இடையிலே நாங்கள் கொறிப்பதற்கு வடை, முறுக்கு, பொரிவிளங்காய்... என்று பலகாரங்களும் கொண்டு வந்து தந்து விட்டுப் போனா. நாங்கள் அவைகளைச் சுவைத்த படியே யார் யாருக்கு என்னென்ன பாடல்கள் பிடிக்கும் என்பதையும், அவை பிடித்ததற்கான காரணங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தோம்.

தங்கை "எனக்கு, சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்றல் காற்று... என்ற பாட்டுப் பிடிக்கும். அதிலை காற்று இல்லை காத்து எண்டு வருதே அது நல்லாயிருக்கு" என்றாள்.

தம்பி "எனக்கு ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக்கிளியே அழகிய ராதா... என்ற பாட்டுப் பிடிக்கும்." என்றான். எனக்குத் தெரியும், அவனுக்கு ஏன் அந்தப் பாட்டுப் பிடிக்கும் என்று. அவனுக்கு அவனோடு படிக்கும் ராஜகுமாரியில் ஒரு விருப்பம் அதுதான். நான் அவனை அர்த்தத்தோடு பார்த்துச் சிரித்துக் கொண்டேன்.

இப்படியே வயதின் படி ஒவ்வொருவரும் பாடல்களையும், விளக்கங்களையும் சொல்லிப் பாடியும், காட்டினோம். இறுதியாக எங்களுக்குள் வயது கூடிய சித்தப்பாவின் முறை வந்தது.

அவர் "எனக்கு, அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே... அந்தப் பாடல் பிடிக்கும்" என்றார். பாடலில் உள்ள மடக்குஅணியின் அழகு பற்றி அழகாக விளக்கினார். விளக்கிய பின் மிக அழகாகப் பாடியும் காட்டினார்.

அன்றுதான் எனக்கு அந்தப் பாடலின் அருமையே தெரிந்தது. சித்தப்பா பாடியதில் எங்களுக்கு மிகவும் சந்தோசமாகவும் இருந்தது. "சித்தப்பா இன்னொருக்கால் பாடுங்கோ" கோரசாய் கேட்டோம். எங்கள் வேண்டுதலுக்காய் அவர் இன்னொருதரம் பாடினார்.

அதன் பின் அம்மா தந்த தேநீரைக் குடித்து விட்டு, "பொழுது பட்டிட்டுது. நான் போகோணும். இண்டைக்கு நைற்டியூட்டி." என்று சொல்லியபடி எழும்பினார். அந்தக் கணத்தில் நாங்கள் வட்டமாகக் கூடியிருந்த அந்த விறாந்தையில் எங்களுக்கு நடுவே ஐந்தாறு காகங்கள் பின்னிப் பிணைந்து சண்டையிட்ட படி தொப்பென்று விழுந்தன. தொடர்ந்தும் பெரிய இரைச்சல்களுடனும், கா..கா.. என்ற அகோரமான அலறல்களுடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

வழமையில் காகங்கள் முற்றத்தில் சண்டை போடுவதைப் பார்த்திருக்கிறோம்.  அது அனேகமாக இரு காகங்களின் சண்டையாகத்தான் இருக்கும். அப்படியான சந்தர்ப்பங்களில் அம்மா காகங்கள் சண்டை பிடித்த அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடுவா.  இது வீட்டுக்குள். அதுவும் இரண்டுக்கு மேற்பட்ட காகங்கள்.  தண்ணீர் தெளிப்பதைப் பற்றிய சிந்தனைகளுக்கு மேலாக அச்சத்துடனான உறைவு எங்களிடம். சில கணங்களில் சித்தப்பா தன்னைச் சுதாரித்துக் கொண்டார்.

அம்மாவிடம் எட்டி "அண்ணி மில்லிலை திரிக்க வேண்டிய பயறு, உழுந்து, மிளகாய் எல்லாத்தையும் ரெடியாக எடுத்து வையுங்கோ. நான் நாளைக்கு 11 மணிக்கு வாறன்." என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.

அந்தச் சத்தமும், காகங்களின் சண்டையும், அதுவும் வீட்டுக்குள்ளே வந்து எங்களுக்கு நடுவில் அது நடந்த விதமும் முற்றிலும் வித்தியாசமானது. ஒரு புறம் அது எங்களை அசௌகரியப் படுத்தினாலும், அத்திக்காய் பாடலின் அழகும் இனிமையும் இன்னும் நெஞ்சுக்குள் தித்தித்திருந்தது. சித்தப்பா போய்விட்டார்.

அடுத்த நாள் 13ந் திகதி. 10 மணிக்கே அம்மா, வறுத்த பயறு, உழுந்து, மிளகாய்.... எல்லாவற்றையும் பைகளில் போட்டு ஆயத்தமாக வைத்துவிட்டு சித்தப்பாவின் வரவுக்காய் காத்திருந்தா. 11 மணிக்குச் சித்தப்பா வரவில்லை. சொன்ன நேரம் தப்பாதவர் சித்தப்பா. 11.10 க்கும் அவர்  வரவில்லை. நாங்கள் எங்களெங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் எங்கள் மனசுகள் மட்டும் சித்தப்பாவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தன.

வழமை போல அம்மா, அப்பாவின் மற்றைய சகோதரர்களுக்காக எடுத்து வைத்த தைப்பொங்கல் உடுப்புகளுடன் சித்தப்பாவின் உடுப்பும் அவருக்காகக் காத்திருந்தது. பொங்கலுக்காக லீவெடுத்துக் கொண்டு வந்திருந்த அப்பா தம்பிக்கு பட்டம் கட்டிக் கொண்டிருந்தார்.

11.15 ஆகியது. யாரோ கேற் திறக்கும் சத்தம் கேட்டது. சித்தப்பாதான் என்று என் மனது சொல்லியது. ஆனால் வந்ததோ வேறொருவர். எதிர் பார்த்த எம்மனதுக்கு விருந்தாக எதுவும் கொண்டு வராமல், இடி விழுத்த வந்தது போல, கரண்ட் அடித்து சித்தப்பா கருகி விட்ட செய்தியைத்தான் அவர் காவி வந்திருந்தார். அன்றிலிருந்து சித்தப்பாவும் இப்பாடலும் என்னுடன் பின்னிப்பிணைந்து என் நினைவுக்குள் அமர்ந்து விட்டன. இப்பாடலைக் கேட்கும் போது எல்லோரும் பாடலின் அழகிலும் சிலேடையிலும் மயங்கிப் பாடலை ரசிப்பார்கள். நானோ சித்தப்பாவின் நினைவுகளில் மூழ்கி விடுவேன்.

சந்திரவதனா
யேர்மனி
2001

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை