ஓடிப்போனவன்

நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புக்குப் போன பொழுதுதான் எனக்கு துரைலிங்கத்தின் அறிமுகம் கிடைத்தது.

அவனுக்குப் படிப்பு சரியாக ஏறவில்லை. பரீட்சையில் குறைந்த புள்ளிகள். இவைதான் துரைலிங்கம் ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து ஒரு வருடம் தங்கிப் படிப்பதற்காண காரணிகள். அவன் தனியாளாக அங்கே ஐந்தில் தங்கவில்லை. துணைக்கு வத்சலாவும் இருந்தாள். துரைலிங்கத்துக்கு இருந்த அதே காரணிகள்தான் வத்சலாவுக்கும் இருந்தது.

ஐந்தாம் வகுப்பில் அவளது அழகை வர்ணிக்க எனக்கு வயது போதாது. இப்பொழுது வேண்டுமானால் கொஞ்சம் சொல்லிக் கொள்ளலாம். அவளது அழகும், அமைதியும் பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தன. வகுப்பறையில் நிலவாக பிரகாசித்துக் கொண்டிருந்தாள். „தங்கரதம் போல் வருகிறாள். அல்லித் தண்டுகள் போலே வளைகிறாள். குங்குமப் பூப் போல் சிரிக்கிறாள்' எனும் கண்ணதாசன் வரிகள் அவளுக்கு அற்புதமாகப் பொருந்தும். வத்சலாவுக்கு என்னைவிட மூன்று வயதாவது அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிறார்களான எங்கள் வகுப்பறையில் குமரியாக அவள் காட்சி தந்தாள்.

வத்சலாவைக் கண்டால் கணக்கு வாத்தியார் சுப்பிரமணியருக்கு வெற்றிலைக் காவிப் பற்கள் வெளியே தெரியும். அவளை தனது மேசைக்கு அருகே வைத்து வாஞ்சையோடு கணக்குச் சொல்லிக் கொடுப்பார். சுப்பிரமணியம் வாத்தியார்தான் எங்கள் வகுப்பாசிரியர். ஏதாவது பிழைகள் நடந்து விட்டால் அடி, பேச்சுக்கள் எல்லாம் எங்களுக்குத்தான். வத்சலா கணக்கில் பிழை விட்டால் கூட „தெரியாட்டில் கூச்சப் படாமல் என்னட்டை கேக்கோணும் என்ன' என்று பண்பாகச் சொல்லி விட்டுப் போவார். சுப்பிரமணியம் வாத்தியார் வத்சலாவுக்கு இப்படி செல்லம் கொடுத்துக் கொடுத்துத்தான் அவள் படிக்காமல் ஐந்தாம் வகுப்பில் தங்கி விட்டாளோ என்று நான் அப்பொழுது நினைப்பதுண்டு. இப்பொழுது என்றால், கணக்கு வாத்தியார் என்ன கணக்குப் பண்ணினார் என்று உடனேயே சொல்லி விடுவேன்.

வத்சலாவின் தாய் பூமணிக்கும் தகப்பன் கனகருக்கும் நாலாம் பொருத்தம். எப்பொழுதும் சண்டையும் சச்சரவும்தான். ஒருநாள் சண்டை பெரிதாகி ,போதுமடா சாமி' என்று வத்சலாவின் தகப்பன் குடும்பத்தை விட்டு எங்கேயோ ஓடிப் போய்விட்டார். இந்தத் தகவல்களை எல்லாம் எனக்குத் தந்தது துரைலிங்கம்தான்.

ஒரு வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். வேம்படிச் சந்தியில் சிலர் கூடி நின்றார்கள். அந்தச் சிறு கூட்டத்துக்குள் இருந்து வந்த சத்தம் அங்கே ஒரு அடிதடி நடக்கிறது என்பதைச் சொல்லிற்று. விடுப்புப் பார்க்கும் வயது. ஓடிப்போய் பார்த்தால், சின்னத்துரையர் வாயில், மூக்கில் இரத்தம் வழிய நிலத்தில் இருந்தார். அவர் ஒரு சலவைத் தொழிலாளி. வத்சலாவின் இரு மாமன்கள்தான் அவரைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். சின்னத்துரையரால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்று அவரது சாதி. மற்றது அவருக்கு அளவுக்கு மீறிய போதை. இந்த இரண்டு காரணங்களால்தான் எதிர்த்துத் தாக்க முடியாமல் இப்பொழுது அவர் இரத்தம் சிந்த நிலத்தில் இருக்கிறார். யாராவது விலக்குப் பிடிக்க மாட்டார்களா என அவர் பார்வை கேட்டுக் கொண்டிருந்தது. தொடர்ந்து அந்தக் காட்சியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.

நல்ல பிள்ளையாக வீட்டுப் பாடம் எல்லாம் செய்து விட்டு அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தேன். பார்வதியக்கா வீட்டுக்குள் வந்தார். பார்வதியக்கா வருகிறார் என்றால் ஏதோ ஒரு செய்தி வருகிறதென்று பொருள். ஒரு செய்தி பார்வதியக்காவின் காதில் வந்து சேர்ந்து விட்டால், அதை ஊரெல்லாம் கொண்டு போய் கொட்டி விட்டால்தான் மனுசிக்கு சாப்பிட்டது சமிபாடாகும்.

„பிள்ளை, கணபதிப்பிள்ளையும், சங்கரப்பிள்ளையும் சின்னத்துரையை என்னத்துக்கு அடிச்சவங்கள் எண்டு தெரியுமே?'

பார்வதியக்காவின் கதை சொல்லும் நேரம் ஆரம்பமாயிற்று.

அம்மாவுக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை என்று பார்வதியக்காவிற்குத் தெரியும். ஆனாலும் தான் கொண்டு வந்த கதையை அவர் ஆரம்பிக்கும் விதமே இப்படித்தான் இருக்கும்.

„அதுபார் பிள்ளை..' கதையைத் தொடங்கிய பார்வதியக்கா இடையில் நிறுத்தி விட்டுக் கேட்டார். 'இவன் சின்னவன் நித்திரைதானே?'

படுத்திருந்த எனக்கு விளங்கி விட்டது ஏதோ ஒரு அடல்ஸ் ஒன்லி கதை வரப் போகின்றது என்று. கண்களை மூடிக் கொண்டேன். கதை கேட்பதில் என்ன தப்பு இருக்கப் போகிறது? அபிமன்யு தன் தாயின் வயிற்றில் இருந்து கதை கேட்கவில்லையா? நான் தாயின் மடியில் இருந்து கதை கேட்கிறேன் அவ்வளவுதான்.

„இவள் பூமணி இருக்கிறாளே.. அவளுக்கும், சின்னத்துரைக்கும் முந்தியிருந்தே தொடர்பாம். கனக னுக்கு கொழும்பிலைதானே வேலை. எப்பவாவதுதான் வந்து போவான். அது பூமணிக்கு வாச்சுப் போச்சு. ஊத்தைத் துணி எடுக்க வந்தவனிட்டை இவள் கட்டி இருக்கிற துணியையும் கழட்டிப் போட்டுட்டாள் போலை. அண்டைக்கு கனகன் சொல்லாமல் கொள்ளாமல் இரவு பயணத்தாலை வந்திருக்கிறான். இவையள் சந்தோசமா இருக்கிறது காட்சியோடை பிடிபட்டுப் போச்சு. பூமணிக்கு நல்ல அடியாம். அடுத்தநாள் அவள் பாயை விட்டு எழும்பவே இல்லையாம் எண்டால் பாரன். சமையல் கிமையல் ஒண்டும் நடக்கேல்லையாம். பிள்ளைகளுக்குச் சாப்பாட்டை கடையிலை இருந்துதான் கனகன் வாங்கிக் கொண்டு வந்து குடுத்திருக்கிறானாம். கனகன் கடைக்குப் போன நேரம் ஆளைவிட்டு தம்பிமாரைக் கூப்பிட்டு மனுசன் அடிச்ச விசயத்தை பூமணி சொல்லி இருக்கிறாள். என்னதான் பிழை விட்டிருந்தாலும் இரத்த பாசம் சும்மா இருக்க விடுமே. கறுவிக் கொண்டு போனவங்கள் போய் நல்லா கள்ளு அடிச்சுப் போட்டு திரும்பி வரக்கை துணைக்கு சின்னத்துரையையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாங்கள். வீட்டுத் திண்ணையிலை படுத்திருந்த கனகரை உலக்கையாலை அடிச்சுப் போட்டுட்டாங்கள்'

„அடப் பாவமே' அம்மாவின் கொமன்ட்ஸ் காதில் கேட்டது.

„கேளடி மிச்சத்தை. விடிஞ்சால் மாட்டுப் பட்டுப் போவினம். என்ன செய்தாங்களெண்டால் கொஞ்ச உடுப்புகளோடு சேர்த்து ஆளையும் மூட்டை கட்டி சின்னத்துரையின்ரை தோளிலை கட்டி விட்டிட்டாங்கள். அவனும் துணி வெளுக்கக் கொண்டு போற போலை வயல் காணிக்குள்ளாலை ஆனைவிழுந்தான் சுடலைக்குள்ளை கொண்டு போய்ப் போட்டு இரவோடு இரவா கனகனை எரிச்சுப் போட்டு வந்திட்டான்'

'சின்னத்துரை அப்பிடிக் கொண்டு போகக்கை யாரும் பாக்க இல்லையாமே?' என்னைப் போல் அம்மாவுக்கும் கதை கேட்பதில் ஆர்வம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இந்தக் கேள்வியை அவர் பார்வதியக்காவிடம் கேட்டிருக்கின்றார்.

„இருட்டு பிள்ளை. யாராவது கண்டிருந்தாலும் சின்னத்துரை உடுப்புகளை வெளுக்கிறதுக்கு கொண்டு போறான் எண்டுதானே நினைப்பினம். அதோடை ஊரடங்குச் சட்டமும் இருந்தது. ஆமி சுட்டுப் போடுவான் எண்ட பயத்திலை குருவி குஞ்சுகள் கூட வெளியிலை வரமாட்டுதுகள். இது அவங்களுக்கு சாதகமாப் போட்டுது. அடுத்தநாள் பிள்ளைகள் எழும்பி அப்பா எங்கை எண்டு கேக்கக்கை, அப்பா கோவிச்சுக் கொண்டு வீட்டை விட்டுப் போட்டார் எண்டு தாய் சொல்லி இருக்கிறாள். அதைப் பிள்ளைகளும் நம்பீட்டினம். ஊரும் நம்பீட்டுது'

„இந்தக் கதை என்னெண்டு இப்ப வெளியிலை வந்தது' அம்மாவின் கேள்வியில் அர்த்தம் இருந்தது.

„அதுவோ கொஞ்சநாளா கணபதிப்பிள்ளைக்கும், சின்னத்துரைக்கும் ஏதோ பிரச்சனை. „உலக்கையாலை நீயும் அடி வாங்கப் போறாய்“ எண்டு கணபதிப்பிள்ளை சின்னத்துரையை வெருட்டி இருக்கிறான். சின்னத்துரை கள்ளுக் குடிச்சுப் போட்டு என்னை என்ன கனகன் எண்டு நினைச்சானோ எண்டு விசயத்தை கள்ளுக் கொட்டிலிலை வாந்தி எடுத்திட்டான். இப்ப விசயம் ஊருக்குத் தெரிஞ்சு எல்லாம் நாறிப் போச்சு.'

„அதுக்கே இண்டைக்கு சின்னத்துரைக்கு அடிச்சவங்கள்?'

„பின்னை வேறெதுக்கு? அதுக்குத்தான்.'

பார்வதியக்கா கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதை என்னால் முழுதாக உள்வாங்க முடியாமல் இருந்தது. என் எண்ணம் வேறு எங்கேயோ போய் விட்டிருந்ததே அதற்கான காரணம்.

ஆக வத்சலாவின் தகப்பன் ஊரை விட்டு ஓடிப் போகவில்லை. இவர்கள் அவரை உலகத்தை விட்டே ஓட்டி விட்டார்கள். தகப்பன் வருவார் எனக் காத்திருக்கும் வத்சலா ஒரு இலவு காத்த கிளிதான். பாவம் வத்சலா. இந்த விடயத்தை அவளுக்குத் தெரியப் படுத்த வேண்டும். அதுக்கு துரைலிங்கம்தான் சரியான ஆள்.

பார்வதியக்கா அம்மாவுக்கு இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் உண்மையிலேயே நித்திரையாகிப் போனேன்.

திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு வழமையை விட முன்னராக வந்து விட்டேன். துரைலிங்கம் வகுப்பறையில் இருந்தான். அவனிடம் விடயத்தை சொல்வதற்கு நான் வாயைத் திறப்பதற்கு முன் அவன் சொன்னான், „வெள்ளிக் கிழமை வத்சலாவின்ரை மாமன்மார் குடுத்த அடியோடை பயத்திலை சின்னத்துரை ஊரை விட்டே ஓடிட்டானாம்'

சின்னத்துரை ஊரை விட்டு ஓடிட்டாரா? இல்லை உலகத்தை விட்டே ஓட்டி விட்டார்களா?

நீண்ட வருடங்களாக நான் அவரைக் காணவே இல்லை.

- ஆழ்வாப்பிள்ளை
10.11.2015


பிரசுரம் - இருவாட்சி பொங்கல் சிறப்பு வெளியீடு - 7 (January 2016)

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை