கிறுக்கன் என்கிற பண்டிதர் வீரகத்தி

„இடையறாது புலவர்கள் ஒலி கேட்டுக் கொண்டிருந்ததால்தான் இந்த ஊருக்குப் புலவர் ஒலி எனப் பெயர் வந்தது. பின்னர் அது மருவி புலோலி ஆனது' எங்கள் ஊரின் காரணப் பெயரைப் பற்றி புலவர் கந்தமுருகேசனார் சொன்ன விளக்கம் அது. ஆனாலும் சரித்திரச் சான்று வேறாக இருந்தது பின்னாளில் எனக்குத் தெரிய வந்தது.

புலவர் கந்தமுருகேசனார் வாழ்ந்த காலத்தில் அவரிடம் தமிழ் பயின்றவர்கள் ஏராளம். அவரின் வீட்டைச் சுற்றி இருந்த சிறார்களுக்கு கோப்பெருந்தேவி, மணிமேகலை, மங்கையற்கரசி, திருவருட்செல்வி, கலையரசன், இளங்கோவன், மணிமாறன் என்று அழகழகான பெயர்கள் இருக்கும்.

புலவர் கந்தமுருகேசனாரின் உபயத்தில் ஊரில் பல பால பண்டிதர்கள் இருந்தார்கள். புலவர் பட்டம் வாங்கினாலும் இந்தப் பால பண்டிதர்கள் பெரும்பாலும் அரச உத்தியோகங்களில் இருந்தனர். ஒருவர் மட்டும் விதி விலக்காக பால பண்டிதர் பட்டத்தோடு ஊரில் விவசாயம் செய்து கொணடிருந்தார். அவர் பெயர் வீரகத்தி. அதில் என்ன தப்பு விவசாயி படத்தில் பட்டப் படிப்பு முடித்து விட்டு எம்ஜிஆர் விவசாயம் செய்யவில்லையா என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள். நடிப்பு வேறு நான் சொல்ல வருகிற வீரகத்தியின் நிஜம் வேறு.

மசில்கள் இறுகி இரும்பு போல் இருக்கும் கறுத்த தேகம். நாலு பேரைத் தூக்கி அடிக்கக் கூடிய அசுர பலம். துருத்தி நிற்கும் பற்கள். தோளில் இணை பிரியாமல் ஒரு மண் வெட்டி. சேர்ட்டோ பனியனோ அணியாமல் மடித்துக் கட்டிய நாலு முழ வெள்ளை என்று சொல்ல முடியாமல் நிறம்மாறி இருக்கும் வேட்டி. ஏறக்குறைய ஐந்தடி ஆறங்குல உயரம். இவ்வளவையும் சேர்த்து வீரகத்தியைக் கற்பனையில் கொண்டுவரப் பாருங்கள்.

பண்டிதர் வீரகத்தி என்றாலோ, விவசாயி வீரகத்தி என்று கேட்டாலோ ஊரில் யாருக்குமே தெரியாது. கிறுக்கன் என்று விழித்தால்தான் பண்டிதர் வீரகத்தியை ஊருக்குள் தெரியும். இந்தக் கிறுக்கன் பற்றி எனது அனுபவம் ஒன்று, அப்பொழுது கல்விப் பொதுத்தராதரம் படித்துக் கொண்டிருந்தேன். தமிழ், சமயம் தவிர மற்றைய பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் எனக்கு இருந்தன. „தமிழுக்கும் ரியூசன் வைத்துக் கொண்டால் என்ன?' என்று எனது பாடசாலை நண்பன் இராஜகுலசிங்கம் கேட்டான். எனக்கும் அது தேவைப்பட்டது. யாரைப் போய் கேட்கலாம் என்று ஆராய்ந்த பொழுது நினைவுக்கு வந்தவர் இந்தக் கிறுக்கன்.

ஒரு மாலைப் பொழுது அவரைத் தேடிப் போனோம். தனது தோட்டத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டார்.

„உங்களுக்குத் தமிழ் சொல்லித் தரவேணும்' சொல்லிக் கொண்டே வரப்பில் அமர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் மாணவர்களாக கை கட்டி அவரது அடுத்த வார்த்தைக்காக காத்து நின்றோம்.

„உங்களுக்கு லகர ழகர பேதங்கள் எப்பிடி?' பேசிக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துச் சொன்னார் „எதுக்கும் நான் இப்ப சொல்லுறதை வேகமாகச் சத்தமாகச் சொல்லிக் காட்டு'

சின்ன வயதில் விளையாட்டின் போது „கடற்கரையிலை உரள் உருளுது' என்று வேகமாகச் சொல்லி நாக்குக்குள் வார்த்தைகள் உருண்ட நினைவு வந்து போனது. அவரது வாயில் இருந்த வரப்போவது அதுதான் என நினைத்திருந்தேன் ஆனால் வந்து விழுந்ததோ இது, „அக்காளைக்கு மேல் ஏறும் அந்நஞ்சு உண்ணியை எக்காலமும் காண்பது அரிது'

மனதுக்குள் வேகமாக ஒப்புவித்துப் பார்த்தேன். வார்த்தைகளில் இருந்த குளறுபடி தெரிந்தது. வாயை இறுக மூடிக் கொண்டேன்.

கிறுக்கன் எனது வாயையே பார்த்துக் கொண்டிருந்தார். இவன் வாயையே திறக்க மாட்டான் என்ற முடிவு அவருக்கு வந்த பிறகுதான் பேச்சை ஆரம்பித்தார். „அப்போ உனக்குத் தமிழ் வராது„ சொல்லி விட்டு இராஜகுலசிங்கத்தைப் பார்த்தார்.

„இப்ப நான் சொல்லுறதைக் கவனமாக் கேட்டிட்டு நீ பதில் சொல்லோணும். புலவர் சண்முகநாதன் ஒரு விருந்துக்குப் போனார். அவருக்குச் சாப்பிட இலை போட்டிச்சினம். இலையைப் பார்த்த புலவர் சண்முகநாதன் ´புண்ட இலை என்று சொல்ல அண்டை இலை போட அதுவும் புண்ட இலை´'

சொல்லி விட்டுக் கொஞ்சம் அமைதி காத்தார். பிறகு இராஜகுலசிங்கத்தைப் பார்த்து, „புலவர் சண்முகநாதன் என்ன இலை என்று சொன்னவர்?' என்ற அதி உன்னத கேள்வியை முன் வைத்தார்.

இந்தத் தமிழ் எங்களுக்கு வேண்டாம் என்று வரம்பில் விழுந்து எழுந்து ஓடி வந்து விட்டோம். இப்பொழுது சொல்லுங்கள் கிறுக்கன் என்ற அவரது காரணப் பெயர் முற்று முழுதாகச் சரியானதுதானே?

கிறுக்கனைக் கொஞ்ச நேரத்துக்கு மறந்து விட்டு சிங்கப்பூர் சிங்காரியைப் போய்ப் பார்ப்போம்.

முழங்கையளவு நீண்ட சட்டை போட்டுக் கொண்டு „மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி' என்று சௌகார் ஜானகி பாடிக் கொண்டு வந்த கால கட்டம் அது. தோள்பட்டையுடன் நின்று போன சட்டை அணிந்து, நெஞ்சுக்கும், இடுப்புக்கும் ஒரு சாண் இடைவெளி விட்டு சேலை கட்டி, கைப்பை தோளில் தொங்க ஒரு சிறிய குடையுடன் நடந்து வருபவர்தான் அந்தச் சிங்கப்பூர் சிங்காரி. என்றாவது ஒரு நாள் கார் போகும் அந்த வீதியில் டொக்கு டொக்கு என குதிரைக் குளம்பொலி எழுப்பி அவர் நடந்து வரும் பொழுது வீதியின் ஓரத்தில் படுத்திருக்கும் நாய் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு பயந்து போய் எழுந்து கொஞ்சம் தள்ளிப் போய் படுத்துக் கொள்ளும். எங்கள் ஊரில் இவர் மட்டும் ஏன் இப்படி என்று வாசிகசாலைப் பொறுப்பாளர் கந்தையாப்பாவிடம் ஒருநாள் கேட்டேன். அவர் சொன்ன தகவல்களின் படி, சிங்காரி படித்தது சிங்கப்பூரில். அவரது கணவன் ஒரு வைத்தியர். இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள். கந்தையாப்பா சொன்ன இந்த சிறிய தகவல்களோடு ஊரில் இருந்து வேறு சில அபூர்வ தகவல்களையும் திரட்டிக் கொண்டேன்.

சிங்காரிக்கும், கணவனுக்கும் வயது வித்தியாசம் ஏணி வைத்தால் எட்டக் கூடிய தூரமாக இருந்தது. அநேகமாக இரவு நேரங்களில் கணவன் வைத்தியசாலையில் வேலையில் இருப்பார். சிங்காரி வீட்டில் லீலைகளில் இருப்பார். அந்த லீலைகள் செய்யும் கண்ணன்களில் ஒருவனாக எங்கள் கிறுக்கனும் இருந்தார் என்பது ஆச்சரியமான ஒரு விடயம். அடிக்கடி சிங்காரி வீட்டுக்கு போய் வந்து கொண்டிருந்த கிறுக்கனுக்கு, சிங்காரியின் மகள் கண்ணில் பட்டு விட்டாள். „ மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு' என்ற நிலையில் கிறுக்கன் இருந்தார். யாரும் அறியாமல் சிங்காரியின் மகள் மேல் கண்களை ஓடவிட்டார். இரவில் அவள் நித்திரை கொள்ளும் அழகை யன்னல் ஊடாகப் பார்த்து இரசிக்கத் தொடங்கினார். கிறுக்கனின் இந்தச் செயல் சிங்காரிக்குத் தெரிந்து போனது. நயமாகப் பேசியும் „பொலிசிட்டை பிடிச்சுக் குடுத்திடுவன்' என மிரட்டியும் பார்த்தாள் கிறுக்கன் கிறங்கவேயில்லை.

ஊர் அடங்கிற்று. அன்றும் வழக்கம் போல் கிறுக்கன் தன் தேவதையைக் காண யன்னலை நோக்கிப் போனார். ஆனால் யன்னலை நெருங்கும் முன் ஏற்கெனவே வெட்டப் பட்டு அதற்குள் முட்கள், உடைந்த போத்தல் துண்டுகள் எனப் போடப்பட்டிருந்த பொறிக் கிடங்குக்குள் அவர் விழுந்து விட்டார். விழுந்தவர் எழுந்திருக்க முன்னரே நாலைந்து பேர் சாக்குக் கொண்டு கிறுக்கனை மூடிக் கட்டி விட்டார்கள்.

„இனி அவளைப் பார்க்க வரமாட்டேன் என்று நீ சொல்லுற வரை விடமாட்டோம்' என்று சொல்லிக் கொண்டே சிங்காரியின் வீட்டில் ஒரு தனியறையில் கிறுக்கன் மேல் தாக்குதல் தொடங்கியது. ஒரு சிறு நகர்வும் கிறுக்கன் பகுதியில் இருந்து தெரியவில்லை. எல்லோரையும் ஒதுங்கச் சொல்லி விட்டு சிங்காரியே சித்திரவதை செய்ய ஆரம்பித்தாள். கிறுக்கனின் கை பத்து விரல் நகங்களுக்குள்ளும் குண்டூசிகள் ஏற்றிக் கொடுமைப் படுத்தினாள். வலியால் கிறுக்கன் கத்தினாரே தவிர வேறெதுவும் சொல்லவில்லை. „அவளைப் பார்க்க இனி வரமாட்டேன்„ என்ற வார்த்தைகளை மட்டும் அவர் தனக்குள் தணிக்கை செய்து வைத்திருந்தார்.

ஒருநாள் போய் மறுநாளும் ஆயிற்று தொடர் சித்திரவதைகளால் கிறுக்கன் நிலை தளர்ந்து போயிருந்தார். இனி கிறுக்கன் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்து விட்டது. மீண்டும் கிறுக்கன் சாக்குக்குள் திணிக்கப் பட்டார். இரவானதும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. அது என்ன? காணாமல் போகப் போகிறாரா? ஆழ்கிணற்றுக்குள் மிதக்கப் போகிறாரா? சவுக்கம் தோப்புக்குள் இறந்து விழுந்து கிடக்கப் போகிறாரா? உடல் உப்பி கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கப் போகிறாரா? இல்லை எரியுண்டு சாம்பலாகப் போகிறாரா? இந்தக் கேள்விகள் அவருக்கு நிச்சயமாக வந்திருக்கும்.

மூன்றாம் நாள், ஊரெல்லாம் உலை வைத்தார்களோ தெரியாது. இந்த விசயத்தைப் பற்றியே நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். „நல்ல வேளை பொலிஸ் வந்தது. அவங்கள் மட்டும் வராட்டில் கிறுக்கனை முடிச்சிருப்பாங்கள். கடைசி நேரத்திலை வந்து பிடிச்சிட்டாங்கள்'

கிறுக்கன் விடயத்தில் சிங்காரி உட்பட ஐந்து பேர் கைதாகியிருந்தார்கள்.

இது நடந்து ஒரு கிழமையில் மடித்துக் கட்டிய வேட்டியோடு, மண்வெட்டி தோளில் இருக்க, கிறுக்கன் தனது தோட்டப் பக்கம் போய்க் கொண்டிருந்தார்.

„இவன் கிறுக்கனில்லை இரும்பன்' என்று ஊரில் சொல்லிக் கொண்டார்கள்.

இப்போது எல்லாம் வீதியில் டொக்கு டொக்கு என குதிரைக் குளம்பொலி எழுப்பி யாரும் நடந்து வரும் சத்தம் கேட்கவில்லை. வீதி ஓரத்தில் படுத்திருக்கும் நாய்கள் பயந்து எழுந்து ஓடாமல் அமைதியாகப் படுத்திருந்தன. சிங்காரியின் பிள்ளைகள் ஒழுங்காகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அவளது கணவன் பகலில் மட்டுமல்ல இரவு வேளைகளிலும் வீட்டில் இருந்தார்.

அன்று வாசிகசாலையில் கந்தையாப்பா தனியாகத்தான் இருந்தார்.

„கந்தையாப்பா, அது என்ணெண்டு சினிமாப் படம் மாதிரி கடைசியிலை பொலிஸ் வந்தது?'

„யாரோ பொலிசுக்குப் போன் பண்ணினவையளாம்'

„யார் அதைச் செய்திருப்பினம்?'

„இஞ்சை சுருட்டுத் தம்பையர் வீட்டிலைதான் போன் இருக்கு. அங்கை இருந்து போன் செய்ய வாய்ப்பில்லை. தம்பையர் இஞ்சை இல்லை. அவர் இப்ப குருநாகலிலை. அவரின்ரை வீட்டிலை இருந்து பெண்டுகள் பொலிசோடை கதைக்க மாட்டீனம். சப்போஸ்ரொபிஸ் கந்தப்பருக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை. அப்பிடித் தெரிஞ்சிருந்தாலும் மினக்கெட்டு இரவு ஒரு மைல் சைக்கிளோடி வந்து தபால் கந்தோரைத் திறந்து அங்கை இருந்து போன் பண்ணுறதுக்கும் சரிப்பட்டு வராது. அப்பிடிப் பாத்தால் ஆஸ்பத்திரியிலை இருந்துதான் யாரோ போன் பண்ணியிருக்கோணும்'

„யாரா இருக்கும்?'

„இரவிலை வேலை செய்யிற யாரோதான் செய்திருப்பினம்'

யாரா இருக்கும் என்ற என் சிந்தனையில், அவராக இருக்குமோ என்ற எண்ணம் வந்தது. அதை கந்தையப்பாவிடமே கேட்டேன்.

„ஒருத்தருக்கும் இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லைத்தானே, ஒருவேளை சிங்காரியின்ரை புருசனா இருக்குமோ?'

„உனக்கு சோதனை வருதெல்லோ? இந்த ஆராய்ச்சி எல்லாத்தையும் விட்டிட்டு படிக்கிற அலுவலைப் போய்ப் பார்' என்று அடிக்காத குறையாக என்னைத் துரத்தி விட்டார்.

இன்றும் எனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறேன், „அது அவராக இருக்குமோ?'

- ஆழ்வாப்பிள்ளை
24.02.2016

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை