அறுபது பாகக் கிணறு

பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பாம்பு கடித்ததால் எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ராவுக்கு மரணம் நேர்ந்தது. கிளியோபட்ராவை கடித்த அதே நாகப்பாம்பு கடித்ததால் அவருடைய தோழிகள் இருவரும் இறந்து போனார்கள் என கதை இருக்கிறது.

இதை ஆராய்ந்து அது சாத்தியம் இல்லை என்று மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான ஆண்ட்ரூ க்ரேயும், எகிப்திய நிபுணரான ஜாய்ஸ் டில்டெஸ்லியும் கூறுகின்றனர் என பிபிசி இணையத்தில் ஒரு தகவலை சமீபத்தில் வாசித்தேன். கி.மு 30இல் நடந்ததை இப்பொழுது ஆராய்ந்து யாரைப் பிடித்துத் தண்டிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவல் எனக்குள் உறைந்திருந்த ஒரு விடயத்தை விழிக்க வைத்திருக்கிறது.

அந்தக் கிணற்றுக்குப் பெயர் அறுபது பாகக் கிணறு. அது ஒன்றும் அறுபது பாக அளவு ஆழம் இல்லை. அதன் ஆழத்தைப் பார்த்து அந்தக் காலத்தில் யாரோ ஒரு மேதை „கிணறு அறுபது பாகம் வரும் போல' என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆழம் என்றால் அப்படி ஒரு ஆழம். அந்தளவு ஆழத்தில் இதுவரை வேறொரு கிணற்றை நான் பார்க்கவேயில்லை.

எனது ஊரில் இருந்த கணையந்தோட்டம் என்ற கிராமத்தில் இருந்ததுதான் அந்த அறுபது பாக பொதுக் கிணறு. ஆழமான கிணறு என்பதால் மனிதர்களோ மிருகங்களோ அதற்குள் விழுந்து விடாமல் இருக்க எச்சரிக்கையோடு சற்று உயரமாக கிணற்றைச் சுற்றி வட்டமாக சுவர் கட்டி இருந்தார்கள்.

அந்தக் கிணறு இருக்கும் ஒழுங்கையூடாவே எனது பாடசாலைப் பயணம் இருந்தது. காலையில் பாடசாலைக்குப் போகும் பொழுது, „அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்„ என்று பணம் படைத்தவன் படத்தில் வரும் கே.ஆர்.விஜயா மாதிரி யாரேனும் குளிக்கிறார்களா என ஓரக்கண் பார்ப்பதுண்டு. எனக்குத்தான் அதிர்ஷ்டம் பக்கத்தில் இருப்பதில்லையே. „ருக்குமணியே ருக்குமணியே அக்கம் பக்கம் என்ன சத்தம்' என்ற ரோஜாப் படப்பாணி பெரிசுகளின் தரிசனம்தான் கிடைக்கும். அந்தக் கிராமத்துக் குமரிகள் எப்போதான் குளிப்பார்கள் என்பது எனக்கு தெரியாமலேயே போயிற்று.

அறுபது பாகக் கிணற்றடியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ஒழுங்கையில்தான் வினாசித்தம்பி வாத்தியார் (கவனிக்க பெயரை மாற்றி இருக்கிறேன். எதற்கு வம்பு) வீடு இருந்தது. உடற்பயிற்சிகள், விளையாட்டுக்கள் சொல்லித் தரும் ஆசிரியர் அவர். எங்கள் ஊரில் தினவெடுத்து சந்தியில் நின்று அட்டகாசங்கள் செய்யும் இளம் காளைகள் வினாசித்தம்பி வாத்தியாரிடம் உடற் பயிற்சி, மல்யுத்தம் என்று கலைகள் படித்தவர்கள். பகற் பொழுதுகளில் மப்பும் மந்தாரமுமாக மதவுகளில் இருந்து கொண்டு வீதியை ஆட்சி செய்து கொண்டிருப்பார்கள். பங்குனி பிறந்து விட்டால் கள்ளின் விலை கணிசமாகக் குறைந்து விடும். அதனால் காளைகளுக்கு மப்பு எக்கச் சக்கமாக ஏறிவிடும். அப்பொழுது மதவுகளில் இருந்து கொண்டு இவர்கள் வாய்களில் இருந்து தெறிக்கும் சொற்கள் எல்லாம் சுருதி தப்பாமல் அசுத்தமாகவே வந்து விழுந்து கொண்டிருக்கும். குருவுக்கு மாணவர்கள் தரும் இவ்வாறான அவ மரியாதைகள் வினாசித்தம்பி வாத்தியாரின் மதிப்பை பெரிதும் கீழே இறக்கி விட்டிருந்தன. இதைப் பற்றி எல்லாம் வினாசித்தம்பி வாத்தியாருக்கு சிறிதளவேனும் கவலை கிடையாது. அவரிடமும் குடி விரும்பிக் குடி கொண்டிருந்ததால் மதிப்பு மரியாதை எல்லாம் அவர் எதிர்பார்க்காத விடயங்களாக இருந்தன.

வினாசித்தம்பி வாத்தியாருக்கு குடும்பத்தில் ஏதோ சிக்கல் இருந்தது. அந்தச் சிக்கல் சொத்துக்களாலோ அல்லது சொந்தங்களுக்குள் ஏற்பட்ட வேறு ஏதாவது தகராறுகளாலோ வந்தது என்று எனக்குத் தெரியாது. அவருக்கு நெருங்கிய உறவுகளோடு எப்பொழுதும் பிணக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.

வினாசித்தம்பி வாத்தியார் சகல விளையாட்டுக்களையும் அறிந்து வைத்திருந்ததால் அவரை நெருங்கிக் கதைக்கவோ மல்லுக்கட்டவோ யாருக்கும் துணிவில்லை. „மனுசன் தூக்கி அடிச்சுப் போடும்' என்று இடைவெளி விட்டு தூர இருந்தே திட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் இரவு கணையந்தோட்டக் கிராமம் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தர் கையிலும் ஏதோ ஒரு விளக்கு இருந்தது.

„வினாசித்தம்பி வாத்தியார் அறுபது பாகக் கிணத்துக்குள்ளை விழுந்திட்டாராம்'

தகவல் கிடைத்து நான் அந்த இடத்துக்குப் போன பொழுது எல்லாமே முடிந்து விட்டிருந்தது.

„வினாசித்தம்பி வாத்தியார் பாதை மாறி கிணற்றுப் பக்கம் சைக்கிளை விட்டிட்டார். மனுசன் நல்லா தண்ணி அடிச்சிருந்திருக்கிறார். அப்பிடியே சைக்கிளோடை கிணத்துக்குள்ளை விழுந்திட்டார்' சம்பவத்தைப் பார்க்காதவர்களும் காட்சியை விபரித்துக் கொண்டிருந்தார்கள். விபத்து மரணம்தான் என அவர்களே தீர்ப்பும் சொன்னார்கள்.

அந்தக் கிணற்றுக்குள் விழுந்தால் தப்புவதற்குச் சாத்தியமே இல்லை. ஆனாலும் எங்கோ ஒரு தப்பு இருப்பதாக எனக்குப் பட்டது.

நல்ல போதையில் வரும் ஒருவர் வேகமாக சைக்கிள் ஓட்ட வாய்ப்பில்லை. ஆக வினாசித்தம்பி வாத்தியார் மெதுவாகத்தான் சைக்கிளை ஓட்டி இருப்பார். அப்படி மெதுவாகவே வரும் சைக்கிள் கிணற்றுச் சுவரில் மோதினால் நிலை தவறி அவர் நிலத்தில் விழுவதற்கான சாத்தியமே அங்கே இருந்தது. சரி நிலத்தில் விழுந்தவர் போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடிக் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்று வைத்துக் கொண்டாலும் அவரது சைக்கிள் எப்படி கிணற்றுக்குள் விழும்? எஜமானர் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்ற கவலையால் சைக்கிள் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்குமா? அல்லது வினாசித்தம்பி வாத்தியார் தனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது என்று கிணற்றுக்குள் குதித்திருப்பாரா? „நான் போன பிறகு தனியாக இருந்து நீ ஏன் கஸ்ரப்படப் போகிறாய்' என்று கிணற்றுக்குள் குதிப்பதற்கு முன்னர் சைக்கிளையும் தூக்கிக் கிணற்றில் போட்டிருப்பாரா? என்று என்னிடம் கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்தன. வாழ்க்கைச் சூறாவளிகளில் அதை மறந்தே போயிருந்தேன். இப்பொழுது வந்த கிளியோபற்றாவின் மரணம் பற்றிய சந்தேகங்கள்தான் மீண்டும் வினாசித்தம்பி வாத்தியாரின் நினைவை மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.

விபத்து மரணம் என்று வினாசித்தம்பி வாத்தியாரின் இறப்புக்கு மரணச்சான்றிதழ் தந்து நாற்பது வருடங்களாயிற்று. ஆனாலும் என்னிடம் இருக்கும் கேள்விகளுக்கு மட்டும் மரணம் கிடையாது.

ஆழ்வாப்பிள்ளை
27.10.2015

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை