கொஞ்சம் சிரியுங்கள்

நகைச்சுவை என்பது சிரிக்க மட்டுமல்லாது ரசிக்கவும் செய்யும். சில சமயங்களில் சிந்திக்க வைத்து சமூக சிந்தனையைத் தூண்டியும் வைக்கும். தமிழக சினிமாவில் நகைச்சுவைக்கு என பல மேதைகள் இருந்திருக்கிறார்கள். தங்களுக்கான தனிப் பாணிகளை அமைத்து நகைச்சுவையில் முத்திரை பதித்து விட்டும் சென்றிருக்கிறார்கள். கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ், பாலையா, எம்.ஆர்.ராதா,கே.ஏ. தங்கவேலு, ஏ.கருணாநிதி, சுருளிராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன்… என அந்த நகைச்சுவைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கலைவாணரின் நகைச்சுவை மென்மையானது. அவரது நகைச்சுவையில் சமூகம் சம்பந்தமான கருத்துகள் இருக்கும். ‘மணமகள்’ என்ற படத்தில் ஒரு காட்சியில், கலைவாணரை ஒருவர் சந்திப்பார். அடுத்த வீட்டுக்காரர், பக்கத்து தெருக்காரர், மற்றவர்களின் குடும்பம் பற்றியெல்லாம் குறை சொல்லிக்கொண்டிருப்பார். கலைவாணர் அவரை இடைமறித்து, “சரி.. உன் பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்பார். அந்த நபர், தன்னிடம் இருக்கும் பணத்தின் தொகையைச் சொல்வார். அதற்கு கலைவாணர், “அப்படிச் சொல்லக்கூடாது. எவ்வளவு ரூபாய் நோட்டா இருக்குது? என்னென்ன நோட்டு? சில்லறைக் காசு எவ்வளவு இருக்குது? எத்தனையெத்தனை நயா பைசா? என்றெல்லாம் சரியா சொல்லணும்” என்பார். “இருங்க எண்ணிப்பார்த்து சொல்றேன் என்று அவர் சொல்ல, கலைவாணரோ, “ஊகும்.. எண்ணாமல் சொல்லு” என்பார். அதற்கு அந்த நபர், “அது எப்படிங்க.. எண்ணிப் பார்த்துதானே சொல்லமுடியும்” என்று கேட்பார். கலைவாணர் அவரிடம், “உன் பாக்கெட்டுல நீ வச்சிருக்கிற பணத்தை எண்ணிப் பார்த்துதான் சரியா சொல்ல முடியும்ங்கிறே.. ஆனா, அக்கம் பக்கத்து வீட்டு விவகாரத்தையெல்லாம் எண்ணிப்பார்க்காம நீயா சொல்லிக்கிட்டே போறியே, என்ன இது?” என்று சொல்லி தனது நகைச்சுவையிலும் எங்களுக்கும் செய்தி சொல்லியிருப்பார்.

பாலையா வில்லனாக நடிக்கும் பொழுதும் அதில் நகைச்சுவை காட்டுவதில் வல்லவர். "படார் எனக் குதித்தேன். படபட என நீந்தினேன். என்னை நெருங்கியது ஒரு சுழல், பூ என ஊதினேன். தூக்கினேன் பொம்மியை, சேர்த்தேன் கரையில்" என்று மதுரை வீரன் படத்தில் வீரம் பேசும் பாலையா தோற்று வரும் பொழுது ,"அரசே, நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம். ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து´ போய்விட்டார்கள்” என்பார். பாலையாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. தில்லானா மோகனாம்மபாள் படத்தில் பாலையா சிவாஜியை சமாளிக்கும் பாணியே தனிரகம் "தம்பி, வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக் கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி’ இப்படி ஊட்டிவரை உறவு, பாமாவிஜயம், திருவிளையாடல், என பாலையா தந்த நகைச்சுவை கலந்த நடிப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

தங்கவேலு தன் நகைச்சுவையில் ஒருவரை தாழ்த்தியோ அவமானப்படுத்தியோ வசனங்கள் பேசமட்டார். கல்யாணப் பரிசு படத்தில் எழுத்தாளர் பைரவன் என்று அவர் அடிக்கும் கூத்து காலத்தில் அழியாதது. ‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் பரோட்டாக் கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’ என்று அப்பாவியாகக் கேட்டு எல்லோரையும் சிரிக்க வைப்பார்.

திருவிளையாடல் படத்தை பாத்தவர்களுக்கு உடன் நினைவுக்கு வருவது தருமி நாகேசின் நகைச்சுவைதான் "எனக்கு வேணும். ஆச ஆச. நல்லகாலம். ஒதைக்காம விட்டாங்களே அய்யோ ....தொரத்தி தொரத்தி உதைக்கிற மாதிரி இருக்கே இனிமே நான் எப்படி பாட்டு எழுதுவேன். நான் எந்தப் பாட்டு எழுதுனாலும் ஏன்பா இது உன்னுடையது தானா இல்ல வேற யாரவது எழுதுனதா அப்பிடினு கேப்பாங்களே.“ நாகேசின் இந்த நகைச்சுவை ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டாலும் இன்றும் ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

"கோயிலுக்கு வெளியே ஒருத்தன் தட்டு ஏந்திட்டு நிற்கிறான். ஒருத்தனும் அவனுக்கு காசு போட மாட்டேங்கிறான். கோயிலுக்குள்ளே ஒருத்தன் தட்டேந்தி நிற்கிறான். அவனுக்கு எல்லா பசங்களும் காசு போடுறாங்க" என்று மக்களின் அறியாமையை எம்.ஆர்.ராதா எடுத்துச் சொல்லும் பாணியே தனியானது. "ஏன்டா டேய்" என்று சொல்லி விட்டு வார்த்தைகளுக்கு ஏற்ப குரலை ஏற்றி இறக்குவதும் அன்றாட நிலமைகளை நகைச்சுவைக்குள் திணித்துத் தருவதும் எம்.ஆர்.ராதாவின் கலை.

இவ்வாறு அன்று அவர்கள் தந்த நகைச்சுவைகள் இன்றும் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் வாய் விட்டுச் சிரிப்பது வேறு, மனம் விட்டுச் சிரிப்பது வேறு. அப்படி மனம் விட்டு சிரிக்க வைக்க எல்லோராலும் முடியாது.

"மற்றையவர்களைச் சிரிக்க வைப்பது என்பது மகா கஸ்ரமான நடிப்பு" என்று சிவாஜி கணேசன் முதல் கமலஹாசன் வரை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். வாய் விட்டோ அல்லது மனம் விட்டோ மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிகிறதோ இல்லையோ இராகம் தப்பிப் பாடி அந்த இம்சையை இரசிக்க வைக்கும் உத்தி கல்பனா அக்காவுக்குக் கை வந்திருக்கிறது. அதனால்தான் கல்பனா அக்காவிற்கு உலகம் எங்கும் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஈமெயிலில் நண்பன் ஒருவன் அனுப்பியிருந்த வீடியோ ஒன்றைப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது, தனது இரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்காக கல்பனா அக்கா தனது படைப்புகளை வெளியிடுவதில் பாஸ்கி மன்மதனுக்கு எங்கேயோ வலிக்கிறது என்று.

'செல்பி -அக்கம் பக்கம்" (25) என்ற ஒரு தொடர் நாடக நிகழ்ச்சி அது. பாஸ்கி மன்மதன் நடித்திருந்தார். துணைக்கு இன்னொருவரையும் சேர்த்திருக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இப்படி ஒரு அறிவித்தலைக் காட்டுகிறார்கள்.

"செல்பி - அக்கம் பக்கம் நாடகத் தொடரில் வரும் கதைகள் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் யார் மனதையும் நோகடிப்பதற்கு அல்ல, நகைச்சுவைக்காக இயக்கப்படுகிறது. நன்றி"

அதன் பிறகு பாஸ்கி மன்மதன் நடந்து கொண்டே "கல்பனா அக்காவை" ஏகத்துக்கு பேசி இடையிடையே "லூசு . . லூசு..." என்று திட்டிக் கொண்டே இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் காட்டிய அறிவித்தலுக்கும் எடுத்துக் கொண்ட விசயத்துக்கும் சம்பந்தமே இல்லை. அறிவித்தலை இப்படிக் காட்டியிருந்தால் பொருந்தியிருக்கும்.

"செல்பி-அக்கம் பக்கம் நாடகத் தொடரில் வரும் கதைகள் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் நகைச்சுவைக்காக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மனதை நோகடிப்பதற்காக இயக்கப்படுகிறது. நன்றி"

"எங்கடை ஈழத்திலை, அடுப்பங்கரையிலை இருந்த பெண்கள் எல்லாமண்ணை, ஒரு சரித்திரம் படைச்சு இண்டைக்கு ஈழத்துப் பெண்கள் எண்டால் இப்படித்தான் எண்டு உலகத்துக்கு எடுத்துக் காட்டிய பெண்களண்ணை, ஈழத்துப் பெண்கள்! அந்த மண்ணிலை இருந்து வந்ததுதான் இந்தக் கல்பனா அக்கா என்ற லூசும். இப்பிடியான வேலை காட்டறதாலை எங்களுக்கு வெளியிலையண்ணை, தலை காட்டவே முடியேலை. மானம் மரியாதை போகுது அண்ணை"

இப்படி எதற்காக பாஸ்கி மன்மதன் துயர்படுகிறார்? பொங்கி எழுகிறார்? இவ்வளவு காலமும் பாடிக் கொண்டிருந்த கல்பனா அக்கா தலைவரின் கபாலி "பஞ்ச்" டயலாக்கை பேசி விட்டார் என்ற ஆதங்கமா?

யாரோ எழுதிக் கொடுத்ததைத்தானே ரஜனியும் பேசுகிறார். அறுபத்தியாறு வயதிலேயும் சினிமாவிலே ஆட்களைப் புரட்டிப் போடுகிறார். ஒற்றை ஆளாக நின்று அறுபது பேரை அடித்துச் சாய்க்கிறார். இது லூசுத்தனமாகத் தெரியவில்லை? ரஜனி படப்பாடலை கல்பனா அக்கா எடுத்து பாடி விட்டார் என்றதும் கலபனா அக்காவை லூசு என்று பாஸ்கி மன்மதன் புலம்புகிறார். ரஜனியின் படத்திற்கான பாடலின் இசையை மட்டுமல்ல கதையையும் எங்கே இருந்து "உல்டா" செய்தார்களோ? ஆராய்ச்சியா செய்யப் போகிறோம்? இல்லை ஆராய்ச்சி செய்துதான் எதைச் சாதிக்கப் போகிறோம்? ரஜனியை வைத்து எத்தனை பேர் மிமிக்கிரி செய்திருக்கிறார்கள். நையாண்டி செய்திருக்கிறார்கள். ஏன் பாஸ்கி மன்மதன் துயர் படவில்லை? கல்பனா அக்கா ரஜனியின் "பஞ்ச்" டயலாக்கைப் பேசினால் மட்டும் ஏன் பாஸ்கி மன்மதனுக்கு வெட்கமும், வேதனையும் வருகிறது?

நாலு படம் நடித்து பெயர் வாங்கிவிட்டால் அரசியலுக்குள் போய்விடுவோம் என தமிழக நடிகர்கள் நினைப்பது போல் குறும்படங்கள் சில நடித்து விட்டதால் பாஸ்கி மன்மதனுக்கும் பெரிய நினைப்புகள் வந்து விட்டதோ என்று பயமாக இருக்கிறது.

சிரிப்பு, மன அழுத்தத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நல்ல மனநிலையோடு நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும். இறுக்கமான நேரங்களிலும் நல்ல மனநிலையைக் கொடுத்து உற்சாகத்தோடு செயற்பட வைக்கும் என்பதற்காக செயற்கையாகச் சிரிக்கச் சொல்லி பயிற்சி கொடுக்கும் இந்தக் கால கட்டத்தில் பாஸ்கி மன்மதனுக்கு மட்டும் சிரிப்பு பிரச்சினையாக இருக்கிறது.

ஒரு வைத்தியர் இப்படிச் சொல்கிறார், "நகைச்சுவையை ரசித்து சிரிக்கப் பழகுங்கள். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சிரியுங்கள். வாழ்க்கையே மாறும்’

சிரிப்பு, நோய் வராமல் பாதுகாக்கும் சக்தி கொண்டது அது மட்டுமன்றி வந்த நோயைக் குணப்படுத்தும் திறனும் கொண்டது. சிரிக்கும் உணர்வு மனதில் வந்தவுடன் எண்டார்பின் (Endorphine), மெலட்டோனின் (Melatonin) கார்ட்டிசால் (Cortisol) போன்ற ஹோர்மோன்கள் அதிக அளவில் சுரக்கின்றன. இந்த ஹோர்மோன்கள் பல நோய்களைப் போக்கும் வல்லமை கொண்டவை. இவற்றை சிரிப்பின் மூலம் மட்டுமே பெற முடியும்.

"சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்" என்று பழைய பாடல் ஒன்று இருக்கிறது.

ஆகவே பாஸ்கி மன்மதன் சிரிக்கப் பழகுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் விடும்.

பாஸ்கி மன்மதன், இன்னும் ஒன்று, நகைச்சுவைக்கும் நையாண்டிக்கும் வேறுபாடு இருக்கிறது.

ஆழ்வாப்பிள்ளை
23.07.2016

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை