நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9

மறுநாள் காலை வெண்புறா நிலையத்தில் இருந்த அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ் கொல்கர் அமர்ந்திருந்தான். அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில் அவன் தியானத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றும். பனைமரத்தின் கீழ் அவனுக்கு ஞானம் கிடைத்து விட்டதோ என நான் நினைத்ததுண்டு.

நீண்டு உயர்ந்திருந்த பனைமரத்தின் கீழ் காலைவேளை நிழலில் இருந்த அவனைப் பார்த்துக் கேட்டேன்.

„யேர்மனி நினைவு வந்திட்டுதோ?' .

„இன்னும் இல்லை. ஆனால் ஒரு கேள்வி. இந்தப் பனைமரத்திலை ஒரு காயையும் காணேல்லை. ஆனால் அந்தக் காணிக்குள்ளை உள்ள மரங்களிலை எல்லாம் காய்கள் இருக்கின்றனவே. ஏன்?' .

„அதுவா? இது ஆண் பனை..“ நீ எப்போதாவது நொங்கு சாப்பிட்டிருக்கிறாயா?'.

„இந்தப் பயணத்திலைதானே நான் முதல் முதலா பனையையே பார்க்கிறன்'.

அப்பொழுது அங்கே வந்த அன்ரனியிடம் விடயத்தைச் சொன்னேன்.

„நொங்குதானே? நொங்கு சாப்பிடுறது உடம்புக்கு நல்லது. பழக்கம் இல்லாததாலை காலைமை வெள்ளென சாப்பிடக்கிளை கொல்கருக்கு வயித்திலை பிரச்சினை ஏதும் வந்தால் நான் பொறுப்பில்லை' .

கொல்கர் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டான். அன்ரனி மயூரனைக் கூப்பிட்டு நுங்கு பறித்து வரும்படி சொன்னார். .

இங்கே மயூரனைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு..

இயற்கை அவனது பேசும் திறனை பறித்திருந்தது. சைகைகளும், சிரிப்புமே அவனது மொழியாக இருந்தது. எல்லோரிடமும் அன்பாகப் பழகினாலும் கோபப்படுவதில் வல்லவன். கொல்கரை அவனுக்குப் பிடிக்கும். அங்கிருந்தவர்களில் அவனைத்தான் கொல்கருக்கும் அதிகம் பிடிக்கும். விதவிதமான நிலையில் நின்று தன்னை புகைப்படம் எடுக்கச் சொல்லி கொல்கரைக் கேட்பான். கொல்கரும் மறுபேச்சின்றி அவனைப் புகைப்படம் எடுத்துத் தள்ளுவான்..

இப்பொழுது கொல்கருக்கு நொங்கு சாப்பிட விருப்பம் என்றவுடன் உடனடியாக மயூரன் பனையில் ஏறி விட்டான். மயூரன் பனை ஏறும் அழகை ரசித்து கொல்கர் அதனையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான்..

நுங்கு சாப்பிடும் முறையை கொல்கருக்குச் சொல்லிக் கொடுத்தேன். ஆரம்பத்தில் சிரமப்பட்ட கொல்கர் பின்னர் எங்களை விட வேகமாகச் சாப்பிடத் தொடங்கினான்..

அன்று தமிழீழ அரசியல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதும்படி எனது மனைவிக்குச் சொன்னேன். எங்கள் வரவு, நாங்கள் செய்ய இருக்கும் சேவை பற்றி விளக்கமாக அவர் எழுதித் தந்த கடிதத்தை அரசியல்துறை அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன். .

„நீங்கள் வன்னிக்குப் போனதும் கஸ்ரோவோடை தொடர்பு கொள்ளுங்கோ' என்று ஆனந்தண்ணை சொன்னது நினைவுக்கு வர கஸ்ரோவின் அலுவலகத்துக்கு தொலைபேசி எடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கஸ்ரோவை சந்திக்க வாய்பிருக்கிறதா என்றும் கேட்டேன். அடுத்தநாள் மாலையே சந்திப்புக்கு நேரம் குறித்து பதில் வந்தது. எனக்கு மட்டும் தனியாக அழைப்புத் தந்தார்கள். மற்றவர்களை வெண்புறாவில் கஸ்ரோ நேரடியாக வந்து சந்திப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. .

கொல்கர் தனித்து விடுவானோ என்று ஒரு சஞ்சலம் வந்தது. கொல்கரிடம் இதைப் பற்றிக் கேட்டேன்..

„நீ சந்திக்க வேண்டியவர்களை போய் சந்தி. எனக்கு இங்கை நிறைய சினேகிதர்கள் இருக்கிறார்கள்' என்றான். .

„நீங்கள் கஸ்ரோவை சந்திக்கப் போகும் பாதை குண்டும் குழியுமாக இருக்கும். ஆளை குலுக்கி எடுத்துப் போடும். குலுக்கிற குலுக்கலிலை குடல் வாய்க்குள்ளாலை வெளியிலை வந்திடும் போலை இருக்கும். எதுக்கும் ஓமோ வோட்டர் வாங்கி வைக்கிறன்' என்று அன்ரனி அச்சமூட்டினார்..

நாங்கள் வந்ததை அறிந்து கொண்ட லலி எங்களை, குறிப்பாக எனது மனைவியைப் பார்க்க வந்தார். லலி எனது மனைவியின் பள்ளித் தோழி. இருவரும் நெருக்கமான நண்பிகள். வாழ்க்கையில் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பயணத்தில் இருவரும் சந்திக்க இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. .

அழகான மடிப்புக் கலையாத உடைகளுடனேயே முன்னர் நான் லலியைக் கண்டிருக்கிறேன். இப்பொழுது உடலில், உடையில் செம்மண்கள் (கிரவல்) ஒட்டியிருக்க தாய், தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு எல்லாமுமாய், செஞ்சோலைப் பொறுப்பாளரனான ஜனனியாக வந்திருந்தார்..

ஐனனியின் நலன்கள், நிலைகளை விசாரித்து விட்டு பழைய நண்பிகளை தனியாகக் கதைக்க விட்டு நான் ஒதுங்கிக் கொண்டேன். நண்பிகள் இருவரும் நீண்ட நேரம் கதைத்தார்கள். ஜனனியின் வண்டியில் ஏறி எங்கெங்கெல்லாமோ போய் வந்தார்கள். அன்று ஜனனி எங்களுடனேயே உணவருந்தினார். நீண்ட வருடங்களின் பின்னரான சந்திப்பு இரண்டு பக்கமும் மகிழ்ச்சியையே தந்தது. .

அடுத்தநாள் மாலை கஸ்ரோவைச் சந்திக்கும் ஆவலுடனும், குண்டும் குழியுமான பாதையில் பயணிக்கும் அச்சத்துடனும் காத்து நின்றேன். சரியாக குறிப்பிட்ட நேரத்துக்கு என்னை அழைத்துப் போக கஸ்ரோ அனுப்பிய வாகனம் வந்தது..

பரந்தன் சந்தியில் விசுவமடு நோக்கிய பாதையில் வாகனம் சென்றது. கடலில் கூட கப்பல் இவ்வளவு ஆட்டம் போட்டிருக்காது. எழுந்து விழுந்து வாகனம் செல்லும் போது அன்ரனி சொன்னது நினைவுக்கு வந்தது. ஒன்றல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓமோ வோர்ட்டர்கள் அன்ரனி வாங்கி வைத்தால் நல்லது என்று பட்டது. மாஞ்சோலைக்குள் இருந்தது கஸ்ரோவின் வீடு. உண்மையில் அது ஒரு நந்தவனம்தான். .

என்னை அழைத்து வந்தவர் வரவேற்பறையில் என்னை இருத்திவிட்டு நான் வந்து விட்டதை கஸ்ரோவுக்கு தெரிவிக்க உள்ளே போனார்..

கஸ்ரோ வரும்வரை பேசாமல் இருப்பதை விட்டு ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் வர எனது இளமைக் கால நினைவுகளுக்குப் போக ஆரம்பித்தேன்..

எழுபதுகளின் பிற்பகுதி. எனது அண்ணன் „கமலா அன் பிறதர்ஸ்' என்ற பெயரில் புத்தகக் கடை ஒன்று வைத்திருந்தார். அங்கே அவருக்கு உதவியாளர் நான்தான். எங்கள் கடை இருந்த பருத்தித்துறை நகரத்திலே குமார் அச்சகம் இருந்தது. அதன் உரிமையாளர் காந்திதாசன். காந்திதாசனுக்கு அவரது தம்பி கிருஸ்ணகுமார் உதவியாளராக இருந்தார். எங்களிடம் பேப்பர் கோட்டா இருந்ததால் எல்லாவகையான பேப்பர்களும் எங்கள் கடையில் இருக்கும். அச்சகத்துக்கு பேப்பர்கள் தேவை என்றால் கிருஸ்ணகுமாரே வந்து எங்களிடம் வாங்கிப் போவார். இதுவே அவரிடம் எனக்கு பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதிகம் பேசமாட்டார். எப்பொழுதும் அவரிடம் ஒரு அமைதி குடிகொண்டு இருக்கும். அந்த அமைதியான பேர்வழி ஒருநாள் விடுதலைப் புலிப் போராளியாகி விட்டார். போராளி ஆகியவர் தளபதி ஆகி, வெளிநாட்டுக்கு பொறுப்பாளராகி ஒரு நாள் ஆகுதியும் ஆகிப்போனார். .

இன்னும் ஒருவர். அவர் ஒரு பள்ளி மாணவன். பெயர் மணிவண்ணன். அடிக்கடி எங்கள் கடைக்கு வருவதால் எனக்கு பரிச்சயமாகிப் போனவர்..

„என்ன முதலாளி சௌக்கியமா?' குரல் கேட்டு பழைய நினைவுகள் உடனடியாக கலைந்து போயிற்று. எனக்கு முன்னால் சக்கர நாட்காலியில் கஸ்ரோ சிரித்த முகத்தோடு இருந்தார். நான் பார்க்கத் துள்ளித் திரிந்த மணிவண்ணன் இடுப்புக்கு கீழே இயங்காமல் சக்கர நாட்காலியில் கஸ்ரோவாக அமர்ந்திருந்ததைப் பார்க்க மனது அழுதது. ஆனாலும் முகம் சிரித்து „சௌக்கியம்“ என்றேன். .

கஸ்ரோவுக்கு அருகில் தோழமையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரை கஸ்ரோ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். .

„இவர் சிவா. சிவா மாஸ்ரர் எண்டால் இஞ்சை எல்லாருக்கும் தெரியும் எங்களுக்குப் பக்கத்திலைதான். உடுப்பிட்டிதான் இவரின்ரை இடம்“.

நாங்கள் சந்தித்துக் கொண்டதிலான மகிழ்ச்சியை நானும் சிவா மாஸ்ரரும் ஆளாளுக்குத் தெரிவித்துக் கொண்டோம்.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை